ஏறு தழுவுதல் - நம் பண்பாட்டின் உச்சம்!



ஏறு தழுவுதல் 

நம் பண்பாட்டின் உச்சம்!

-இடைமருதூர் கி.மஞ்சுளா
 
தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாகக் காலங்காலமாகப் போற் றப்பட்டு, நடத்தப்பட்டு வந்ததுதான் இந்த ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு. இது குறித்த செய்திகள் நம் சங்கத் தமிழ் நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை, மலைபடுகடாம் முதலிய நூல்களிலும், சிற்றிலக்கியங்கள் சிலவற்றிலும் உள்ளன. இதனால் ஜல்லிக்கட்டு என்னும் ஏறுதழுவுதல் நம் பழந்தமிழரின் காதல், வீரம், பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றைப் பறைசாற்றும் ஒரு வீர விளையாட்டாகும்.
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையிலும் புல்லாளே ஆயமகள்” என்பது கலித்தொகைப் பாடல். கொல்லேறைப் பிடிக்க அஞ்சுபவனை,  மறுபிறப்பிலும் கட்டித்தழுவ ஆசைப்பட மாட்டாள் ஆயமகள் என்பது இதன் பொருள். எந்த ஒரு பெண்ணும் வீரனையே விரும்புவாள்.
“மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம் முல்லையம் பூங்குழல் தான்” என்கிறது சிலப்பதிகாரம். அதாவது, ஓர் ஆயமகன், ஓர் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால், கொடிய போரேற்றைத் தழுவி வெற்றிபெறல் வேண்டும். இல்லையேல் அத்தலைவியின் அழகு மேனியைத் தழுவ இயலாது என்கிறது இச்சிலப்பதிகாரச் செய்யுள்.
எந்த ஒரு தாய்-தந்தையும் ஒரு வீரனுக்குத்தான் தன் மகளை மணமுடிக்க முன்வருவார். கோழைக்கு அல்ல. அவன் ஒரு வீரனாக இருந்தால்தான் மாற்றானிடமிருந்து தன் மனைவியைப் பாதுகாக்க முடியும்.  அதனால் தான் பண்டைக் காலத்தில் ஒரு காளையை அடக்குபவனே தன் மகளை மணக்கத் தகுதியானவன் என்று கூறியுள்ளனர்.
ஏறுதழுவுதல் என்பது, ஏறுகோள், மஞ்சுவிரட்டு மாடுபிடித்தல், பொல்லெருது பிடித்தல், ஜல்லிக்கட்டு என்று பல பெயர்களில் கூறப்படுகிறது. ஜ(ச)ல்லிக்கட்டு என்ற பெயர் எப்படி வந்தது என்றால், இந்த ஏறுதழுவுதலின்போது காளையின் கழுத்தில் சல்லிக் காசுகள் எனும் நாணயங்களை (முற்காலத்தில் இருந்த இந்திய நாணயம்) ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, அதை மாட்டின் கொம்புகளில் கட்டிவிடுவர். அந்தக் காளையை அடக்கும் வீரனுக்கே அக்காசுகள் உரியதாகும். இதனால்தான் இந்த ஏறுதழுவுதலுக்கு ஜல்லிக்கட்டு (சல்லிக்கட்டு) என்ற பெயர் உருவாகியிருக்கிறது.
ஜல்லிக்கட்டு (ஏறுதழுவுதல்) தமிழர்களின் பண்பாட்டின் ஓர் அடையாளம். பம்பரம், கிட்டிப்புல், கபடி, கோலிகுண்டு, தாயக்கட்டை, பல்லாங்குழி முதலிய விளையாட்டுக்களைப்போல இந்த ஏறுதழுவுதலும் நம் பாரம்பரிய, பண்பாட்டு விளையாட்டு, அதுவும் வீர விளையாட்டு. இந்தத் தமிழ் மண் வீரம்செறிந்த மண் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அந்த வீரத்தின் அடையாளத்தைத் தொலைத்துவிட்டு நாம் தமிழர்களாகப் பிறந்து, வாழ்ந்து எந்தப் பயனும் இல்லை.. இரண்டு ஆண்டுகள் பொறுத்தது போதும்….இவ்விளையாட்டு அழியவிடாமல் தொடர்ந்து நம் பண்பாட்டைக் கட்டிக் காக்கப் போராடுவோம்.
இல்லையெனில் வருங்காலத்தில் நம் சந்ததியினருக்கு ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, இதுதான் உன் முன்னோர்கள் விளையாடிய ஒரு வீர விளையாட்டு, இதன் பெயர் காளை. இந்த விளையாட்டை உன் தாத்தாவும், உன் தாத்தாவுக்குத் தாத்தாவும் விளையாடினார்கள். ஆனால், உன் தந்தை காலத்தில் இது அழிக்கப்பட்டது என்று கதை சொல்ல நேரிடும்.
தமிழ் மண் ஒரு புண்ணிய பூமி. அதனால்தான் இந்தப் புண்ணிய பூமியிலேயே பல அறிஞர்களும், ஞானிகளும், சித்தர்களும், அரு ளாளர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், யோகிகளும் பிறந்தார்கள். இது தமிழ் மண்ணுக்கே உரிய பெருமை. இந்தத் தமிழ்மண் நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்கள் பிறந்த புனித மண்ணும்கூட. இந்த மண்ணிலிருந்து எந்தவொரு பண்பாட்டுச் சின்னங்களையும், கலைகளையும் நாம் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கவோ அழிக்கவோ கூடாது. அப்படி விட்டுக் கொடுப்போமேயானால், நாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டும், தமிழ் மொழியைப் பேசிக் கொண்டும் வாழ்வதில் பயன் இல்லை…
-இடைமருதூர் கி.மஞ்சுளா

 ஜல்லிக்கட்டு தொடர்பாக தினமணி, தமிழ்மணியில் திருமதி வாணி அறிவாளன் எழுதியதையும் படியுங்கள்…. பகிருங்கள்.


 

ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்

÷கலித்தொகையில் முதல் ஏழு முல்லைக்கலிப் பாக்களில் விரிவாகக் கூறப்பெற்றுள்ள ஏறு தழுவுதலே, இன்று ஜல்லிக்கட்டு எனும் பெயரில் நிகழ்த்தப்பெறுகிறது என்ற செய்தி, இன்று அனைவரும் அறிந்த ஒன்று. ஜல்லிக்கட்டு எவ்வாறு காட்சி விளையாட்டாக (எஹப்ப்ங்ழ்ஹ் நல்ர்ழ்ற்) இக்காலத்தில் நிகழ்த்தப்பெறுகிறதோ, இதுபோன்றே அன்றைய ஏறு தழுவுதலும் ஆயர்குல மக்களால் காட்சி விளையாட்டாகவே நிகழ்த்தப்பெற்றது.
÷ஆனால், ஏறுதழுவுதலைக் குறிப்பிடும் ஒரே சங்க இலக்கியம் கலித்தொகை என்பதோடு அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு செய்தியும் உள்ளது. பழந்தமிழகத்திலும், உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையிலிருந்த பழம்பெரும் போர்முறையான வெட்சிப்போர் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாத ஒரு சங்க இலக்கியமும் கலித்தொகையே. ÷இம்முரணுக்குப் பின் ஒரு சுவையான வரலாறு உள்ளது. ஆம். சங்ககாலப் போர்ச்சமூகத்தில் நாடுகளுக்கு இடையேயான பெரும்போர்கள் பெருகிய பின்னர், வெட்சிப் போர்முறை இற்றுத்தேய்ந்த நிலையில், காலத்தின் கட்டாயமாக உருவெடுத்ததே ஏறு தழுவுதல் விழா. அதனால்தான் வெட்சிப்போர் பற்றிய செய்திகள் எதுவும் இல்லாத பிற்கால இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பாடுபொருளாயிற்று. ஜல்லிக்கட்டின் ஆதி வரலாறு கூறும் அவ்வரலாற்றுப் பின்னணியைத் தமிழர்களாகிய நாம் அறிய வேண்டியது கடமை - அவசியம்.
÷வெட்சிப்போர் என்பது இனக்குழுச் சமூகங்களிடையே இருந்த ஒரு போர்முறை. அக்காலத்தில் ஆநிரைகள் எனக் கூறப்பெற்ற பசுக்களும் காளைகளுமே பெருஞ்செல்வமாகக் கருதப்பெற்றன. அதனால் பெரும் ஆநிரைகளைக் கொண்டிருந்த குழுவினரும், குழுத் தலைவனும் மதிக்கப்பெற்றனர். ஒரு குழுவைச் சார்ந்த மறவர்கள், இரவு நேரத்தில், மற்ற குழுவினரிடமிருந்து ஆநிரையைக் களவு செய்து, தன் ஆநிரைக் கூட்டத்தைப் பெருக்கிக்கொள்ள விழைந்தனர்.  இதுவே வெட்சிப்போர். ஆநிரைகளைக் களவு செய்ய வந்த மறவரே வெட்சி மறவர். ஆநிரைக்கு உரிய மறவர்கள், தம் ஆநிரைகளைக் காப்பதற்காகக் களவுச் செயலைத் தடுத்துப் போர் புரிவதுமுண்டு.  இதுவே கரந்தைப் போர். தடுத்துப் போரிட்டவர்களே கரந்தை மறவர். கரந்தை மறவர், வெட்சி மறவர் இடத்திற்கே சென்று தம் ஆநிரைகளைப் போர்புரிந்து மீட்டு வருவதுவும் உண்டு.
÷மழவர், வடுகர் என்றெல்லாம் அழைக்கப்பெற்ற, மலைகளைச் சார்ந்த முனைப்புலக் காடுகளில் வாழ்ந்த இவ் இனக்குழுச் சமூகத்தினர் தமக்குரிய ஆநிரைகளைப் பொதுவிடமான மன்றத்தில் வைத்துப் பேணினர். வெட்சி மறவரானாலும், கரந்தை மறவரானாலும் ஆநிரைகளைக் காக்கும் பொருட்டு, போர்ப்பயிற்சி கொடுக்கப்பெற்ற ஏறுகளை அம்மன்றத்தில் உலவவிடுவர். அத்தகைய மன்றத்தைக் கொல்ஏறு திரிதரு மன்றம் (புறம்.309:4) எனப் புலவர் குறிப்பிடுவர். இவ் ஏறுகள், கொடும்புலிகளோடும் அஞ்சாது, சண்டையிடும் ஆற்றல் வாய்ந்தன.
÷ஆநிரைகளைக் கவர்ந்த வெட்சி மறவரானாலும், ஆநிரைகளை மீட்க விரும்பிய கரந்தை மறவரானாலும், இத்தகைய பயிற்சி பெற்ற ஏறுகளை அடக்கும் மறவலிமையை இயல்பிலேயே பெற்றிருந்தனர். 259ஆவது பாடலில் வெட்சி மறவர், ஏறுகளுடன் கூடிய ஆநிரைகளைக் கவர்ந்து சென்றமை குறிப்பிடப்பெற்றுள்ளது. இச்செயலையே ஆகோள் எனத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் தெரிவிக்கின்றன.
÷ இந்நிலையில் ஆறலைக் கள்வர்களும், மறவர்களும், பொருளுக்காக ஆயர்குடியினரிடமிருந்து ஆநிரைகளைக் கவர்வதைத் தொடர்ந்தபோது, அவற்றை மீட்கும் கரந்தை மறவரின்றிப் பல நேரங்களில் ஆயர்கள் செயலற்றுப்போயினர். தம் இன இளைஞரும் மறப்பயிற்சி பெறவேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தனர். அதனால் ஏறு தழுவும் பயிற்சியை அளிக்கும் வகையில் ஏறு தழுவுதல் விழவை ஏற்படுத்தினர். இவ்வாறான சூழலில், ஆயர்களால் தொடங்கப்பெற்ற ஏறு தழுவுதல் விழவினையே முல்லைக்கலிப்பாக்கள் விரிவாகப் பாடியுள்ளன(கலி.101-106, 108).
÷தம் உயிரையும் ஒரு பொருட்டெனக் கருதாது, அஞ்சா நெஞ்சமுடன் ஏறுகளைத் தழுவ முன்வந்த ஆயர்குல இளைஞர்கள், தம் இனத்தாரின் ஆநிரைகளைக் கள்வரிடமிருந்தும், கொடிய விலங்குகளிடமிருந்தும் காக்கத் தேவையான மற உணர்வு பெற்றவர்களாக மாற்றம் பெற்றனர். கால்நடைகளைப் பேணுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ஆயரிடம் மறக்குணம் புகுந்த, குறிப்பிடத்தக்க இம்மாறுதல் நிலையை ஒளவையாரின் ஒரு (புறம். 390:1-4) பாடல் அருமையாக எடுத் தியம்பியுள்ளது.
÷ஆக, ஏறு தழுவும் விழவு கலித்தொகையில் மட்டுமின்றிப் புறநானூற்றிலும் பாடப்பெற்றுள்ளமையும், ஏறுதழுவுதல் காட்சி விளையாட்டாக ஆயரினத்தவரால் நிகழ்த்தப்பெற்றுள்ளமையும் தெரியவருகிறது. போர்ச்சமூகம் ஒழிந்த அமைதியான சமூகச் சூழலில், மாறா மறக்குணம் உடைய தமிழின இளைஞர்களின் மனங்களை, உயிருக்கு அஞ்சாத இவ்வீர விளையாட்டு கவர்ந்திருக்கல வேண்டும். எனவே, ஆயரினத்தவரால் மட்டும் நிகழ்த்தப்பெற்ற இவ்விளையாட்டில் பொதுமறவரும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பெற்றது. இப்பொது மறவரையே பொதுவன், பொதுவர் என முல்லைக்கலி சுட்டியுள்ளது. (பொதுவன் என்ற இச்சொல்லுக்கும் ஆயன், ஆயர் என நச்சர் பொருளுரைகளைத் தந்துள்ளார். இவையும் தவறான பொருளுரைகளே)
÷ஏறு தழுவும் விழாவை, முன்னின்று நிகழ்த்திய நல்லின ஆயர், ஏறு தழுவுதலில் வெற்றி பெற்றவனுக்கே மகட்கொடை நேர்ந்தனர்(104). அவ்வாறு மகட்கொடை தரப்பெற்ற ஏறு தழுவுதலில் பங்கேற்ற, ஆயரல்லாத பொதுமறவனே பொதுவன் எனப்பெற்றான்(கலி. 102, 103, 105). அவ்வாறு பொதுவர் கலந்துகொண்ட விழா முடிவினை முல்லைக்கலி பாடல் (கலி.101:47-50) தெரிவிக்கிறது.
 ஏறுதழுவுதலானது குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமின்றி, இளையர் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கும் விளையாட்டாகச் சங்க காலத்திலேயே  நிகழ்த்தப்பெறலாயிற்று. பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த வெட்சிப்போரின் எச்சமாக நிலைபெற்றுள்ள ஜல்லிக்கட்டு, போற்றப்பெற வேண்டிய பழந்தமிழரின் மறஅடையாளம் என்பது உறுதி.
-முனைவர் வாணி அறிவாளன்


Comments

Popular posts from this blog

மன அமைதி வேண்டுமா....

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -