மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும்

சிவாய நம
திருச்சிற்றம்பலம்

கட்டுரை வடிவாக்கம் - இடைமருதூர் கி.மஞ்சுளா
காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம் நிகழ்த்திய மணிவாசகப் பெருமான் குருபூஜையின்போது வெளியான மலரில் இடம்பெற்ற கட்டுரை இது. மணிவாசகப் பெருமான் எதைக்கண்டெல்லாம் அஞ்சினார், எதைக்கண்டு அஞ்சவில்லை என்பதை பெருந்தகை வாய்மொழியாகவே காண்போம்.


மணிவாசகர் மலரடி வாழ்க!

மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும்


அச்சம் என்பது அஞ்சுதல். அதாவது, சிவபெருமான் ஒருவனே தனிமுதற் பொருள் என் அறிந்து, அவனிடத்தில் அன்பு இல்லாதவரைக் காணும்போது, அவர்களது தொடர்பு உலக வாதனையைப் பயக்குமோ என அஞ்சுதல். திருவாசகத்தில் கூறப்பட்ட மற்ற 34 பதிகங்களிலும் (515 பாடல்கள்) கூறப்படாத சில கருத்துகள் 35-ஆவது பதிகமான அச்சப்பத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வச்ச ப்பத்துக்கு ஆனந்தம் உறுதல், அதாவது, நேயத்தில் ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்திமை என்பது பழைய குறிப்பு. இறைவன் ஒருவனே அறியத்தக்கவன், காணத்தக்கவன் என்ற உறுதியை விளக்குவதால் இப் பத்து ஆனந்தமுறுதல் ஆயிற்று என்பர்.


மூவர் முதலிகள் தேவாரம்் முழுவதிலும் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சியதாகப் பாடலே இல்லை. அடிகளார், பத்துப் பாடல்களிலும் உலகிடை அச்சம் தரும் பொருள்கள் அனைத்தையும் ஒரு வரிசைப்படுத்தி, அவற்றுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று பாடிச் செல்கிறார். ஆனால், ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் மிகச் சாதாரணமாக உலகிடைக் காணப்பெறும் ஒரு காட்சியை, யாருக்கும் எவ்விதத்திலும் அச்சத்தைத் தூண்டாத ஒரு காட்சியை எடுத்துக்கூறி, அதனைக் கண்டு அஞ்சுகிறேன் என்று அவர் பாடியுள்ளது வியப்பைத் தருகிறது - என்பார் பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தம்.

மணிவாசகப் பெருமான், புற்றில் வாழும் கொடிய பாம்புக்கும், பொய்யர்களாகிய புறச்சமயத்தார் பேசும் மெய்ம்மை போன்ற கூற்றுக்கும், ஆசைக்கும், அதனால் விளையும் வினைக்கடலுக்கும், புன்னகைக்கும், பிணிக்கும், பிறப்பு-இறப்புக்கும், ஒளிவீசும் தீயனுக்கும், மலை உருண்டு வருவதற்கும், பழிக்கும், மரணத்துக்கும், கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானைக்கும், தழல் போன்ற விழிகளை உடைய புலிக்கும், இடியோசைக்கும், மன்னரின் உறவுக்கும், நேரான அம்புக்கும், எமனுடைய சினத்துக்கும் யான் அஞ்சமாட்டேன் என்று ஒவ்வொரு பாடலின் முதல் இரண்டடிகளில் கூறியவர், அடுத்தடுத்த அடிகளில் இவற்றையெல்லாம் கண்டு அஞ்சாத யான், பத்துப்பேரைக் கண்டு அஞ்சுவதும் உண்டு என்கிறார்.


மணிவாதகப் பெருமானையே அச்சப்படுத்திய அந்தப் பத்து பேர் யாவர்.... கற்றிலாதவர், அருவராதவர், அன்பிலாதவர், அளியாதவள், வெண்ணீறு அணிகிலாதவர், ஆளலாதவர், அகம்நெகாதவர், அறிவிலாதவர், திருநீறுஅணிய அஞ்சுபவர், ஆணலதாவர் ஆகிய இந்தப் பத்துப் பேரைக் கண்டால் மட்டும் அம்ம நாம் அஞ்சுவோம்.... என்கிறார். எதனால் அஞ்சுகிறார் என்று விரிவாகக் காண்போம்.

1. கற்றிலாதவர் - தொகுதியான நீண்ட சடையினை உடைய எம் அண்ணலாகிய சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தும், வேறொரு தெய்வம் உண்டு என்று எண்ணி எம் தலைவனாகிய சிவன் புகழைப் பேசாதவர்களைக் கண்டால் அஞ்சுவேன்.

2. அருவராதவர் - அயனும் திருமாலுமாகிய இருவராலும் காணமுடியாத எம் தலைவனும், தமக்குத் தலைவன் தானேயானவனுமாகிய எமது பெருமானுடைய திருவடிகளையன்றி, வேறொரு தேவரைக் காணநேரின் அவர் எத்தேவர் என்று வெறுப்பு கொள்ளாதவர்களைக் கண்டால் அஞ்சுவேன்.

3. அன்பிலாதவர் - சிற்றம்பலத்தில் திருநடனம் புகின்ற அம்பலக்கூத்தனை எலும்புகள் அனைத்தும் உருகத் தரிசித்து வழிப்ட்டு அவர் அருளைச் சார்ந்து, இனிமையுடன் பருகமாட்டாத - சிவனனடிக்கு அன்பிலாதவரைக் கண்டால் அஞ்சுவேன்.

4. அளியாதவர் - வெண்மையான திருநீற்றை அணிந்த திருமேனியை உடைய அந்தணனாகிய சிவபெருமானுடைய திருவடிகளைச் சார்ந்து, ஆனந்தக் கண்ணீர் ததும்புகின்ற கண்களை உடையவர்களாகிக் கைகளால் தொழுது, அழுது, மனம் கசிந்து உருகாத இரக்கமில்லாதவரைக் கண்டால் அஞ்சுவேன். (அளி-அன்பு, அருள், இரக்கம்)

5.வெண்ணீறணிகிலாதவர் - பிறைமதி சூடிய பெருமானுடைய அடியார்களோடு கூடிக்கலந்து, காத்தல் தொழில் புரியும் அத்திருமால், உறுதியான நிலத்தைப் பன்றியாய்த் தோண்டிச் சென்றும் அறியமுடியாத திருவடியை வணங்கித் திருநீறு அணியாதவர்களைக் கண்டால் அஞ்சுவேன்.

6. ஆளலாதவர்
- இடப வாகனத்தை உடையவனும், சொல்லளவைக் கடந்த தந்தையுமான சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளைத் தொழுது பெரிய மலர்கள் கொண்டு அர்ச்சித்து, மனம் கனிகின்ற மக்கள் அல்லாதவரை (அடிமைத்திறமில்லா)க் கண்டால் அஞ்சுவேன்.

7.அகம் நெகாதவர் - புகையோடு கூடிய தீயைத் திருக்கரத்தில் ஏந்தி நின்று வீடித் திருவம்பலத்துள் விளங்கித் திருநடனம் புரிகின்ற - மொட்டாயும் மலர்ந்தும் உள்ள கொன்றை மலர் மாலையை அணிந்த முதல்வனாகிய சிவபெருமானுடைய திருவடிகளைப் புகழ்ந்து மனம் இளகாதவர்களைக் கண்டால் அஞ்சுவேன்.

8. அறிவிலாதவர் - மணம் வீசுகின்ற சடையை உடையவனும் எங்கள் தந்தையுமாகிய சிவபெருமானுடைய, தேவர்களால் அணுகவும் முடியாத வீரக்கழல் செறிந்த திருவடிகளை வணங்கி, இன்பத்தோடு சிறக்க வாழத்தெரியாத அறிவிலாதவர்களைக் கண்டால் அஞ்சுவேன்.

9. திருநீறணியா அஞ்சுபவர் - பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சை அமுதாக உட்கொண்டருளி நம் தலைவனாகிச் செம்மாயாக ஆட்கொண்டான். அவன் அருள் விளக்கமாகிய திருநீற்றை நெற்றியில் அணிய அஞ்சுபவரைக் கண்டால் அஞ்சுவேன்.

10. ஆணலாதவர் - நீண்ட பிறமதியை அணியாகக் கொண்ட சிவபெருமானைத் தியானித்து, நெக்கு நெக்கு உருகி, ஒளி பொருந்திய கண்களிலிருந்து நீர் சொறிய வாழ்த்தி, திருமுன் நின்று துதிக்காத ஆண்தன்மை அற்றவர்களை (பேடிகளை)க் கண்டால் அஞ்சுவேன்.


மணிவாசகரை அச்சப்பட வைத்த மேற்குறித்த இவர்களெல்லாம் சிவத்தொடர்பு இல்லாதவர்கள். சிவனிந் திருப்பெயர், திருவடி, அடியார் இணக்கம், திருநீற்றுச் செல்வம் இவற்றிலிருந்து விலகியே இருப்பவர்கள். காணவே அச்சம் தரக்ககூடிய இவர்களோடு தனக்கு உறவு ஏற்பட்டால், அது உலக வாதனை பயக்குமோ.... என்றே மணிவாசகப் பெருந்தகை மிகவும் அஞ்சினார்.


சீவன் முக்தர்கள் எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருப்பார்கள். உலக முகப்பட்டு வாழ்கின்ற காலத்தில் சிவபெருமானிடத்துத் தனித்து அன்பு செலுத்தாதவர்களைக் கண்டால், அக்காட்சி எப்போதும் இடைவிடாது சிவபெருமான் திருவடிகளில் அழுந்தி இருக்கும் தம் சிந்தையை, வேறுபடச் செய்யும் என்று அஞ்சி விலகுதலையே, இங்கு அச்சம் என்ற சொல்லால் குறித்தார் பெருந்தகை. திருவருள் உணர்வை அழிப்பனவற்றுக்கு அஞ்சுதலையே பெருந்தகை இவ்வச்சப் பத்தில் அருளிச் செய்துள்ளார். அச்சப்பத்து பாடல்கள் அனைத்தையும் படியுங்கள் திருவாசகத்தில் லயித்திருங்கள்.

திருச்சிற்றம்பலம்

இந்த பிளாகில் இருக்கும் நல்ல செய்திகளை நான்கு பேரோடு பகிரந்து கொள்ளுங்கள். ஆனால் கருத்துத் திருட்டு வேண்டாம்.... யார், எப்பொழுது, எங்கே குறிப்பிட்டது என்பதை எல்லாம் கோடிட்டுக் காட்டுவது நனி நாகரிகமானது.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!