சிவாய நம
திருச்சிற்றம்பலம்

  
கட்டுரையாளர்

இடைமருதூர் கி.மஞ்சுளா

( காவேரிப்பாக்கம், அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம்
 மணிவாசகர் குருபூஜை (2013) நாள் மலரில் இடம்பெற்ற கட்டுரை)


யானாகி நின்றான்


எச்சம்மறி வேன்நான் எனக் கிருக்கின்றதை அறியேன்
அச்சோ வெங்கள் அரனே! அருமருந்தே! எனதமுதே!
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான்
நிச்சம் என நெஞ்சின்மன்னி யானாகி நின்றானே!

                                                                             (திருவாசகம்., உயிருண்ணிப் பத்து, பா.10)


 மணிவாசகப் பெருந்தகை, உயிருண்ணிப் பத்து பதிகத்தை சிவானந்த மேலீட்டால் பாடியுள்ளார். மணிவாசகர் திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருக்கின்ற காலத்தில் இறைவன் ஊனார் உயிர் கலந்து உள்ளத்தை விட்டுப் பிரியாது பேரின்பத்திருத்திய பெற்றியால் திளைத்து, அவ்வனுபவ அதிசயங்களை இப்பத்துப் பாடல்களாலும் அருளிச் செய்துள்ளார்கள் என்பது தண்டபாணி தேசிகர் உரை விளக்கம்.

உயிருண்ணிப் பத்து 9-ஆவது பாடலின் மூலம், சிவபரம்பொருள் மாணிக்கவாசகராவே (யானாகி) ஆகிநின்ற தன்மையை விளக்கியுள்ளார். இப்பாடலின் மூலம் சைவ சித்தாந்தப் பேருண்மைகள் பலவற்றையும் விரித்துரைத்துள்ளார். இப்பாடலை சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் வழி ஒப்ப நோக்குவோம்.


உயிருண்ணிப் பத்தை சிவானந்தம் மேலிடுதல் என்பர். இதற்கு "தழைத்து வளர் பேரின்பந் தானாகி உயிர் தோன்றாத் தன்மையாத் துன்(பு) ஒழித்து நிறைவைப் பெறுதல் உயிருண்ணிப் பத்தாய் இங்கு உரைத்ததாமே" என்பது பழைய திருப்பெருந்துறை புராணம். இவற்றால் இறையருளாகிற வியாபகத்துள் உயிர் அடங்கி, உணர்வு கெட்டு இன்பமே தானாய் நிற்றலாகிய அனுபவம் கூறுவதே இப்பத்து என்பது பெறப்படுகிறது.

உயிர் உண்ணி என்பது, உயிரின் தன்முனைப்பு ஆகிய தற்போதத்தை (சீவ போதத்தை) அவ்வுயிர் வீடுபேறு அடையும்போது இறைவன் தன்னிடம் அடங்கச் செய்வது என்பதைக் குறிக்கும். உயிரைச் சிவபெருமான் உண்பது என்பது, உயிரின் சீவ போதத்தைத் தன்னுள் அடங்கச் செய்து, தன்னுடைய சிவபோதத்தை உயிர்களிடம் நிறைவித்து, மேலிடச் செய்வதைக் குறிக்கும். அவ்வாறு சீவபோதம் இழந்து, சிவபோதம் இருக்கும் தன்மையைக் கூறும் பத்துப் பாடல்கள்தான் உயிருண்ணிப்பத்துப் பதிகம்.


சிவானந்தம் என்பது, சிவம் என்னும் தனிமுதற் பொருளோடு, உயிர் இரண்டறக் கலந்து, ஒன்றித்து நின்று, சீவபோதம் கெட்டுச் சிவத்திடம் அடங்கி நிற்பதால் உணரும் பேரின்ப அனுபவமாகும். சிவம் உயிரை உண்பதால் இந்த சிவானந்தம் உண்டாகிறது. மேலிடுதல் என்பது மேற்குறிப்பிட்டவாறு, சீவபோதம் கெட்டுச் சிவத்தில் வியாப்பியமாய் அடங்கி நிற்பதால், சிவானந்தம் உயிரில் கலந்து, மேன்மேலும் பெருகி வளர்தலாகும். இந்த அனுபவத்தையே மணிவாசகப் பெருமான் கூறியருளியுள்ளார்.


திருவருள் தனியேயும், உயிர் தனியேயும் நின்ற நிலைபோக, திருவருள் உயிரைத் தன்வயப்படுத்தி ஆனந்தத்தால் நிரப்புதலின் உயிருண்ணி என்று கூறுவார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள்.


எங்கள் அரனே! அருமருந்தே! அமுதமே! இருவாட்சி மலரை ஒத்த சிவந்த திருமேனியை உடையவனும், திருப்பெருந்துறையில் உறைபவனுமாகி எனது மனத்தில் நாள்தோறும் எழுந்தருளி யானேயாகி நின்றவனே! எனக்குள்ள வினைச் சேடத்தை அறிவேன், ஆனால்  எனக்கு வரக்கூடியவனாக இருக்கின்ற வினை மூட்டைகளை அறியேன்!


சிவனே! என் மனத்தில் எழுந்தருளி, ஒன்றாகிக் கலந்து யானே தானாகி நின்றாய். அதனால் பிராரத்த வினையை (சேடத்தை) தேகம் உண்மையால் அறிகின்றேன். ஆகாமிய சஞ்சிதங்கள் (ஆகாமிய வினை, சஞ்சித வினை)  எவ்வளவு இருக்கின்றன என்பதை யான் அறியேன். அவை என்ன செய்யுமோ"  என மணிவாசகர் இரங்கிக் கூறியுள்ளார்.


சிவானந்தம் மேலீட்டால் தற்போதம்   இழந்தார்க்கு வினை உண்மையும் அதனால் விளையும் தீங்கும் விளங்குமோ எனின், விளங்காதுதான். ஆயினும், சிவானந்தத்தில் திளைக்க முற்படுகின்ற காலத்து, இத்தகைய பேரின்பம் நிலைத்திருக்க வேண்டுமே... முன்போல் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகக்கூடாதே... எடுத்த இத்தேகம் இருப்பதால் வினைச்சேடம் இருக்கின்றதென்பதை அறிகிறேன். இதனால் அச்சமில்லை. இவ்வுடல் சிவானுபவத்திற்குத் துணையாக உதவும். இனி வரக்கூடிய வினைகளைத்தான் நான் அறியேன்! என்று உணர்கின்ற அளவு விளங்கி, விளைவித்து, சிவானந்த மேலீட்டிலேயே இருக்கச் செய்யும் என்க. அதனாலேயே "எச்சம் அறிவேன் நான், எனக்கு இருக்கின்றதை அறியேன் அச்சோ" என்கிறார். யானாகி நிற்கும் சிவானந்தம் மேலீட்டு அது பிரியாமையை விரும்புதலின் இது பதிகக் கருத்திற்கு இயைய நிற்றல் காண்க.

"அவனே தானே யாகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே"


என்னும் சிவஞான போதம் 10-ஆம் சூத்திரத்துடன் இப்பாடல் ஒப்பு நோக்கத்தக்கது. பாசத்தை விடுதலும், சிவனை அடைதலும் என்னும் பயன் இரண்டினுள், பாசநீக்கம் என்பது சுட்டி அறியும் அறிவினால் அறியப்படும் பிரபஞ்சப் பற்றை உணர்த்தும். முக்தி பஞ்சாக்கர உச்சரிப்பினால் கெடுக்கும் பொழுது உண்டாகும் ஆன்ம சுத்தியின் பயனைக் குறிக்கும், அந்தப் பாச நீக்கத்தைச் செய்துகொள்ளும் வண்ணம், இந்தச் சூத்திரத்தில் கூறுவதோடு, 8-ஆம் சூத்திரத்திரத்தில் குருநாதர் உபதேசத்தைக் "கேட்டல்" நெறியையும், 9-ஆம் சூத்திரத்தில் "சிந்தித்தல்" நெறியையும், 10-ஆம் சூத்திரத்தில் "தெளிதல்"  நெறியையும் காட்டுகிறார்.


"அவனே தானே ஆகிய அந்நெறி" என்னும் தொடரில் வரும் "அவனே" என்பது உயிர், முதல்வனை இன்றி அறியாது என்பதைக் குறி்க்கும் "தானே" என்பது முதல்வன் உயிருடன் இருந்தும், நிற்கின்றதாய் சிறிதும் தோன்றாமல் உயிராகவே நிற்றலைக் குறிக்கும். "அந்நெறி" என்பதில் உள்ள "நெறி" என்னும் சொல்லுக்குப் பொருள் "போல" என்பதாகும். ஆகவே, "அந்நெறி" என்பது, "அதுபோல" என்னும் பொருளை உடையதாகும். எனவே, முக்திக் காலத்தில் உயிர், வேற்றுமையும் முனைப்பும் அற்று நிற்றலே சைவ சித்தாந்த முத்தி இலக்கணம் என்பது பெறப்படும்.

சிவானுபவம் உடையவருக்கு ஆணவமலம் பற்றறக் கழியும் என்று கூறப்படுகிறது. பரஞானத்தைப் பெற்றபோதே சிவம் பிரகாசிக்கும். அப்போது அவன் சீவன் முத்தன் ஆவான். சீவன் முத்தி என்பது , சிவம் பிரகாசிக்கப் பெற்றும், பிராரத்த தேகத்தோடு கூடிய நிலை ஆகும். தேகத்தோடு கூடி இருந்தாலும், சகசமாகிய ஆணலமலம், தனது சக்தி கெட்டு வாசனை மாத்திரையாய், உடம்பு உள்ள வரையில் நின்று, உடம்பு நீங்கும்பொழுது பிறிது ஒரு பிறவிக்கு வழியின்றி அந்த உடம்போடு பற்றறக் கழியும். ஆணவமலம் அநாதி ஆதலால், பற்றறக் கழியாது என்பவரை மறுத்துப் பற்றறக் கழியும் என வலியுறுத்துகிறது மெய்கண்ட சாத்திர நூலான சிவஞான சித்தியார் பாடல் 314.

சிவப்பேறு என்பதே முத்தி எனப்படும். முத்தி என்பது விடுதல். அந்த முத்தியும், பரமுத்தி, சீவன் முத்தி என இருதிறப்படும். பரமுத்தி என்பது பரனோடு கூடி நின்று பாசத்தை விடுதலாகும். சீவன் முத்தி என்பது சீவனாகி நின்றும் பாசத்தை விடுதலாகும். அதாவது, சீவத்தன்மையைச் செய்வதாகிய பாசத்தை இழந்து நிற்றலைக் குறித்தும். இவ்விரு முத்தியினுள் பரமுத்தியை விதேக முத்தி என்றும் (விதேகம்-தேகத்தை விடுதல்) கூறுவர்.


"நீயே நானாக இருக்கிறேன். இந்த உண்மையை நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. உனக்கும் எனக்கும் புறம்பாயுள்ள பிருகிருதியை அறிகிறேன். அந்தோ! ஆசையால் தூண்டப்பட்டு கருவி காரணங்கள் வாயிலாகப் பிருகிருதி அறியப்படுகிறது. நிராசையில் நிலைத்திருக்கும் இடத்து சீவனும் சிவனும் ஒன்றே என்னும் அனுபூதி வாய்க்கிறது. அந்த அனுபூதியில் ஜகத்தும் பரத்தும் ஒன்றுபடுகிறது. அதுவே பரஞானம் அல்லது சிவஞானம். அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கு முப்பொருள் உண்மை என விளங்கும். பரஞானம் அடையப் பெற்றவர்களுக்குப் பரம்பொருள் ஒன்றே மெய்ப்பொருளாகும்"  என்பது சுவாமி சித்பவானந்தர் உரை.


சிவஞானப் பேறு

காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்து உண்மை
காண்பார்கள் நன்முக்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டும் நெறி வாரா தார் (வி.வெ.11)


ஞாதுரு, ஞானம், ஞேயம் என்பன முறையே காண்பான், காட்சி, காட்சிப் பொருள் ஆகியோரைக் குறிக்கும். காண்பவர்கள் ஆன்மா. காட்சி-காட்டும் அருள். காணப்படும் பொருள் - சிவம். ஆன்மாவுக்குச் சிவத்தைக் காட்டுவது அருளே ஆகும். ஆன்மா அவ்வாறு சிவத்தைக் காணும்போது, திருவருள் ஆன்மாவைச் சிவமாக்கி விடுவதால், அந்நிலையில் ஆன்மா தன்னையும் காணாது, காட்டிய அருளையும் காணாது, தான் சிவமாகிவிட்டதால் சிவத்தை வேறாகப் பிரித்தும் காணாது. ஆகவே திரிபடி ஞானம் ஆகிய இந்த மூவகை நினைவும் நீங்கப்பெற்று நிற்கும் நிலையே சிவஞானப்பேறு பெற்று நிற்கும் நிலையாகும்.


இத்தகைய சிவஞானப் பேறாகியப் பேரின்பப் பெருநிலையை எய்திய சிவஞானி மாணிக்கவாசகர்,  சிவபரம்பொருள் யானாகி நின்றான் என்கிறார். சிவனே தானாய்,  தானே சிவமாய் நின்ற தன்மை இதில் வெளிப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்

மணிவாசகர் மலரடி போற்றி!


-இடைமருதூர் கி.மஞ்சுளா














Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!