திரிமலம் தீர்த்த தேசிகன்

சிவாய நம
திருச்சிற்றம்பலம்


ஆக்கம்: இடைமருதூர் கி.மஞ்சுளா










இக்கட்டுரை அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் (காவேரிப்பாக்கம்)  17.1.2011 திங்கட்கிழமை அன்று நிகழ்ந்த கண்ணப்பர் திருநாளில் வெளியிடப்பட்ட திருவருணை "பால் சுவாமிகள்"  தெய்வத்திரு பொன்னுசாமி அடிகளாரின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மலரரில் வெளியானது.


மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அந்நியம் ஆக்கி அருள்வழி அதனால்
என்னுள் புகுந்தனைச எனினே, முன்னைத்
திரிமலம் தீர்த்த தேசிக!


அருணந்தி சிவமும் இருபா இருபஃதும்:
  

சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று இருபா இருபஃது. இந்நூல் அருணநந்தி சிவாசாரியாரால் அருளிச் செய்யப்பட்டது. இவரு காலம் 1222-க்குச் சில ஆண்டுகள் பின்பு என்று கூறுவர். இருபா -இரண்டு வகைப்பா, இருபஃது -  20 பாடல்கள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஆகிய இரண்டும் மாறிமாறி வர, அவ்வகையில் 20 பாடல்களைக் கொண்டது. அதாவது, வெண்பா ப10, ஆசிரியப்பா 10. மெய்கண்ட சாத்திரத்தில், பா வகையிலும் தொகை வகையிலும் பெயர் பெற்ற நூல் இது ஒன்றேயாகும். மேலும், அந்தாதித் தொடையிலும் அமைந்தது.

சைவ சித்தாந்தச் செந்நெறியில் காணப்பெறும் பல அரிய உண்மைகளை இந்நூல் உள்ளடக்கியது. அருணந்தி சிவாசாரியார் தம் மனத்தில் எழுந்த ஐயங்களை, தம் குருவாகிய (தேசிகர்-ஞானாசிரியர்-வீடுபேற்றுக்கு ஏதுவான ஞானத்தை போதிக்கும் குரு) மெய்கண்டசிவனாரிடம் வினவி அறிந்த நூட்பமான செய்திகளை இந்நூலில் விளக்கமாகக் கூறியுள்ளார். வினாக்கள் வெளிப்படையாக உள்ளன. ஆநால், விடைகள் குறிப்பாக உணர வேண்டியுள்ளது. இந்நூல், குருவணக்கம், முப்பொருள் உண்மை பற்றிக் கூறுகிறது.

ஞானாசிரியனே சிவபெருமான்:

சிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளி, பக்குவமுடைய ஆன்மாக்களை ஆட்கொள்கிறான் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. குருவணக்கப் பாடலில், திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமான், தன் நெற்றிக்கண்ணையும், கண்டத்தில் உள்ள நஞ்சினையும் மறைத்தருளி, திருவெண்ணெய் நல்லூர் என்னும் திருத்தலத்தில், "மெய்கண்டசிவம்" என்னும் திருப்பெயரும் திருவுருவமும் கொண்டு எழுந்தருளியுள்ளான். உலகில் உள்ள அனைத்து மக்களின் ஆணவமலப் பிணியைப் போக்கி அருளும் பொருட்டே, இறைவன் அவ்வாறு எழுந்தருளியுள்ளான். எனவே, அவனிடம் ஒரு தடவை சென்று, அவனருளை நினைந்து வழிபடுபவர்கள், உயிர்க்கு உயிராய் நிற்கும் சிவபெருமானை, அத்துவிதமாகத் தம் உள்ளத்தில் தெளிவாகக் கண்டு அறியும் பெரும்பேற்றினைப் பெற்றவர் ஆவர் என்கிறார் அருணந்தி சிவம்.


திரிமலம் தீர்த்த தேசிகன்:

திரிமலம் தீர்த்த தேசிகன் எனப் பாச நீக்கம் குறித்து 10-ஆவது பாடலில் நான்காவது அடியில் அருணநந்தி சிவம் கூறியுள்ளார். திரிமலம் என்பது ஆணவம், கன்மம், மாலை ஆகிய மும்மலங்கள். "திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்" என்று சிலப்பதிகாரமும், "திரிபுரம் எரித்த" சிவபெருமானது வீரதீரச் செயல்களைத் திருவாசகத் திருவுந்தியாரும், மேலும் பல பக்தி இலக்கியங்களும் விரிவாகக் கூறுகின்றன.

திரிபுரம் என்பது மும்மலங்களே ஆகும். உயிரைப் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் பிறவிக்கு வித்தான நோயைப் போக்கி வைத்தியம் (மருத்துவம்) செய்யும் வைத்தியநாதனாக சிவபெருமான் திகழ்கிறாந். இந்த உண்மையைத்தான் "வருந்துயர் தீர்க்கும் மருந்து" என்று மணிவாசகப் பெருந்தகை கூறினார். இப்போது மேற்சுட்டிய பாடலைக் காண்போம்.


மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை
அந்நியம் ஆக்கி அருள்வழி அதனால்
என்னுள் புகுந்தனைச எனினே, முன்னைத்
திரிமலம் தீர்த்த தேசிக!

என்று பாசநீக்கம் குறித்துப் பேசும் அருணநந்தி சிவம், "திருவெண்ணெய் நல்லூர்த தலைவனே! இருவினை ஒப்பு எய்தியபோது, என் அறிவை மறைத்துக் கொண்டிருந்த ஆணவ மலத்தின் ஆற்றல், என்னிடம் செல்லுபடி ஆகாதவாறு செய்தருளி, என் உள்ளே புகுந்து, உயிர்க்குயிராய் நின்று அ்ருளினாய். எனவே, பரம குருவே! உன்னை விட்டு நீங்காமல், நான் உன்னோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பது உறுதியாகிறது. ஆனால், அநாதியே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் என்னைப் பந்தித்து நிற்கையில், நான் உன்னுடன் ஒன்றி நிற்கவில்லை என்று கூறுவாய் ஆயின், அந்த மலங்கள் என்னைவிட்டு ஆகையினால், எளியேன் என்றுமே உன் திருவடிகளைச் சேர முடியாதவன் ஆகி, மலங்களின் செய்கைகளுக்கு உட்பட்டு, பிறப்பு இறப்புக்களில் பட்டு உழன்று கொண்டே இருக்க வேண்டியதாகும்" என்கிறார்.

அநாதியாகிய இம் மும்மலங்களே நம்மை இறைவனோடு இரண்டறக் கலக்கவிடாமல் தடுக்கும் தன்மையன. இறைவனே ஞானாசிரியன் உருவில் வந்து களைந்தால் ஒழிய, மலநீக்கம் ஏற்படாது. அத்தகைய நிலை எனக்கு வாய்க்காதவாறு என்னைக் காத்து, எனை ஆண்டு, வீடுபேற்றிற்கான வழியைக் காட்டி அருளினாய்" என்கிறார்.

மெய்கண்ட சிவம் என்ற தேசிகனாக (ஞானாசிரியனாக) எழுந்தருளி வந்து தமது திரிமலங்களையும் (மும்மலங்கள்) போக்கி ஆண்ட திறத்தைடே திரிமலம் தீர்த்த தேசிகன் என்று வியந்தும்  -  விதத்தும் போற்றிப் பாடியுள்ளார் அருணநந்திசிவாசாரியார்.


குருவருள் இன்றித் திருவருள் இல்லை!


திருச்சிற்றம்பலம்





Comments

  1. திரிபுரம் என்பது மும்மலம் என்பதை சிறப்பாகக் கட்டுரை மூலமாக உணர்த்தியுள்ளீர்கள். சைவ சித்தாந்தம் தொடர்பான ஒரு கட்டுரையை இவ்வளவு எளிமையாகத் தந்தமைக்கு நன்றி. ஜம்புலிங்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!