மணிவாசகரின் முத்தான மணிமொழிகள்...பத்து...

மணிவாசகப் பெருந்தகையின் மணிமொழிகளைக் கற்போம், இறைவனின் - சிவபெருமானின் அருமை பெருமைகளை அறிவோம், அடியார்களின் இணக்கத்தை நாடுவோம்.... கன்றைப் பிரிந்த - இழந்த  பசுவைப் போல  கசிந்து கண்ணீர் மல்கி இறைவனின் திருவருளுக்காக ஏங்கித் தவிப்போம்....இந்த ஏக்கமே நமக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும். இறைவனுக்காக மட்டுமே ஏங்குவோம்....  இங்கு காட்சியளிப்பவர் இடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமான்.  இடைமருதன் இருக்க இனி இடையூறுகள் ஏது.....








1. கடவுளின்  இருப்பினை உணர்ந்தவர் ஜாதி பேதம் பார்க்க மாட்டார்கள். யாராவது ஜாதி பேதம் பாராட்டுகிறார்கள் என்றால்,  அவர்கள் இன்னும் கடவுள் இருப்பை உணரவில்லை என்பது பொருள்.

2. அரசனாகிய என் இறைவனே! பொன்னம்பலத்திலே கூத்தாடும் என் பேரமுதே! என்று உளமார நினைத்து, வாயாற வாழ்த்தி நின் திருவடியினையே நோக்கி நின்றேன். அங்ஙனம் நிற்கும் அடியேன் நிலை, தக்க இறை நெருங்கி வருமாறும் கொக்கின் நிலையைப் போல் இருந்தது.

3. இறைவன் தன்னை ஆட்கொண்டவுடன் அறியாமைக் குணம், தமர் - பிறர் என்ற பாகுபாட்டு உணர்வு,  யான் என்ற செருக்கு,  எனது எனும் பற்று ஆகிய அனைத்தும் நீங்கிப்போன அருமையை உணரலாம்.

4.  நீ என்னை விற்பாயோ, ஏற்றித்தான் வைப்பாயோ, நீயேதான் வைத்துக் கொள்வாயோ....எனக்குத் தெரியாது. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்.

5. ஆண்டவன் அருளினால் மட்டுமே வினை அழிதல் வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

6. மெய்யுணர்தல் என்பது பொய்ப் பொருளாகிய உடல் முதலியவற்றின் நிலையாமை கண்டு நீங்கி, மெய்ப் பொருளாகிய கடவுளை அநுபவ வாயிலாக உணர்தல் என்கிற பொருளினை உடையதாகும்.

7. தன்னையும் உணராமல், தன் வாழ்க்கையின் தன்மையையும் உணராமல், தனக்கு உடல் பொருள் சுற்றம் அனைத்தையும் வாரி வழங்கிய வள்ளலாகிய தன் தலைவனையும் உணராமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்த வாழ்க்கைக்கு அழிவு காலம்...

8.  இறைவன் திருவடியைக் கண்ட அளவிலே, அந்தக் காட்சி, பொழிந்து இன்புற்று இயைதலினும், அக்காட்சி இடையறாது நிகழ்தல் மிக்க இன்பம் பயப்பதாகும்.

9. இறைவனை மெய்யன்போடு வாழ்த்துவாரும், வணங்குவாரும் தேவர் முதலிய எல்லோராலும் வாழ்ந்தப்பட்டும் வணங்கப்பட்டும் பெருமைகளை அடைவர்.

10.  இறைவனை மனமொழி மெய்கள் இயைந்து இன்புறுதலினும், அதற்குச் சாதகமான திருவடிக் காட்சி இடையறாது நிகழ்தல் சிறந்ததாகும். இறைவனது திருவடிக் காட்சியைப் பெறுதல் என்பது அரியதாகும்.





மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பத்தில் மணிமொழியாரின் வேறுபல அற்புதமான மணிமொழிகளோடு உங்களைச் சந்திக்கிறேன்

மணிவாசகர் அடிமை

மணிவாசகப்பிரியா... என்கிற

இடைமருதூர் கி.மஞ்சுளா



Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!