காதல் செய்து உய்மின்!





உ சிவாய நம திருச்சிற்றம்பலம் மணிவாசகர் மலரடி போற்றி இடைமருதூர் கி.மஞ்சுளா காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின் கருதரிய ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே! (திரு.தி.பா.ப}5) இப்பாடலில், "பாண்டி' என்னும் சொல், இங்கே பாண்டியநாட்டு அரசனைக் குறிக்கும். அதாவது, சிவபெருமான், மலையத்துவசப் பாண்டியன் திருமகளாகிய மலைமகளை மணந்து சோமசுந்தரப் பாண்டியனாக வந்து, பாண்டிய நாட்டை ஆண்டதால், "பாண்டி' என்ற சொல், சோமசுந்தரப் பாண்டியனாகிய சிவபெருமானையே குறிக்கும். பத்துப் பாடல்கள் கொண்ட "திருப்பாண்டிப் பதிக'த்தில், பல இடங்களில் பாண்டியனார் என்ற சொல் வருகிறது. 5ஆவது பாடலில் "ஆலம் உண்டான் எங்கள் பாண்டிபிரான்' என்று வருவதால், இது சிவபெருமானையே குறிக்கும் என்பது தெளிவு. சிவபெருமான் முன்பொரு சமயம், கண்டவர் மனங்கவரும் வனப்புடன், ஒரு குதிரையின் மீது அமர்ந்து, பாண்டிய மன்னன் முன்வந்த திருவுருவச் சிறப்பை மணிவாசகப் பெருந்தகை பல இடங்களில் இப்பதிகத்தில் அருளிச் செய்துள்ளார். இறைவனைப் பாண்டி நாட்டுத் தலைவனாக வைத்துப் பாடி அருளியதால் இது "திருப்பாண்டிப் பதிகம்' எனப்பட்டது. இப்பதிகம் முழுவதும், இறைவன் குதிரைச் சேவகனாகி வந்து அருளிய தன்மை கூறப்பட்டுள்ளது. இதை சிவானந்த விளைவு என்பர். அதாவது, சுகப்பேறு. இறைவன் திருவிளையாட்டை எண்ணி மகிழ்வதால் உண்டாவதான சுகப்பேறு. ஆன்மா சிவபெருமானுடன் இரண்டறக் கலந்து ஒன்றித்து நிற்றலால் உணரும் பேரின்ப அனுபவம். சிவபெருமானுடைய திருவுருவத்தைக் காணுந்தோறும் அவ்வனுபவம் விளைவதால், இப்பதிகத்தில் இக்கருத்துரை இடம்பெறலாயிற்று என்பர் சான்றோர். இறைவனிடத்து அன்பு செய்து வாழ்வதே மானிடப் பிறவியின் பயனாதலின், "காலம் உண்டாகவே" என்றார். காலம் உண்டாக } காலம் மிகவும் உளதாகும்படி என்றது, "மிகவும் முன்னதாக' என்பதாம். ""வேண்டின் உண்டாகத் துறக்க''(துறவு}342) என்ற வள்ளுவர் வாக்கும் இங்கு கருதத்தக்கது. அன்பால் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பதால், "காதல் செய்து உய்மின்' என்றார். அதனை நீண்ட நாள் செய்தற்கு இளமையிலேயே தொடங்க வேண்டும் என்பதை மிகவும் முன்னதாக என்றார். மூல பண்டாரம் } சேமநிதிக் கருவூலம்; இது ஆகுபெயரால் அதன்கண் உள்ள பொருளைக் குறித்தது. கருவூலத்தைத் திறந்து வாரி வழங்குதல் ஏதோ ஒரு சிறப்புக் காலத்திலன்றி எப்பொழுதும் நிகழாதாதலாலும், அக்காலந்தான் விரைந்து நீங்கிப் பின்னர் வந்து கூடுதல் அரிது என்பதாலும் "வந்து முந்துமின்" என்றார் மணிவாசகர். திருமால் மண்ணுலகத்தை உண்டு படைப்புக் காலத்தில் மீளவும் உமிழ்கின்றார் ஆதலின், திருமாலை "ஞாலமுண்டான்' என்றார். தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகத்தாரும் பெற வேண்டும் என்று மணிவாசகர் விரும்பியதால், மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே என்றார். இறைவனது மூலபண்டாரப் பொருள் என்றது அவரது திருவருட் செல்வத்தை. அதனை வழங்கும் சிறப்புக் காலம், அவன் மதுரையில் குதிரைமேல் வந்து நின்ற காலம். மூலக் கருவூலம் } திருவருள்; அதில் உள்ள நிதி சேமநிதி, முக்தி இன்பம் என்பதாம். இதனால், இப்பிறப்பு உள்ள போதே முக்தி இன்பத்தைப் பெற வேண்டும் என்றார். எண்ணவும் முடியாத நல்ல காலம் கிடைத்தபோதே இறைவன் மீது அன்பு(காதல்) செலுத்தி உய்யுங்கள்; ஏனென்றால், தத்தம் முடிவுக்காலம் எப்பொழுது வருமென்று யாருக்கும் தெரியாது, உங்களுடைய வாழும் காலம் இருக்கின்றபோதே உய்தி பெறுங்கள்! மேலும், இறைவனை அன்பால் மட்டுமே அடையமுடியும் } பெறமுடியும். அவன் தம் அடியவர்களுக்குச் சேமிநிதியை வழங்கக் காத்திருக்கின்றான். அதாவது, இறைவன் சேமநிதியை வழங்கிக் கொண்டிருக்கும் காலம் இருக்கும்போதே அவனிடம் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொண்டு உய்கதி அடையுங்கள் } அதைப்பெற முந்திக் கொள்ளுங்கள் என்கிறார். ""இப்பிறவி தப்பினால் இனி, எப்பிறவி வாக்குமோ?'' என்ற பட்டினத்தாரின் ஞானப் புலம்பல், இங்கு முக்தி இன்பத்தைப் பெற உடனே முந்தவேண்டும் என்ற உறுதிப்பாட்டினைத் தருகிறது. இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையில்லாதவை என்பதால், இறைவனை உடனடியாக அன்பு செய்து அடைய முயற்சி செய்ய வேண்டும், அவர் தரும் சேமநிதியைப் பெற முந்த வேண்டும் வாருங்கள் என்கிறார் அடிகளார். இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுமாயின் அடையத் தடைஇல்லை என்பதை, "வேண்டிய போது விலக்கு இலை' என்றார். ஆகவே, வேறு பொருள்களை விரும்பாது, அவன் திருவடிகளையே விரும்ப வேண்டும் என்பதை "தாள் வாய்தல் விரும்புமின்' (5) என்றார். மேலும், வேண்டுவார் வேண்டுவதே ஈபவன் இறைவன் என்றார். இடைவிடாது பேரின்பம் அனுபவிப்பதற்குப் பிறவி தடையாக உள்ளமையால், பிறவியைப் பகை என்கிறார். (இப்பிறப்பென்னும் பகைகள்}பா7). ""வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை'' என்ற திருவள்ளுவர் வாக்கும் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும். பிறவியாகிய துன்பத்தினின்றும் எடுத்துத் திருவருளாகிய இன்பத்தில் திளைக்கச் செய்வானாதலில், தென்னவன் சேவடி சேர்மின்கள் என்று ஏழாவது பாடலில் கூறுகிறார். இதனால் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் தருபவன் இறைவன் } சிவபெருமான் என்பது கூறப்பட்டுள்ளது. இப்பதிகம் முழுவதும், இறைவனது உருவத்தை இடைவிடாது நினைத்தல் வேண்டும்; மறுபிறப்பை அறுத்து ஆட்கொள்பவன் சிவபெருமான் ஒருவனே, அதனால் அவனைச் சிக்கெனச் சேர்தல் வேண்டும்; நீர் மேல் எழுதிய எழுத்துப் போன்று உலக இன்பமானது தோன்றியவுடனே அழியுமாதலின், அதனை நீரின்ப வெள்ளம் என்று கூறி, நிலையில்லாத இந்த உலக இன்பத்தில் திளைக்காது, நிலையான பேரின்பத்தில் திளைக்க ஆசைப்பட வேண்டும் } அதை வலியவந்து நமக்கு வழங்குவதற்கு இறைவன் காத்துக்கொண்டிருக்கிறான்; விரைவில் முந்திக்கொண்டுபோய் அதைப் பெறவேண்டும். இறைவனது ஞானத்தைப் பெற்றுப் பிறவியை நீக்கிகொள்ள வேண்டும், இப்பிறப்பு உள்ளபோதே முக்தி இன்பத்தைப் பெற வேண்டும், அவனே முக்திப் பரிசினை வழங்கும் வள்ளலாகவும் இருக்கிறான் என்றார். துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் தருபவன் சிவபெருமானே! அதனால், இறைவன் தரும் முக்தி இன்பத்தையேயன்றி, அவன் மேல் காதல் செய்து, இம்மை}மறுமை இன்பங்களையும் அவனே அருளுபவன் என்பதாலும் அதையும் விரைவில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்; சிவபெருமான் அன்பர்க்கும் } அடியார்க்கும் எந்நாளும் இன்பமே நல்குவான். அதனால் அவனது சிவந்த சேவடியை} திருவடியைச் சிக்கெனச் சேர்ந்துவிடுங்கள் } உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார் மணிவாசகப் பெருமான். இவ்வண்ணம் மணிவாசகப் பெருமான் தான் பெற்ற சிவானந்தப்பேற்றை ஏனையோரும் பெற அழைத்தலால், இது சிவானந்த விளைவை உணர்வதாயிற்று. மணிவாசகப் பெருந்தை, இவ்வுலக வாழ்க்கையின் நீங்கி, இறைவன் தன்பால் வரவழைத்துக் கொள்ளவேண்டும் என்னும் கருத்தே இப்பதிகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ""பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின் மேல் வந்தருளி, தன்னடியார் குற்றங்கள் நீங்கி, குணங்கொண்டு கோதாக்கி சுற்றிய சுற்றத் தொடர் பறுப்பான் தொல் புகழே, பற்றி, இப்பாசத்தைப் பற்றற நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம் பாடுதும்காண் அம்மானாய்!'' என்ற அம்மானைப் பாடல் வழி இதை முன்பே நன்கு உணர்த்திவிட்டார் அடிகளார். பாண்டிபிரான் பாய்பரியோன் கோலம் கொண்டு, கொற்றக் குதிரையின் மீது எழுந்தருளி அடியார்கள் குற்றங்களையும் பாச வினைகளையும், மறுபிறப்பையும் வேறறுத்து சேமநிதியாகிய முக்திப் பரிசை வழங்குவதைப் பெற்றுக் கொள்ள அவன் மீது காதல் கொண்டு முந்துங்கள் என்ற மணிவாசகரின் மணிவாக்கை சிரமேற்கொண்டு } ஏற்று, சிவபெருமான் வழங்கும் சேமநிதியைப் பெற அவனருளாலே அவன்தாள் வணங்கி, முந்துவோம்! திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!