ஒலி கேட்டால் உள்ளம் உறங்குமோ...?

"சைவத் தமிழ்ச்சிந்தையர்' "சித்தாந்த இரத்தினம்' இடைமருதூர் கி.மஞ்சுளா (மும்பையிலிருந்து வெளியாகும் காலநிர்ணய் என்ற நாள்காட்டியில் வெளியான கட்டுரை ) பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்ப காலதாமதமானது. தலைவி பிரிவுத் துயரால் வாடுகிறாள். இவளது பிரிவுத் துயரை, ""வண்ணம் பசந்து புலம்புறு காலை, உணர்ந்த போல, உறுப்பினைக் கிழவி, புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே'' (தொல்.கள.1145) தலைவி தன் உடம்பின் நிறம் வேறுபட்டு வருத்தம் அடையும் காலத்து, தலைவன் பிரிவைத் தன் உறுப்புகள் அறிந்ததைப்போல பொருந்தும் வகையில் சொல்லுதலும் உண்டு. அவ்வாறு வாடினால் அதற்கு வடிகாலாய் இருப்பவள் உற்ற தோழிதான்! உடனே அவளிடம் சொல்லிப் புலம்புவாள். ""அன்புறு தகுவன இறைச்சியுள் கட்டலும் வன்புறை ஆகும், வருந்திய பொழுதே'' (நூற்பா}1173) தலைவனுடைய பிரிவுக்கு ஆற்றாது தலைவி வருந்தும் காலத்து, தலைவன் அன்பு கொள்ளத்தக்க கருத்துக்களைக் கருப்பொருளின் உட்பொருள் வகையால் (உள்ளுறை, இறைச்சி) குறித்தலும் வற்புறுத்தல் வகையிலேயே முடியும் என்பது தொல்காப்பியம். அக்காலத்தில் பெரும்பாலும் பலரது இல்லத்தின் பின்புறத்தில் மாட்டுத்தொழுவம் இருக்கும். காளைமாடுகளும் பசுமாடுகளும் அருகருகே கட்டப்பட்டிருக்கும். காளைகளின் கழுத்தில் "கணீர் கணீர்' என்று ஒலி எழுப்பும் மணிகளைக் கட்டி வைத்திருப்பர். இப்படித்தான் தலைவியின் வீட்டு கொல்லைப்புறத் தொழுவத்தில் மாடுகள் கட்டப்பட்டுள்ளன. அக்கால மக்கள் சில ஒலிகளைக் கொண்டே விழிப்புணர்வு கொள்வர். உதாரணத்துக்கு, காக்கைகள் பல சேர்ந்து ஒலி எழுப்பினால், மற்ற (அதைவிட வலிய) பறவைகளால் அவற்றிற்கு ஆபத்து என்றும், பசுமாடு தொடர்ந்து கத்தினால், திருடர் மற்றும் விஷ ஜந்துக்களின் ஆபத்து என்றும் அறிந்துகொள்வர். இப்படித்தான் தலைவியின் வீட்டு மாட்டுத்தொழுத்திலிருந்து ஒலி வருகிறது. அதுவும் நள்ளிரவு நேரம். தொழுவத்தில் அருகருகே காளையும் பசுவும் கட்டப்பட்டிருக்கின்றன. மழைபெய்யும் நள்ளிரவில் காளைமாடு ஒன்று பசுவுடன் கூட முயல்கிறது. அப்போது காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணி ஒலிக்கிறது. இந்த ஒலி, வீட்டின் உள்ளே உறங்கும் கணவன், மனைவி இருவரையும் விழிக்கச் செய்தது. இதை நாசூக்காகப் புரிந்து கொண்ட அவர்கள், உடனே ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்க முயல்வர். கண் விழித்தால் மெய் உறங்குமோ? இப்போது வெளியூர் சென்றிருக்கும் என்னுடைய தலைவனுக்கு இது நினை வுக்கு வராதா? இந்த ஒரு காளை மாட்டின் மணிக்குரலை அவர் அறியாரோ? (இந்நினைவு வந்தால், அவர் அங்கே ஒரு நிமிடம் கூட தங்க மாட்டார்; விரைவில் என்னைக் கூட வருவார்) இப்படி தலைவி, மனதுக்கு ஆறுதல் கூறிக்கொள்கிறாள். பாடல் இதுதான், ""நெறிஇருங் கதுப்பொடு பெருந்தோள் நீவிச் செறிவளை நெகிழச் செய்பொருட்கு அகன்றோர் அறிவர்கொல் வாழிதோழி! பொறிவரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரவு உரும் உரறும் அரைஇருள் நடுநாள் ஒலி கேட்டால் உள்ளம் உறங்குமோ...? நல்லேறு இயங்கு தொறியம்பும் பல்லான் தொழுவந்து ஒருமணிக் குரலே'' (குறு}190) நெளிநெளியான கரிய கூந்தலையும், பெரிய தோளையும் தடவிக்கொடுத்து, தலைவன் நயமாகப் பிரிந்தான். என் கைகளுக்குச் செறிவாய் இருந்த வளையல்கள் நெகிழும்படி பொருள்தேடச் சென்ற ôன். அவன் வருவதாகச் சொன்ன மழைக்காலம் வந்தும் அவன் வரவில்லை. புள்ளிகளையும் வரிக்கோடுகளையும், கடுஞ்சீற்றத்தையும் உடைய நாகப்பாம்பின் தலையைத் துண்டிக்கும்படியான பலத்த இடிமுழக்கத்துடன் இரவு நடுயாமத்தில் மழை பொழிகிறது. இடி ஓசையில் விழித்த நல்ல காளைமாடு ஒன்று (பசுவைக்கூடும் போது) அசையுறும்தோறும் பல பசுக்கள் கட்டியுள்ள தொழுவத்திலிருந்து ஒரு மணிக்குரல் மட்டும் தனித்து ஒலிப்பது ஏன் என்பதைப் பற்றிய அனுபவத்தை அறியாதவரா தலைவர்? அதை அறிந்தவரேயாதலால் விரைவில் திரும்புவார் என நம்புகிறேன் தோழி! என்று கூறுகிறாள் தலைவி. எத்தனை உணர்வுப் பூர்வமான செய்தி! காதலர் சேர்ந்திருக்கும் காலங்களில் நிகழ்ந்ததை, பிரிவுக்காலத்தில் நினைத்து மகிழ்வதும், வருந்துவதும்தானே காதலின் இயல்பும் அழகும்! இன்னொரு குறுந்தொகைக் காட்சி. தலைவன் இரவில் தலைவியைக்காண ஆசைப்படுகிறான். தோழியும் உடன்படுகிறாள். ஆனாலும் இந்நாளில் இருப்பதுபோல அக்காலத்தில் ஒலிஎழுப்பும் கடிகாரம் வைத்துக்கொண்டு உறங்கமுடியாதே! தலைவன் வரும்போது உறங்கிவிட்டால் என்ன செய்வது? ஆன ôல், சில காதல் நெஞ்சங்கள், கடிகாரம் இல்லாமலேயே சொன்ன நேரத்திற்கு விழித்துக்கொள்ளும் தன்மை உடையன. இது உளவியல் தொடர்புடையது. தலைவன் வருகிறான் என்றால் எந்தத் தலைவிதான் உற ங்குவாள்? அப்படித்தான் இத்தலைவியும் உறங்குவதுபோல் நடிக்கிறாள்; காரணம் பெற்றோர். நள்ளிரவில் தலைவியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான் தலைவன். ஆனால், தலைவியோ, தோழியோ பதில் குரல் எழுப்பாதது கண்டு தோற்றுத் திரும்புகிறான். அப்போது அவன் காதுகளில் விழும்படி தோழி கூறுகிறாள், ""பலரும் துயில்கின்ற நள்ளிரவிலே, வலிய களிறுபோல வந்து, தாழிடப்பட்ட கதவைத் தாங்கள் திறக்க முயன்ற ஓசையை நாங்கள் கேட்காமலில்லை; கேட்கத்தான் செய்தோம். ஆனாலும் என்ன செய்வோம்? உச்சிச் சூடு சிதையவும், தோகை மெலியவும், நன்றாக வலையில் அகப்பட்ட மயிலைப்போல, நாங்கள் வருந்தி அசையும் போதெல்லாம் அறப்பண்பே இல்லாத எம் அன்னையர் எங்களைத் தழுவிக்கொள்கிறார்களே! ஏதாவது ஓசை எழும்போதெல்லாம் தன் கைப்பிடியில் இருந்து நழுவும் மகளைச் சேர்த்தணைத்துக் கட்டிக்கொண்டு உறங்க முயல்கிறாளே! நாங்கள் என்ன செய்வோம்?'' இவ்வாறு தோழி கூறுவதன் மூலம் உடனடியாகக் காலம் தாழ்த்தாமல் திருமணத்திற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும், இத்தகைய இடையூறுகள் உள்ள சந்திப்புகள் இனி கூடாதென்றும் தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள். பாடல் இதோ, ""பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல் கேளே மல்லேங் கேட்டனெம் பெரும! ஓரி முருங்கப் பீலி சாய நன்மயில் வகைப்பட் டாங்கியாம் உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே'' (குறு.244) இத்தலைவன், யானைபோன்ற வலிமை உடையவன் என்பதாக, அவன் கதவு திறக்கச்செய்த ஒலியையும் கேட்கத்தான் செய்தோம் என்று தோழி சொல்வதிலிருந்து, அந்த நள்ளிரவிலும் அச்சிறிய ஒலியைக் கேட்கும் அளவுக்குத் தலைவி விழித்திருந்தாள் எனத் தெளிவு படுத்துகிறாள். 2 இன்னொரு அற்புதக்காட்சி. எம் ஊருக்குப் பக்கத்தே ஏழில் குன்றம் உள்ளது. அதன் மேலே நொச்சிமரங்கள் உள்ளன. அவற்றின் இலைகள் மயிலின் காலடிபோல கவர்த்தன வாய் இருக்கும். அதில் கரிய பூங்கொத்துகள் உள்ளன. அழகுமிகும் மெல்லிய கிளைகளில் நன்கு முதிர்ந்த நீலமணி போலும், பூக்கள் கீழே உதிர்ந்து விழும் ஓசை ஆகா! எத்தனை அற்புதமான மென்மையான உணர்வு. பூக்கள் விழும் ஓசையை யாராவது கேட்டதுண்டா? என்ன ஒரு மென்மையான கற்பனை! இதனால்தான் வள்ளுவப் பெருந்தகை, ""மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்' என்று கூறியுள்ளார் போலும். ""கொன்ஊன் துஞ்சினும் யாம்துஞ்சலமே எம்இல் அயலது ஏழில் உம்பர் மயிலடி இலைய மாக்குரல் நொச்சி அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே'' (குறு}138) பூவிழும் ஓசைகூட நள்ளிரவில எங்களுக்கு நன்கு கேட்கும். அதனால், இந்தப் பெரிய ஊரே ஆழ்ந்து உறங்கினும் நாங்கள் உறங்க மாட்டோம்! என்பதுதான் பாடலின் கருத்து. இத்தகைய மென்மையான உணர்வுகளை கற்பனை நயம் பொங்கவும் கருத்து செறிவாகவும் மறை முகமாக, நாகரிகமாக பாடுவதற்கு தமிழ்ப் புலவர்களுக்கு இணையாகவும், தமிழ் இலக்கியத்திற்கு இணையாகவும் வேறெதையும் கூற முடியுமோ? *****

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!