விக்கிரம வீறு விளங்குகவே....

இவர்  - என் தாய் எஸ்.கல்யாணி (அரசுப் பள்ளி நூலகர், இந்திப் பண்டிட்) - என் எழுத்துக்களை முதலில் வாசித்து ரசிக்கும் என் முதல்  வாசகி. ஆனால் இந்தப் பதிவை வாசிக்க முடியாமல் போனது என் துரதிர்ஷ்டம்.
------------------------



இப்போது கலைமாமணி விக்கிரமன் அவர்களைப் பற்றி பதிவு செய்தே ஆகவேண்டிய தருணம். என் தாய் (நவம்பர்8, -2015 ) காலமான பின்பு இனி எழுதவே கூடாது என்று இருந்தேன். ஆனால் அந்த வைராக்கியத்தை விக்கிரமன் அவர்கள் தகர்த்துவிட்டார்.

விக்கிரமனுடனான என் உறவும் தொடர்பும் தமிழன்னை எனக்குத் தந்தது என்றே கருதுகிறேன். எழுத்திலேயே பார்த்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதருடன் நெருங்கிப் பழங்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பது அரிது. இது பூர்வஜென்ம புண்ணியம்தான்

கடந்த நவம்பர் மாதத்தை என் வாழ்நாளில் மட்டுமல்ல எத்தனை ஜென்பமங்கள் எடுத்தாலும் மறக்கமுடியாது. காரணம், என் தாயின் மரணம் ஈடுசெய்ய முடியாத முதல் இழப்பு. அடுத்து என் மதிப்பிற்குரிய பெரியவர் கலைமாமணி விக்கிரமனின் மறைவு.

நாளை நாளை என்று ஒத்திவைக்கும் வேலைகள் நம்மை  செய்ய முடியாமலேயே செய்துவிடுகின்றன  என்பதற்கு இந்நிகழ்சிகளே சாட்சி.

நான் பத்திரிகை உலகில் காலடி எடுத்து வைக்காத நாள்களில் ஒரு பதிப்பகத்தில் பிழை திருத்தும் பணி கிடைத்தது. அப்போது என் மகள்  (2ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.) பள்ளிக்குச் சென்ற இடைப்பட்ட நேரத்தில்  சூளைமேட்டிலிருந்து ராயப்பேட்டை சென்று, அந்தப் பதிப்பத்திற்கு வந்திருந்த  முதன்மை எழுத்தாளர்களின் நூல்களைப் பிழைத் திருந்திக் கொடுப்பேன். அந்த நூல்களுள் எழுத்தாளர் விக்கிரமனின் நூல்களும் அடங்கும். அடுத்தடுத்து அவர் கைப்பிரதியைப் பெற அவர்  இல்லம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கனிவான பேச்சு, அன்பான உபசரிப்பு என்று  விருந்தோம்பல் மெய்சிலிர்க்க வைத்தது. கூடவே நல்ல அட்வைஸ். மேன்மேலும் வாழ்வில்  உயர்வதற்கான பல வழிகளையும் சொல்லிக் கொடுத்தார். அவர் இல்லத்தரசியாரின்  அதே கனிவும் உபசரிப்பும் மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது கொம்பில்லாத கொடியாக நான் தவித்துக் கொண்டிருந்த நேரம். விக்கிரமன் என்ற ஒரு முதன்மையான, பல்லாண்டுகள் வேர்கொண்ட கொம்பு ஒன்று கிடைத்ததும் அதில் படரத்துடித்தன என் எண்ணங்கள்.

அவர் வழிகாட்டுதலைப் பிடித்துக்கொண்டு, ஆன்மீகக் களஞ்சியம் என்ற மாத இதழைத் தொடங்கி, துணை ஆசிரியராகவும் பொறுப்பாசிரியராகவும் உயர்ந்தேன். பத்திரிகை பணி என்பதால்  தொடர்ந்து எழுதுவதில் தொடங்கி, பிழைதிருத்துவதுடி.டிபி. செய்ய சென்டர்கள் தேடித் அலைவது, பிரின்டிங் பிரஸ் தேடி அலைவது, வாசர்களுக்கு நூல்களை அனுப்புவது  எனத் தொடர்ந்து ஆசிரியர் தெள்ளாறு மணியுடன் நான் அலைந்த நாள்களை இறைவன் மட்டுமே கணக்கு வைத்திருக்கிறான். இந்தப் பணி பெண்களுக்கு சரிவராது என்று
மனம் தளர்ந்து போகும் போதெல்லாம்  கலைமாமணி விக்ரமனின் வாக்குதான் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஒருநாள்கூட படிக்காமல் எழுதாமல் இருக்ககூடாது. இந்த வயதிலும் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால், இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் தமிழ்ப்பற்றுதான். நீ தமிழ் இலக்கியம் படித்திருக்கிறாய். அதை நல்ல முறையில் பயன்படுத்தி பலருக்கும் உதவ வேண்டும். காலம் வந்தால் எல்லாம் நடக்கும். அதுவரை உழைத்துக் கொண்டே இரு என்பார்.

ஒரு வளர்ப்புத் தந்தையாக இருந்து என்னை வழிநடத்தியவர் கலைமாமணி விக்கிரமன்


தேவநேயபாவாணர் அரங்கில் நடந்த ஓர் எழுத்தாளர் சந்திப்புக் கூட்டத்திற்கு என் தாயுடன்  சென்றிருந்தேன். அன்றிலிருந்து என்னைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா எப்படி இருக்கிறார் என் நூல்களைப் படிக்கிறாரா என்று கேட்பார்என் தாய் ஓர் அரசுப் பள்ளி நூலகர் என்பதால் எப்போதும் விக்கிரமன் சார் போல புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். அவருக்காகவே என் இல்லத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கினேன்விக்கிரமன் சார் என் தாய்க்காகவே பல நூல்களை வழங்கினார்.

அதன் பிறகு தினமலர் பத்திரிகையில் சேர்ந்ததும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. பத்திரிகைப் பணியை விடாமல் பிடித்துக்கொள். உன்னிடம் பிடித்ததே உன்னுடைய தைரியம்தான் அதை என்றும் இழந்துவிடாதே என்று உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு திருமலரை விட்டு தினமணி பத்திரிகைக்கு வந்தது தனி கதை.

தினமணி ஆசிரியருடன்  நான் நேர்காணலில் இருந்தபோது விக்கிரமன் அவர்களின் குரலை கேட்டும் வாய்ப்பு கிடைத்தது.

மஞ்சுளாவா, அந்தத் திருவிடைமருதூர் பெண்தானே, எனக்கு நன்றாகத் தெரியும். நன்றாகப் புரூஃப் பார்த்துத் தருவார்., நல்ல புத்திசாலியான பெண்ணும்கூட. உங்கள் பத்திரிகையில் அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறியதை நானும் கேட்க நேர்ந்தது.. அப்போது என் கண்கள் நீரை வார்த்து அவருக்கு நன்றி செலுத்தின

ஒருமுறை உனக்காக, உனக்குப் பிடித்த திருவாசகம் தொடர்பான  பல நூல்களை எடுத்து வைத்திருக்கிறேன் வந்து வாங்கிக்கொள் என்றார். நேரம் வாய்த்தபோது இல்லம் சென்று அதைப் பெற்றுக்கொண்டேன்நிறைய பேசுவார், உண்மையே பேசுவார். ஆனால் சிலருக்கு அது பிடிக்காது என்பது வேறு விஷயம். தமிழ்மணி எப்படியெல்லாம் வரவேண்டும் என்று வழிநடத்துவார்.

என் தாய் இறந்ததை அவரிடம் கூறவில்லை. நான் பணிபுரியும்  பத்திரிகையிலும் வெளிவர விரும்பவில்லைகாரணம் என் தாய் இருந்தது செய்தி அன்று, அது ஒரு வரலாறு என்று  கூறி மறுத்துவிட்டேன். அதனால் விக்கிரமனுக்கு என் தாய் இறந்த செய்தி தெரிய வாய்ப்பில்லை. நானும் கூறவில்லை. காரணம் சென்னையை உலுக்கிய புயல், மழை. நான் கும்பகோணத்தில் இருந்தேன். கலைமாமணி விக்ரமனோ நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது சென்று எப்படிக் கூறுவது என்று இருந்துவிட்டேன்பிறகு கூறலாம் என்று தள்ளிப்போட்டேன். ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதை இறப்புக்கலைக் கண்டு பல முறை உணர்ந்தும் எனக்கு புத்திவரவில்லை. என் வழிகாட்டுதல் போய்விட்டார்அவருக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். அவர் முகத்தைக் கூட பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்காமல் போனது மழை செய்த சதி. அதனால் அவரைப் பற்றிய  பதிவை கீழே வைக்கிறேன். பலருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஒரு மாமனிதர், மனிதநேயமுள்ளவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று பெருமிதப்படுங்கள்.

÷தினமணி - தமிழ்மணியில் வெளியான (9.5.2010 முதல்) படைப்பிலக்கியவாதிகள் தொடரில், தொடர்ந்து தான் பேசிப் பழகிய அனுபவங்களுடன் 35க்கும் மேற்பட்ட படைப்பிலக்கியவாதிகளைப் பற்றிய பதிவு தமிழ்மணிக்கு மணிமகுடம் சூட்டினார். இந்த வயதிலும் ஒருவாரம் கூட தவறாமல் எழுதிக் கொடுக்கிறாரே என்று வியந்து போனேன்.

÷அக்கட்டுரைகளைப் பெற்று வெளியிடும் நேரங்களில் அவருடன் உரையாடவும், அவருடன் தொடர்புடைய மிகச்சிறந்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், அவரது இல்லம் சென்று உரையாடி பல சிறந்தஉயர்ந்த கருத்துகளைப் பெறவும் வாய்ப்பாக அமைந்தது அடியேன் பெற்ற பேறு!
. அன்பான பேச்சு, கனிவான உபசரிப்பு, அடுத்தவர் படைப்பை பாராட்டும் தன்மை, எழுத ஊக்கப்படும் பண்பு, அடுத்தவர்க்கு உதவும் மனித நேயம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கலைமாமணி விக்கிரமன் படைப்பிலக்கிய உலகிற்கு ஒரு சூரியன்! மறக்க முடியாத மனித நேயமுள்ள மாமனிதர் அவர்!÷÷

விக்கிரம வீறு விளங்குகவே...

""வாழ்க்கை மிகப்பெரிய கலை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்குச் செய்யத்தக்க நல்ல தொண்டு. நம்மைப் பார்த்து பிறர் கற்குமாறு நாம் ஒரு சமூக நூலாகப் பயன்படுவோம்'' என்பார் மு.வரதராதனார். அப்படிப் பல்லோருக்கும் பயன்பட்டவர் - பயன்பட்டுக் கொண்டிருப்பவர் - இனிமேலும் பயன்படப்போகிறவர் "மாய்ந்த பின்னும் வாழும்' கலைமாமணி விக்கிரமன் அவர்கள்.
÷
""எழுதிக் குவித்திடுவேன் கதைகளை
எண்ண முடியாதவாறு
பழுது சிறிதுமின்று - பாக்களைப்
பாடி மகிழ்ந்திடுவேன்
அச்சம் சிறுதுமின்றி அரசியல்
ஆழம் மூழ்கிடுவேன்
துச்சமாக எண்ணியே விமர்சனம்
எத்தனையோ செய்திடுவேன்
எத்தனையோ விதமாய் இலக்கியம்
இங்கே படைத்திடுவேன்
முத்தமிழ் இன்பத்திலே உலகை
மூழ்க அடித்திடுவேன்
தாய்த்தமிழ்ப் பணியே - எனக்குத்
தலைமைக் கடமையடா!
மாய்ந்த பின்னும் வாழ்வேன் - இதனால்
மகிமை பூண்டிடுவேன்!''


என்று தம் அழியாத் தன்மையை கவிதையின் மூலம் பிரகடனப்படுத்தியவர். இக்கவிதை "இலக்கியப் பணி' என்ற தலைப்பில் அவரை ஒரு மிகச்சிறந்த கவிஞராகவும் நமக்கு அடையாளப்படுத்துகிறது.
÷""விக்கிரமனின் கதைகள், மனிதனின், சமூகத்தின் நிறை குறைகளை விளக்குவதோடு நில்லாமல் அதன் மகத்துவத்தை உலகறியச் செய்யும் முரசாகவும், மனிதனைப் பண்படுத்தக் கூடிய பண்பாட்டுப் பெட்டமாகவும் திகழ்கின்றது.
÷தமிழ்ப் புனைக்கதை உலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருப்பவர் விக்கிரமன். "அமுதசுரபி'யாகக் கற்பனை வரும்; வந்துகொண்டே இருக்கும் என்பதற்கு அவர் படைத்தளித்த - படைத்துக் கொண்டிருக்கின்ற பல படைப்புகள் அடையாளச் சின்னங்களாகும். பழைமைக்கும் பழைமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் தமிழ்ப் பண்பாட்டோடு கதைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றவர்.
÷முத்துவிழா கண்டுள்ள அகவையிலும் முனைப்போடு படைப்பிலக்கியத்தின் வழியே அவர் புரிந்துவரும் தமிழ்த் தொண்டு தமிழன்னை பெற்ற தவம். வரலாற்றுக் கதைகளின் "திரிபுவனச் சக்கரவர்த்தி'யாகவும் நாம் வாழும் இற்றைக் காலத்தில் காட்சியளிக்கிறார். வரலாற்றுப் புனைவியலுக்குரிய கதைக் களத்தையும் கற்பனைத் திறத்தையும் அள்ளிக் கொள்ளும்படியான வற்றாத சுரங்கம் அவர்'' என்று கூறும் பேராசிரியர் இராம.குருநாதன், "கலைமாமணி விக்கிரமனின் கதைகளில் பெண்கள்' என்ற நூலில் அவருக்குப் புகழாரம் (பாராட்டுரை) சூட்டி மகிழ்ந்துள்ளார்.
÷""21-ஆம் நூற்றாண்டில் எண்பத்தோராம் வயதைத் தொடங்கும் சமுதாயக் காவலர் விக்கிரமன், தற்காலச் சிறுகதையுலகில் ஒளியாகத் திகழ்பவர். தாம் வாழும் காலத்திலேயே பண்பட்ட சமுதாயத்தைப் பார்க்க விழைபவர். உருவத்தாலும், உடையாலும், உள்ளத்தாலும், நோக்காலும் உயர்ந்துள்ள இப்பெரியார், பெண்ணுலகம் பொன்னுலகமாக நாளுக்கு நாள் உயர வேண்டும் எனக் கனவு காணும் சாதனையாளர். உழைப்பின் பழமாக, போலித்தனங்கள் களை எடுக்கப்படும் கழனியாக, ஏழைமையை விரட்டத் துடிக்கும் இளைஞராக, மக்களின் மனத்தை மனித நேயத்திற்கு ஆற்றுப்படுத்தும் பாவலராக விளங்குகிறார் விக்கிரமன்'' என்பார் டாக்டர் தே.செல்லையா.
÷விக்கிரமனின் எழுத்தாற்றல், கற்பனை வளம், அன்பு மென்மை, வாய்மை, இரக்கம், செயல் தன்மை, சமூக நல்லிணக்கம், வரலாற்றுச் சிந்தனை, வறுமையின் கொடுமை, பெண்ணியச் சிந்தனைகள் போன்றவற்றை அவருடைய நாலல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும் எடுத்துரைக்கின்றன.
÷14ஆவது வயதிலேயே சிறுகதைகளை எழுதத்தொடங்கி, பின்னாளில் 35க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்கள், சமூகப் புதினங்கள், நாடக நூல்கள், சிறுகதைகள், வரலாற்று நாவல்கள், பயண இலக்கியங்கள், பல்வேறு கட்டுரைகள் எனத் தள்ளாத வயதிலும் எழுதிக் குவித்தவர் விக்கிரமன்.
÷""சிறப்பாக நான் வளர்ந்திருக்கிறேனா இல்லையா என்பதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், நற்பண்பு, நாட்டுப்பற்று, தமிழ்ப்பற்று மூன்றையும் என் தந்தை எனக்கு ஊட்டினார். அதோடு நிறைய நூல்களையும் அவர் சேர்த்து வைத்திருந்தார்'' எனப் பெருமிதத்துடன் தம் மூவகைப் பற்றுக்கும் காரணம் தன் தந்தை எனக்கூறி, மகன் தந்தைக்காற்றும் உதவியைப் செய்துவிட்டார் விக்கிரமன் அவர்கள்.
÷கல்கியின் "தியாக பூமி'யும், பாரதியாரின் "தேசபக்திப் பாடல்களும்' விக்கிரமனின் ஆன்மப் பசிக்கு அறிவுச் சோறு போட்டன. ஆர்.கே. நாராயணனின் "சுவாமியும் அவரது நண்பர்களும்' என்ற புதினம் விக்கிரமனுக்கு எழுத வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டியது.
÷இராமகிருஷ்ண மடத்தின் பள்ளியில் படித்ததால், இராமகிருஷ்ண பரமஹம்சர் மீது அளவுகடந்த பக்தி கொண்டு தமது ஒன்பதாவது வயதிலேயே "பரமஹம்சர்' என்னும் கையெழுத்து ஏட்டையும், பின்னர் "தமிழ்ச்சுடர்' என்ற கையொழுத்து ஏட்டையும் தொடங்கி, துணுக்குகள், கதைகள் போன்றவற்றை அவரே வரைந்த ஓவியங்களுடன் வெளியிட்டார். மூதறிஞர் ராஜாஜி, நாராயண ஐயங்கார், .கே.செட்டியார் முதலானவர்களின் பாராட்டுக்களையும் பெற்றதனால், அவருடைய படைப்புகள் மேன்மேலும் வீறுகொண்டு அச்சில் ஏறத் துடித்தன - அவரும் அதையே விரும்பினார்.
÷சிறு வயதில் தாம் எழுதிய சிறுகதை ஒன்றை பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று கொடுத்தபோது, அவரது தோற்றத்தைப் பார்த்து, அக்கதையைத் திருப்பிக் கொடுத்து விட்டனர். அப்போது தமக்கு ஏற்பட்ட அவமானமும் சர்மசங்கடமும் வேறு எந்த இளம் படைப்பாளருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் விளைவாக பல்லாயிரக்கணக்கான இளம் எழுத்தாளர்களை அவர்களின் உருவம், தகுதி, வயது, செல்வாக்கு போன்றவற்றை மதிப்பீடு செய்யாமல் அவரின் திறமை, அறிவாற்றல் ஆகியவற்றை அறிந்து அவர்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, உதவிக்கரம் நீட்டியவர்.
÷நிறைந்த அறிவாற்றல் பெற்ற விக்கிரமன், மிகச்சிறந்த கதாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும், இதழாசிரியராவும், அதே சமயத்தில் சிறந்த சமூகத் தொண்டராகவும், மனித நேயத்தின் சிகரமாகவும், கருணைக் கடலாகவும், கடின உழைப்பின் களமாகவும், சமுதாயப் பொறுப்பாளராகவும், தீயதை எதிர்த்துப் போராடும் - விமர்சிக்கும் நெஞ்சுறுதி படைத்த தீரராகவும் திகழ்ந்தவர்.
÷"பத்திரிகை ஆசிரியர் நிலைத்த நன்னோக்கம் உடையவராய் இருந்தால் அவரால் உருவாக்கப்படும் பத்திரிகையிலும் அந்நோக்கம் அமைந்திருக்கும்' என்பதற்கேற்ப தமது இதழில் பற்பல சிறப்புகளைச் செய்து காட்டியிருக்கிறார். சமுதாயத்தை மேன்மைபடுத்தும் - உயர்த்தும் உயர்ந்த கருத்துகளைத் தமது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
÷விக்கிரமனின் வாழ்வையும் பணியையும் தொகுத்து அவருக்கு "வாழும்போதே ஒரு வரலாறு' என்னும் நூலை ஆக்கித்தந்து பெருமை தேடிக்கொண்டவர் பின்னலூர் விவேகானந்தன். அந்நூலுக்கு ஏற்பவே அவர் வாழும்போதே வரலாறு படைத்தவர் என்பது முற்றிலும் உண்மை. நன்கு கற்றார்; நிறையக் கற்றார்; ஆழ்ந்து கற்றார்; அகலக் கற்றார்; அவர் கற்றபடி செயல்பட்டார் - நடந்தார்; வாழ்ந்து காட்டினார்; இன்று பல எழுத்தாளர்களுக்கும் முன்னுதாரணமானார்.
÷"உயர்ந்த குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, படகோ கப்பலோ இல்லாத கப்பற்பயணம் போன்றது' என்பதை நன்குணர்ந்திருந்த விக்கிரமன், குறிக்கோள் உயர்ந்ததாக மட்டும் இருந்தால் போதாது, அக்குறிக்கோளை அடைவதற்குரிய வழிமுறைகளும் தூய்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் கருத்து அவரின் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.
÷கையெழுத்தைக் கூட தமிழில்தான் போட வேண்டும் என்ற உணர்வு ஆரம்ப காலத்திலிருந்தே இருந்ததால் பள்ளி இறுதித் தேர்வுச் சான்றிதழில், தமிழில் கையெழுத்திட்டுப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் கோபத்துக்கு ஆளானார்.
÷பள்ளிப் படிப்பை முடித்ததும், "பத்திரிகைத் துறையில் வேலை கிடைக்குமா?' என்று பத்திரிகையாளராகத் துடித்த விக்கிரமனுக்கு "ஸ்பென்சர்' நிறுவனத்தில்தான் வேலை கிடைத்தது. "இளமையில் கொடியது வறுமை' என்பதற்கு அஞ்சி அவ்வேலையில் சேர்ந்தார். பிறகு தமக்கு விருப்பமில்லாத அவ்வேலையில் இருந்து விலகிய விக்கிரமன், சமூகப் பணியாற்ற பத்திரிகை அலுவலகப் பணி உதவியாக அமையும் என்ற எண்ணத்தில் "வெள்ளிமணி' என்ற வார இதழில் சேர்ந்து, விற்பனைப் பிரிவில் வேலை செய்தார். வெள்ளிமணியை சைக்கிளின் பின்புறம் வைத்துக் கட்டி கடைகளில் கொடுக்கும் பணியையும் செய்தார். அங்கிருந்த பணிச்சுமை காரணமாக அதைவிட்டு விலகினார்.
÷அதன் பிறகு, ஆசிரியராக இருந்த வித்துவான் வே.லட்சுமணன் "அமுதசுரபி' பத்திரிகையிலிருந்து விலக நேரிட்டதால், அப்பத்திரிகையின் ஆசிரியர், நிர்வாகி ஆகிய இரண்டு பொறுப்புக்களையும் விக்கிரமன் 1950ஆம்  ஆண்டு ஏற்று நடத்தத் தொடங்கி, 2003ஆம் ஆண்டுவரை அதாவது ஐம்பத்து மூன்றாண்டுகள் "அமுதசுரபி' ஆசிரியராக இருந்து சாதனை படைத்தார்.
÷கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் "முத்தமிழ் அன்பர்' என்று போற்றப்பட்ட விக்கிரமனுக்குக் கவிமணி மூன்று முறை வாழ்த்துக் கவிதை வழங்கியுள்ளார். அவற்றுள்1950இல் வழங்கிய முதல் பாராட்டுக் கவிதை இது:

""எத்தொழிற்கும் முன்நின் றெமக்குத் துணைபுரியும்
அத் திமுகத் தண்ணல் அருளினால் - முத்தமிழ்
அன்பருக்கு வாய்த்த அமுத சுரபியது
மண் புவியில் வாழ்க் வளர்ந்து''


பல்துறைப் புலமை பெற்றவர் என்பதை உலகிற்கு உணர்த்த கவியோகி சுத்தானந்த பாரதியார், "விக்கிரம வீறு விளங்குகவே' என்று கூறி வித்தகப் புலவன் எனப் புகழ்ந்து கவிதை புனைந்துள்ளார்.

""வித்தகப் புலவன் விக்கிரமன் செய்
நாவல் ஊழியம் ஞாலம் புகழும்
கவின்பெறு கல்கி, மாபஸôன், கலைவளர்
போலவே உலகிற் பொலிக பொலிகவே!''


திருமுருக கிருபானந்தவாரியார்,

""மூவிருப தாண்டு முருகன் திருவருளால்
பூவுலகில் எய்தியுயர் புண்ணியன் - மேவும்
புகழாரும் விக்கிரமன் பொன்பொருள் எய்தி
தகவுடனே வாழ்க தழைத்து''


என வாழ்த்தும் அளவுக்கு விக்கிரமனின் புகழ் வானளாவ உயர்ந்து நிற்கிறது.
÷""என்னைப் பொறுத்தவரை இவர் எழுத்துகள் 1945க்கும் 55க்கும் 65க்கும் இடையில் உருவாகி, 1965க்கும் 75க்கும் இடையில் திருவாகி, 1975க்கும் 85க்கும் இடையில் நிறைவாகி நிற்கிறது. இவ்வளவு ஆற்றல் இவருக்குள் புதைந்து கிடக்கக் காரணம், இவர் "எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்' என்று எண்ணுவதனாலும், முன்னோர் நடந்த பாதையை முறையாகப் பின்பற்றுவதாகுமே'' என்பார் புலவர் கீரன்.
÷ஆம், எப்போதும் எழுதுகோலும் கையுமாகவே இருப்பார். "ஒரு நாளைக்குப் படிக்காமலோ  எழுதாமலோ இருந்தால் எனக்குத் தூக்கமே வராது, சாப்பாடே பிடிக்காது, பித்து பிடித்துபோல் இருக்கும். எழுதுவதுதான் என் அன்றாட உண்மையான உணவு' என்பார்.
÷""பிரயாண நூலாகட்டும், சரித்திர நூலாகட்டும் ஏதோ நூலைப் படிக்கிற மாதிரி இல்லை. நாமும் விக்கிரமனுடன் பயணம் செய்கிற மாதிரியே இருக்கிறது'' என்பார் பகீரதன். அவர் கூறியதற்கிணங்க, விக்கிரமன் விக்கிரமன் படைப்பின் இரகசியம் என்னவென்றால், சின்னஞ்சிறிய வாக்கிய அமைப்புகள், எளிய நடை, நகைச்சுவையான உரையாடல்கள், சிந்தனைச் செறிவு, புதிய பார்வை, மேலும், எந்த வரலாற்று நாவல்களையோ கதைகளையோ எழுதுவதற்கு முன்பு அந்தக் கதை நடந்த கதைக் களத்திற்கே (இடத்திற்கே) சென்று ஆய்வு செய்த பின்னரே உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுதுவதுதான்.
÷இவ்வாறு உருவானவைதான் மாமல்லபுரம் (காஞ்சி), மறைந்த மாநகரம் (துங்கபத்ரா, ஹம்பி), கங்காபுரிக் காவலன் (கங்கைகொண்ட சோழபுரம்), சித்திரசபை (குற்றாலம்), திருவெண்காட்டு எண் தோளீசர் (திருவெண்காடு), கடம்பூரில் ஒரு கலைக் களஞ்சியம்(கடம்பூர்), செஞ்சி ராஜா (செஞ்சி), சிற்பம் சித்திரம் கோபுரம் கோயில் (சேரமான் திருக்கோயில், திருவஞ்சைக்களம், வஞ்சி வேந்தர்கள், கூடல்துறை கோயில் இவற்றை உள்ளடக்கியது) ஆகியவை. இந்நாவல்களைப் படிக்கும்போது அந்தந்த இடங்களுக்கு நாம் சென்றதைப் போன்றதொரு உணர்வை நமக்கு ஏற்படுத்திவிடுவதுதான் விக்கிரமனின் எழுதுகோலின் ரகசியம்.
÷
÷தமிழ் உள்ளவரை விக்கிரமன் வாழ்வார்; இறைமொழியான தமிழுக்கு என்றுமே - எக்காலத்துமே - எவ்வூழியிலுமே அழிவில்லை; கலைமாமணி விக்கிரமனுக்கும் (அவர் படைப்புகளுக்கும்) அழிவில்லை; "மாய்ந்த பின்னும் வாழ்வேன்' என்று முன்கூட்டியே "வாழும்போதே வரலாறு படைத்து' எழுதிவைத்தவர் அல்லவா அவர்!

-இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!