போராட்டம் இன்றித் தேரோட்டம்....




போராட்டம் இன்றித் தேரோட்டம்...

÷

-இடைமருதூர் கி.மஞ்சுளா

(தினமணி - தமிழ்மணி (21.2.2014)


 "தமிழ்' என்றால் அமிழ்து. அமிழ்து - சாகா மருந்து. அமிழ்து எனும் சொல்லைத் தொடர்ந்து கூறினால், அது "தமிழ்' ஆகும். அதனால்தான் பிங்கலந்தை நிகண்டு "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று, தமிழ் என்ற சொல்லுக்குப் பொருள் சொன்னது. உலகிலேயே வல்லோசை குறைந்த ஒரே மொழி தமிழ்தான். அதுபோல, "உலகில் பக்தியின் மொழி தமிழே' என்பார் தனிநாயகம் அடிகளார்.

÷தமிழ் மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அகத்துறைப் பாடல்கள் (கர்ஸ்ங் டர்ங்ற்ழ்ஹ்), மற்றொன்று பக்திப் பாடல்கள் (ஈங்ஸ்ர்ற்ண்ர்ய் டர்ங்ற்ழ்ஹ்). தொல்காப்பிய பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இருகூறுடையதாகி அகம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் கூறுகிறது. பொருளிலக்கணம் தமிழுக்கே உரியது.

÷"பிறமொழிகள் யாவற்றினும் தான் வழங்கும் பகுதியில் உயர்வும் தகுதியும் பெற்றுப் பீடுற்று நிற்கும் மொழி, உயர்மொழி; பிறமொழிகளின் உதவியின்றித் தானே தனித்தியங்கும் தன்மையும் வன்மையும் பெற்றிருப்பது, தனிமொழி; இலக்கிய வளமும் இலக்கணச் செம்மையும் பெற்றுத் திகழ்வது, செம்மொழி; இம்மூன்று பண்புகளையும் பெற்றுள்ளமையால் தமிழ், "உயர்தனிச் செம்மொழி' என்னும் தகுதியைப் பெறுகின்றது' என்பார் பேரா. ஆறு.அழகப்பன்.

÷தமிழ் மொழி தொன்மையானது என்பதை வான்மீகி இராமாயணத்தாலும், வியாசர் மகாபராதத்தாலும் அறியலாம். தமிழ்த்தாயின் தொன்மையை, "இவள் என்று பிறந்தனள் என்றுணராத இயல்பின ளாம்எங்கள் தாய்' என்பார் மகாகவி பாரதி.

÷தமிழ் இறைமொழி; தெய்வீகத்தன்மை வாய்ந்தது; இறைவனே தமிழ் வடிவினன் என்பதை பரஞ்சோதி முனிவர் வாக்காலும், திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய பண்சுமந்த பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது. மேலும் வழிபாட்டிற்கும் இம்மொழி உரியது என்பதை, "தமிழ்ச் சொலும் வடசொலும் தாள் நிழல்சேர' என்று திருமூலரும், "அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் நம்மேல் சொற்றமிழ் பாடுக' என்று சேக்கிழார் பெருமானும், முத்திக்கு வித்தானது தமிழ் என்பதை "தித்திக்கும் தெள்ளமுதமாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக்கனியே என் முத்தமிழே' எனத் தமிழ்விடு தூதின் வாசகத்தாலும் அறியலாம். அருணகிரிநாதர், "முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்' என்றும், "பைந்தமிழின் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலே' என்று குமரகுருபரரும் தமிழின் மாண்பைப் போற்றினர்.

÷"செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி' என்று நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொடரால், வடமொழிக்கும் துணையாய் இருப்பது செந்தமிழ் என்றும்; தமிழ் மொழியே தீராத ஐயங்களையும் தீர்க்கவல்லது என்பதை, "செய்யதமிழ் மறையனைத்தும் தெளிய ஓதித் / தெரியாத மறை நிலங்கள் தெரிக்கின்றோமே' என்ற வேதாந்த தேசிகரும்; "ஆரணத்தின் மும்மைத் தமிழ்' என தமிழ் மறைகள் இருந்ததைக் கம்பரும் கூறக்காணலாம்.

÷"கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி' நம் தமிழ்க்குடி என்பர். சங்கம் வைத்து தமிழ் மொழியை ஆய்ந்து, வளர்த்த பாண்டியர்கள் முச்சங்கங்களையும் கண்டவர்கள். சங்கத்தில் தமிழ் ஆய்தமையை, "கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்' என்று மாணிக்கவாசகரும்; "மதுரை தொகை யாக்கினான்' என்று திருஞானசம்பந்தரும்; "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி' என்று அப்பரடிகளும் அருளியுள்ளனர். மேலும், சங்கம் இருந்தமையை மதுரைக் காஞ்சியும், புறநானூறும் புலப்படுத்தும்.

÷மாதொரு பாகனான சிவபெருமான் வடமொழியைப் பாணினி முனிவர்க்கு அருளியது போல் அதற்கிணையான தமிழ் மொழியை அகத்தியருக்கும் அருளிச் செய்தார் என்பதை, "ஆதியிற் றமிழ்நூ லகத்தியர்க் குணர்த்திய  மாதொரு பாகன்' என்பதாலும், இத்தமிழை முருகப்பெருமானும் அகத்தியர்கருளியதை,


"சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழஇரு

செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே'



என்ற அருணகிரிநாதர் வாக்காலும்,


"தென்றமிழ் நாட் டகன்பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற் பீரேல்'
என்ற கம்பர் வாக்காலும் அறியலாம்.



"ஓங்கலிடை வந்து யர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் சுடராழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்'




என்ற செய்யுளில் "ஓங்கல்' என்ற சொல் பொதியமலைக்கா மென்ப' என்றும்; "அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் பற்றிக் கருத்துணர்த்தும் பண்டை நூல்களே தமிழ் நான்மறையாகுமென்பது கொள்ளப்படும் என்றும்; அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லும் வாய்பாடும் தமிழர்க்கே பண்டைக் காலத்தில் உரியது' என்றும் கூறுவார் கா.சு.பிள்ளை.

÷"கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று மனோண்மணியம் சுந்தரம்பிள்ளையும்; "தமிழில்லாத ஒரு மொழி திராவிடத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை' என்று ஏகாரமிட்டு தேவநேய பாவாணரும்; "ஆரியர் இந்திய நாட்டிற்குக் குடிபுகுவதற்கு முன் இவ் இந்திய நாடு முழுவதும் பரவியிருந்த மக்கள் தமிழர்களேயாவர்' என்று மறைமலையடிகளாரும் பெருமிதத்தோடு தமிழையும் தமிழர்களையும் போற்றியுள்ளனர்.

÷ஐரோப்பியரான ஜி.யு. போப்பை "தமிழ் மாணவன்' எனச் சொல்ல வைத்தது தமிழ் (திருவாசகம்); காந்தியடிகளைத் தமிழ் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது திருக்குறளும் திருவாசகமும். ஞால முதல் மொழியான தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இத்தாலியிலிருந்து சமயப்பணியாற்ற வந்த வீரமாமுனிவர் "சதுரகராதி' படைத்து வித்திட்டார். 1856-இல் இராபர்ட் கால்டுவெல் எழுதிய "திராவிட மொழியின் ஒப்பிலக்கணம்' என்ற நூல் தமிழ்மொழி, சமஸ்கிருதம் இன்றித் தனித்தியங்கவல்லது என்பதை உணர்த்தியது.

÷1708-இல் சீகன்பால்கு கிறித்தவ மறைநூலை தமிழில் மொழிபெயர்த்தார். வீரமாமுனிவர் திருக்குறளை இலத்தீன் மொழியிலும், ஏரியல் பிரெஞ்சு மொழியிலும், ஜி.யு.போப் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். கூடவே டாக்.போப், திருவாசகம், நாலடியார் போன்றவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். எல்லிஸ், ஏரியல் போன்றோர் தமிழ் ஏட்டுச் சுவடிகளையும், வில்லியம் தெய்லர், பூலர் போன்றோர் தமிழ்க் கல்வெட்டுகளையும் தேடித் தேடித் தொகுத்தனர்.

÷கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டில், "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது' எனக் குறிஞ்சிப் பாட்டுக்குத் துறைக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. "இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலியது' என்று இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் குறித்துள்ளார். அகம் என்பதற்கு தமிழ் என்றே பொருள் கொண்டனர். ""ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ'' என்று திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவார். இவை அனைத்தும் "தமிழ்' என்ற சொல் அகத்திணைக்கு மறுபெயராய் அமைந்திருப்பதைக் காணலாம்.

÷"தமிழ்' என்ற சொல் இறைவனும் ஆன்மாவும்(உயிர்) சேரும்போது உண்டாகின்ற முத்தி இன்பத்தைக் குறிக்கிறது (கந்தரநுபூதி உரை) என்பார் திருக்குறள் பீடம் அழகரடிகள்.

÷"அந்நிய மொழியில் படிப்பு சொல்லித்தருவது, நீச்சல் சொல்லித் தருகிறேன் என்று வலுக்கட்டாயமாகத் தலையைத் தண்ணீருக்குள் அழுத்துவது போன்றதுதான்' என்கிறது யுனெஸ்கோ அமைப்பு. ("தாய்மொழியின் கல்வி'யின் அவசியம் பற்றி வெளியிட்டுள்ள "ஆல் கிளோபல் மானிட்டரிங் ரிப்போர்ட்-2015'). தாய்மொழியின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி "சர்வதேச தாய்மொழி தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

÷அத்தகைய தாய்மொழிக் கல்வியான தமிழ்மொழிக் கல்வியை இன்றைக்கு தமிழர்களாகிய நாம், நம் சந்ததியினருக்குப் போராடித்தான் பெற்றுத்தர வேண்டியுள்ளது.

÷

"போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத்

தேரோட்டம் இல்லை தெளிவு!'




என்றார் அன்று வ.சுப.மாணிக்கனார். ஆனால் இன்று, போராட்டம் இல்லாத தேரோட்டம் நம் தமிழ் மொழிக்கு நடைபெற வேண்டும்! அரியணையில் தெய்வத் தமிழன்னை நித்தய வாசம் செய்ய வேண்டும்; அதுவே நம் தமிழன்னைக்கும் பெருமை!

-இடைமருதூர் கி.மஞ்சுளா


(இன்று: பிப்.21 சர்வதேச தாய்மொழி தினம்)


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!