தமிழனின் தனிக்குணம்!



தமிழனின் தனிக்குணம்!

By

-இடைமருதூர் கி.மஞ்சுளா


÷சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் ""உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு'' என்றான்.
÷""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்து கேட்டார். 
÷""எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா? சென்னையில் யாரிடம், எப்படிப் பேசிப் பொருள்களை வாங்குவது என்று பயந்து கொண்டிருந்தேன். அந்தச் சிரமத்தைத் தமிழ்நாடு எனக்குக் கொடுக்கவில்லை'' என்று சிரித்துக்கொண்டே கூறினான்.÷
÷இது தமிழர்களாகிய நாம் பெருமைப்படக்கூடிய  விஷயமல்ல; வேதனைப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு வந்தாரை எப்படி வாழவைக்கிறது தெரியுமா? தன் சுயத்தை இழந்துதான்! தன் தாய்மொழிப் பற்றை மறந்துதான்!
÷சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி வேற்றூருக்குக்கோ வடமாநிலங்களுக்கோ செல்வோர் தமிழ்மொழி மட்டுமே பேசத்தெரிந்த தமிழர்களாக இருந்தால், தொடர்வண்டி கும்மிடிப்பூண்டியைக் கடந்து சென்ற பிறகு அடுத்தடுத்து வரும் ஊர்களின் பெயர்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் தவிப்பர்.
÷காரணம், அந்ததந்த ஊர்களில், மாவட்டங்களில், மாநிலங்களில் உள்ள கடைகளில், பேருந்துகளில் அவரவர்க்கு எது தாய்மொழியோ அந்த மொழியில் மட்டும்தான் பெயர்ப்பலகைகள் இருக்கும். இதனால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளையும், அவமரியாதையையும் சமாளிக்கத் தமிழன் தயாராக இருப்பது அவசியம். விதிவிலக்காக, ஒரு சில ஊர்களில் மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும்.
÷21 ஜூலை 2015-இல் "தமிழில் பெயர்ப்பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம்' என்ற தலைப்பில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை, அன்றைய ஊடகங்களில் முக்கிய செய்தியாக (மட்டுமே) வெளியானது. இவ்வாறு தமிழில் பெயர்பலகைகளை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று "தமிழர் பண்பாட்டு நடுவ'த்தின் செயலாளர் ராஜ்குமார் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் பல இடங்களில் விழிப்புணர்வு, பேரணி எல்லாம் நடந்தது பழங்கதையானது.
÷ ""தமிழ்நாடு வணிகம் மற்றும் நிறுவனங்களின் சட்டம் (1948) பிரிவு 15(1) (2) (3)-இன் படி தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை கட்டாயம் "தமிழில்' இருக்க வேண்டும், நிறுவனத்தின் பெயர் தமிழில் முதலிலும், ஆங்கிலம் இரண்டாம் நிலையிலும் இருக்க வேண்டும்; அல்லது தமிழில் மட்டுமே பெயர்ப்பலகை இருக்கலாம்; அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகைகளில் "தமிழ்' எழுத்து பிரதானமாக இருக்க வேண்டும்'' என்று அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும் இந்த அறிவிப்பை செய்திருந்தது. சென்னையில் சுமார் 50 சதவீத கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.
÷"'தமிழில் பெயர்ப்பலகை வைக்காத கடைகளின் பெயர்ப்பலகைகளை எந்தவித தயவு தாட்சண்யமின்றி மாநகராட்சி நிச்சயம் அகற்றும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்'' என்று சென்னை மாநகராட்சி மேயர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இன்றுவரை பல வணிக நிறுவனங்கள், கடைகள் இந்த உத்தரவை மதிக்கவில்லை என்பதுதானே உண்மை!
÷ஒரு சிறிய கணக்கெடுப்பின்படிப் பார்த்தால், சென்னை புரசைவாக்கத்திலிருந்து அம்பத்தூர் வழித்தடம் வரை கிட்டத்தட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பல வகையான கடைகள் உள்ளன (இக்கணக்கெடுப்பு தோராயமானதுதான்) என்று வைத்துக்கொள்வோம். இவற்றுள் சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளின் பெயர்ப்பலகைகள் மட்டுமே தமிழில் உள்ளவை; 50-க்கும் மேற்பட்ட கடைகளின் பெயர்ப் பலகைகள் முதலில் தமிழிலும், அடுத்து ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இவையெல்லாம் தமிழ்ப் பற்றாளர்கள் நடத்தும் கடைகள்.
÷நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் பெயர்ப் பலகைகள் முதலில் ஆங்கிலத்திலும் அடுத்து தமிழிலும் உள்ளவை; இவற்றில் பெரும்பாலானவை தமிழரல்லாதார் நடத்தும் கடைகள். அரசுக்கும், தான் தமிழரல்ல என்று கூறிவிடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் தமிழிலும் பெயர்ப்பலகையில் எழுதுகிறார்கள்.
÷மற்றவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.  இவர்கள் யார் என்று விசாரித்தால் அவர்கள் ஆங்கிலோ இந்தியவர்களோ, அன்னிய நாட்டினரோ, அண்டை மாநிலத்தவரோ அல்ல, பச்சைத் தமிழர்கள். அவர்களுக்குத் தமிழில் பெயர்ப்பலகை இருப்பதுகூட அவமானம். ஆங்கிலத்தில் இருந்தால்தான் பெருமை. இந்த நிலைமை தமிழ்நாட்டில் நீட்டித்தால் "தமிழ்' எப்படி வாழும் - வளரும் - நிலைபெறும்? இதுதான் "தமிழ்'நாடு!
÷ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகைகள் உள்ளன; கனடாவில் என்றைக்கோ தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கத் துவங்கிவிட்டனர்; இலங்கையிலும் தமிழில் பெயர்ப்பலகைகள்; திருவள்ளுவரின் குறளையும் ஒüவையின் ஆத்திசூடியையும் அமெரிக்காவிலும் லண்டனிலும் மிகப்பிரமாண்டமாக அனைவரும் காணும்படி எழுதி (பேனர்) வைத்திருக்கிறார்கள்; ஆனால், தமிழ்நாட்டில் "தமிழ்' எங்கே?
÷வெளிநாட்டவருக்கே நம் நாட்டில் எங்கும், எதிலும் வணக்கம் என்றால், தமிழ்த்தாயின் மனம் மிக நோகும்! தமிழுக்காக தன் இன்னுயிரை மனமுவந்து துறந்த "தெள்ளாறு எறிந்த' நந்திவர்மன் வாழ்ந்த தமிழ் மண்ணில்தான் நாமும் வாழ்கிறோமா? பிற மொழிகளைக் கடன்வாங்கி, அதையே கண்டு, கேட்டு, எழுதி, பேசி சுவாசிப்பதைவிட, நம் தாய்மொழியில் பேசி உயிர்விடுவது சாலச்சிறந்ததல்லவா!
  மராட்டிய மாநிலத்தில் அது மாநிலக் கல்வித் திட்டமோ, சி.பி.எஸ்.இ.யோ, ஏன் சர்வதேசக் கல்வித் திட்டமோ எதுவாக இருந்தாலும் ஏழாம் வகுப்புவரை மராத்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்கிறது. இங்கே குறைந்தபட்சம், எல்லாப் பெயர்ப் பலகைகளும் தமிழிலும் எழுதப்பட வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வரவேண்டாமா? இல்லையே, ஏன்?
÷"தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அதற்கோர் குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் குறிப்பிட்டது இதைத்தானோ!

-இடைமருதூர் கி.மஞ்சுளா


தினமணி -(18.4.2016)


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!