எட்டும் இரண்டும்


 எட்டும் இரண்டும்
by -இடைமருதூர் கி.மஞ்சுளா
 (7.8.2016 - தினமணி- தமிழ்மணி)

÷மணிவாசகரின் ஒவ்வொரு சொல்லும், சொற்றொடரும் பல மெய்யியல் கருத்துகளை மிக நுட்பமாக (சூட்சுமமாக) விளக்குபவை. அத்தகைய சொற்றொடர்களுள் ஒன்றுதான் "எட்டும் இரண்டும்'! அதற்கான விளக்கத்தைக் காண்போம்.
÷"எட்டும் இரண்டும் அறியாதவனாக இருந்த என்னை ஆன்றோர் ஆய்வு செய்யும் சயமவாத சபையில் - பட்டிமண்டபத்தில் ஏற்றினை ஏற்றினை என இறைவனின் திருவருளை மணிவாசகப் பெருமான் இரண்டு முறை வியந்துகூறி, தன்னால் அவனுக்குக் கைம்மாறு செய்யமுடியாததற்காக வருந்துகிறார். ""எட்டும் இரண்டும் அறியாதவன்' என்ற பழமொழி, மணிவாசகரின் சொற்றொடரைக் கொண்டே எழுந்ததாகும். அப்பாடல் வருமாறு:  

""கட்ட றுத்தெனை ஆண்டு கண்ணார நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே''
(திரு.திருச்சதகம்-5; கைம்மாறு கொடுத்தல்,
பா.49)

÷இப்பாடலில் அவர் குறிப்பிடும் அந்த எட்டும் இரண்டும் எவை என்பதற்கான சுவாமி சித்பவானந்தர் தரும் விளக்கம் வருமாறு: ""அஷ்டமூர்த்தி தத்துவத்தையும் அர்த்தநாரீசுவரர் தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத எனது பாசத்தளையைக் களைந்து என்னை ஆட்கொண்டாய். சக்திக்கும் சிவத்துக்கும் புறம்பாகப் பிரபஞ்சமில்லை. எட்டு என்னும் சொல் அஷ்டமூர்த்தியைக் குறிக்கிறது. நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டு ஜடவஸ்துக்களும் ஈசனுடைய சொரூபங்களாகும். பிருகிருதி - புருஷன் அல்லது சிவம் - சக்தி ஆகிய இரண்டு தத்துவங்களின் கூட்டுறவு அர்த்தநாரீசுவரன் எனப்படுகிறது. உடல் அம்பிகையின் சொரூபம், உயிர் சிவசொரூபம். இவை இரண்டும் பிரிந்தால் வாழ்வு நடைபெறாது. சிவ சொரூபத்தில் அந்த எட்டும் இரண்டும் மிக ஸ்தூல நிலையில் இருக்கின்றன. இவைகளை அறியாதவன் அவனுடைய (இறைவனுடைய) சூக்ஷ்ம நிலை, காரண நிலை, அதீத நிலை, அகண்ட நிலை ஆகியவைகளை அறிவது எங்ஙனம்?''(திரு.பக்.323,324).
÷இப்பாடலுக்கு ச.தண்டபாணி தேசிகர், ""எட்டு - எட்டின் தமிழ் வடிவம் "அ'; இரண்டின் தமிழ் வடிவம் "உ'. அகரம்-சிவம்; உகரம்-சக்தி. "யாவரும் அறிவர் அகரம் அவன் என்று' என ஞான சாத்திரங்களும் நவிலும். ஆகையால் சிவ சத்திகளின் பொதுவும் சிறப்புமாகிய இயல்புகள் அறியாத என்னைச் சமயவாத சபையில் ஏற்றினை என்பதாம். இக்கருத்தை "அஉ அறியா அறிவில் இடைமகனே நொ அலையல் நின் ஆட்டை நீ (யாப்பருங்கலம்-சூ-7 உரை) என்ற பாடல் அறிவுறுத்தும். அன்றியும்  எட்டும்-அ, இரண்டு -உ; சிவம் சக்திகள் எட்டினோடு இரண்டு - பத்து. பத்தின் தமிழ் எழுத்து "ய'; யகரம் உயிரை உணர்த்தும் எழுத்து. ஆகவே, அகர உகரங்களாகிய தாய் தந்தையையும் உயிராகிய தன்னையும் அறியாத என்னை என்றார். திருமூலரும் "எட்டுமிரண்டும் இனிதறிகின்றிலர்'(963) என்று கூறியுள்ளதையும் ஒப்பு நோக்கித் தெளிக. எட்டினோடு இரண்டு - பத்து எனக்கொண்டு தசகாரிய அனுபவமில்லாத என்னை என்று உரைப்பாருமுளர்'' என்பார். மெய்கண்ட சாத்திரமான உண்மை விளக்கத்தில், மனவாசகங்கடந்த தேவநாயனார்,

""எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன்
சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே
யவாயமற நின்றாடு வான்''
(பா.31)

÷என்றார். அதாவது, சக்தியும் சிவனும்(நாதவிந்து) கூடிய சிவலிங்கத்தில் ஐந்தெழுத்து, அருமறையில்,  ஈசன் ஐந்தொழில்கள் புரிந்து, நடனம் ஆடுகிறார் என்கிறார். வள்ளலார் பெருமானோ, திருவருட்பாவில் (மெய்யருள் வியப்பு) ""எட்டு மிரண்டு மிதுவென் றெனக்குச் சுட்டிக் காட்டியே'' என்றும், அந்த எட்டும் இரண்டும் தமக்கு எட்டியது என்பதை,

""எட்டிரண் டென்பன வியலுமுற்படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி''
""எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே''
(அகவல்)

என்றும் போற்றியுள்ளார். பிரணவம் நாத பித்துகளாலானது. இது ஒலியும் ஒளியும் உடைய பரம்பொருள். அகர உகர மகரம் சேர்ந்ததே ஓம். இதுவே பிணவம். இது ஒலியும் ஒளியும் உடைய பரம்பொருள். இது மனித தேகத்தில் நாத விந்துக்களாக உள்ளது. இதுவே சக்தி - சிவம் எனப்படும். இந்த ஒலி / ஒளி சொரூபத்தை (நாத-விந்து) ""நாத விந்துக் கலாதீ நமோநம'' என்று அருணகிரிநாதரும், ""விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச் / சந்திர னோடே தலைப்படு மாயிடில்'' (961) என்று திருமூலரும், ""விந்தோ நாத வெளியுங் கடந்து மேலு நீளுதே'' (மெய்யருள் வியப்பு - 5019) என்று வள்ளலாரும் பாடியுள்ளனர். அகத்தியர் ஞான சைதன்யம் இதை,

""காட்டுகிறேன் சத்திசிவம் ஒளியேயாகும்
கருணைதரும் நாதவிந்து ஒளியேயாகும்
மாட்டுகிறேன் பூரணமு மமுதம்ரெண்டும்
மயமான ரவிமதியு மொளியேயாகும்
பூட்டுகிறேன் சந்திர சூரியனுமாகும்
புலம்பாதே சுழினையேகாச் சரமுந்தோணும்
ஆட்டுகிறேன் சடாச்சரபஞ் சடாட்சரந்தான்
அடங்காத யெட்டெழுத்தும் ஒளியுமாமே''


என்கிறது. மணிவாசகப் பெருமானும் வள்ளலாரும் வலியுறுத்திய இந்த ஒளி வழிபாடு எதற்காக? "உலக இருளைப் போக்குவது ஒளி(கதிரொளி). உயிரைப்( ஆன்மாவை) பற்றியுள்ள அறியாமை இருளைப் போக்குவது ஒளி(அறிவொளி). இவ்வொளி தோன்றுவது எவ்வாறு எனின், மனிதனைப் பிடித்து அலைக்கழிக்கும் காமம், குரோதம், மதம், மாற்சரியம், லோபம், சினம், மோகம் ஆகிய எழுவகைப் பேய்களும் அழியும்போது இவ்வொளி பிறக்கிறது. இவ்வொளி எங்கு பிறக்கிறதோ அங்கே இறைவன் திருநடனம் புரிகின்றான். எவனொருவன் தன்னை(ஆன்மா) உணர்கின்றானோ அப்பொழுதே அவனது உள்ளத்தில் இறைவன் அருட்பெருஞ் சோதியாகி வெளிப்படுவான். எனவே, சோதி வடிவான இறைவனை வணங்க வேண்டும்; அதனால் சோதி வழிபாடு வேண்டும் என்றனர்.
÷"எட்டினோடு இரண்டு' என்ன என்பது பற்றி பண்டிதமணி சு. அருளம்பலவனாரும் (திருவாசக ஆராய்ச்சியுரை,ப.340), மா.இரத்தினசபாபதியும்(திருவாசகமும் சிவராஜயோகமும்), பா.வே. மாணிக்கநாயகரும் (தமிழ்  எழுத்து முறையின் மந்திரத் தன்மை), மணக்கரை மாணிக்க அம்பலவாணரும் (திருவாசகச் சிந்தனைகள்), கல்லாடர் விஸ்வஜோதி எஸ்.வேலாயுதம் (திருவடி தீட்சை நவரத்தினமாலை, பக்.46) விரிவாக விளக்கியுள்ளனர். கடோபநிஷத்தில் பிரணவத்தைப் பற்றிய பகுதிகள் பல வருகின்றன(சுலோ.16, வல்லி-2). 
÷""திருவாசகத்தில் இறைவன் "மாதொரு பாகன்' என்பதை எழுபது(70) இடங்களில் மணிவாசகர் குறிப்பிடுகிறார். சிவனை ஒளியாகக் காண்பதே திருவாசகத்தில் மிகுதியும் காணப்படுகிறது. ஒளியைக் குறிக்கும் சோதி (29முறை), சுடர்(18 முறை), ஒளி(14முறை) என்ற சொற்கள் நூலில் பயன்படுத்தப்படுகின்றன. சோதி வழிபாடே, மணிவாசகரின் முக்கியமான வழிபாடாகத் திகழ்கிறது.'' என்கிறார் தி.நா.பிரணதார்த்திஹரன் (திருவாசகத்தில் முக்தி, ப.36)
÷""சூரியனிலிருந்து "ஓம்' எனும் ஒலி சூரியனின் வளி மண்டலத்திலிருந்து வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் அண்மையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து "ஓம்' எனும் பிரணவ மந்திரத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என அண்மையில் வெளியான ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது (தினஇதழ், 16.2.2016, ப.16).
÷ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த உண்மையை அதாவது, கடவுள் தத்துவத்தை - இறைவன் அம்மையப்பராக - மாதொருபாகனாக - நாத வித்து வடிவாக, ஒளி, ஒலியாக இருப்பதைக் கண்டு களித்து, வழிபட்டுக் கூறியவர் மணிவாசகப் பெருமான் ஒருவரேயாவார். மேலும், ""என்னை ஓர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்'' (செத்.பத்) என்றும், ""உய்யும் நெறி' காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கருளியவாறு'' (அச்சோ பதிகம்) என்றும் கூறியுள்ளார். "உய்யும்நெறி'யாவது ஓங்காரமேயாகும். அந்த ஒரு வார்த்தை "ஓம்' எனும் பிரணவமாகும். எனவே, இறைவனின் வரிவடிவம் ஓங்காரம்; ஒலி வடிவம் நாதம் என்பதை உணர வேண்டும்.
÷மணிவாசகப் பெருந்தகை கண்டு காட்டியதையே தற்போது ஆராய்ச்சி என்ற பெயரில் (அறிஞர்கள்) செய்து வருகின்றனர்! அம்மையப்பனாக இருக்கும் இறைவன், அன்புக்குக் கட்டுப்பட்டவன்; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன். மணிவாசகரும் வள்ளலாரும் போற்றிக் புகழ்ந்த அருட்பெருஞ்சோதியே ஆண்டவராவார்.÷

-இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!