இன்று தமிழ்த் செம்மொழி நாள்

வணக்கம் தமிழறிஞர்களே அன்பு  நண்பர்களே...
இன்று அக்.12



இன்று நம் தாய்மொழியான தமிழ், செம்மொழி தகுதி பெற்றத் திருநாள். இதை நாம் உலகமெங்கும் கொண்டாடி மகிழ வேண்டாமா.....   தமிழ்மொழி பேசும் (பிறமொழிக் கலப்பில்லாமல்)  ஒவ்வொரு தமிழ் இல்லங்களிலும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா....


ஏதாவது ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அம்மாற்றம்  முதலில் உன்னிடமிருந்தே  தொடங்க வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் கூறிய அருள் வாக்கிற்கிணங்க...  இன்று...




இந்த ஆண்டு தமிழ்ச் செம்மொழி நாளை நாற்பதுக்கும் மேற்பட்ட என் இனிய  தமிறிஞர்கள், தோழர் - தோழியருக்குத் தமிழ்ச் செம்மொழி நாள் வாழ்த்து (குறுஞ்செய்தி மூலம்) தெரிவித்து, என்னிடமிருந்தே இதைத் தொடங்கி வைத்தேன்.

பலரும் இதற்கு மறுமொழி கொடுத்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அவர்களுள் புலவர் பதுமனார், திரு ராஜ்கண்ணன்,, கணையாழி ஓவியர் திரு சீனிவாசன்,, திரு.தெ.ஞானசுந்தரம், செம்மூதாய் சு.சதாசிவம், பேராசிரியர் ரமேஷே்,  திருமதி தாயம்மாள் அறவாணன்,  திரு.முத்துக்குமார சுவாமி, தோழி மகேஸ்வரி, திராணி உ.மணி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  ஆரூரனை மறக்கலுமாமே.... என்பார் அப்பரடிகள். அதே போல இம்மகிழ்வான நாளை மறக்க முடியுமா...


திரு புலவர் பதுமனார் குறுஞ்செய்தியைப் படியுங்கள்.
தமிழ்ச் செம்மொழி நாளை நினைந்து வாழ்த்தும் மனம் படைத்த அன்புச் சகோதரி மஞ்சுளா அவர்களின் செம்மொழிச் சேவைக்கு நாலாயிரம் கோடி நன்றிப் பூக்கள் இட்டுப் போற்றி வணங்குகின்றோம்!




திரு. ராஜ்கண்ணன் அவர்கள் பதிவைப் படியுங்கள்
மிக்க நன்றி. செம்மொழித் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி வருவது தினமணி தமிழ்மணி. அதன் பின்புலமாயிருக்கும் உங்களுக்கே இவ்வாழ்த்து மிகவும் பொருந்தும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.


முனைவர் தெ.ஞா. அவர்கள் .... நன்றி. தங்களுக்கும் என் அன்பான செம்மொழி நாள் வாழ்த்துகள் என்று கொடுத்திருந்தார்.தம.ஞா


முதல் வாழ்த்தும் முதல் இனிப்பும்......   தினமணியில் மீண்டும்  தமிழ்மணியைக் கொண்டுவந்து பல்லாயிரக்கணக்கானோர் கட்டுரை எழுதவும், அதை வாசிக்கவும், அதுகுறித்து பலரும் விவாதிக்கவும், பல இலக்கியச் செய்திகளைப் பலரும் அறிந்து பயன்பெறவும் -  போற்றவும் வைத்த எங்கள் தினமணி ஆசிரியருக்குத்தான் கொடுத்து மகிழ்ந்தேன்.

இன்று தினமணி அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தமிழ்ச் செம்மொழி நாளை நினைவுபடுத்தி,  இனிப்பு வழங்கி மகிழ்ந்தது என்னவோ என் வீட்டுத் திருமணத்தை நடத்தி முடித்த மனநிறைவு ஏற்பட்டது.

நான் பி.லிட்(தமிழ் இலக்கியம்), எம்.ஏ. (தமிழ் இலக்கியம்) எம்ஃபில் (தமிழ் இலக்கியம்) படித்தபோதெல்லாம் பலரும் கேட்டார்கள்.....

நீங்கள் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்துப் படித்து என்ன செய்யப் போகிறீர்கள்... ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர்களுக்கே தமிழகத்தில்  இன்று வேலை கிடைப்பது கடினம். அதிலும் தமிழ் படித்தவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்... என்று கேலி பேசினர்.

நான் கூறினேன். இறைவன் காரணம் இல்லாமல் எந்தக் காரியத்தையும் நடத்துவதில்லை.... யாருக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டுமோ அதையே அவன் கற்றுத்தருவான். என் தாய்மொழியே எனக்கு உயர்ந்தது.  இம்மொழி என்னை என்றுமே கைவிடாது காப்பாற்றும். அதற்கு நேரமும் வாய்க்கும், அதை என் தமிழத் தாய் ஏற்படுத்திக் கொடுப்பாள் என்றேன்.(நம்பிக்கையுடன்)

 இறைவன் நினைத்தது நடந்தது. என் தமிழ்த் தாய்(மொழி) என்னை இன்று 25 நூல்களுக்கும் மேல் எழுத வைத்திருக்கிறாள், வேற்றுமொழியை மொழிபெயர்க்க வைத்திருக்கிறாள்...இன்று வெளியாகும் என்னுடைய பல நூறு கட்டுரைகளுக்கும் அக்கட்டுரைகளுக்குக்  கிடைக்கும் பாராட்டுகளுக்கும்  அவளே சொந்தக்காரியாக இருக்கிறாள்.  என் தமிழ் அன்னையே வெற்றி பெற்றாள்.



தமிழ்ச் செம்மொழி நாளை வேறு யார் கொண்டாடவில்லை என்றாலும் தமிழ் நாளிதழ்கள் கட்டாயம்  கொண்டாட வேண்டாமா....(அது தமிழ் நாளிதழ்களாயிற்றே...)

தொடர்ந்து கொண்டாடுவோம்... பிறமொழிக் கலப்பில்லாமல் கொண்டாடுவோம்.... தமிழைப் போற்றுவது நம் தாயைப் போற்றுவதற்குச் சமம். நம் மொழி.... எல்லா மொழிகளைக் காட்டிலும்  உயர்தமிழ்ச் செம்மொழிதான் என்பதில் சந்தேகமேயில்லை. அதை  நம் தலைமுறையினருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்போம்.


மிக்க அன்புடன்

இடைமருதூர் கி.மஞ்சுளா. 

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!