காலம் கருதி இருப்பர்...








இதுதான் நம் சங்கத் தமிழரின் அடையாளம். சங்கத் தமிழரின் பாரம்பரியம் மிக்க இந்த வீர விளையாட்டான  ஏழுதழுவுதலை (மஞ்சுவிரட்டு - ஜல்லிக்கட்டு) போற்றுவோம். நம் தமிழர் பண்பாட்டை காலந்தோறும் பறைசாற்றுவோம். நம் பண்பாடு அழிந்து போகாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.  இன்று, கிட்டிப்புல், பல்லாங்குழி, தாயக்கட்டை முதலிய பல விளையாட்டுக்கள் அழிந்து போனதைப் போல இந்த ஏறுதழுவுதலும் அழிந்துவிடாமல் பாதுகாப்போம்.

இந்த விளையாட்டில் காளைக்கு எந்தவிதக் காயமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது மிகவும் சிறப்பு.

எங்கள் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் என்னிடம் கேட்டார், “மேடம், உடனடியா என்னை இந்த உலகமே திரும்பிப் பார்க்கணும், நான் புகழ் அடையனும்னா நான் என்ன செய்யணும்”
நான் சொன்னேன்…. “இதற்கும் திருவள்ளுவர் ஒருவர்தான் உதவி செய்யக் காத்திருக்கிறார், அவரே உங்களுக்கும் உதவுவார். அவருடைய திருக்குறளின் 49ஆவது அதிகாரத்தைப் படியுங்கள். அல்லது 485ஆவது திருக்குறளையாவது படித்துப் புரிந்து கொள்ளுங்கள் தெரியும்” என்றேன்.
 அதற்கு அவர், “உடனே அதைத் தேடிப் படிக்கிறது நடக்கும் காரியமா மேடம், நீங்களே சொல்லிடுங்களேன்” என்றார் அவசரமாக…. உடனடியாகப் புகழை அடையத் துடிப்பவர் இல்லையா… அவரது அவசரம் எனக்குப் புரிந்தது.  நான் சொன்னேன்,
 “காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்”
 இந்த உலகத்தையே ஒருசேரப் பெறக் கருதுபவர் பொருந்திய காலத்தை  (தக்கக் காலத்துக்காகக்) எண்ணிக் காத்திருப்பார்கள் என்று பொருள். (மீனைப் பிடிக்க தகுந்த நேரத்துக்காகக் காத்திருக்கும் கொக்கு போல) நீங்கள் புகழடைய இதுவே தக்க தருணம். உடனடியாக நம் சங்கத் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதல் (மஞ்சுவிரட்டு) என்னும் ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுங்கள்… எழுதுங்கள்…. பிறருக்கும் நம் பண்பாட்டின் பெருமையை எடுத்துக் கூறுங்கள், உடனே உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்கும்” என்றேன்.

அந்த நபர் இப்பொழுது தொலைக்காட்சியில் தெரிகிறார், இதைத்தான் உலகையே அடையவும், புகழை அடையவும் தக்க காலமறிந்து செயல்களைச் செய்ய வேண்டும் என்று திருவள்ளுவப் பெருந்தகைக் கூறியிருக்கிறார். அதனால்தான் காலம் அறிந்து காரியம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். திருவள்ளுவர் திருவாக்கு என்றும் பொய்க்காது, ஏனெனில் அவர் பொய்யாமொழிப் புலவர், அவர் அருளியது பொய்யாமொழி.  திருவள்ளுவப் பெருந்தகைக்கு நன்றி…. அந்தத் திருக்குறளை நினைவில் வைத்திருந்த என் நினைவாற்றலுக்கும் மிக்க நன்றி.

-இ.கி.ம.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!