“சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…”



காலம் அறிந்து கூவியுள்ள சேவல்

கவிஞர் மயிலாடுதுறை இளைபாரதியின் ஓர் அற்புதமான நூல்,
“சொல்லிக் கொடுப்போம் நம் பிள்ளைகளுக்கு…” 

கன்னிக்கோயில் இராஜா அவர்கள் என்னைக் கை காட்ட, உடனே அவர் எனக்கு இந்நூலை அன்பளிப்பாக அனுப்பி ஒருமாதம் ஆகிறது. உடனே படித்து, பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டேன். என்றாலும், உடனே அவர் நூலுக்கு மதிப்புரை தரமுடியவில்லை.
இந்நூலை ஒவ்வொரு பெற்றோரும் முதலில் படிக்க வேண்டும். அடிக் கோடிட்டதில் சில துளிகள்….உங்கள் பார்வைக்கு…

1.   நேரத்தின் அருமையை எடுத்துச் சொல்லி குழந்தைகளை உணரச் செய்ய வேண்டும். காலத்தின் அருமையை எவரொருவர் தன் இளமைக் காலத்திலேயே தெரிந்து கொள்கிறார்களோ, அவர்கள்தான் வாழ்க்கையில் எதை, எப்போது செய்ய வேண்டும் என்கின்ற உணர்வினைப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களால்தான் சாதனை வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட முடியும். “போகும் காலம் திரும்ப வராது” என்று அவர்களுக்கு உணர்த்துவது நம் கடமையல்லவா…?

2.   படிப்புக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. நிறைய படித்தவர்கள் கூட நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளாதவர்களாகவே இருப்பர்.

3.   மற்றவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க, பிள்ளைகளுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும். நாம் நினைக்கின்ற விஷயம் நமக்கு எப்படி முக்கியமோ, அதுபோலத்தான் ஒவ்வொருவர் நினைக்கின்ற விஷயமும் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

4.   வசதி என்பது ஒருவித சௌகர்யமே தவிர, அது வாழ்க்கையின் உயர்வினைக் காட்டாது. பண்பும், அன்பும் நிறைந்த வாழ்க்கை மட்டும்தான் உண்மையிலேயே, உயர்வான, சிறந்த வாழ்க்கையாகும்.
5.   பிறரின் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசக்கூடாது எனவும் பிள்ளைகளுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும். முக்கியமாக உடல் குறைபாடு உள்ளவர்களை. குறிப்பாக உடற்குறைபாடு உள்ளவர்களை
6.   இனிய சொற்களைப் பேசிப் பழகினால், அது பேசுகிறவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் சேர்த்து மகிழ்ச்சியைத் தரும். இதனால் அமையும் உறவும், நட்பும் இனிமையானதாக இருக்கும். இதையும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிப் பழக்குவோம்.

7.   இந்தக் காலக் குழந்தைகள் நாம் எதிர்பார்ப்பதைவிட புத்திசாலித் தனத்துடனே இருக்கிறார்கள். எந்த விஷயமென்றாலும் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள். வெகு சீக்கிரமாய் கற்றுக் கொள்கிறார்கள்.
8.   கடினமான உழைப்பு அவர்களுக்குத் தேவை என்பதைவிட, சீரான முயற்சியும், பயிற்சியுமே நம் பிள்ளைகளுக்குப் போதுமானதாகும்.

மேலும், இந்நூலில், பெற்றோரே இதைப் படிங்க முதல்ல, காலம் உணருங்கள் கண்மணிகளே, வெற்றி உங்களுக்கே, தற்கொலை எண்ணம் தவிர்த்திடு, தன்னம்பிக்கை, வெற்றிப்படிகள், பொய் பேசுவதைத் தவிர்ப்போம், எண்ணங்கள் நலம் பெறட்டும், என்ன வெல்லாம் செய்கிறது சிரிப்பு, ஞானம் பொதிந்த நாவு முதலிய கட்டுரைகள் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை. 




கவிஞர் என்னும் இந்த மயிலாடுதுறை சேவல், காலம் அறிந்து கூவுகிறது. தயவுசெய்து பெற்றோரே…. மண்ணில் நல்லவண்ணம் வாழ சொல்லிக் கொடுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு…

-இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!