லிஃப்ட் கொடுப்பவர் கவனத்திற்கு.... ஆபத்துக்குப் பாவம் உண்டு



இடைமருதூர் கி. மஞ்சுளா

"ஆபத்துக்குப் பாவம் இல்லை' என்று கூறுவது முன்னோர் முதுமொழி. யாராவது ஆபத்தில் இருக்கிறார் என்றால்,  அவர் யார்? எவர்? எப்படிப்பட்ட குணமுடையவர்? எந்த சாதி? எந்த மதம்? என்றெல்லாம் பார்க்காமல் உடனடியாக  அவருக்கு உதவி செய்ய வேண்டும்; இதில் பாவ}புண்ணியம் பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு முதுமொழியைச் சொல்லி வைத்தனர் நம் முன்னோர். அவர்கள் கூறியதை இன்றைக்கு நம்மால் சில நேரங்களில் கடைப்பிடிக்க முடிகிறதா? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. நடைமுறைக்கு இது சாத்தியமில்லை என்றே பலரும் கூறக்கேட்க முடிகிறது.

÷பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று "ஆசாரக்கோவை'. அந்நூலில் புலவரால் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிமுறைகளை இக்காலத்தில் ஒன்றைக்கூட நம்மால் கடைப்பிடிக்க முடியவில்லை } கடைப்பிடிக்கவும் முடியாது. காரணம்,  எல்லாவற்றிலும் துரிதத்தைக் கையாண்டு,  துரிதமாகவே இவ்வுலகை விட்டுச் சென்றிவிடும் காலச்சூழ்நிலையில் இருக்கிறோம்.  அதில் மேற்கூறிய முதுமொழியையும் சேர்த்துக்கொள்ளலாம்.  அதையும் இக்காலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது போலிருக்கிறது.
                 தினமும் குறிப்பாக சாலை ஓரங்களில் சிலர்  நின்றுகொண்டு கையைக் காட்டி,  "லிப்ட்' கேட்கும் பழக்கத்தை பார்க்க முடிகிறது. ஆபத்தில் இருப்பவர், அவசரமாகச் செல்ல வேண்டியவர், வாகனம் பழுதானவர், முதியவர், பேருந்தைத் தவறவிட்டவர் என்று  யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானலும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
                இப்படி லிஃப்ட் கேட்பவருக்கு "ஆபத்துக்குப் பாவமில்லை' என்று சிலர் இரக்கப்பட்டு உதவி செய்கிறார்கள். ஆனால், அந்த உதவியே அவர்கள் உயிரைப் பறிக்கும் எமனாகவும் சில நேரங்களில்  மாறியுள்ளது.
                ஜூன் 19,  2013-இல் புதுக்கோட்டை அருகில் நிகழ்ந்த ஒரு சம்பவம். இதில் வேன் ஓட்டுநர் உள்பட 7 மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் "லிப்ட்' கேட்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அம்மாணவர்களின் கிராமமான விஜய ரகுநாதபுரத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவிலிருந்து பிரதான சாலைக்கு  வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் நான்கு கி.மீ. தொலைவிலுள்ள பள்ளி இருக்கும் ஊரான வல்லத்திரா கோட்டைக்குச் செல்ல வேண்டும். வழக்கம் போல் இவர்கள் லிப்ட் கேட்டு பிரதான சாலைக்குச் செல்வது வழக்கம். அதன்படி ஜூன் 19}ஆம் தேதி வழக்கம் போல் பால் வண்டியில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்ற மாணவர்களின் உயிர் சம்பவ இடத்திலேயே பறிபோனது.

லிப்ட் கொடுத்து, தங்கள் உடைமைகளை இழந்தவர்களைப் பற்றியும், உயிரை இழந்தவர்கள் பற்றியும் "திகில்' நிறைந்த  செய்திகள் பல உலா வருகின்றன. அதனால்தான், "இது கலிகாலமடா சாமி! யாரையும் நம்ப முடியாது' என்று கலி தொடங்கிய அன்றே கூறிவிட்டனர் நம் மூதாதையர்.

(அதற்கு ஒரு எ.கா. கீழே உள்ள படத்தில் உள்ளது. இது ஓர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்திக்கான நிழற்படம். இதை இணைய தளத்தில் சென்று படியுங்கள்)


 

÷சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி இது. இரவு பத்தரை மணிக்கு மேல், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உறவினரை வழியனுப்பிவிட்டு இருசக்கர வாகனத்தில் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓர் இளம்பெண் திடீரென என் வண்டியை மறித்து லிப்ட் கேட்டார். இந்த நேரத்தில் "பெண்ணுக்குப் பெண் உதவாமல் போனால் எப்படி?' என்று நினைத்த மாத்திரத்தில் அவள் யார், எவர் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் வண்டியை நிறுத்தினேன். அவள் படபடப்புடன், "மேடம் என்னை அந்த மருத்துவமனைக்கு அருகில் இறக்கி விட்டு விடுங்களேன், அந்தக் காரில் இருப்பவர் என்னை வெகு நேரமாகச் சுற்றிச் சுற்றி வருகிறார்' என்று கூறிவிட்டு, என் அனுமதிக்குக்கூட காத்திருக்காமல் அந்தப் பெண் வண்டியில் படக்கென ஏறி அமர்ந்துவிட்டார்.  அந்தப் பெண் குறிப்பிட்ட அந்த மருத்துவமனை வந்ததும் வண்டியிலிருந்து இறங்கி, "நன்றி' தெரிவித்துவிட்டு சென்றார்

÷அன்றைக்கு என்னவோ ஒரு பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றி, இமாலய சாதனை செய்துவிட்டதாக நினைத்து மகிழ்ந்த நான், அதை உறவினரிடம் பகிர்ந்து கொண்டபோதுதான் தெரிந்தது, "ஆபத்துக்குப் பாவம் உண்டு' என்பது

÷"ஆபத்துக்குப் பாவமில்லைன்னு சொன்னதெல்லாம் அந்தக் காலம். இது கலிகாலம்மா. இப்படி கண்ட கண்ட நேரத்தில் லிப்ட் கேட்கிறவர்களுக்குக் கொடுக்கக்கூடாது; காலம் கெட்டுக்கிடக்கு. யார் எப்படி மாறுவார் என்று யாருக்கும் தெரியாது? இப்படித்தான் எனக்குத் தெரிந்தவர் ஒருவர், நடக்க முடியாமல் சிரமப்பட்ட ஒருவருக்கு இரக்கப்பட்டு லிப்ட் கொடுக்கப்போய், அவர் பின்னால் உட்கார்ந்துகொண்டு, ஓட்டுபவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த பணம், மோதிரம், செயின் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். நடக்க முடியாதவர் என்று பாவப்பட்டு, இரக்கப்பட்டு லிப்ட் கொடுத்தது பாவமா?' என்றார்.

÷அவர் கூறியதற்கு மேலும்,  தூபம் போட்டுக் புகையைக் கிளப்பிவிடுவது போல  வேறொருவர், லிப்ட் கொடுத்து உயிரை இழந்தவர்களின், கற்பை இழந்தவர்களின் பட்டியலைச் சொல்லச் சொல்ல... மனம் திக் திக் என்றது.      "அன்றைக்கு எப்படியோ அந்தப் பெண்ணிடமிருந்து நாம் தப்பித்தோம்' என மனம் அமைதியும் கொண்டது.  

÷ஆபத்துக்கு உதவுவது, மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டி இரக்கப்படுவது,  கருணை காட்டுவது இவற்றைத்தானே அனைத்து சமயங்களும், மதங்களும் போதிக்கின்றன! அன்பு, கருணை, இரக்கம், தன்னைப் போல பிறரையும் மதிக்கும் தன்மை இவைதானே சமயங்களின், மதங்களின் தலையாய கொள்கைகள்,  குறிக்கோள்கள்! ஆனால், இன்றைக்கு  முன்னோர் மொழியைப் பொன்னே போல போற்ற முடியவில்லையே.. அன்பு, இரக்கம், பச்சாதாபம்  இவற்றிற்கெல்லாம் இன்று மதிப்பு இல்லாமலல்லவா போய்க்கொண்டிருக்கிறது.  

உண்மையாகவே நடக்க முடியாத, வயதான,  பேருந்தைத் தவற விட்ட, ஆபத்தில் இருப்பவர்களுக்கு  உடனடியாக உதவவோ, வாகனத்தை நிறுத்தவோ  மனம் ஏனோ யோசித்துக் கொண்டே வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டிருக்கிறதே... 

÷ஒரே மேடையில் ஒரு நாடகத்தில் நடிக்கும் நாடக  நடிகர்கள் அனைவரும் எப்படித் தங்களுக்குள் ஒற்றுமையாகவும், அன்புடனும் நடந்துகொண்டு அந்த நாடகம் நல்லவிதமாக அரங்கேறப் பாடுபடுவார்களோ அதைப்போல, இந்த உலகம் என்ற நாடக மேடையில் வேடம் தரித்து நடிக்க வந்தவர்கள்தாமே நாம். அப்படியிருக்கும்போது நமக்குள் அன்பு, கருணை, இரக்கம் இல்லையென்றால், இறைவன் தொடங்கிவைத்த இந்த நாடகத்தை நாம் நல்லவிதமாக முடித்துக் கொடுப்பது எப்படி சாத்தியம்?

÷இன்றைக்குத் தொழிற்நுட்பம் வளர்ந்த அளவுக்கு மனித நேயம் வளரவில்லை; தளர்ந்து தேய்ந்துகொண்டிருக்கிறது. அப்படி மனித நேயத்தோடு வாழும் ஒரு சிலருக்கு (லிப்ட் கொடுப்பதன் மூலம்) கிடைப்பதென்னவோ மரணம் மட்டும்தான்


÷"தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே; அந்தக் தன்மை வர உள்ளத்தில் கருணை வேண்டுமே' என்பது ஒரு கவிஞரின் பாடல் வரிகள். "தேறற்க யாரையும் தேறாது' (51:9) என்ற திருவள்ளுவரின் வாக்கையும் இங்கு நினைவுகூர வேண்டும்.


÷ இப்படிக் கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி என்று இரக்கமற்ற } மனித நேயமற்ற உலகமாக இக்கலிகாலம் மாறும் என்பதை அறிந்ததாலோ என்னவோ, கலிகாலத்தில் மகான்களின் அவதாரம் குறைந்துவிட்டது. ஏற்கெனவே படைத்தளித்திருக்கும் சமய}மதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்காத மக்களுக்கு எதற்காகப் புதிதாக போதனைகள் என்று அவதாரம் செய்ய மறுக்கின்றனர் போலும்!

-இடைமருதூர் கி.மஞ்சுளா

நன்றி:
முதல் பதிப்பு தினமணி நாளிதழ் 14.9.2017, பக்.8


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!