நாடோடிக் கதைகள்-2


பிகார் மாநில நாடோடிக் கதை

தமிழில் : இடைமருதூர் கி.மஞ்சுளா
(தினமணி – கொண்டாட்டம் 22.4.18)

போதை அழிவின் ஆணிவேர்

                தேவதூதன் ஒருவன் விமானம் ஒன்றில் அமர்ந்து வான்வெளியில் சென்று கொண்டிருந்தான். திடீரென்று அவன் மயக்கமுற்றதால்,  தடுமாறிப்போன அவன்,  விமானத்தோடு பூமியில் வந்து விழுந்துவிட்டான்.
                அந்த விமானம் ஒரு பிச்சைக்காரன் வீட்டின் முன்பு விழுந்தது. அதைக் கண்ட பிச்சைக்காரன், "என்னைப் போல இவனும் அதிர்ஷ்டம் இல்லாதவன் போல தோன்றுகிறதே...' என்று நினைத்தான்.
                குடிசையின் முன்பு வந்து விழுந்து கிடந்த அந்தத் தேவதூடன் முகத்தில்  தண்ணீர்  தெளித்து,  மயக்கத்தில் இருந்த அவனை விழிக்கச் செய்தான் பிச்சைக்காரன்.
                கண் விழித்துப் பார்த்த தேவதூதன், தன்னைக் காப்பாற்றிய அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து, "என்னைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி. நான் உனக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன்'' என்று கூறி, தன் விமானத்தில்  இருந்த  கலசம் (பானை) ஒன்றை எடுத்து பிச்சைக்காரனிடம் தந்துவிட்டு, ""இது ஆசைகளைப் பூர்த்தி செய்யும் கலசம். நீ எது கேட்டாலும் தரும்'' என்றான்.
                பிச்சைக்காரனுக்கு வியப்பாக இருந்தது. நம்பவும் முடியவில்லை. இருந்தாலும், மனதுக்களுள் இவன் என்னிடம் விளையாடுகிறானோ என்று யோசித்துவிட்டு, தேவதூதனிடம், "இந்தக் கலசமா என்னுடைய ஆசைகளை எப்படிப் பூர்த்தி செய்துவிடப் போகிறது? எனக்கு நம்பிக்கை இல்லை'' என்று அலுத்துக் கொண்டான்.
                அதற்கு தேவதூதன், "அதைப் பற்றி நீ கவலைப்படாதே, உனக்கு என்ன வேண்டுமோ கேள், நீ கேட்டதை அது உடனடியாகத் தரும்'' என்று கூறிவிட்டு தேவதூதன் விமானத்தில் ஏறிப் பறந்து  போய்விட்டான்.
                பிச்சைக்காரன், நம்ப முடியாமல்  சற்று நேரம் யோசித்தான். வாழ்நாளில் சுவையான உணவையே அவன் சாப்பிட்டதில்லை. அதனால் இந்தக் கலசத்திடம் சுவையான உணவு கேட்கலாம் என்று நினைத்து, அதனிடம் சுவையான உணவு வகைகளைக் கேட்டான். கேட்ட உடனேயே அந்தக் கலசம் அவன் முன்பாக விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு  வைத்தது. ருசியாக இருந்த அந்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தான். இப்படி நாள்தோறும் புதிது புதிதாக ஏதாவது அந்தக் கலசத்திடம் கேட்டு வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.




                ஒரு நாள் "ஆடம்பர மாளிகை வேண்டும், அங்கு நாட்டியப் பெண்கள் வேண்டும், கூடவே வகைவகையான மது வகைகள் வேண்டும், அவற்றை அருந்திக்கொண்டே அப்பெண்களுடன் ஆடிக் களிக்க வேண்டும்' என்று அந்தக் கலசத்திடம் கேட்டான்.
                அவன் கேட்டபடியே ஆரம்பரமான மாளிகை தோன்றியது. நாட்டியப் பெண்கள் ஆடல் செய்தனர். கூடவே மது வகைகள் வந்தன. அவற்றை அருந்தி நாட்டியப் பெண்களுடன் ஆடிக் களிக்க வேண்டும் என்ற ஆசையால், அந்தக் கலசத்தை தலையில் வைத்தபடி அவர்களுடன் ஆடினான். அவனுக்குப் போதை தலைக்கேறியது, கால்கள் தடுமாறின. தலைசுற்றி "பொத்' என்று கீழே விழுந்தான் பிச்சைக்காரன். தலையில் இருந்த கலசமும் உடைந்து சிதறியது.
                அவனுக்கு நினைவு திரும்பியபோது, கண்முன்னே இருந்த எல்லாப் பொருள்களும் மாயமாய் மறைந்தன. கலசம் மட்டும் உடைந்து கிடந்தது. அச்சச்சோ! என் போதையால் அற்புதமான விலையுயர்ந்த கலசத்தை இழந்துவிட்டேனே! என்று கூறி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான் பிச்சைக்காரன்!

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!