திருவாசகம்- திருக்கோவையார் - கலாரசிகன் (இந்தவாரம்) பதிவு

தினமணி - தமிழ்மணி 
கலாரசிகன் பாராட்டு..... (17.6.2018)


ஒரு மகிழ்ச்சியான செய்தி  "தமிழ்மணி' பகுதியை வெளிக்கொணர அதைத் தொடங்கியது முதல் கடந்த பத்தாண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் "தினமணி' நாளிதழின் முதன்மை உதவி ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.




     தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், "மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் மரபுகள்' என்கிற தலைப்பில் திருவாசகம் -திருக்கோவையார் குறித்த அவரது ஆய்வுக்கு "முனைவர்' பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வுக்குப் பலரும் ஏதாவது சுமாரான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, தனக்குப் பிடித்தமான - தன் மானசீக குருநாதரான மாணிக்கவாசகரின் திருவாசகம் -  திருக்கோவையாரைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தவர் அவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அதற்காக இரவும் பகலும் பல தரவுகளையும் தேடிப் பிடித்து, திருவாசகம் -  திருக்கோவையாரில் மூழ்கித் திளைத்து அவர் மேற்கொண்ட சிரமங்கள் ஏராளம்.

    சங்க இலக்கியம், சமய இலக்கியம்,  சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம்,  சிறுகதை, கட்டுரை, குறுநாவல் என்று 23க்கும்  மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கும் இடைமருதூர் கி.மஞ்சுளா, 20க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்களில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார்.

 சைவ சித்தாந்தத்தில், குறிப்பாக பன்னிரு திருமுறைகளில் ஆழங்காற்பட்ட புலமை உடைய இவரது திருவாசகம் -திருக்கோவையார் குறித்த ஆய்வுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
    முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு "தமிழ்மணி' வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்!
.......


     முனைவர் பட்டம் பெற்ற செய்தியை  தெரிவித்தபோது, அவரது "மாணிக்க மணிமாலை' என்கிற புத்தகத்தை என்னிடம் தந்தார் இடைமருதூர் கி.மஞ்சுளா. பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்குகளில் அவர் வாசித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.



    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரால் வாசிக்கப்பட்ட "காதல் மகளிர் எழுவர்' என்கிற கட்டுரையுடன் தொடங்கும் இந்தத் தொகுப்பில், 18 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஏழு கட்டுரைகள் திருமுறைகள் சார்ந்தவை என்றாலும், திருவள்ளுவர்,  சேக்கிழார், கம்பர், பாரதி,  ஔவைப்பிராட்டி என்று ஏனைய பல தமிழ் ஆளுமைகள் குறித்தும் கட்டுரைகள் வாசித்தளித்திருக்கிறார்.

    "தினமணியின் தமிழ்மணியில் கம்பன் புகழ்', "சுதந்திரப் போராட்டம் மற்றும் இதழியல் வரலாற்றில் தினமணியின் பங்களிப்பு', "ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்ததில்  தினமணியின் பங்கு' என்று "தினமணி' தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் குறித்தும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் அவர் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்திருக்கிறார் என்பது  பெருமகிழ்ச்சி அளிக்கிறது.





    இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரையும் முனைவர் பட்ட ஆய்வுக்கான கருப்பொருள்கள் என்பதுதான் அவற்றின் சிறப்பு. இந்தக் கட்டுரைகளின் அடிப்படையில் புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வழிகோலப்பட்டிருக்கிறது. (நாளிதழில் எடிட் செய்யப்பட்ட பத்தி இது)

பன்னாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகளை சாமானியத் தமிழ் வாசகர்களும் புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் இயலும் வகையில் அமைத்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு!


-கலாரசிகன்
(ஆசிரியர் - கே.வைத்தியநாதன்)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!