மகனிடம் கற்ற பாடம்! - சிறுவர் மணி கதை


மகனிடம் கற்ற பாடம்!

-இடைமருதூர் கி.மஞ்சுளா

(தினமணி - சிறுவர்மணி 1.6.2019)


சாரதி மிகவும் சுட்டிப் பையன், புத்திசாலிப் பையனும்கூட. அவனுடைய அம்மா}அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாரதியின் அம்மா வாஷிங் மெஷினில் நிறைய துணிகளைத் துவைக்கப் போட்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திடீரென்று கரண்ட் கட்டானது கண்டு அதிர்ந்தார்.

"என்ன இது இப்படி ஞாயிற்றுகிழமையும் அதுவுமா கரண்ட் கட் ஆகுதே.. வாஷிங் மிஷன் போடணுமே... குழம்புக்கு அரைக்கணும்... எப்போதான் வருமோ?' என்று புலம்பத் தொடங்கினார்.

5 நிமிடம் கழித்து கரண்ட் வந்துவிட்டது. உடனே வாஷிங் மெஷினை ஆன் செய்த அம்மாவின் அதிர்ச்சியான குரல் ஹாலில் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த சாரதிக்குக் கேட்டது. 

"கரண்ட் வந்துடுச்சு... ஆனால், வாஷிங் மெஷின் ஓடலையே... வாங்கி ஆறு மாதம்தானே ஆகுது... ரிப்பேர் ஆயிடுச்சோ... இப்ப துணிகளையெல்லாம் எப்படித் தோய்ப்பது?' அம்மா டென்ஷனின் புலம்பத் தொடங்கினாள். உடனே,  வாஷிங் மெஷின் ரிப்பேர் செய்பவரின் ஃபோன் நம்பரைத் தேடி எடுத்து அவருக்குப் போன் செய்தாள்.

மறுமுனையில், "ஞாயிற்றுக்கிழமை வரமாட்டேன், நாளை வருகிறேன்' என்று ரிப்பேர் செய்பவர் கூறியதும் அம்மாவுக்கு பி.பி. ஜிவ்வென்று ஏறத் தொடங்கிவிட்டது. புலம்பிக் கொண்டே வந்து சோபாவில் உட்கார்ந்து விட்டார்.



அப்போது சாரதியின் அப்பா, "எல்லாத் துணிகளையும் வெளியே எடுத்து கையால் துவைக்க வேண்டியதுதானே... ஏன் இப்படிப் புலம்புகிறாய்?' என்றார்.
""என்னால் கீழே உட்கார்ந்து எப்படித் துவைக்க முடியும்? ஆறு மாதத்துக்கு முன் எனக்கு முதுகில் செய்த ஆபரேஷன் உங்களுக்கு நினைவில்லையா?  கீழே உட்கார்ந்து தோய்க்க முடியாது என்பதால்தானே வாஷிங் மிஷின் வாங்கிக் கொடுத்தீர்கள்?'' என்றாள்.

ஒரு நொடி நிதானித்த அப்பா,  "நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது... நாளைக்கு போட்டுக்க வேண்டிய என் துணிகளைத் துவைத்துக் கொடு'' என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
அம்மா செய்வதறியாது புலம்பிக் கொண்டிருப்பதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாரதி, நோட்டு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான்.  

"புலம்பாதேம்மா...இதோ வரேன் இரு...'  என்று கூறிவிட்டு, வாஷிங் மெஷின் ஸ்விட்சைப் போட்டுப் பார்த்தான். அது ஸ்டாட் ஆகவில்லை. மிக்சியின் ஸ்விச்சை அழுத்தினான். அது மெதுவாகச் சுற்றியது. ஃபிரிட்ஜைத் திறந்தான் அதுவும் இயங்கவில்லை. ஹாலில் வந்து ஃபேனைப் போட்டான். 2}இல் வைத்தாலே வேகமாகச் சுற்றும் ஃபேன், 5-இல் வைத்தும் மெதுவாகச் சுற்றியது. படுக்கை அறை விளக்கைப் போட்டான் எரிந்தது. ஆனால்,  ஏசியைப் போட்டான் ஸ்டாட் ஆகவில்லை. உடனே அம்மாவிடம் வந்தான்.

""அம்மா... வோல்டேஜ் ரொம்ப லோவா இருக்கு. வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜுக் கெல்லாம் ஓல்டேஜ் அதிகம் இருந்தால்தான் செயல்படும். இது தெரியாம உடனே ஏன் டென்ஷன் ஆகிறீர்கள்?'' என்று சாரதி சொல்லி முடிக்கவும், திடீரென்று பல்புகள் பளிச்சென்று எரிய,  ஓடிப்போய் வாஷிங் மெஷினை ஆன் செய்தான் சாரதி, அது சுற்றத் தொடங்கியது. "அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அம்மா.

"அம்மா... காமன்சென்ஸ்சுன்னு ஒன்னு இருக்கில்லையா... அதைப் பயன்படுத்தணும்... இப்படி எடுத்ததற்கெல்லாம் டென்ஷன் ஆனா உடம்பு கெட்டுடும்...'' என்று சிரித்துக்கொண்டே கூறிய மகனை அணைத்துக் கொண்டு,
"இதை நான் யோசிக்கவே இல்லடா கண்ணா... அவசரப் பட்டுட்டேன்...'' என்றாள்.


முதன் முறையாகப் பிள்ளையிடம் கற்ற பாடத்தைத் தன் கணவரிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

-இடைமருதூர் கி.மஞ்சுளா


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!