பகைவனுக்கு(ம்) அருள்வாய் நன்னெஞ்சே....


 பகைவனுக்கு(ம்) அருள்வாய் நன்னெஞ்சே....

இடைமருதூர் கி.மஞ்சுளா

               "ஆன்மிக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு, மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் செல்வாயானால், முன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும்' என்று சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது நமக்கு எச்சரிக்கையோ? சாபமோ? ஆனால், அது இப்போது பயன்தர - பலிக்கத் தொடங்கிவிட்டது.

"வலிமைமிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களே தேவை. அத்தகைய நூறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும். எனக்கு நூறுகூட வேண்டாம்; பத்து இளைஞர்களைத் தாருங்கள் நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்' என்று வீரமுழக்கமிட்ட சுவாமி விவேகானந்தர் இளைஞர்களையே மலை என நம்பினார்.

கண்காணிக்கவும், காப்பாற்றவும் யாருமின்றி காட்டு விலங்குகளில் ஒவ்வோர் இனமாக அழிந்து வருவதைப் போல, மனித நேயமில்லாமல் மனித இனம் விரைவில் அழிந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்,  அண்மைக் காலமாக அரங்கேறிவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள்.

ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள்,  தங்கள் பிள்ளைகளைத்  தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய சூழ்நிலையும், காலகட்டமும் ஏற்பட்டுள்ளது.  "இளைதாக முள்மரம் கொல்க' என்கிற திருவள்ளுவரின் திருவாக்கை சிரமேற்கொண்டு "முள் மரங்களைக்' கொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. பெற்றோர், சிறுவயதிலிருந்தே ஆண் பிள்ளைகளைக் கண்டித்து, கண்காணித்து, நல்வழிப்படுத்தி, நன்னெறி புகட்டி, அறிநெறிகளை எடுத்துக் கூறி வளர்க்கத் தவறியதன் காரணமாகத்தான் இன்றைக்கு உலகம் கொலையாளிகளின் கூடாரமாகி வருகிறது. பஞ்சமா பாதகத்தில் ஒன்றான இதைச் செய்ய கொஞ்சவும் தயங்குவதில்லை இன்றைய இளைஞர்கள்!

இத்தகைய கொலைகளை பொறாமை, பழிக்குப்பழி வாங்குதல், களவு, கள்ளக் காதல், வரதட்சணை, பணத்தாசை, நிலத்தகராறு, குடும்பத் தகராறு, ஜாதிப் பிரச்னை, அரசியல் காழ்ப்புணர்வு முதலிய காரணங்களால் நடந்திருக்கின்றன.
அன்பு, கருணை, இரக்கம்,  மன்னித்தல், விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல், சகித்துக் கொள்ளுதல் முதலிய மனித நேமிக்க  நற்பண்புகளுக்கான சொற்கள் இன்றைய இளைஞர்களிடம் இல்லாததுடன்,  தமிழ் அகராதியிலிருந்தே அவை அழிந்து போய்விடுமோ என்கிற  அச்சம் ஏற்படுகிறது. குறிப்பாக, கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே 17 வயது முதல் 21 வயது இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டீ குடித்ததற்குக் காசு கேட்டால் கொலை, படிக்கவில்லை என்று பெற்றோரோ, ஆசிரியரோ கண்டித்தால் கொலை,  செல்லிடப்பேசியைப் பயன்படுத்தாதே என்று எச்சரித்தால் தாக்குதல், காதலிக்க மறுத்தால் கொலை - என்று சின்னச் சின்ன காரணங்களுக்காக எல்லாம்  இன்றைய இளைஞர்கள்  அவசரப்பட்டு, ஆவேசப்பட்டு, ஆத்திரப்பட்டு, உடனடியாக விபரீத முடிவை எடுத்து விடுகின்றனர். ஆகவே, ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களே... நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய நேரம் இது.

தமிழகத்தில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் சமீப காலமாக - சர்வ சாதாரணமாகக் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே  20 கொலைகள் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடந்திருக்கின்றன. இந்தக் கொலைகளின் பின்னணியில் இருந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது அதைவிட அதிர்ச்சிக்குரியது! அதன் பட்டியல் மிக நீண்டது என்றாலும், சிலவற்றை இங்குக் குறிப்பிடுவது அவசியமாகிறது.

 ஜூன் 12ஆம் தேதி, மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு நிபந்தனை ஜாமீனில் கையொப்பம் இடவந்த சகோதரர்களைக் காவல் நிலையத்துக்கு அருகிலேயே ஏழு பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று வெட்டிச் சாய்த்திருக்கிறது. இச்செயலைச் செய்தவர்கள் 19}லிருந்து 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.

ஜூலை 9}ஆம் தேதி, புதுக்கோட்டையில் (நாகமலை)  பெயிண்ட் கடை வைத்திருந்தவரை அவரது வீட்டில் புகுந்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது ஆறு பேர் கொண்ட கும்பல். இவர்களும் இளைஞர்கள்!

ஆகஸ்ட்17, கிருஷ்ணாபுரம் காலனியில் வசித்துவந்த  ஒருவர், தன் கடையில் தேநீர் குடிக்க வந்த நான்கு பேரிடம் தேநீருக்குப் பணம் கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த நான்கு பேரும் 20 வயது இளைஞர்கள்.
ஆகஸ்ட்22ஆம் தேதி,  புதூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ஒருவர் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.  

அக்.13ஆம் தேதி திருப்பூரில் (வெள்ளக்கோயில்), தன் மகனின் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய தம்பதியினர் வரும் வழியிலேயே கொலை செய்யப்பட்டு  புதைக்கப் பட்டுள்ளனர்; மேலும், தேவகோட்டை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த ஒருவர் சொத்துக்காக தன் தாய்}தந்தையைக் கொலை செய்திருக்கிறார் - இப்படி நாள்தோறும் கொலைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அண்மையில் (அக்.15)  ஒரு நாளிதழில்கூட தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற கொலைச் சம்பங்கள்,  அதற்கான காரணங்கள், குற்றப் பின்னணி ஆகியவை பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.     

கடந்த 25 ஆண்டுகளாக வெளிவரும் திரைப்படங்களில் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், அடிதடி, கொலை, கொள்கை, கற்பழிப்பு, ஆளைக் கடத்துதல்,  பழிக்குப் பழி வாங்குதல்  முதலிய காட்சிகள் இல்லாமல் வெளிவருவதில்லை. தணிக்கைத் துறையும் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை. இதே நிலைதான் சின்னத்திரை தொடர்களுக்கும். காட்சி ஊடகங்கள் எதுவும் இன்றைக்கு மக்களை நல்வழிப்படுத்தக் கூடியதாக இல்லை. நல்லொழுக்கத்தையோ, நன்னெறிகளையோ அடிப்படையாக வைத்துக் கதைகளை உருவாக்கித் தருவதில்லை.

இன்றைய இளைஞர்களுக்கு மனம் செம்மையாக இல்லாததுதான் மிகப் பெரிய குறை. பொறாமை, கோபம்,  பேராசை,  பணத்தாசை, ஆணவம், சுயநலம், பழிவாங்குதல் ஆகிய தீய எண்ணங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். மன்னித்தல், விட்டுக்கொடுத்தல், அன்பு, கருணை, மனித நேயம் ஆகிய நற்பண்புகள் அவர்களிடம் அழிந்து போய்விட்டன.  அதன் காரணமாகத்தான் இத்தகைய கொலைகள் அரங்கேறியுள்ளன. "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே' என்றார் மகாகவி பாரதியார். ஆனால், இன்றைக்கு  நம் குடும்பத்தாரிடமும், அக்கம் பக்கத்தாரிடமும், நட்பு வட்டத்துடனும்கூட  நம்மால் அன்பு, அருள் செய்ய முடிவதில்லை.





"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்'

என்றார் திருவள்ளுவர். அதனால், தீய எண்ணங்கள் மனதில் உருவாவதற்கு முன்பே நன்னெறிகளை உள்வாங்கி, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து அறநெறியில் வாழப் பழக வேண்டும்.  

"பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். தீமையைச் செய்வதால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்கிறோம்' என்கிற சுவாமி விவேகானந்தரின் வாக்கை மதித்து நடந்தால்தான் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நன்மை விளையும்.





 2020 நெருங்கி வருகிறது. "இளைஞர்களால்தான் இந்தியா வல்லரசாகும்' என்கிற அப்துல் கலாமின்  2020 கனவு, கனவாகவே போய்விடுமோ என்கிற அச்சம் இன்றைய இளைஞர்களால் எழுகிறதே...

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!