முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளர் திரு கர்ணன் அவர்கள் (திங்கள்20.7.2020) காலமான செய்தி

தள்ளிப்போடுவது ஆபத்தானது

தூங்கி எழுந்தால்…. யார் இருக்கிறார்கள், யார் நம்மிடம் சொல்லாமல் போனார்கள் என்பதை தொலைக்காட்சியையோ, கட்செவி அஞ்சலையோ,  முகநூலையோ, பத்திரிகையையோ பார்த்தும், கேட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டிய கொடுமையான (2020) ஆண்டில் ( காலகட்டத்தில் மனித இனம்) நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்….

இன்று வழக்கம்போல (21.7.2020) தினமணி பத்திரிகையைப் பிரித்ததும்…

முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளர் திரு கர்ணன் அவர்கள் (திங்கள்) மறைந்த செய்தி. மிகுந்த அதிர்ச்சி. அவர் இறையடி சேர்ந்துவிட்டார். இவர் குறித்து எங்கள் ஆசிரியர் (கலாரசிகன்) பல முறை எழுதியிருக்கிறார். ஆனால், அவரது அறிமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியப் பயணத்தில் வாய்த்தது.

எழுத்தாளர்கள் 50 பேரின் படைப்புகளை மலேசிய அரசின் ஆதரவுடன் வெளியிட்டு மகிழ்ந்த (கலைஞன் பதிப்பகம்) அந்தத் தருணங்கள் என்றும் இனிமையானவை. கலைஞன் பதிப்பகத்துக்கு நன்றி… இந்தப் பயணத்தில் என்னுடன் என் செல்ல மகளும், என் தோழி மகேஸ்வரியும் இருந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அதை வார்த்தைகளால் வடிக்க முடியாது…

அந்தப் பயணத்தில்தான் எத்தனையோ ஆளுமைகளை சந்திக்க முடிந்தது.  அவர்களுள் மிக நெருக்கமாக, தோழமையாக… திரு மணா, கன்னிக்கோயில் ராஜா, சுப்ரபாரதி மணியன், திரு சங்கரநாராயணன், திரு. அருணகிரி, உதையை மு.வீரையன், தென்னம்பட்டு ஏகாம்பரம் முதலிய எழுத்தாளுமைகள் பலரைக் கண்டு பேச முடிந்தது. (தென்னம்பட்டு ஏகாம்பரம் அவர்கள் திருவான்மியூர் கோயிலில் அறங்காவலராக இருந்தபோதே பழக்கம். “திருவாசகத்தில் புராணக் கதைகள்” (2006) என்ற என் நூலை அவர் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளார்)

அவர்களுள் ஒருவர்தான் திரு கர்ணன் அவர்கள். அவருடைய கதைகள் பலவற்றை நூலிலும் இணையத்திலும் படித்திருக்கிறேன்… ஆனால் நேரில் காணும் வாய்ப்பு மலேசியப் பயணத்தில்தான் கிடைத்தது.

அவர் என்னைப் பார்த்து, நான் யார் என்று தெரிந்து கொண்டவுடன்… “உங்கள் கட்டுரைகள் பலவற்றையும் தினமணியில் படித்து மகிழ்வேன். தமிழ்மணியில் அருமையான கட்டுரைகள் வெளிவருகின்றன… உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால்,  இப்போதுதான் உங்களை நேரில் காணும் வாய்ப்புக் கிட்டியது பெருமகிழ்ச்சி” என்று கூறி அகமகிழ்ந்தார். பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். நிறைய பேசி மகிழ்ந்தோம்

நாங்கள்  மலேசியாவை விட்டுக் கிளம்பிய அன்று நடக்க முடியாமல் நடந்து வந்த அவரின் கையைப் பற்றி அழைத்து படியில் ஏற்றிய நினைவு…. இன்றும் பசுமையான நினைவுகள்….





எனது அடுத்த ஒரு தொகுப்பு நூலுக்கு… “அப்பா” தொடர்பான அவரது கதை ஒன்றைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தேர்வு செய்து வைத்திருந்தேன்….நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த நூலைக் காணாமலேயே அவர் சென்றுவிட்டார் என்பதுதான் மிகுந்த வருத்தம் அளிக்கிறது…

வறுமையில் வாடிய அந்த எழுத்தாளருக்கு உதவி செய்ய வேண்டி  இரண்டு மாதங்களுக்கு முன்பு என் பெயருக்கு வந்த ஒரு கடிதத்தைப் படித்தும்…. நாளை பேசலாம், நாளை உதவி செய்யலாம் என்று என் (பத்திரிகை பணி காரணமாக) நாள்களைத் தள்ளிப் போட்டதன் விளைவு…. இன்று அவர் நம்மிடையே இல்லை….

என் இனிய தோழிகளே… நண்பர்களே… உறவுகளே… காலத்தைத் தள்ளிப் போடாதீர்கள்…. யாருடனாவது பேச வேண்டும் என்றால் இன்றே இப்போதே பேசி மகிழ்ந்து விடுங்கள்…. இன்று இருப்பார் நாளை இல்லை என்று கூறுவார்கள்… ஆனால், இன்று இருப்பார்… இன்றே இல்லை எனும் நிலையாமை உடையதாக ஆனது (2020) இவ்வுலகம்…

எழுத்தாளர் திரு கர்ணன் ஆத்மா சாந்தி அடையட்டும், என்னையும் மன்னிக்கட்டும்…

கண்ணீர் நினைவுகளுடன்

இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!