சரஸ்வதி பூஜை - சிறப்புக் கட்டுரை 25.10.2020 "அவனருளால் அவன் தாள் வணங்கி' இடைமருதூர் கி.மஞ்சுளா

  சரஸ்வதி பூஜை -  சிறப்புக் கட்டுரை 25.10.2020

 

"அவனருளால் அவன் தாள் வணங்கி'

 

- இடைமருதூர் கி.மஞ்சுளா-




ஸ்ரீஆதிசங்கரர் வடமொழியில் இயற்றிய, அம்பிகையின் அழகையும் மாண்பையும் வர்ணித்து எடுத்துரைக்கும் "சௌந்தர்யலஹரி'யின் முதல் பாடலான "சிவசக்தியா யுக்தோ யதிபவதி சக்தப் பிரபவிதும்' என்ற சுலோகத்தைக் கவிஞர் கண்ணதாசன் கீழ்க்காணுமாறு தமிழாக்கம் செய்திருப்பார்.

"சக்தி யுடன் சிவன் சேர்ந்து லகீன்றனன்

சக்தி யின்றிச் சிவன் சற்றும் அசைவனோ?

அத்தன் அரிஅயன் போற்றும் என்தாயுன்னைப்

பக்தி கொண்டேத்த முற்புண்ணியம் வேண்டுமே!'

 

"மங்கள சொரூபனான சிவன் எனும் மகாதேவனும் ஆற்றல் மயமான (பரா)சக்தியுடன் கூடியவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆளுவதற்கு (தோற்றுவிப்பதற்கு) சக்தி உடையவராகிறார். அவ்வாறு உன்னோடு கூடியிருக்காவிட்டால்,  அசையக்கூடத் திறனுள்ளவராக அவர் இருப்பதில்லையன்றோ? ஆகையால், அரி, அரன், பிரமன் ஆகிய மும்மூர்த்திகள் முதலானோராலும் வழிபடப்பெறும் உன்னைப் பூர்வ புண்யம் செய்யாதவன் நமஸ்கரிக்கவோ, துதிக்கவோ எங்ஙனம் தருதியுள்ளவனாவான்?' என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

"சக்தியின்றிச் சிவம் இல்லை; சிவமின்றி சக்தி இல்லை' என்பதை உணர்த்துவதுதான் சைவ சமயத்தின் இறைவனான சிவபெருமானின் "மாதொருபாகன்' திருவுருவும். அந்த சக்தியைத் "திருவருள்' என்கிறது சைவ சித்தாந்தம். காணாபத்யம் (கணபதி), கெüமாரம் (முருகன்), சைவம் (சிவன்),  வைணவம் (விஷ்ணு), செüரவம் (சூரியன்), சாக்தம் (சக்தி) ஆகிய அறுவகையான இந்து சமய வழிபாடுகளுள் மிகச்சிறந்தது சாக்த வழிபாடாகிய சக்தி வழிபாடாகும். சக்தி வழிபாடு உலகில் மிகமிகப் பழைமையான வழிபாடும்கூட.

சைவ சமயம் நுட்பமானது; அதைவிட சித்தாந்த சைவம் அதிநுட்பமானது. இவ்விரண்டிலும் கூறப்படும் இறைக்கோட்பாடுகள் கற்பனையாகவோ, திரித்தோ கூறப்பட்டவை அல்ல; இவை மெய்யியல் மற்றும் அறிவியல் அடிப்படையில், எந்த மதத்தவராலும் மறுத்துரைக்க இயலாத உறுதியான (அறிவியல்) சான்றுகளைக் கொண்டவை. இந்து கடவுள்களுக்குச் சொல்லப்படும் (மனைவி, குடும்பம், பிள்ளைகள், மாமன், மருமகன் உறவுகள் போன்றவை) அனைத்தும் மெய்யியலின் (தத்துவம்) அடிப்படையிலேயே அமைந்தவை.

பன்னிரு திருமுறைகளான தோத்திரப் பாடல்கள் இறைவன் இருப்பைக் காட்டும்; சைவ சித்தாந்த சாத்திரப் பாடல்கள் இறைவன் இருப்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கும்.

சைவ சமயத்தின் இறைக்கோட்பாட்டை ஆழ்ந்து அறிந்து, புரிந்து கொள்ளாதவர்களே,  சிவன், முருகன், விஷ்ணு ஆகியோரைச் சுட்டிக்காட்டி...  இவர்கள் இரண்டு பெண்டாட்டியை உடையவர்கள் என்று கேலி பேசுவார்கள்.

இச்சா சக்தி (லெட்சுமி), கிரியா சக்தி (துர்கா), ஞானசக்தி (சரஸ்வதி) ஆகிய முப்பெருந்தேவிகளை அதிட்டித்து நின்று, சிவனின் ஒரு பாகத்தை மேவிய பராசக்தியாகிய உமையம்மை படைத்தல் (பிரம்மன்), காத்தல் (விஷ்ணு), அழித்தல் (ருத்ரன்) ஆகிய முப்பெருந்தொழில்களுடன், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிகள்களையும் (பஞ்சகிருத்யங்கள்) செய்கிறார்.

மனித உயிர்களை (ஆன்மாவை) இச்சா சக்தி (வெல்த்) ஆசைப்பட வைக்கும், கிரியா சக்தி (பவர்) அந்த ஆசையைத் தொழிற்பட வைக்கும், ஞானசக்தி (இன்டலிஜென்ஸ்) அறியாமையைப் போக்கி, நல்லறிவைப் புகட்டி, நன்னெறிப்படுத்தி, இறைவனை அடையும் வழியைக் காட்டக்கூடிய குருவை கூட்டுவித்து அதன்மூலம் இவ்வுலகில் உள்ளவை அனைத்தும் நிலையில்லாதவை, மாயையின் தோன்றமே என்பதை உணரவைத்து இறைவன் திருவடி நிழலில் சேர்ப்பிக்கும். இதை உணர்த்துவதுதான் சிவபெருமானுக்கு இரு மனைவிகள் (கங்கை, பார்வதி) என்பதும், முருகனுக்கு வள்ளி, தெய்வயானை என்பதும், விஷ்ணுவுக்கு பத்மாவதி, அலர்மேலுமங்கை என்பதும்,  விநாயகருக்கு சித்தி, புத்தி என்பதும். இறைவன் ஞான சக்தி வடிவானவன். அவனுக்கு இச்சா சக்தியும், கிரியா சக்தியும் உறுதுணையாக இருப்பதைத்தான் (இரு மனைவியராக உருவகம்) இந்த முச்சக்திகளும் உணர்த்துகின்றன.

படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் அணுவும் மாறாமல் இயக்கிவரும் பேரருள் சக்தியாகிய அன்னை பராசக்தி மகிழ்வது அக்ஷ்ர வடிவாய் உள்ள ஸ்தோத்திரங்களேயாகும். துர்க்கா (கிரியா), லட்சுமி (இச்சா), சரஸ்வதி (ஞானம்) மூவரும் ஒன்றாகியவள் அன்னை ஆதிபராசக்தி. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் ஒருவருக்கு மிக மிக அவசியம். இதை உணர்த்தும் அவ்வம்பிகையின் மகிமையை யாராலும் விரித்துரைக்க இயலாதது. ஆதிபராசக்தியாகிய அன்னை நாதஸ்வரூபாக விளங்குவதால் அவளை மகிழச் செய்வது "துதி மொழியே' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்னை அட்சர வடிவாகவே இருக்கின்றாள் என்று வேதங்கள், தேவி மகாத்மியம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், தேவி பாகவதம், அபிராமி அந்தாதி முதலிய (சக்தியைப் போற்றும்) நூல்கள் கூறுகின்றன.

கிருதயுகத்தில் 2,000 சுலோகங்களால் துர்வாசரும்; திரேதாயுகத்தில் 1,500 சுலோகங்களால் பரசுராமரும்; துவாபரயுகத்தில் 1,000 சுலோகங்களால் தெüம்யாசார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் அன்னை ஸ்ரீகாமாட்சி தேவியைப் பாடிப்பரவி அருள்பெற்று, காட்சி பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன.  மகாகவி காளிதாசர், மகாகவி பாரதியார், ஆதிசங்கரர் போன்ற பலரும் சக்தி வழிபாடு செய்து முக்தி பெற்றவர்கள்தாம்.

திருக்களிற்றுப்படியார் என்கிற மெய்கண்ட சாத்திரத்தின் முதல் பாடலே அம்மையப்பரைப் (மாதொரு பாகன்) போற்றுகிறது.

"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக

அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர் } அம்மையப்பர்

எல்லா உலகுக்கும் அப்புறத்தார்; இப்புறத்தும்

அல்லார்போல் நிற்பார் அவர்' (தி...1)






 

சிவபெருமான், தன்னில் பிரிவில்லாத உமையம்மையைத் தன்னுள் அடக்கியே என்றும் நிற்கிறான். எனவே, உலகில் உள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் அவனே தாயும் தந்தையுமாவான். சிவபெருமான் தன் அருளாகிய சக்தியுடன் எழுந்தருளி வந்து உயிர்களின் ஆணவமலப் பிணியை நீக்கி, வீடுபேற்றினையும் அருளிச் செய்கிறான்.

மாதொருபாகனாகிய சிவபெருமான், இவ்வாறு உலகங்களோடும், உயிர்களோடும் கலந்து உள்ளான். ஆயினும் அனைத்து உலகங்களுக்கும் உயிர்களுக்கும் அப்பாற்பட்டு அவற்றைக் கடந்தும் இருக்கிறான். அந்நிலையிலும் இவ்வுலகையும் உயிர்களையும் இயக்கும் பொருட்டு இவற்றோடு  கலவாதார்போல் நீக்கமற நிற்கின்றான்.

தன் நிலையில் "சிவம்' ஆக நிற்கும் இறைவன் உயிர்களின் பொருட்டு "அருள்' (சக்தி)ஆகவும் நிற்கிறான். சம்பந்தப் பெருமான், "அம்மே அப்பா'  என்று அழுதருளியது இங்கு நினைவுகூர்தற்கு உரியது. சிவபெருமான் தன் உண்மை நிலையில் சிவம் என நிற்கிறான். உயிர்களின் வழிநிற்கும் தன்மையில் சக்தி (அருளாற்றல்}தாய்}அம்மை) என நிற்கிறான். இதுவே சிவசக்தியின் இயல்பு ஆகும் (பா.80) என்கிறது திருக்களிற்றுப்படியார். சிவசக்தி இயல்பு நாயக}நாயகி இயல்பே ஆகும் என்பதையும் விரித்துரைக்கிறது.

"எல்லாம் சிவன் செயல்' என்பதற்கான விளக்கம்:

சிவனின் அருளாற்றலே (பராசக்தியே) அருட்சக்தி (உமையம்மை)யாவாள். "அநாதியே ஆணவமலத்தைப் பற்றி நமது இச்சை, அறிவு செயல்கள் எந்த இயக்கமும் இன்றி, முடங்கிக் கிடந்ததைக் கண்டு இரக்கப்பட்டு இறைவன் நம்மை பிறப்புக்கு உட்படுத்தியதாலேயே நமது இச்சை, அறிவு, செயல்கள் தொழிற்படல் ஆயின. எனவே, சிவபெருமானின் "அருளாற்றல்' ஆகிய இச்சா சக்தியின் உதவியாலேயே, நமது விருப்பம் தொழிற்படுகிறது. சிவபெருமானின் அறிவாற்றல் ஆகிய ஞானசக்தியின் உதவியாலேயே, நமது அறிவு தொழிற்படுகிறது. சிவபெருமானின் செயலாற்றல் ஆகிய கிரியா சக்தியின் உதவியாலேயே நமது செயல் தொழிற்படுகிறது (தி..படி.பா30). இவற்றுற்றான சக்திகள்தாம் துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும்.

இவ்வாறு இறைவன் உதவியாலேயே இயங்கும் நமது இச்சை, அறிவு செயல்கள் அவனது உதவியாலேயே நடைபெறுகின்றன என்பதை நினைத்துப் பார்க்காமல், நமது திறமையாலேயே எல்லாவற்றையும் நடத்துகிறோம் என்று எண்ணுவது, தன்முனைப்பு (யான், எனது) காரணமாகச் கொள்வது ஆகும். எனவே தன்முனைப்பு நீங்கி, எல்லாம் அவன் செயல் } சிவன் செயல் என்று எண்ணி வாழ்வதே மனிதப் பிறவியின் பயனாகும் என்கிறார் மணவாசங்கடந்தார்.

திருவருளின் துணையின்றி சிவனை அறிய முடியாது:

ஒன்றும் குறியே குறியாதலால் அதனுக்கு

ஒன்றும் குறிஒன்று இலாமையினால் } ஒன்றோடு

உவமிக்கில் ஆவதுவும் தான்இல்லை; ஒவ்வாத்

தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று (தி...10)

 

ஒன்றும் குறி } பொருந்தும் அடையாளம். அதாவது, சிவசக்தி ஆகிய திருவருள். குறிமுதல்} சிவபரம்பொருளை உணர்தற்கு அடையாளமாவது. அதாவது, கதிர்களை அடையாளமாகக் கொண்டு கதிரவனை அறிவது போன்றது. அருட்சக்தியாகிய அருளாற்றலின் துணைக்கொண்டே சிவபெருமானை அறிய முடியும். அவளைத் தவிர அவனை அறிவதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை.

 "அருளது சக்தியாகும் அரன் தனக்கு அருளை இன்றித்

தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சக்தி இல்லை

மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்கு அளிப்பன் கண்கட்கு

இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்'

 

என்கிறது மெய்கண்ட சாத்திரமான சிவஞான சித்தியார். அருளையே தன் சக்தியாகக் கொண்டவன் சிவபெருமான். திருமூலரோ, முதல் பாடலிலே, "ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்' (பா.1) என்கிறார். அருள் என்பது கருணை. இக்கருணை அறக்கருணை, மறக்கருணை என இருவகைப்படும். பக்தர்கள் பொருட்டு கருணையின் வடிவமாகிய அம்மை அறக் கருணையாகவும்  தோன்றுவாள். மறக்கருணையாகவும் காட்சி அளிப்பாள்.

மாணிக்கவாசகரும் சிவபுராணத்தில் "அவனருளாலே அவன் தாள் வணங்கி'' என்றார். ஆனால், இதுகாறும் இந்த வரிக்குத் தவறான பொருளையே பலரும் வழங்கி வருகின்றனர். சைவ சித்தாந்தம் அம்மையை "திருவருள்' (கருணை, தயவு, இரக்கம், தாய்மை) என்கிறது. அம்மையின் (திருவருள்) கடைக்கண் பார்வை ஒரு பக்தன் மேல் பட்டால் மட்டுமே அவன் சிவபெருமானை வணங்கும் தகுதியுடையவன் ஆவான்.  இதைத்தான் மணிவாசகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தாய் முதல் உறவா? தந்தை முதல் உறவா என்பதற்குப் பலரும் தாய்தான் முதல் உறவு என்பர். அதற்கு,  "தாய் சொல்லித்தான் குழந்தை தன் தந்தையை அறிந்து கொள்கிறது' என்று காரணம் கூறுவர். ஆனால், ""அப்பன், நீ அம்மை நீ, ஐயனும் நீ'' என்று அப்பரடிகள் யார் முதல் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். அதாவது, தந்தைதான் முதல் உறவு. தந்தை உள்ளே தர, தாய் அதை வாங்கி வெளியே தருகிறாள். அதனால்தான் அப்பரடிகள் அவ்வாறு பாடினார். குழந்தைக்கு முதலில் பதிய வேண்டியது தந்தையின் அறிவு; அடுத்து தாயின் பாசம்.

எவ்வாறு தன் குழந்தைக்குத் தகப்பனை தாய் அடையாளம் காட்டுவாளோ அதேபோல உமையம்மையாகிய திருவருள் கூட்டுவித்தால்மட்டுமே  நாம் சிவனை (இறைவனை) வணங்கும் தகுதியுடையவராவோம்;  உணர்ந்து போற்றி, திருவடிப்பேறும் அடைய முடியும். "திருவருள்' துணையின்றி ஆன்மா சிவத்தை உணராது  என்பதையும், சைவத்தின் இறைக் கோட்பாட்டையும் தெள்ளத் தெளிவாக மெய்க்கண்ட சாத்திரங்கள் விரித்துரைக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, புதிது புதிதாக விளக்கங்கள் தந்து வருகிறோம்.

ஆதலால், மனிதப் பிறவி எடுத்தோர் மேற்கொள்ள வேண்டிய  முதன்மையான வழிபாடு சக்தி வழிபாடேயாகும்! அந்த வழிபாட்டின் மூலமே நாம் பரம்பொருள் உணர முடியும்.  அந்த வழிபாட்டை ஆண்டுக்கு ஒரு முறையாவது மேற்கொண்டு அவள் அருளைப் பெறவேண்டும் என்பதற்கானதுதான் அம்பிகையைப் போற்றும் நவராத்திரி விழா.









 மாணிக்கவாசகர் சக்தி வழிபாட்டையே பெரிதும் போற்றியுள்ளார். தொடங்கத்திலேயே (சிவபுராணம்) "அவன் அருளால் அவன் தாள் வணங்கி'' என்று தொடங்கி, நடுவில்  "அம்மையே அப்பா ஒப்பிலாமணியே'' என்றும், இறுதியில்  "அச்சோ பத்து' பதிகத்தில் "அம்மை எனக்கருளியவாறு யார்பெறுவார் அச்சோவே'' என்று அம்மையின் பெருங்கருணையைப் போற்றி திருவாசகத்தை நிறைவு செய்துள்ளார்.  மணிவாசகர் தாம் கண்டு களித்த மாதொரு பாகன் வடிவத்தை 70 இடங்களுக்கும் மேல் பதிவு செய்துள்ளார். அம்மையின் திருவருளே அவரை வழிநடத்தியது என்பதை மணிவாசகம் விரித்துரைக்கிறது. அதேபோல திருக்கோவையாரில், தலைவனை (ஆன்மா), தலைவியுடன் (இறைவன்) கூட்டுவிக்கும் (உடன்போக்கு செய்விக்கும்) தோழியாக (திருவருளாக) உருவகப்படுத்தப்படுகிறாள். பன்னிரு திருமுறைகளும் அம்மையப்பர் வடிவத்தைப் போற்றுகின்றன. இவையெல்லாம் மெய்யியல் (தத்துவம்) உண்மைகள்.  அத்தகைய திருவருள் வழி ஆன்மாக்கள் அடங்கி நிற்க வேண்டும் என்பதை மெய்கண்ட சாத்திரமான திருவுந்தியார்,

 பொற்கொழுக்கொண்டு வரகுக்கு உழுவதுஎன்?

அக்கொழு நீ அறிந்து உந்தீபற

அறிந்துஅறி யாவண்ணம் உந்தீபற (திருவு.பா.38)

 என்கிறது. பொன்னால் செய்த கலப்பையைக் கொண்டு யாரும் நிலத்தை உழமாட்டார்கள். அதனால், பொன்தான் தேய்வடையும். நிலமும் பண்பாடாது. வரகு, பொன்னைவிட மதிப்பு குறைந்தது. எனவே வரகு பயிரிடுவதற்காகப் பொன்னால் கலப்பை செய்து உழுவது அறிவற்ற செயலாகும்பொற்கலப்பை' திருவருளுக்கு உவமை. "வரகுக்கு உழுவது' - திருவருளின் பெருமை அறியாமல் கிடைத்த மனிதப் பிறவியை வீணாக்குவதற்கு உவமை. எனவே, திருவருளின் பெருமை அறிந்து, தன்முனைப்பு அற்று, திருவருளின் வழி அடங்கி நின்று ஒழுகுதல் வேண்டும். இங்கு, "அறிந்து' என்பது திருவருளின் பெருமையை உணர்ந்து என்பதைக் குறிக்கும். "அறியாவண்ணம்' என்பது, உயிரறிவு முனைந்துத் தோன்றான்றாதபடி திருவருளின் வழி அடங்கி நிற்பதைக் குறிக்கும் என்கிறது திருக்களிற்றுப்படியார் (பா.84).

 மூவகைச் சக்திகளையும் ஒருங்கே உடைய திருவருளின் (பராசக்தியின்) துணையின்றி வேறு எந்த வகையாலும் சிவானுபவம் ஆன்மாவுக்குக் கிட்டாது என்கிறது திருவுந்தியார் (பா.30). எனவே ஆன்மா துறவற நெறியில் நின்றாலும், இல்லற நெறியில் நின்றாலும் சரி, எந்நிலையில் நின்றாலும் திருவருள் துணைக்கொண்டு நின்றாலன்றி சிவபெருமானைக் கூடி இன்புறமாட்டா (களிறு}63,64).

குருவருளாலே திருவருளைப் பெற முடியும். அந்தத் திருவருளின் உதவியாலேயே சிவபெருமானைக் கூடி நிற்க முடியும் (உந்தி பா.14). இதையேதான் அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் விதந்தோதுகிறார். அவளது கடைக்கண் பார்வையே நம்மைத் கடைத்தேற்றும் என்கிறார்.

"சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்

அவன் எழுத்து அஞ்சின் அடைவாம்'  (.வி.41)

 

என்கிற உண்மை விளக்கம். சிவன்} சி, அருள்}வா, ஆவி}, திரோதம் }, மலம்} (சி}ஈசன்}சிவன்; வா}அருள்}அருள், }ஆவி}உயிர், }திரோதம் }மறைப்பாற்றல், }மலம்}ஆணவம்)  ஐந்தெழுத்தில் "வா' என்பது அருளாகும். அஞ்செழுத்தில் அம்பலவன் திருநடனம் செய்யும் முறையை உண்மை விளக்கம் (பா.32,33, 34) எடுத்துரைக்கிறது.

சி-          படைத்தல்-உடுக்கை ஏந்திய திருக்கை

-         அருளல் - தூக்கிய திருவடியைச் சுட்டும் வீசிய திருக்கை

-         காத்தல் - அமைந்த திருக்கை

-          அழித்தல் - அனல் ஏந்திய திருக்கை

-          மறைத்தல் - ஊன்றிய திருவடி

 

"ஓம்' எனும் பிரணவமே, அம்பலவாணனின் வடிவத்தைச் சுற்றி அமைந்துள்ள திருவாசி (பா.34, ஓங்காரமே நல் திருவாசி) ஆகும். அப்பிரணவத்தில் பொருந்தி அதனைவிட்டு நீங்காத அஞ்செழுத்தே, அதன் உள்நிறைந்த ஒளியாகும் என்கிறது உண்மை விளக்கம்.

அன்போடு உருகி அகம் குழைவோருக்கு அன்றிச் சிவம் கிட்டாது. எனவே சாதன நிலையில் அன்பே முதற்கண் வேண்டப்படுவதாகும். இறைவனிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதைத் திருமூலர்,

புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்புபோல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லார்க்கு

உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அது இதுவாமே (283)

 

என்கிறார். அதாவது, உலகியல் பொருள்களில் பற்றுக்கொண்டு இருப்பதைவிடக் கூடுதலாக இறைவனிடம் பற்று வைக்க வேண்டும். எப்படி வைப்பது? புணர்ச்சிக் காலத்தில் மகளிர் மேல் பற்றுக்கொண்டு வைத்த அன்புபோல, இறைவனிடத்தில் உணர்ச்சி வயப்பட்டு ஒன்றாய் ஒடுங்கி அன்பு செலுத்த வேண்டும் என்கிறார் திருமூலர்.






"உடையாள் உன்றன் நடுவிருக்கும்

               உடையாள் நடுவுள் நீ இருத்தி

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால்

அடியேன் உன்அடியார் நடுவுள்

 இருக்கும் அருளைப் புரியாய்

பொன்னம்பலத்து என் முடியா முதலே

என் கருத்து முடியும்வண்ணம் முன்னின்றே' 

 

என்ற மணிவாசகத்தை மனத்தில் போற்றி இந்நன்னாளில் உமையம்மாகிய திருவருளைப் போற்றிப் புகழ்வோம்!

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!