எல்லோரும் ருத்ராட்சம் அணியலாம்

ருத்ராட்சம் தோன்றிய விதம்

சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே...

குளித்தவர்கள்தான் சோப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா.. ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து, நோயில் இருப்பவனுக்குக் கிடையாது என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா... அதுபோலத்தான் சுத்தபத்தமாக இருப்பவர்கள் ருத்ராட்சம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.

ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே, உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். இது ஒருபுறமிருந்தாலும், எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும்.

அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா...

ஆமாம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உண்ணும் போதும் எல்லாக் காலத்திலும் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக உபநிஷதம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர், ருத்ராட்சம் அணிவதால் (அதிலும் குறிப்பாக நான்கு முகம் கொண்டது) அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். மூன்று முகம் கொண்ட ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவருடைய கணவருக்கும் க்ஷேமம் ஏற்படுவது உறுதி.

பெண்கள் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்கிறார்களே....


பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை "கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி" என்று விவரிக்கிறது அருணாசலபுராணம். பாடல் எண்.330.

திருவானைக்காவில் இருக்கும் அகிலாண்டநாயகி "இழியும் பழி பாதகம் முழுதும் இரிக்கும் நீறும், கண்மணியும் மொழியும் பனுவல் விதியாற்றான் முழுதும் திருமேனியில் அணிந்தாள்"  என்கிறது அவ்வூர் தலபுராணம். (ஆராதனைப் படலம், பாடல் எண்.68). பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்சத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசக்திக்கு ஏது பழியும் பாவமும்!  நமக்கு வழிகாட்டுவதற்காகத் தானே அம்பிகை ருத்ராட்சம் அணிந்து கொள்கிறாள். எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணிய வேண்டும். மேலும், சிவமகா புராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார். (ஸ்லோகம். ஸர்வாஸ்ரமாணாம் வர்ணானாம் ஸ்திரீ...) இதுவே மாபெரும் ஆதரமல்லா..


ஆனால், எல்லா நாட்களிலும் பெண்களால் ருத்ராட்சம் அணிய இயலாதே....

பெண்கள் தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கிறார்கள். அதை எல்லா நாட்களிலும்தானே அணிந்திருக்கிறார்கள்...

சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே... இவற்றைப் போல ருத்ராட்சத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிந்திருக்கலாம்.


வேதங்களிலும் புராணங்களி்லும் ருத்ராட்சம் பற்றி ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா...

அதிலென்ன சந்தேகம். வேதமாகிய ஜாபாலோப உபநிஷதத்திலும், ஸ்காந்தம், தேவி பாகவதம் போன்றவற்றிலும் ருத்ராட்சத்தின் பெருமைகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, விஷயம் தெரிந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர், ருத்ராட்சம் அணிவது பற்றி பயமுறுத்தினாலும் நாம் அதை பொருட்படுத்தக் கூடாது. ருத்ராட்சம் அணிபவரை சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.


நல்ல ருத்ராட்சம் எப்படி இருக்கும்...

நல்ல ருத்ராட்சம் என்றால் அது தண்ணீரில் மிதக்காது. இரண்டு நாணயங்களுக்கு இடையே வைத்தால் சுழலும் என்றெல்லாம் சிலர் கதை கட்டிவிடுவதுண்டு. இதில் எள்ளளவும் உண்மை இல்லை. போலிகளைக் கண்டு ஏமாறக்கூடாது.  பொதுவாக ஐந்து மற்றும் ஆறுமுக ருத்ராட்சங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.  விலை மலிவு என்பதால் இதில் போலிகள் வருவதில்லை. எனவே தைரியமாக இந்தகைய ருத்ராட்சங்களை வாங்கி அணியலாம். முடிந்தவர் 108 சிறு ருத்ராட்சங்கள் கோக்கப்பட்ட மாலையை வாங்கி அணியலாம்.

ருத்ராட்சத்தை அணிந்த பின் என்ன செய்ய வேண்டும்...

ஐந்து முக ருத்ராட்சத்தை பட்டுநூல் கயிற்றிலோ, வெள்ளியிலோ, தங்கத்திலோ கோர்த்து அணிந்து கொண்டு தினசரி 108 முறையாவது ஓம் நமசிவாய என்று சொல்லிப் பாருங்கள். அதன் அற்புத ஆற்றலை நீங்களே உணருவீர்கள். நீராடும்போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையி்ல் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

நன்றி: மருதவாணன்

 மருதவாணன் என்ற பெயரில் எழுதிவந்தவர், தினமணியின் தமிழன் எக்ஸ்பிரஸ், சினிமா எக்ஸ்பிரஸின் முன்னாள் ஆசிரியர் அமரர் ஆர். சிவக்குமார். இவர் மிகச்சிறந்த சிவபக்தர், சொற்பொழிவாளர்.  அவர் ருத்ராட்சம் பற்றி மேலும் பல தகவல்களை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு பலருக்கும் விநியோகம் செய்த புண்ணிய சீலர். அதில் தாங்கள் படித்தது அதன் சுருக்கம் மட்டுமே... படியுங்கள்.... பலருக்கும் சொல்லுங்கள்....

Comments

  1. ஓம் நம சிவாய
    நன்றாக இருந்தது தங்கள் கட்டுரை. சிவா!
    நானும் ருத்ராக்‌ஷம் ப்ற்றி பல அறிந்து இருக்கிறேன்.
    ஆன்மீகப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ருத்ராக்‌ஷம் அணிந்தால் உள்ளத்துக்கும், உடலுக்கும் நல்லது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.
    பெண்கள் எத்தனை முக ருத்ராக்‌ஷம் அணிய வேண்டும்? சிவா

    ReplyDelete
  2. ஐந்து முகம் எல்லோரும் அணியலாம்.

    ReplyDelete
  3. அசைவம் சாப்பிடும் போது மட்டும் கழற்றி விட்டு, பின் குளித்து விட்டு அணிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!