புலவர் பதுமனாரின்

பெருமதிப்பிற்குரிய, பேரன்பிற்குரிய புலவர் பதுமானார் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் (இன்று-7.11.2014) வந்திருந்தது. அவர் கையால் நன்றி மாலைகளைச் சூட்டிக்கொண்டதில் பெருமகிழ்ச்சியில் திளைக்கிறேன். இப்படிப்பட்ட பெரியோரின் ஆசிர்வாதங்கள்தான் என்னையும் என் எழுத்துத் திறமையையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன். இது என் தமிழன்னைக்கும் நான் கற்ற சமயக் கல்விக்கும் கிடைத்த பரிசு. அதற்கு வழி அமைத்துக் கொடுத்த தினமணிக்கு என் பணிவான வணக்கங்கள் பல.

புலவர் பதுமனார் அவர்கள் எழுதிய கடிதத்தைப் படியுங்கள். எழுத்துக்களால் செதுக்கிச் செதுக்கி படிப்பவரை உருக வைத்துள்ளார். அவருக்கு என் பணிவான வணக்கங்கள் - நன்றிகள். புலவர் பதுமனாரின் கடிதத்தில் உள்ள முத்துக்கள் இவை பெறுநர்: இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள் பேரன்புடையீர்… வணக்கம். “அபாயம் வராமல் இருக்க உபாயம்” என்னும் கட்டுரையை 31.10.2014 அன்று வெளியான வெள்ளிமணியில் கண்டேன். உவகை கொண்டேன். கட்டுரையைக் கவினுற வழங்கிய கலைபயில் செல்வமாகிய தாங்கள் (இடைமருதூர் கி.மஞ்சுளா) தினமணிக்கு வாய்த்த திருமாமணியென்றே போற்றி மகிழ்கிறேன்.

“சொல்லின் என்ன இருக்கிறது” என்று ஏகடியம் பேசுவார்தம் மடமையினைத் தீய்த்துப்போடும் தங்கள் கட்டுரையைக் கண்டு மகிழ்ந்தேன். “டேய் மடையா” என்று அழைத்தால் பத்துப் பேர் திரும்பிப் பார்த்திடும் தெருக்கள் நிறைந்த நாட்டில், “நமசிவாய” என்னும் ஆற்றல் வாய்ந்த சொல்லை எடுத்துக்காட்டி, உயிர் வெளிச்சம் பரவச் செய்த தங்களைச் சைவத் திருவிளக்கு என்றே மக்கள் உச்சிமேல் வைத்து மெச்சுவர். துன்பம் வரும்போது மட்டுமே திருக்கோயிலுக்குத் தொழுகை புரியவரும் சடங்கு வழிபட்ட சாமானியர்கலளுக்கும் – கடையர்களுக்கும் கடைத்தேற்றம் நல்லகும் ஒப்பற்ற சொல்லைக் கண்டு, விண்டு உரைத்த வித்தகர்களை ஞானியர் என்றும், நாயன்மார் என்றும், அடியவர் என்றும், அருளாளர் என்றும் அழைத்தாலும், அவர்கள் எல்லாம் “தாம் இன்புற்றதை உலகுக்கு உரக்கச் சொல்லும் உத்தமர்களே” “எந்நாட்டவர் தொழும் கடவுளையும் தென்னாடுடைய சிவனே” என்று பொதுமைப்படுத்திப் பார்க்கும் மணிவாசகரும், திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரரும் கண்டும், கொண்டும் உரைத்த “நமசிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரமே “அபாயம் வராமல் காக்கும் உபாயம்” என நிறுவிக் காட்டும் கட்டுரை ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைப் படித்தவர் எல்லாம் பாராட்டி மகிழ்வர்.

“நானேயோ தவம் செய்தேன், சிவாய நம எனப் பெற்றேன்” என்று மாணிக்கவாசகப் பெருமானே வியந்து போற்றுவார் என்றால், அச்சொல்லின் மந்திரத் தன்மையை என்னென்பது… ஆனால், “நமசிவாய” என்பதா, “சிவாய நம” என்பதா என்னும் குழப்பம் விளைவது இயல்பே. சைவ சித்தாந்தத்தில் ஆழங்கால்பட்ட கட்டுரை ஆசிரியர், அருள்நந்தி சிவம் அவர்களின் கைவிளக்கு ஏந்திக் காட்டிய போதுதான் “சி முதலா ஓதின் அருள் நாடும்” என எல்லாரும் விளக்கம் பெறுகிறோம். இருளைச் சேர்க்கும் நல்வினை தீவினைப் பயன்களை நாம் அடையுமாறு நாமே செய்தனவே “விதி” ஆகும். உலகத்தில் வேறு எவரும் எண்ணிப் பார்க்காத “ஊட்டுவான்-பதி” என்னும் மெய்ம்மையைக் கண்டுரைத்த ஞானியர்தம் ஆற்றல் பெரிதினும் பெரிது. விதியின் பயனைப் பதி, பசுக்களுக்கு ஊட்டும்போது, அதன் வலிமையை உயிர்கள் தாங்கா. அந்த வலியில் இருந்து – அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமானால், “சிவாய நம” என்னும் மந்திரத்தை அன்போடும் ஆர்வத்தோடும் சிந்திக்கும் மதியை நமக்குக் காட்டி மகிழ்கிறார் ஔவை பிராட்டியார். இதனை “வெள்ளிமணி” சிறப்பாக உணர்த்தி உள்ளது. இதைப் படிப்போரும் பக்கம் நின்று கேட்போரும் எளிதில் உணருமாறு பந்தி வைத்த கட்டுரை ஆசிரியரின் கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் அளக்கலாகா அறிவுப் பரப்பும் கண்டு நெகிழ்கிறோம். இதனைப் படித்து, நன்றியோடு போற்றி, “விதியை மதியால் வெல்வதும்” “விதியின் கூர்மையை மழுங்க வைத்துப் பேரின்பம் பெறுவதும்” உயிரோடு உலவும் மனிதர்தம் கடமை ஆகும். இவ்வண்ணம் மறை முதலாகிய “சிவாய நம” என்னும் சீரிய மந்திரத்தை நெஞ்சில் நிறுத்தும் நெறிகாட்டிய கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி மாலை பல சூட்டி மகிழ்கிறோம். அன்புடன் புலவர் பதுமனார் புலவர் பெருமணி – தமிழ்நிதி நிறுவனர் – காப்பாளர் குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம், தெளிதமிழ் ஆர்வலர் அமைப்பு, குடியேற்றம். தொடர்புக்கு: 04171-221703 9443490703 அபாயம் வராமல் இருக்க உபாயம் –(31.10.2014-) கட்டுரையைப் படிக்க dinamani.com (e papper)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!