சோதனை மேல் சோதனை ஏன்.....

சோதனை மேல் சோதனை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், திரு விக்கிரமனின் குடும்பத்தார், குறிப்பாக அவர் மனைவியார் வாழ்க்கையில் அதைத் தொடர்ந்து கண்டு மிகவும் வருத்தத்திற்கு ஆளானேன்.

திரு விக்கிரமன் அவர்கள் காலமானதும், அவருக்குப் பலரும்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தமுடியாமல்  போனதும் காலம் செய்த சூழ்ச்சி என்றுதான் கூறவேண்டும்.  எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் இறப்பில் கூட திரு விக்கிரமன் அவர்கள் கொடுத்து (இறைவனிடம்) வைக்கவில்லை போலும். சென்னை வெள்ளப் பெருக்கின்போது அவரது பூத உடலை அடக்கம் செய்வதிலும் அவரது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டிருக்கின்றனர் என்பதைப் பத்திரிகையில் படித்துத் தெரிந்து கொண்டபோது வருத்தம் பல மடங்கானது.

 கணவர் இறந்து இருபது  நாள்கள் கூட ஆகாத நிலையில்  மூத்த மகன் (திரு.விக்கிரமன் அவர்களின் மூத்த மகன்)  இறந்தது கண்டு மனம் பதறித்தான் போனது. அந்தத் தாய்க்கு எப்படி ஆறுதல் கூறுவது.... எதைத் சொல்லி அவரைத் தேற்றுவது... கணவரையும் மகனையும் இழந்த அந்தத் தாயின் மனம் சாந்திபெற ஆண்டவன்தான் ஏதாவது செய்யவேண்டும்.  

 அவர் கையால் இரண்டு மூன்று முறை ஃபில்ட்டர் காஃபி , அவர் அன்புடன் கொடுக்கக் குடித்திருக்கிறேனே... அந்த அன்பான நினைவுகளை எப்படி மறப்பது... எப்படி அழிப்பது.... ஏதோ ஜென்மாந்திர தொடர்பு போல, வானவில் போல  எல்லாம் ஒரு நொடியில் வந்து,  மறைந்து போய்விட்டனவே....

நான் ஏற்கெனவே திரு.விக்கிரமனுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்த நினைவின் நிழற்படங்கள் இவை. ஆனால் நிஜங்களின் இன்ப நினைவுகள்.







இவை பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மேலே குறிப்பிட்ட நிறுவனத்தின் பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக என்னை திரு.விக்கிரமன் அவர்கள் இரு ஆண்டுகள் தொடர்ந்து மேடை ஏற்றி அழகுபார்த்தார். அதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. என்றாலும் என் தகுதி அறிந்து என்னை மாணிக்கவாசகர் குறிப்பிடுவது போல "நாய் சிவிகை ஏற்றிவைத்தாய்" என்பதற்கு இணங்க, திரு. ஔவை நடராசன் , தங்க. சங்கர பாண்டியன்  போன்ற சான்றோர் முன்னிலையில் என்னை மேடையில் அரங்கேற்றிய அந்த நாள்களை மறக்க முடியாது. திரு.விக்கிரமன் அவர்கள் திருவிக்கிரமன் (ஓங்கி உலகளந்த பெருமாள்)  போல மிக மிக உயர்ந்துவிட்டார் என் மனத்திலும் என் எண்ணத்திலும், என் வாழ்க்கையிலும்

இச்சிறியேனையும் பெரியோர் அவையில் கூட்டிவைத்த திரு. விக்கிரமன் அவர்கள் பண்புக்கும் கருணைக்கும் தலைவணங்குகிறேன். அவர் குடும்பத்தால் கூடிய விரைவில்  மன அமைதிபெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

-இடைமருதூர் கி.மஞ்சுளா



Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!