பாதி பாடலுக்குப் பரிசு!

பாதி பாடலுக்குப் பரிசு!

÷திருப்புவனம் எனப்படும் திருப்பூவண நகரத்தில் பிறந்தவள் பொன்னணையாள். இவர் ஒரு தாசி. திருப்பூவணத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பூவணநாதர் மீது அளப்பரிய பக்தியும், அன்பும் கொண்டு அவரை வழிபட்டு வந்த சிறந்த சிவபக்தை இவள்! குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையைத் தந்தியினிடத்தில் எழச்செய்யும் யாழுக்கு இசையப் பாடும் திறம்படைத்தவள்; செந்தமிழ்ப் பாக்களை இயற்றுவதிலும் புலமை பெற்றவள். ஆடற்கலையிலும் தேர்ந்தவள். ÷கடவுளுக்கும், கடவுளது மெய்யடியார்களுக்கும் தொண்டு செய்வதிலும் சிறந்து விளங்கியவள். சிவனடியார்களைப் பற்பல மலர்களால் அருச்சித்து, அவர்களுக்குச் சுவையான அமுது செய்வித்து, எஞ்சியதை உண்பதையே  வழக்கமாக் கொண்டவள். இவள் இவ்வாறு சிறந்து விளங்கியதை,

"ஆய மாதர்பேர் பொன்னணை யாளென்ப வவள்தன்
நேய வாயமோ டிரவிருள் நீங்குமு னெழுந்து
தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி
நாய னாடி யருச்சினை நியமமு நடத்தி
திருத்த பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்த மாடிவந் தடியாரைப் பொருளென நினையுங்
கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்
அருந்தி யெஞ்சிய தருந்துவாள் அஃதவள் நியமம்'


என்கிறது திருவிளையாடற் புராணம்.
÷இப்பொன்னணையாளுக்காக சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்தியதை மாணிக்கவாசகர்,

"பூவணம் அதனில் பொலிந்திருந் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்'
(கீ.தி.50-51)

எனக் கீர்த்தித் திருவகவலில் பாடிப் பொன்னணையாளுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பொன்னணையாள், தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் சிவனடியார் பூசைக்கே செலவிட்டுவிட்டதால், நீண்ட நாள்களாக சிவபெருமானுக்கு பொன்னால் ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ எனக் கவலை கொண்டாள். அப்போது திருப்பூவண நாதர் சித்தர் வடிவங்கொண்டு அவள் இல்லத்தில் எழுந்தருளி, அவளின் வாட்டத்தைப் போக்கி, ரசவாதம் செய்வித்தருளி, அப்பக்தைக்கு தன் பொன்மேனியைக் காட்டியருளிய திருவிளையாடலையே (இவ்வரலாற்றை திருவிளையாடல் புராணத்தில் விரிவாகக் காண்க) மணிவாசகர் சுருக்கமாகக் கூறியருளியுள்ளார். அத்தகைய பெருமைக்கும் புகழுக்கும் உரியவள் பொன்னணையாள்.
÷ஒரு நாள் பொன்னûணையாள் வீட்டில் நள்ளிர நேரத்தில் கள்வர்கள் கன்னம் வைத்தார்கள். பொன்னணையாள் தினமும் சிவன் கோயில் சென்று வழிபட்டு இல்லம் வந்து, சிவபெருமான் மீது பக்திப் பனுவல்கள் பாடிவிட்டுத்தான் உறங்குவது வழக்கம். அன்றிறவும் அவள் வழக்கம் போல சிவன் கோயிலுக்குச் சென்று இறைவன் திருமுன் ஆடல் பாடல் முதலிய தொண்டுகள் செய்துவிட்டு, நள்ளிரவுக்குப் பின் தனது வீட்டுக்கு வந்தாள். என்றைக்கும் போல் அன்றிரவும் திருப்புவணத்தீசர் மீது தோத்திரமாகப் பனுவல் பாடித் தியானிக்க நினைத்து,

"தலையிலிரந் துண்பார் தன்னுடலிற் பாதி
மலையின் மலைமகளுக் கீவர்.....


"மலையின் மலைமகளுக்கு கீவர்' என்று பாடிக்கொண்டே, வெண்பாவின் தனிச் சீரும், பின் இரண்டடியும் பாட வராமல், முன்சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது திருடர்களோடு வந்திருந்த தலைமலைக்கண்ட தேவர் என்ற புலவர், அதைக்கேட்டு சகிக்க மாட்டாதவராய், "உலையின்
இருப்புவன மேனியனா ரென்றாலோ'

என்று அடியெடுத்து முடிப்பதற்குள் பொன்னனையாள், ... ... ஆமாம், ஆமாம், "திருப்புவனத் தீசர் திறம்' என்று பாடி முடித்தாள். இருவரும் பாடிக்கொண்டதைக் கேட்ட கள்வர்களெல்லாம், "வெள்ளோலை கிறுக்குபவனை உடன் கூட்டிக்கொண்டு வந்ததாலல்லவா இப்படியாகிவிட்டது' என்று நினைத்து, உயிர் தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.
÷இந்த நள்ளிரவில் நமது பாடலுக்குத் தகுதியான பொருள் அமைத்துப் பாடலைப் பாடி நிறைவு செய்தவர் நமது திருப்பூவண நாதரேயன்றி சாமானிய மனிதரல்லர் என்று பொன்னணையாள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, ஓசை வந்த திசையை நோக்கி எழுந்து ஓடிச்சென்று, அங்கிருந்தவரைப் பிடித்து, விளக்கேற்றிப் பார்த்து, ""ஐயா, நீர் யார்? எந்த ஊர்? எங்கே வந்தீர்?'' என்று அன்போடு வினவினாள். அப்புலவர், ""அம்மணி! நான் உன் வீட்டில் கன்னமிட வந்த திருடன்"' என்றார்.
÷பொன்னணையாள், ""ஐயா! தாங்கள் கள்வருமல்லர், சாதாரண மனிதருமல்லர். திருப்பூவண நாதரே என் மீது கருணைகூர்ந்து மனித வடிவாக வந்த தெய்வப் புலவர் நீங்கள்! என் வீட்டிலுள்ள பொருள்களில் எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லுங்கள்'' என்று கூறியதுடன், பத்து நாள்கள் அவருக்கு உண்டி கொடுத்து, உபசரித்து, பிறகு தங்கக் காசுகள், ஆபரணங்கள் முதலியவற்றை மூட்டையாகக் கட்டி ஒரு ஆள் தலையில் வைத்து, பாதி பாடலுக்காகப் பரிசுகள் பலவற்றையும் கொடுத்து அனுப்பினாள்.
÷கூடவே, ""தாங்கள் உள்ள வரையில், தங்கள் குடும்பச் செலவுக்கு வேண்டிய பொருள்களை ஆண்டுதோறும் நான் அனுப்பி வைக்கிறேன். அதற்குப் பதிலாகத் தாங்கள் வசிக்கும் மருதூர் சுவாமியின் மீது ஓர் அந்தாதி பாடியருள வேண்டும்'' என்றாள்.
÷புலவரும் அவ்வாறே பாடிக்கொடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். சிறிது நாள்களுக்குப் பிறகு, புலவர் கூறியவாறே மருதூர் அந்தாதியைப் பாடியும் கொடுத்தார். இப்போது கிடைத்துள்ள "மருதூர் அந்தாதி'தான் சிவபக்தை பொன்னணையாள் மூலம் நமக்குக் கிடைத்த பொன்னான இலக்கியமாகும்! இப்பொழுது முழுப் பாடலையும் படித்து சுவைப்போம்!

"தலையிலிரந் துண்பார் தன்னுடலிற் பாதி
மலையின் மலைமகளுக் கீவர் - உலையின்
இருப்பு வனமேனி யனாரென் றாலோ
திருப்புவனத் தீசர் திறம்'


-இடைமருதூர் கி.மஞ்சுளா


தினமணி - தமிழ்மணி - 15.5.2016



Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!