யாருக்கு வாக்கு?


யாருக்கு வாக்கு?

by - இடைமருதூர் கி.மஞ்சுளா


÷கடந்த இரண்டு மாத காலமாகத் தமிழ்நாட்டைச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்கு வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. இன்று தேர்தல்.
÷இன்று எங்கும், எதிலும் சுயநலமே தலைதூக்கி நிற்கிறது. அதுவே வெற்றியும் பெறுகிறது! ஆட்சி பீடத்தில் ஏறிவிட்டால் தான், தன் குடும்பம், தன் தலைமுறைகள் மட்டும் வாழ்ந்தால் போதும், மக்கள் எப்படிப்போனால் என்ன? என்ற எண்ணமே விஞ்சி நிற்கிறது. என்னதான் ஆளுங்கட்சியைப் பற்றி எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியைப் பற்றி ஆளுங்கட்சியும் குற்றப்பத்திரிகையை நாள்தோறும் வாசித்துக்கொண்டே இருந்தாலும், தங்கள் வாக்குறுதிகளை வாரி வழங்குவதில் மட்டும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்! வாரி வழங்கும் வாக்குறுதிகள், மக்களின் நிரந்தரமானப் பிரச்னைக்குத் தீர்வாக இல்லை. எல்லாம் தற்காலிகமானவையே!

÷தமிழ் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய நிரந்தரமானப் பிரச்னைகளைப் பட்டியலிட்டால் அவை எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டில் "தமிழ்' ஆட்சி மொழியாக இல்லை; "தமிழ்'க் கல்வி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை உள்ளிட்ட விஷயங்களில் இருக்கட்டும். அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் சின்னச் சின்னப் பிரச்னைகள் குறித்துக்கூட யாருக்கும் அக்கறையில்லை.
÷தூய்ûமையான, மேடு பள்ளங்கள் இல்லாத சீரான சாலைகள் இல்லை; கண்ட இடங்களில் குப்பைகளைப் போடுவதையும், வெற்றிலைப் பாக்கு எச்சிலைச் துப்புவதையும் தடுக்க ஏற்பாடு செய்யப்படவில்லை; சுரங்க நடைப் பாதைகளில் நள்ளிரவில் நடக்கும் தகாத செயல்களைக் கண்டித்தும் - தண்டித்தும் திருத்த யாரும் முன்வரவில்லை; சாலைகளையும், தெருக்களையும் அடையாளம் காட்டும் பெயர்ப் பலகைகளில் அரசியல் கட்சி தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், இறந்தவருக்கான கண்ணீர் அஞ்சலி துண்டுப் பிரசுரங்கள், திரைப்படப் போஸ்டர்கள், ரியல் எஸ்டேட் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை ஒட்டி, தெருக்களின் பெயரையே மறைத்து வைப்போரைத் தடுத்து நிறுத்த வழிவகை செய்யவில்லை;
÷நியாயவிலைக் கடைகளில் நடக்கும் கட்டுக்கடங்காத ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை; அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவற்றைத் தடுத்துநிறுத்த முடியவில்லை; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர முடியவில்லை; ஆட்டோக்களின் கட்டணங்களைக் குறைத்தும், அது செயல்படுத்தாத ஆட்டோகளைக் கடுமையாகத் தண்டிக்க முடியவில்லை; தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. அதிகரித்து வரும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
÷மணல் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை; தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகள் ஆற்றில் சேர்வதைத் தடுக்க வழிவகை செய்யவில்லை; வரண்டு கிடக்கும் அûனைத்து ஆறுகளிலும் தண்ணீர் விடுவதற்கான எந்தவிதமான ஏற்பாடும் செய்யப்படவில்லை; ஏரிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; போஸ்டர் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை; வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களைத் "தன்மானம்' இழக்கச் செய்யும் இழி செயலுக்கும் ஒரு முடிவுகட்ட முடியவில்லை.

÷ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்களின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி நம்பியே ஐந்து ஆண்டுகால வாழ்க்கையைப் பிரச்னைகளோடு கழிப்பவர்கள்தாம்  தமிழ்நாட்டு மக்கள்.

÷""வாக்குக் கொடுத்தால் காப்பாற்றுங்கள். எத்தகைய துன்பம் வந்தாலும் வாக்குறுதியை மீறி நடக்காதீர்கள்'' என்றார் நபிகள் நாயகம்(ஸல்). இது இறைத் தூதர் வாக்கு. இறையை நம்புகிறவர்களே இப்பொழுதெல்லாம் இறைவாக்கையும் இறைத்தூதர் வாக்கையும் மதிக்காதபோது, இறைநம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! இவர்கள் வாரி வழங்கும் வாக்குறுதிகளை எப்படி நம்புவது?

÷வாக்காளப் பெருமக்களே! கட்டாயம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது! தீர்க்கப்பட வேண்டிய மேற்கூறிய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்த்து வைக்க யார் முன்வருகிறார்கள் என்பதைப் பார்த்து உங்கள் பொன்சாவி போன்ற வாக்குகளைப் பயன்படுத்துங்கள்.

தினமணி - எடிட் பக்கம் - 16.5.2016

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!