இன்றைய தேவை: மூவரின் அமுத மொழிகள்




இன்றைய தேவை: மூவரின் அமுத மொழிகள்
-இடைமருதூர் கி.மஞ்சுளா
 மூவரும் நிகழ்த்தும் அற்புதம்

        பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகிய மூவரில் ஒருவர் பெயரைச் சொன்னால் போதும், மற்ற இருவரும் நம் நினைவுக்கு வந்துவிடுவர். இதுவே மூவர் அவதாரத்தின் அற்புத லீகைகளாகும். இந்த மூவரும் என் மனத்தில் வந்தது எப்படி என்பதை இங்குப் பதிவு செய்வது அவசியம். 

       நான் சிறுமியாக இருந்தபோது (10 வயது)  என் எங்கள் இல்லத்தில் இருந்த நூல்களில் பகவான் ராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்கள்தான் (சின்னச்சின்ன நூல்கள்) அதிகம். அதையும் என் மூத்த சகோதரி கி. விஜயலட்சுமி அவர்கள்தான் அதிகம் வாங்கிப் படிப்பார். அவர் பள்ளி பயிலும் நாளிலிருந்தே சுவாமிஜியின் தீவிர பக்தை. அவர் மூலமாகத்தான் முதன் முதலாக சுவாமிஜி என் மனத்தின் உள்ளே புகுந்தார்.

       மேலும், அந்தச் சகோதரியுடன் 1989-இல் திருச்சி, பொன்மலைப்பட்டியில் ஓராண்டு வசிக்க நேர்ந்தபோது, அங்கிருந்த சாரதா தேவியார் ஆசிரமத்திற்கு வாரா வாரம் என்னையும் அழைத்துச் செல்வார்.  அங்கு சென்று அக்கோயிலை தூய்மை செய்வதும், மலர் பறித்துக் கொடுப்பதும், விளக்கேற்றுவதும், எல்லோரும் அமர இருக்கை அமைத்துக் கொடுப்பதும், பகவான் ராமகிருஷ்ணரின் ஆர்த்திப் பாடல்களைப் பாடுவதும், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளைக் கேட்பதும் வழக்கம். இவை பசுமையான நினைவுகளாக இன்றும் உள்ளது. அம்மடத்தின் பொறுப்பாளர் ஒரு பெண்மணி. அவர் இல்லத்திற்கும் என் சகோதரி அழைத்துச் செல்வார். அவர் வீட்டில் திரும்பும் இடமெங்கும் மூவரின் படங்கள்தான் இருக்கும். அங்கும் வழிபாடு நிகழ்த்தி உள்ளோம். அப்போதிலிருந்துதான் மூவரும் என் மனத்தில் முழுமையாகக் குடிபுகுந்தனர் என்று கூறலாம்.
       பின்னாட்களில் மயிலாப்பூர் செல்லும்போதெல்லாம் பகவான் ராமகிருஷ்ணர் மடத்துக்குச் செல்லாமல் வருவதில்லை. மன அமைதியைத் தரும் திருக்கோயில் அது. நேரம் வாய்க்கும்போது தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள அன்னை சாரதா தேவி ஆசிரமத்துக்கும், கண்ணதாசன் சாலையில் உள்ள சாரதாதேவி ஆசிரமத்திற்கும் சென்று வருவதுண்டு. இந்தத் தொடர்புதான் தற்போது அம்பத்தூரில் அமைந்துள்ள அன்னை சாரதா தேவியின்  ஆசிரத்தோடு என்னை இணைத்து வைத்துள்ளது போலும்!

       2005-இல் இம்மூவரின் தாக்கத்தாலும் ஈர்க்கப்பட்ட நானும், திரு தெள்ளாறு மணி அவர்களும் ஆன்மீகக் களஞ்சியம் என்ற மாதப் பத்திரிகையை சுவாமி விவேகானந்தரின் வீர வசனத்தோடு தொடங்கி, முதல் பக்கத்தில் (லோகோவாகவே) வெளியிட்டு, மாதம்தோறும் இருவரும் மூவரின் மணி மொழிகளையும் அறநெறிக் கதைகளையும் தொடர்ந்து வெளியிட்டு மகிழ்ந்தோம். எங்கள் பத்திரிகையின் வெற்றியும் உயிர்நாடியும் சுவாமி விவேகானந்தரின் மணிமொழியும் அவரது ஆசீர்வாதமும்தான் என்பதை நாங்கள் இன்றைக்கும் மறந்துவிடவில்லை. இவ்வாறுதான் மூவரும் ஒருவர் மனத்தில் புகுந்து, அவர்களைப் ஆன்மீக வாழ்வில் பக்குவப்படுத்தி, அவர்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்துகின்றனர்.

 இன்றைய தேவை: மூவரின் அமுத மொழிகள்:

"என்னிடத்தில் நூறு இளைஞர்களைத் தாருங்கள்;  நான் இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுக்கிறேன்'' என்றார் வீரத்துறவி  சுவாமி விவேகானந்தர். ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமையும், சக்தியும் இளைஞர்களிடம்தான்  உள்ளது  என்பது சுவாமிஜியின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால், அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்களா என்பது ஐயமே!
 
மகாகவி பாரதி, இளைஞர்களை "இளைய பாரதம்'  என்று போற்றினார். ஆனால் இன்றைய இளைய பாரதங்களில் பலர், இழிந்த செயல்களை அல்லவா செய்து வருகின்றனர்... இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் தேவை சுவாமி விவேகானந்தரின் வீரமிக்க - எழுச்சிமிக்க - தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய - தட்டி எழுப்பக்கூடிய வீரவசனங்கள்தாம்  என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம். கூடவே நன்னெறி்களை வளர்க்கும் பகவான் ராமகிருஷ்ணரின் குட்டிக் குட்டிக்  கதைகளையும், அன்னை சாரதா தேவியாரின் அனுபவ உரைகளையும் புகுந்துவது அவசியம்.  அத்தகைய பொன்மொழிகளை - அமுதமொழிகளைப் பயிற்றுவித்து இளைஞர்களின் மனத்தைப் பண்படுத்தப்போவது யார்?  பெற்றோரா?  சமுதாயமா?  பள்ளி-கல்லூரிகளா? இளைஞர்களைச் சீரழிக்கும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களா?  திரைப்படங்களா?  தொழில்நுட்பமா?  நண்பர்களா? என்கிற கேள்வியே எழுகின்றன.

சகிப்புத்தன்மை, பொறுமை, ஒழுக்கம், உண்மை, பணிவு, நாணம், மரியாதை, பக்தி - இவை எல்லாம் என்ன விலை என்று கேட்டும் அளவுக்கு  இன்றைக்கு இளைஞர்களில் பலர்  உருவாகி வருகின்றனர். ஒழுக்கக்கல்வியையும், அறநெறிக் கருத்துகளையும், வாழ்க்கைக் கல்வியையும், ஆன்மீகக் கல்வியையும் கற்றுத்தந்தாக வேண்டிய அவசியம் இன்றைய  பள்ளி - கல்லூரிககளுக்கும்  பெற்றோர்க்கும்,  திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கும் உண்டு.

இன்றைய இளைஞர்களிடம் எந்த அளவுக்கு அதீதமாக மூளை வளர்ச்சியும், உடனே கற்றுக்கொள்ளும் அறிவுத்திறனும், ஆளுமைப்பண்பும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களிடம் நிரம்பி இருப்பவை ஆசை, தன் தகுதிக்குக்கு மீறிய பேராசை, ஆசைப்பட்டது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது அடுத்தவரை அழிக்கும் இழிகுணம், போதைக்கு அடிமையாகி பார்க்கும் பெண்களையெல்லாம் மோகிக்கும் கீழ்நிலை,  சுயநலம் போன்றவைகளைத்தான் இன்றைய தொழில்நுட்பமும், திரைப்படங்களும், நெடுந்தொடர்களும் விதைக்கின்றன.
 
ஆனால், சுவாமி விவேகானந்தர் விதைக்கும் விதைகளைப் பாருங்கள்: முதலில் கடவுள் நம்பிக்கைதான் முக்கியம்.  அந்தக் கடவுள் நம்பிக்கை இல்லாவர்களை நாத்திகர்கள் என்று கூறுவர். ஆனால் சுவாமிஜி யாரை நாத்திகர் என்று என்ன கூறுகிறார் தெரியுமா... “எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டை மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது” என்கிறார். இங்கே ஏன் இந்தப் பதிவு என்றால், முதலில் இன்றைய இளைஞர்களுக்குத் தாங்கள் வெற்றி அடைவோம் - சாதிப்போம் என்ற தன்னிம்பிக்கை இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். மனம் தளர்ந்து போய்விடுகின்றன. அவர்களுக்கு சுவாமிஜியின் இந்த அமுதவாக்கே மாமருந்தாகும்.

அடுத்து,  இளைஞர்களிடம் இருக்கும் தாழ்வுணர்ச்சி, அடுத்தவர் போல் நாம் வாழவில்லையே உயர்வடையவில்லையே என்பது. இவர்களிடம் இருக்கும் இந்நோய்க்கும் மருந்து தருகிறார் சுவாமிஜி. “நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்” என்று கூறி இளைனைத் தட்டி எழுப்புகிறார். அவன் சோர்வைப் போக்குகிறார். சோர்வுக்கு மருந்து தருகிறார்.

முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவர் வாய்மொழி, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த முயற்சி இன்றைய இளைஞர் பலரிடத்தில் இல்லை. காரணம், இன்றைய இளைஞர்களுள் சிலர் எந்தவித முயற்சியும் இன்றி, உழைப்பும் இன்றி தான் ஆசைப்பட்டது உடனே கிடைத்து விடவேண்டும் என்று நினைக்கின்றனர் – ஆசைப்படுகின்றனர். அவ்வாறு கிடைக்காதபோது தோல்வியில் மனம் உடைந்து தகாத செயல்களில் ஈடுபட்டு அழிகின்றனர். இதுகூட ஒருவித நோய்தான்.

இந்த நோய்க்கும் மருந்து தருகிறார் சுவாமிஜி. “ஆயிரம் முறை தோற்றாலும் முயற்சியை மட்டும் கைவிடாதே. போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே. இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய். பலவீனத்திற்கான பரிகாரம் – ஓயாது பலவீனமானதைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே நொறுக்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான். அத்தைகய ஆற்றல், அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை, உனது குறிக்கோளை நீ அடைவாய்” என்கிறார். இதைவிட ஓர் உன்னதமான மருந்தை எந்த மருத்துவரும் தந்துவிடமுடியாது.

“உன்னையே முதலில் நீ நம்பு. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நம்பிக்கை இழந்துவிடாதே. பாதை கத்தி முனையில் நடப்பதைப் போல் மிகவும் கடினமானதுதான். எனினும் எழுந்திரு, விழித்துக்கொள், மனம் தளராதே, நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி. எனது சகோதரர்களே.. இது உறங்குவதற்கு நேரமில்லை.. இந்தியா நமது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது” என்று கூறுகிறார். இவ்வாறு தன் மகன் மேல் பாசம் வைத்த தாய்-தந்தை கூடக் கூறமாட்டார்கள். சுவாமிஜி கூறுகிறார். ஏன் தெரியுமா... இளைஞர்களே மிகப்பெரிய சாதனைகளைப் புரியவல்லவர் என அவர் நம்பியதால், உணர்ந்ததால் என்பதனால், அவர்களை முதலில் பக்குவப்படுத்தி உயர்ந்த நினைக்கிறார் - பராமரிக்க முனைகிறார். மேலும், நீ யார் என்பது முக்கியமல்ல, நீ என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.  உலகுக்குச் செய்யும் நன்மை நமக்கே நன்மையாக முடியும் என்று எல்லோரையும் நன்மையின் பக்கம் திசைதிருப்பி விடுகிறார். 

 இன்றைய கல்வி நிலை எப்படி உள்ளது. மாணவர்களுக்கு ஆன்மீகக் கல்வி புகட்டப்படுகிறதா என்றால்… இல்லை என்றே கூறலாம். கல்வி கற்பதன் பயன்… இறைவனை அறிவது, அடைவதுதான் என்பார் திருவள்ளுவர்.

கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா ரெனின்

என்கிறார்.  கல்வி பற்றிக் கூறுமிடத்து,  ஏட்டுக் கல்வியால் குழப்பமே மிஞ்சும் அதனால் அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ளச் சொல்கிறார். மேலும், உயர்ந்த கல்வி என்பது நல்லொழுக்கம் தருவதேயாகும், இதைப் பெற நம்மிடம் அன்பும் பொறுமையுமே தேவை, சொந்த காலில் நிற்க உதவுவதே உண்மையான கல்வியாகும், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும், நல்ல எண்ணங்களைக் கருவிகளாகக் கைக்கொள், உயர்ந்த லட்சியத்தை மேற்கொள், தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகியவையே வெற்றிக்கு ஆதாரமாகும். அதனால் கட்டளையிட விரும்பாமல் கீழ்ப்படிந்து பணிந்து நடக்கக் கற்றுக்கொள், உலகம் என்பது ஒரு பயிற்சிக்கூடம், எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணாதே, ஆனால் உன்னைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை என்பதை உணர்ந்துகொள், உண்மை ஒன்றுதான் வலிமை தருகிறது. விடா முயற்சியும் மன உறுதியுமே வெற்றியின் கடைக்கால், ஆசைகளை விட்டால் சொர்க்கத்தை அடையலாம், இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் இவையே முக்கியத் தேவை” என்றும் கூறி, அறியாமை என்ற இருளில் உறங்கிக்கிடக்கும் இளைஞர்களை மட்டுமல்ல பலரையும் தட்டி எழுப்பி விழித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். “எழுமின், விழிமின், குறிசாரும் வரை அயராது உழைமின்” என்பதே அவரது தாரக மந்திரம்.

சுவாமி விவேகானந்தரின் இத்தகைய அறிவுரைகளும், அமுத மொழிகளும், வீர வசனங்களும் இன்றைய இளைஞர்கள் பலரையும் தாக்கிக்கொண்டிருக்கும் சில நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறது. இத்தகைய அருமருந்தை, மாமருந்தை சுவாமிஜியைத் தவிர வேறு யாரால் தந்து குணப்படுத்த முடியும்! இவர் தரும் மருந்து இம்மைக்கு மட்டுமல்ல மறுமைக்கும் பயனுள்ளதாகும்.
சுவாமி விவேகானந்தர் தொடாத துறைகளே இல்லை எனலாம். ஆன்மீகம், கல்வி, ஒழுக்கம், பழக்க வழக்கம், கடவுள் கொள்கை, இறை வழிபாடு, சமயம், உணவு,  ஞானம், யோகம், வேதாந்தம், சித்தாந்தம், விதி, மதி தன்னிரக்கம், ஆசை, முயற்சி, விடாமுயற்சி, லட்சியம், வெற்றி,  கனவு, நல்லொழுக்கம், பாவம், எண்ணம் அறிவு, உணர்வு எனப் பலவற்றைப் பற்றியும் கூறியிருக்கிறார்.

சுவாமிஜியும் சைவ சித்தாந்தமும்:
இங்கு சுவாமிஜியின் ஒரு வாழ்க்கைப் பதிவைக் கூறுவது பலருக்கும் பயன் தரும். சைவ சித்தாந்தம் கூட சுவாமிஜி பேசியிருக்கிறார். ஆம், ஒருமுறை சென்னைக் கடற்கரையில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூர் நல்லுசாமிப்பிள்ளை அவர்கள் விவேகானந்தரைப் பாராட்டினார். “நீங்கள் திருஞானசம்பந்தரைப் போல வெளிநாட்டிற்குச் சென்று பரசமயங்களை எல்லாம் எதிர்த்துப் பேசி, அவைகளுக்கெல்லாம் நாயகமானது இந்த வைதிக சமயம் என்று சொல்லி வந்தீர்களே, உங்களுக்கு நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்” என்று பாராட்டினார்.

சுவாமி விவேகானந்தர் தன் இருப்பிடம் வந்ததும், “நல்லுசாமிப்பிள்ளை, இங்கே வா! ஞானசம்பந்தர் என்று சொன்னாயே, அவர் யார்” என்று கேட்டார்.
உடனே நல்லுசாமிப்பிள்ளை “சுவாமீ! சைவ சித்தாந்தத்திற்குக் குருமகான் அவர்தான். ஆசாரியர். எங்களுக்குகெல்லாம் குரு” என்றார். “அவர் கொள்கை என்ன” என்றார் சுவாமிஜி.
“பதி, பசு, பாசம். என்றார் நல்லுசாமிப்பிள்ளை. உடனே சுவாமி விவேகானந்தர் “மூன்று என்றீரே… ஐந்து, ஆறு என்று இருந்தால் என்ன” என்று கேட்டார். அதற்கு அவர் “சுவாமீ… அதற்கு மேல் இருக்க முடியாது” என்றார்.

சுவாமி விவேகானந்தருக்கு ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை இவ்வாறு விளக்கிக் கூறினார். “சுவாமீ… தானே அறிகின்ற பொருள் ஒன்று, (பதி, பசு, பாசம் என்று சொல்லவில்லை) அறிவித்தால் அறிகின்ற பொருள் ஒன்று, அறிவித்தாலும் அறியாத பொருள் ஒன்று. இவ்வளவுதான் சுவாமீ” என்றார். இவ்வாறு, ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை பரமஞானியாய் அமெரிக்காவில் வேதாந்த மழைபொழிந்த அந்த ஞானச் சிங்கத்திற்குச் சொன்னார். சுவாமி விவேகான்தரும் “சரி” என்று ஒப்புக்கொண்டார்.
இதன் பொருளாவது: தானே அறிகின்ற பொருள் – இறைவன். (இறைவனுக்கு எல்லாம் தெரியும்). அறிவித்தால் அறியும் பொருள் ஆன்மாக்கள் (உயிர்கள்). அறிவித்தால் அறிவது ஆன்மா. அறிவித்தாலும் அறியாத பொருள் பாசம். (உலகம், மேஜை, நாற்காலி போன்றவை).இதுதான்சைவ சித்தாந்தக் கொள்ளையும் தத்துவமும். இவ்வாறு சுவாமி விவேகானந்தர் அறிந்துகொள்ளாத தத்துவங்களே இல்லை எனலாம்.

மனம் எனும் பாம்பு
மனித மனத்தைக் குரங்கென்று சொன்ன அறிஞர்கள் பலர் உண்டு. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர், மனத்தை விஷப்பாம்பாக உருவகப்படுத்துகிறார்.  "மனம் ஒரு விஷப்பாம்பு. ஆனாலும் பயப்படத் தேவையில்லை. மனம் மனிதனைக் கொன்றுவிடும். ஆனால் மனிதனை உயர்த்தவும் செய்யும். அது எப்படிக் கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்துள்ளது. மனதை அடக்குவதும் மனமே; திரிய விடுவதும் மனம்தான். பாம்பைத் திரியவிடாமல் அடக்கும் மனிதன் தன் மனத்தையும் அடக்க வேண்டும். பாம்பு வசியப் பொடிக்கு மயங்கி ஒரு நிலையில் நிற்பதுபோல மனமும் ஞானம் என்னும் வசிய மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு யாருக்கும் தீங்கு செய்யாமல் அலைபாயாமல் நின்றாக வேண்டும். எல்லோராலும் பாம்பை அடக்கிவிட முடியாது. ஆனால் எல்லோராலும்  மனதை அடக்கிவிட முடியும். அதற்காக முயல வேண்டும். மனதை அடக்கக் கற்றுக்கொண்டவன் எப்போதும் கஷ்டப்படமாட்டான், அவனுக்கு ஆபத்தில்லை'' என்கிறார்.

அன்னையின் அமுத மொழி
       அன்பின் திருவுருவான அன்னை சொல்வதைக் கேளுங்கள்: “பல எண்ணங்களால் மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே, ஓர் எண்ணத்தைச் செயல்படுத்துவது கூட மிகக் கடினமானது. அப்படியிருக்க, பல சிந்தனைகளில் மனத்தை நிரப்பி அதனைச் சிதறடிக்காதே. அனைத்தும் மனத்தில்தான் இருக்கிறது. தூய்மை, தூய்மையின்மை இரண்டும் மனத்தில்தான் உள்ளது. இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும்பொழுது அவற்றின் நிலையைமையை நினைவுகூர்ந்து இறைவனின் திருவடிகளில் சரண் அடைவாயாக. இறைவன் தனக்கே சொந்தம் என்று கருதி, ஒருவன் இறைவனை அழைப்பானானால் இறைவனுடைய கருணை அவனுக்குக் கிட்டும்.

இறைவன் நம்முடையவன். கடவுளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவு காலங்காலமாகத் தொடர்ந்து வருவதாகும். இறைவன் அனைவருக்கும் சொந்தமானவன். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தைப் பொறுத்தே நாம் இறைவனை அறிகிறோம். அன்பின்றி இறைவனை உணர முடியாது. ஆம்... இறைவனை அடையத் தேவையானது உண்மையான அன்பே” என்கிறார். எல்லா சமயங்களும், மதங்களும் இந்த அன்பையே வலியுறுத்தின. இத்தகைய அன்பு குறித்து அன்னை சாரதா தேவியார் கூறியுள்ளதை செவிமடுத்தால் இறைவன் நம் அகத்துக்கு அகப்படுவான்.

சுயநலமற்று இருத்தல்
இன்றைய இளைஞர்கள் நிலைதடுமாறிப் போவதற்குப் பல காரணம் அவர்களைச் சுற்றிச் சுழல்கின்றன. அவர்கள் நிலைதடுமாறுவதற்கு அவர்களிடத்திலே நல்லொழுக்கம் இன்மைதான் முக்கிய காரணம் என்கின்றனர் அறிஞர்கள்.
ஒழுக்கம் என்பது என்ன என்பதற்கு,"சுயநலமற்று இருத்தல்தான்'' என்றார் சுவாமி விவேகானந்தர். மேலும், "எவனொருவன் சுயநலத்தோடு நிற்கின்றானோ, அவனுக்குள்ளே ஒழுக்கம் வராது. பாவப் பாழ் மண்டபத்தின் படிக்கட்டே சுயநலம்தான். ஒழுக்கமாக இருத்தல் என்பது சுயநலமற்று இருத்தல்தான். சுயநலமில்லாமல் இருக்க வேண்டுமானால் பிறர் துன்பங்களையும் துயரங்களையும் களைவதுதான்'' என்கிறார்.

 அதனால்தான் "நல்லறிவே நல்லொழுக்கம்'' என்றார் சாக்ரடீஸ். நன்மை, தீமையை - இது நன்மை, இது தீமை என்று பகுத்து உள்ளுக்குள் உணர்வதே அறிவாகும்! "நல்லறிவு பெற்றவன் நல்லதையே தேடிச் செல்வான்;  நன்மையே செய்வான்;  நல்ல விஷயங்களயே பேசுவான்;  நல்ல சொற்களையே கூறுவான். நல்லறவு உள்ளவன் ஒழுக்கமற்றவனாக இருக்க மாட்டான்; ஒழுக்கமற்றவனாக இருக்கிறான் என்றால், அவன் நல்லறவு உள்ளவனாக இல்லை என்று பொருள்'' என்கிறார்.
அதனால்தான் பாரதி  "நல்லன எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்'' என்று மூன்றையும் வேண்டினார் - நம்மையும் வேண்டச்செய்தார். இம்மூன்றும்தான் ஓர் இளைஞனை  ஒரு மனிதனாக்கி, அவனை தெய்வத்தன்மை வாய்ந்தவனாக ஆக்கும் . அதனாலேயே  நல்லொழுக்கத்தை சுவாமிஜி வலியுறுத்தினார்
மக்கள் சமுதாயம் ஒழுக்கம் சார்ந்து வாழவேண்டும் என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் ஆசையும் அமுத மொழியுமாகவும் இருந்தது.

"ஆமையானது தன்னுடைய உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வது போல, எவன் ஒருவன் தன்னுடைய (ஐம்)புலன்களை, ஆசைகளைத் தூண்டும் பொருள்களிடம் செல்லவிடாமல் கட்டுப்படுத்திக் கொள்கிறானோ அவனே நிலையான அறிவுடையவன் ஆவான்'' என்கிறது ஸ்ரீமத்பகவத்கீதை!
இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் வாழும் இளைஞர் – இளைஞிகளுக்குத் தேவை சுவாமி விவேகானந்தரின் அமுத மொழியும், பகவான் ராமகிருஷ்ணரின் அருமை மொழியும், அன்னை சாரதா தேவியாரின் அன்பு மொழியுமாகும். இத்தகைய மூன்று ஞானப்புதையல் நமக்குக் கிடைத்தை நினைத்து நாமெல்லாம் கர்வப்படவேண்டும்... அவர்கள் கூறிய வழியில் சென்று மேன்மையைடய வேண்டும். இவற்றை மாணவச் செல்வங்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் வாழ்வை ஒளிமயமாக்க வேண்டும். இதுவே நமது கடமையாகும்.
-இடைமருதூர் கி.மஞ்சுளா

(அம்பத்தூர், புதூரில் அமைந்துள்ள ராமகிருஷ்ணர், சாரதா தேவியார் மேல்நிலைப் பள்ளி (ராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆலயத் திறப்பின் போது-2016) வெளியிடப்பட்ட மலரில் மலர்ந்த கட்டுரை மலர் இது.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!