உன்னையே நீ ஒப்பாய்....



திருச்சி மலைக்கோட்டை, உச்சிப் பிள்ளையார் கோயில் அடிவாரத்தில் அமர்ந்துகொண்டு,  உச்சிப் பிள்ளையாரை ஓவியமாக வரையும் என் ஓவியத் தந்தை  கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். (ஓவிய ஆசிரியர்)
ஆண்டு நினைவில் இல்லை. (அந்தக் கால திருச்சி மலைக்கோட்டை)

இவர் தஞ்சை,  பாவநாசம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர்.. மேலும் வேதாரண்யம்,  மன்னார்குடி,  மணல்மேடு,  திருவாரூர், நாச்சியார்கோயில் முதலிய ஊர்களில் உள்ள பள்ளியிலும் பணிபுரிந்தவர்.  இவரோடு பணிபுரிந்தவர்களோ அல்லது படித்த மாணவர்களோ இருந்தால் இவரை நினைவுகூருங்கள்.  தான் மறைந்தாலும் தன் கண் மணிகளின் மூலம் இந்த உலகை ( இன்னொருவர்  மூலம்) பார்த்துக் கொண்டிருப்பவர்.   (இவர் கண், தானம் செய்யப்பட்டது)

இடைமருதூர் ஈசனை எனக்கு அறிமுகப்படுத்தியவர். அவ்வீசன் பெருமைகளையெல்லாம்  விரித்துரைத்தவர்.

மேலே கண்ட....  யாரோ எழுதி இணையத்தில் விட்ட ஐந்து (கவிதை வரிகள் போல்) வரிகள் இணையத்தில் எதையோ தேடியபோது கிடைத்தது. இப்படியொரு உணர்வை வெளியிட்ட தோழரோ அல்லது தோழிக்கோ மிக்க நன்றி. இது அப்பாவை மிகவும் நேசிக்கும் ஒவ்வொரு மகளின், மகனின் உண்மை உணர்வுதான்.

அப்பா - இவர் இருக்கும்போது நாம் அவருடைய அருமையை  உணர்வதில்லை. அவர் இல்லாதபோது அவர் இல்லையே என அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பெருமையாகப் பேசித் திரிகிறோம். இதை அவர் இருக்கும்போதே செய்திருந்தால், அவர்.... நம் அப்பாவாக இருந்திருக்க மாட்டார்.....ஆண்டவனாகக் காட்சி தந்திருப்பார். ஆனால்..... காலம் நல்லவர்களை மிக விரைவில் கூட்டிக்கொண்டு போய்விடுகிறதே.... என்ன செய்ய.....

இதைப் படித்தவுடன் மணிவாசகப் பெருந்தகையின் ஒரு திருவாசகப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

 என்னை "அப்பா, அஞ்சல்!" என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய், விட்டிடுடி கண்டாய் உவமிக்கின் மெய்யே!
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரக் கோசமங்கைக்கு அரசே!
அன்னை ஒப்பாய்! எனக்கு அத்தன் ஒப்பாய்! என் அரும் பொருளே!

திருவாசகம்,  நீத்தல் விண்ணப்பத்தில் வரும் பதினாறாவது பாடல்
 இது. இதன் பொருள் இதுதான்....

தந்தை, தன்  மகனுக்கு (மகளுக்கு) அச்சம் நீக்கி ஆறுதல் தருவது போல என்னைப் பார்த்து "அப்பா அஞ்சாதே" என்று சொல்பவர்கள் யாரும் இன்றி வருந்தி நின்று இளைத்து அலைந்தேன். எனக்குக் காட்சி தந்து உடனே நீ மறைந்ததனால், மின்னலைப் போன்றவனே... மெய்யாகவே உனக்கு உவமை சொல்ல நினைத்தால்....  உன்னையே  நீ ஒப்பாய். நிலையான உத்தரகோசமங்கை என்ற திருத்தலத்தின் மன்னனே... எனக்கு அம்மையும் அப்பனும் ஆனவனே... பெறுதற்கரிய சிவபரம்பொருளானவனே! என்னை விட்டுவிடாதே... (நீயும் என்னைக் கைவிட்டுவிடாதே)



மேலே குறித்த யாரோ எழுதிய அந்தக் கவிதை வரிகளோடு இந்தப் பாடல் எப்படி ஒத்திருக்கிறது பாருங்கள்.

ஆனால், அப்பாவே இல்லாதவர்களுக்கு.....
 அந்த இறைவனே அப்பன்,  அம்மை எல்லாம். 

அப்பாக்கள்  எனச் சொல்லிக்கொண்டு "நான் இருக்கிறேன் கவலைப் படாதே" எனச் சிலர் வரலாம். ஆனால் படைத்தவனையும் (இறைவனையும்) பெற்றவனையும் தவிர,  நமக்கு அப்பனாக ஆகக்கூடிய தகுதி வேறு எந்த அப்பனுக்கு  இருக்கிறது...........

மணிவாசகர் சொல்வது போல  உன்னையே  நீ ஒப்பாய்... 
இதன் பொருள் .... அவருக்கு அவரே நிகர்! என்பதுதான்!


-இடைமருதூர் கி.மஞ்சுளா






Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!