ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே...



ஆவதும் பெண்ணாலே...

அழிவதும் பெண்ணாலே...

-இடைமருதூர் கி.மஞ்சுளா

÷இந்த பூமியை புண்ணிய பூமி என்று நம் முன்னோர்கள்
போற்றிப் புகழ்ந்து சொல்லி வைத்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நம் பாரத தேவியைப் பெண்ணாக உருவகப்படுத்தியுள்ளோம். மண்ணைத் தாய்மண் என்றனர். நதிகளையும் ஆறுகளையும் பெண்ணாக்கிப் பெருமைப்படுத்தினர். நம் தாய்மொழியான தமிழைத்  தமிழ்த் தாயாக்கிப் பார்த்தனர். இராமன் புகழ்பெற்றதும், அல்லலுற்றதும் பெண்ணால்தான்; இராவணன் அழிந்ததும் பெண்ணால்தான்; வாலி மாண்டதும் பெண்ணால்தான்; மதுரை எரிந்ததும் பெண்ணால்தான். மகாபாரதம் தோன்றியதும் பெண்ணால்தான். ஆதிசங்கரர், ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், பகவான் ஸ்ரீரமணர், ராமானுஜர் - இப்படிப் பல "ஆண்' ஞானிகளைப் பெற்றெடுத்து இப்பூவுலகுக்கு அளித்ததுப் பெருமை சேர்த்ததும் பெண் குலம்தான்.
÷அதனால்தான் ""ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே'' என்ற பழமொழி கூறினர் நம் முன்னோர். இப்பழமொழிக்குப் பலரும் தவறாகவே இதுநாள் வரை பொருள் கொண்டு வருகின்றனர். ஆனால், இந்தப் பழமொழிக்கு ""நல்லவை ஆவதும் பெண்ணால்தான்; தீயவை அழிவதும் பெண்ணால்தான்'' என்று மிக அருமையான உண்மையான விளக்கத்தை முதன் முதலில் கூறியவர் திருமுருக கிருபானந்த வாரியார்தான்.
÷""பெண்ணின் பெருந்தக்க யாவுள'' என்று பெண் பிறவியைப் போற்றினார் வள்ளுவப் பெருந்தகை. "பெண்ணின் பெருமையை' உலகறியச் செய்தார் தமிழறிஞர் திரு.வி.. பெண்ணை உயர்வாகப் போற்றி சமத்துவம் பேசினார் .வெ.ரா. இப்படிப் பெண்களை பாரத தேவியாகவும், தமிழ்தாயாகவும், அன்னை பூமியாகவும், மண்ணைத் தாய் மண்ணாகவும், இப்படி ஆண்கள் பலரும் பெண் குலத்தின் பெருமை பேசும்போது, பெண்களாகிய நாம், நம் தாயின் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றையும் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா? இவற்றையெல்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டாமா? சிந்தியுங்கள்.








÷பெண்கள் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதிவிரைவில், அறிவில் ஆண்களை விஞ்சும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருந்தாலும் அவர்களின் ஓரிரு செயல்கள் அவர்கள் எறிந்த அம்புகள் அவர்களே வீழ்த்தும் அம்புகளாக மாறிவிடுகின்றன. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாகப் பெண்கள் புதுமைப் பெண்ணாகத் திகழ்வது நல்லதுதான். ஆனால், அந்த நல்லதே அவர்களுக்குக் கெட்டதைக் கொடுத்துவிடவும் நேர்ந்துவிடும் என்பதை மறக்கக்கூடாது.
÷தற்போது பெண்களைப் பற்றி பலரும் பலவிடத்திலும் விமர்சிக்கும் போக்குக்காண காரணங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று அவர்கள் உடுத்தும் உடை, தொலைக்காட்சி மோகம், காதல் என்ற பெயரில் நடக்கும் அவலக்காட்சிகள், தலைவிரிகோலமாகத் திரிவது. இவையெல்லாம் எதிர்காலத்தில் நம் சந்ததியினரை எந்த அளவு பாதிக்கும் என்பதை நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
÷தற்போது எழுந்துள்ள பிரச்னையும், பலரின் விமர்சனத்துக்குரியதும் பள்ளி, கல்லூரிப் பெண்கள் உடுத்தும் உடைதான். இது குறித்து சமீபத்தில் ஜோதிர்லதா கிரிஜா எழுதிய (தினமணி) ஓர் அருமையான கட்டுரையே போதுமானது.
÷உடலுறுப்புகளை அப்படியே படம் பிடித்துக் காட்டும் (லெக்கின்ஸ்) உடைகளை முன்பெல்லாம் சினிமா நடிகைகள், குறிப்பாக கிளப் டான்ஸ் ஆடுபவர்கள்தான் பயன்படுத்தினர். ஆனால், தற்போது வெளிவரும் திரைப்படங்களில் கதாநாயகிகளே அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் அந்தக் கிளப் டான்சர்களுக்கு வாய்ப்பும் போய்விட்டது என்பது வேறு விஷயம்.
÷உடை தயாரிப்பாளர்கள் எப்படிப்பட்ட உடைகளைத் தயாரித்தாலும் இன்றைய இளைஞிகள் அணிந்துகொண்டு விடுவர் என்று நினைக்கிறனர். அவர்கள் நினைவே உண்மையாகிறது. "உடையால் பெண்களுக்கு துன்பம் வருகிறது என்பதை ஒத்துக்கொள்வதற்கில்லை' என்று பெண்ணியம் பேசித் திரியும் வீணர்கள் எதிர்காலத்தில் அதன் விளைவை தன் குடும்பத்தில் சந்திக்கும்போது உணர்வார்கள். 
÷ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மாவுக்கென்று சில பாரம்பரியம், பண்பாடு, மரபு இருக்கிறது. அந்தப் பண்பாட்டின் வழிதான் 30 ஆண்டுகளுக்கு முன் பிறந்த பெண்கள் வளர்ந்து வந்திருக்கிறார்கள். அந்தப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும்  மரபையும் நம் வாரிசுகளுக்கும் நாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தாக வேண்டும். அப்படி வளர்க்கத் தவறினால் அதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தையும் ஏற்க வேண்டியவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களும் பெற்றோர்களுமே. நம் பாரம்பரிய ஆடைகளை உடுத்த உங்கள் மகள்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதன் பெருமையைப் பேசுங்கள்.
÷அடுத்து, நவநாகரிகம் என்ற பெயரில் கல்லூரி, கோயில், திருமண நிகழ்ச்சி என்று எதுவானாலும் பெண்கள் தலைவிரிக் கோலத்துடன் செல்வது. இதில் சிறுமிகளும் அடக்கம். பெரியவர்களைப் பார்த்துத்தானே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்! பெரியவர்தானே அவர்களின் முன்னோடி! நல்லவைகளுக்கு மட்டும் முன்னோடிகளாகவே திகழுங்கள் பெண்களே! இப்படி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு செல்வது அபச குணமாகவே கருதினர் நம் முன்னோர். காரணம், கணவனை இழந்த பெண்தான் தலைவிரிகோலம் கொள்வார், திரெüபதி தலைவிரி கோலம் கொண்டதால்தான் மகாபாரதப் போர் நிதழ்ந்தது, கண்ணகி தலைவிரி கோலம் கொண்டுதான் மதுரை எரித்தாள்; இதனால் பாண்டியனும் அவன் மனைவியும் மாண்டனர்.
÷மேலும், அபச குணமாகக் கருதத்தக்க கோலத்துடன் திருமணங்களுக்கும், கோயில்களுக்கும் வேறு சில இடங்களுக்கும் செல்வது குடும்பத்தில் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதிலும் கோயிலுக்கு இப்படிச் செய்தால், கோயிலில் ஒரு முடி உதிர்ந்தால் அந்தப் பாவம் ஏழு ஜென்மத்துக்குத் தொடரும் என்கின்றன புராணங்கள். 
÷ஒரு பெண்ணுக்கு முதல் குருவும், தோழியும் அவளுடைய தாய்தான். இதில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். தாயிடமிருந்தே பெண் பிள்ளைகள் அனைத்தையும் கற்றுக்கொள்கின்றனர். "அதனால்தான் தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்றனர். அப்படி குருவாக இருக்கும் தாய், தன் மகள் மனத்தில் தன் பண்பாடு, பாரம்பரியம், மரபு போற்றும் விதத்தை இளமையில் இருந்தே விதைக்க வேண்டும்.
÷ இப்பூமியை மீண்டும் புண்ணிய பூமியாக்குவது பெற்றோரே... பெண் பிள்ளைகளே.. உங்கள் நடத்தையில்தான் இருக்கிறது. "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்பதன் பொருளை  இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.
-இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!