பாவம் செய்யாதிரு மனமே!

பாவம் செய்யாதிரு மனமே!
இடைமருதூர் கி.மஞ்சுளா

÷கலிகாலத்தில் நீதியின்மை, நேர்மையின்மை, ஹிம்சை, துரோகம், குரு நிந்தனை, அக்கிரமச் செயல்கள், மிருகவதை, சுயநலம், அதர்மம், ஒழுக்கக்கேடு, கொலை, கொள்ளை, திருட்டு, பொய், புரட்டு முதலிய பாவங்கள் மலிந்திருக்கும் எனப் புராணங்கள் கூறியது உண்மையாகி வருகிறது. அதனால்தான் நம் முன்னோர் பாவம் செய்தால் நரகத்துக்குப் போகவேண்டும் என்று சொல்லி, எச்சரித்து - பயமுறுத்தி நல்வழிப்படுத்தி வளர்த்தனர். ஒருவன் இம்மையில் செய்யும் நன்மை-தீமைகளே மறுமைக்கு வித்தாகிறது. அதனால் நல்வினைகளையே செய்து மறுமைக்கான நல்விதைகளையே நாம் போடவேண்டும்.
÷பாவம் செய்தால் நகரம் உண்டு என்பதை அறிந்துதான், கடுவெளிச் சித்தர், ""பாவம் செய்யாதிரு மனமே! நாளை கோபம் கொண்டே எமன் கொண்டோடிப் போவான் - பாவம் செய்யாதிரு மனமே!'' என்று எச்சரித்தார். ஆனாலும் பலர் அதைக் கேட்பதில்லை.
÷ பாவம் செய்தால் நரகத்துக்குப் போவோம் என்பது உண்மையா? ஆம்! "உண்மை' என்பதைத் திருமாலே கூறியருளியுள்ளார். அதுவும், பாவம் செய்தால், இருபத்தெட்டு வகையான கொடிய நரகங்களுக்குச் செல்லவேண்டும் என்கிறார்.
÷பறவைகளின் தலைவனாகவும், "பெரிய திருவடி' என்ற சிறப்புடன் திகழுபவருமான கருடாழ்வார், ஸ்ரீமத்நாராயணனை வணங்கி, ""அனைத்து உலகங்களுக்கும் அதிபதியே! எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளே... அடியேனின் சில ஐயங்களைத் தீர்த்தருள வேண்டும்'' என்றார். கருடன் கேட்டதற்கிணங்க பல ஐயங்களைத் தீர்ந்த பெருமாள், கருடன் ""நரகம் என்றால் என்ன? அவற்றில் தண்டிக்கப்படுபவர்கள் யார் யார்'' என்பதையும் கூறியருள் வேண்டும் என்று கேட்க, திருமால் அதைப் பற்றிக் கூறியருளினார்:
÷""கருடா கேள்! உலகினில் பாவம் செய்தவர்களுக்குக் காலதேவனால் உண்டாக்கப்பட்ட நரகங்கள் ஒன்றன்ற, இரண்டல்ல, அவை எண்பத்தி நான்கு லட்சங்களாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் இருபத்தெட்டு(28) வகையான மிகக்கொடிய நரகங்கள் உள்ளன. அதைப்பற்றி மட்டும் கூறுகிறேன் கேள்!
1. தாமிஸ்ர நரகம்: பிறருடைய மனைவி, குழந்தைகள், பிறர் பொருள் இவற்றைக் கொள்ளையடிக்கும் பாவிகள் அடையும் நரகம்.
2. அந்ததாமிஸ்ர நரகம்: கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்பவர்கள், தங்கள் கண்களில் இருள் கவிழ்ந்து மூர்ச்சித்து விழுந்து அல்லல்படும் நரகம்.
3. ரெüரம்: அக்கிரமச் செயல்களைப் புரிந்து பிற குடும்பங்களை அழித்து, அவர்களின் பொருள்களைப் பறித்திடும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம்.
4. மகாரெüரம்: குரு என்ற ஒருவகையான அகோர தோற்றமுடைய மான்கள் பாவிகளைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்தும் நரகம் இது.
5. கும்பீபாகம்: தன்னுடைய சுவைக்காக பல சீவன்களை வதைத்தும், அழித்தும், சித்திரவதை செய்தும் துன்புறுத்திய பாவிகள் அடையும் நகரம்.
6. காலசூத்திரம்: பெற்றவர்களையும் பெரியோர்களையும் துன்புறுத்திய கொடிய பாவிகள் அடையும் நகரம்.
7. அசிபத்திரம்: தான் செய்ய வேண்டிய தர்மங்களைச் செய்யாமலும், தன்னுடைய குலதெய்வத்தை நிந்தித்தும் அதர்மம் செய்பவர்களாக இருப்பவர்கள் அடையும் நரகம்.
8. பன்றிமுகம்: பிறரை நியாயமற்ற வகையில் எந்தக் காரணமும் இல்லாமல் தண்டித்து, அகந்தையால் அநீதிகளையும், கொடுமைகளையும் புரிந்தவர்கள் அடையும் நகரம்.
9. அந்தகூபம்: துரோகம் செய்தவர்கள், சித்திரவதை மற்றும் கொலை புரிந்த கொடியோர் அடையும் நகரம்.
10. கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு களிப்புற்று பிறரைக் கிருமைபோல துளைத்து வாழ்ந்தவர்களும், பக்தி, நியமம் ஆகிய நல்லொழுக்கங்களைத் தவிர்த்து வாழ்ந்தவர்களும் அடையும் நரகம்.
11. அக்கினி குண்டம்: பிறருடைய உடைமைகளையும், உரிமைகளையும் தன்னுடையதாக அபகரித்துக் கொள்ளும் பாவிகள் அடையும் நகரம்.
12. வஜ்ஜிர கண்டம்: ஒழுக்கங் கெட்டவரும், கூடத்தகாத ஓர் ஆணையோ, பெண்ணையோ கூடும் மோகம் கொண்ட வெறியர்கள் அடையும் நகரம்.
13. சான்மலி நரகம்: உயர்வு - தாழ்வு, நன்மை-தீமை ஆகியவற்றைப் பாராமல் தரம் கெட்ட நிலையில் எவருடனும் கூடி மகிழும் காம வெறியர்கள் அடையும் நகரம்.
14. வைதரணி நரகம்: நல்வழிகளை மறந்து, அதர்ம வழியில் சென்று, அதிகார வெறிகொண்டு, வஞ்சகச் செயல்புரிந்து, கேடு செய்யும் அதர்மிகள் அடையும் நரகம்.
15. பூயோத நரகம்: எந்த விதமான லட்சியமும் இல்லாமல் இழிமகளைக் கூச்சமின்றி கூடி மகிழ்ந்து திரியும் கயவர்கள் அடையும் நரகம்.
16. பிராண ரோத நரகம்: பிற பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரிந்த பாதகங்கள் அடையும் நரகம்.
17. விசஸனம்: ஆடம்பரத்திற்காக பசுவதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பாவிகள் அடையும் நரகம்.
18. லாலாபட்ச நரகம்: தன்னுடைய இச்சைக்காகத் தன்னுடைய வாழ்க்கைத் துணைவியைத் துன்புறுத்தி மோக இச்சைக்கு ஆளாக்கும் தீயவர்கள் அடையும் நரகம்.
19. சாரமோயாதன நரகம்: பிறர் சொத்துக்களைச் சுறையாடுவது, சீவன்களை வதை செய்வது, வீடுகளுக்குத் தீ வைப்பது, குடிமக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிப்பது முதலிய பாவங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம்.
20. அவீசி நரகம்: பொய்சாட்சி கூறுபவர்கள், பலவிதமான பாவசெயல்களைப் புரிந்தவர்கள் அடையும் நரகம்.
21. பரிபாதனம்: எந்தக் குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் மது மற்றும் போதைப் பொருள்களையும் கொடுத்துக் குடிக்கச் செய்பவரும், குடிப்பவரும், குடிகளைக் கெடுப்பவர்களும் அடையும் நரகம்.
22. க்ஷôரகர்த்தம நரகம்: தன்னை மட்டுமே உயர்வாக நினைத்துக் கொண்டு சான்றோரையும், பெரியோரையும் அவமதித்து கர்வம் கொண்டு தீயசெயல் புரிபவன் அடையும் நரகம்.
23. ரக்ஷôகண நரகம்: நரபலி கொடுத்து யாகம் புரிதல், ஆணோ அல்லது பெண்ணோ மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீயசெயல்கள் புரிந்தோர் அடையும் நரகம்.
24. சூலரோத நரகம்: எந்தவிதத் தீமையும் செய்யாதவர்களைக் கொல்லுதல், பிறரை ஏமாற்றி வஞ்சமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் முதலிய பாவச் செயல்களைச் செய்பவர்கள் அடையும் நரகம்.
25. தந்தசூல நரகம்: நன்மையைத் தவிர தீமை மட்டுமே செய்த பாவிகள் அடையும் நரகம்.
26. வடரோத நரகம்: பிராணிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்பதையும் அவைகளும் தம்மைப் போன்ற சீவனே என்பதையும் மறந்து அவற்றைக் கொடூரமாக வதைத்தவர்கள் அடையும் நரகம்.
27. பர்யா வர்த்தனக நரகம்: வீடு தேடிவந்த விருந்தினர்களை வெறுத்து அவர்களை நிந்தித்தவர்களும், பகிர்ந்துண்ண விரும்பாமல், தான் மட்டும் உண்டு மகிழ்ந்தவர்களும் அடையும் நரகம்.
28. சூசிமுக நரகம்: செல்வச் செருக்கினாலும், செல்வாக்கினாலும் கர்வம் கொண்டு பிறரைத் துன்புறுத்துகிறவர்கள், நியாமற்ற வழியில் பொருள் சம்பாதித்தவர்களும், அப்படிச் சம்பாதித்தப் பொருளை அறநெறியில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்களும் அடையும் நரகம்.
÷இவ்வாறு மேற்கூறப்பட்ட இருபத்தெட்டு நரகங்களும் ஒவ்வொரு வகையிலும் ஏராளமான பிரிவுகளை உடையவைகளாக இருக்கும் என்று திருமால், கருடாழ்வாருக்குக் கூறியருளியதாகக் கருடபுராணம் கூறுகிறது. அதனால், திருமாலால் கூறப்பட்ட இத்தகைய நரகங்களின் கொடுமையை மனதிற்கொண்டு, அவற்றிற்குக் காரணமான தீமைகளையும் பாவங்களையும் செய்யாமல், நன்னெறியில் ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளில் பணிந்துத் தூயவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். அதற்கு, அன்றாடம் நம் மனத்திடம் கூறிய வேண்டிய மந்திரச் சொல் "பாவம் செய்யாதிரு மனமே'!

-இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!