ஞாபகம் வருதே……



ஞாபகம் வருதே……
டிசம்பர் மாதம் வந்தால் எழுத்துலக மாமேதை திரு.விக்கிரமன் அவர்களின் நினைவு வந்துவிடுகிறது. சென்ற ஆண்டு, சரித்திர நாவல் சிற்பி திரு விக்கிரமன் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் பலருடைய மனத்தை விட்டுப் பிரியாதவர். பாவம், அவருடைய இறுதி ஊர்வத்தில்கூட கலந்து கொள்ளமுடியாத நிலை (மழை வெள்ளத்தில் சென்னையே தத்தளித்துக் கொண்டிருந்த நேரம்..) பலருக்கும். அதில் நானும் ஒருத்தி. 



அவர் மனைவி (திருமதி ராஜலட்சுமி அவர்களை நான் மாமி என்றுதான் அழைப்பேன்) அவர் இல்லம் செல்லும் போதெல்லாம்,  அன்போடு என்னை வரவேற்று, பலமுறை காப்பி பருகத் தந்தவர். அவரைப் பார்த்துகூட ஓர் ஆறுதல் வார்த்தை கூறமுடியவில்லை. எல்லாம் விதியின் சதியல்லாது வேறென்ன… 


சமீபத்தில் ஒரு நாளிதழின் தீபாவளி மலரை விமர்சனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது, அதில் திரு விக்கிரமன் சாரின் மனைவி திருமதி ராஜலட்சுமி விக்கிரமனின் “ஆடும் குதிரை” என்கிற சிறுகதையைப் படித்துவிட்டு இது அவர்தானா என்று அசந்தே போனேன். இவருக்குள் இப்படியொரு திறமை இருந்தது ஏன் இத்தனை ஆண்டுகளாக வெளியே எட்டிக்கூடப் பார்க்கவில்லை…. கணவருக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்கிற பணிவா… தன்னடக்கமா…. தெரியவில்லை. அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அந்தக் கதை மிகவும் அருமை… அருமை…. உணர்ச்சிபூர்வமான கதை. இந்த நேரத்தில் இதை நான் பதிவு செய்வதற்குக் காரணம் இருக்கிறது. 


ஒருமுறை (2010 அல்லது 2011 ஆம் ஆண்டு என நினைவு) சிறீராம் சிட்ஸ்(Sriram cits) நடத்திய மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவில் இரு முறை கலந்து கொண்டேன்) நடந்த மாணவர் பேச்சு போட்டிக்கு என்னை நீதிபதியாக (ஜட்ஜஸ் குழுவில் ஒருவராக) நியமித்திருந்தார் விக்கிரமன் அவர்கள். அந்த நாள் மறக்க முடியாத நாள். அன்று பேச்சுப் போட்டியில் நீதிபதிக் குழுவினர் (நாங்கள்) தேர்ந்தெடுத்த ஓர் இளம் பேச்சாளர், துடிப்பான பேச்சாளர், பரிசை வென்ற பேச்சாளர்…. வழக்குரைஞர்  திருமதி சுமதி அவர்களின் செல்ல மகள். மீன் குஞ்சுக்கு நீந்தவாக் கற்றுக்கொடுக்க வேண்டும்….! இரு நிகழ்வின் நிழற்படமும் இதில் உள்ளன.





அந்நிகழ்வின் தொடக்கத்தில் அவரோடு அமர்ந்து அளவளாவிய போது திரு.விக்கிரமனின் முகத்தில் இருந்த பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் கண்டு ரசித்தேன். அவரை இனி நாம் எங்கே… எப்போது…. காணப் போகிறோம். ஆனால், சரித்திர நாவல்களின் சரித்திரம் சொல்லும் அவருடைய சாதனைகளை…. நினைவுகளை….


 தினமணி தமிழ்மணியில் அவர் தொடர்ந்து எழுதிய எழுத்துச் சிற்பிகள் – தமிழ் உள்ளவரை வாழும். ஆண்டுதோறும் எட்டபுரத்தில் மகாகவி பாரதியாருக்கு விழா எடுத்த அந்தப் பெருமகனார்….. மகாகவி பாரதியோடு கைகோர்த்துக் கொண்டுவிட்டாரோ….. மகாகவி பாரதியின் பெயர்சொல்லும் காலம் வரை திரு விக்கிரமனின் பெயரும் வாழும்.

வழிகாட்டியாக இருந்த திரு விக்கிரமன் அவர்களே… சென்ற ஆண்டு என் தாய் இறந்த சோகத்திலிருந்து நான் மீண்டு வருவதற்குள் உங்கள் மறைவு என்னை மேலும் சோகமாக்கியது…. உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும். எழுத்து எழுத்து என்று எழுத்தித் தள்ளிய - குவித்த உங்கள் விரல்கள் நீண்ட ஓய்வெடுக்கட்டும்… நீங்கள் என்னிடம் பேசியது, என்னை என் தாயின் முன்பு பெருமைப்படுத்தியது, எனக்குப் பிடித்த நூல்களை வழங்கியது எல்லாம் நினைவில் ஊசலாடிக் கண்ணீராய் அஞ்சலி செய்ய வைக்கிறது. 

கண்ணீர்த் துளிகளுடன்
இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!