தினமணி சிறுவர் மணி... மதி இழந்த மந்தி!

தினமணி சிறுவர் மணி...13.5.2017
மதி இழந்த மந்தி!



-இடைமருதூர் கி.மஞ்சுளா



÷அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை.
"கதைத் தாத்தா வந்தாச்சுடா....' என்ற குரல் கேட்டதும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் அனைவரும் "திடுபுடு திடுபுடு' என்று ஒலி எழுப்பியபடி மாடிப் படிகளிலிருந்து இறங்கி, குடியிருப்பின் கீழே ஆஜராகி விடுவார்கள்.

""ஒரு ஊர்ல ஒரு....'' என்று அந்தத் தாத்தா ஆரம்பித்ததும் சிறுவர்கள் அனைவரும் "வாவ்வ்வ்வ்'' என்று உற்சாகக் குரல் கொடுப்பார்கள்.
÷ அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் வசிக்கும் மீனாவின் தாத்தா கிராமத்திலிருந்து சென்னை வந்து இரண்டு வாரங்களாகின்றன. மீனாவின் பாட்டி இறந்தபிறகு, தாத்தாவை கவனித்துக் கொள்ள யாருமில்லை என்பதால் மீனாவின் அம்மா, அவரைச் சென்னைக்கே அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்துவிட்டார். தாத்தா ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியர்.

÷ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் அந்தக் குடியிருப்பின் அருகே இருக்கும் சிறு சிமெண்ட் பெஞ்சுகளில் அங்கு வசிக்கும் சிறுவர்கள் அனைவரையும் அமரவைத்து விடுவார். கர்ண பரம்பரைக் கதைகள், அந்த வாரத்தில் உலகில் நிகழ்ந்த அதிசய, அற்புத நிகழ்ச்சிகள், சிறுவர் பத்திரிகைகளில் வெளியாகும் சுவாரசியமானச் செய்திகள், துணுக்குகள் போன்றவற்றைக் கூறுவார். அவர்களைச் சிந்திக்கவும் வைத்து, வாழ்க்கைக் கல்வியும் புகட்டுவார்; நேரத்தையும் பயனுள்ளதாக ஆக்குவார். அச்சிறுவர்கள் அவரை "கதைத் தாத்தா' என்றே அழைத்தார்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் சிறுவர்கள் ஆவலோடு அவரை எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.

÷அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கம் போல கதை கேட்கும் சிறுவர்கள் கூட்டம் தாத்தாவைச் சூழ்ந்து கொண்டது.
÷தாத்தா கதை சொல்லத் தொடங்கினார்.

÷""ஒரு ஊர்ல ஒரு காடு. அந்தக் காட்டில் ஒரு அடர்ந்த மரம் இருந்தது. அந்த மரத்தில் பல பறவைகள் கூடுகட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தன. ஆனால், அவைகளின் மகிழ்ச்சி வெகுநாட்களுக்கு நிலைக்கவில்லை. காரணம், அந்த மரத்திற்கு தினமும் தன் இரண்டு சிறு குட்டிகளோடு வந்த மந்தி ஒன்று அந்தப் பறவைகளின் கூட்டைப் பிரிப்பதும், அங்கு கூடுகட்டி வந்த தூக்கனாங்ககுருவிப் பறவைகளைக் கூடுகட்ட விடாமல் துரத்துவதும், முட்டைகளைத் தின்பதுமாக வம்பு செய்து வந்தது. இதனால் அங்கு வாழும் பறவைகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தன; மிகவும் துன்பப்பட்டன.
÷ஒரு நாள் தன் இரண்டு குட்டிகளில் ஒரு குட்டியைக் காணாமல் மந்தி அங்கும் இங்கும் தேடி அலைந்து கொண்டிருந்தது. குட்டியை இழந்த கோபத்தில் அன்று பறவைகளை அதிகமாகத் துன்புறுத்தியது. ஆனாலும், அப்பறவைகள் தன் குட்டியைப் பிரிந்த வருத்ததில் இருக்கும் அந்த மந்தியின் மீது கோபப்படாமல் இரக்கப்பட்டன.

÷இப்படியே இரண்டு நாள்கள் சென்றுவிட்டன. ஒரு நாள் அந்த மந்திக் குரங்கு வருத்தத்தோடு அந்த மர நிழலில் ஒரு பக்கமாக தன் ஒரு குட்டியை அணைத்தபடி சோகமாக உட்கார்ந்திருந்தது.
÷அப்போது அம்மரத்தில் வாழ்ந்து வந்த, மந்திக் குரங்கால் பாதிக்கப்பட்ட ஒரு தூக்கனாங் குருவி, காணாமல்போன அந்தக் குரங்குக் குட்டியை துணி போன்ற ஏதோ ஒன்றில் சுற்றி, அதை தன் மூக்கால் மெதுமெதுவாக இழுத்துக்கொண்டு வந்து மந்தியின் முன்னே வைத்தது.
÷அந்தத் துணிக்குள் சோர்வாகப் படுத்திருந்த அந்தக் குட்டிக் குரங்கு மெல்ல தட்டுத் தடுமாறி எழுந்து தன் தாயிடம் செல்ல முயற்சி செய்தது. இதைப் பார்த்த மந்தி, தன் குட்டி கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், அடுத்த நொடியே அந்தத் தூக்கனாங் குருவியைப் படக்கென்று தன் ஒரு கையால் கோபத்துடன் பிடித்து, ""நீதானே என் குட்டியை இரண்டு நாளாய் எங்கேயோ ஒளிச்சு வச்சிருந்தே, உன்னை என் கையாலேயே நசுக்கிக் கொல்கிறேன் பார்'' என்று கூறி அதன் இறக்கைகளைப் பிரித்து எறியப்போனது. மந்தியின் பிடியில் சிக்கித் தவித்த அந்தக் குருவி நடுநடுங்கிப் போனது.

÷அப்போது, அந்தக் குட்டிக் குரங்கு மெல்லிய குரலில், ""அம்மா, அதை ஒன்னும் செய்யாதீர்கள்! அந்தக் குருவிதான் என்னைப் பிடிக்க வந்த ஒரு வேடனிடமிருந்து காப்பாத்தியது! அது மட்டும் என்னைக் காப்பாற்றவில்லை என்றால், வேடன் என்னைக் கொன்றிருப்பான்.....அல்லது பிடித்துக்கொண்டு போயிருப்பான்! அது நல்ல குருவி! இரண்டு நாள்களாக என்னைப் பாதுகாத்து, எனக்கு உணவளித்தது. என்னைத் தூக்க முடியாததால், தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு என்னை இங்கே இழுத்துக் கொண்டு வர இரண்டு நாள்கள் ஆகியுள்ளது. பாவம், அதை விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சியது.




÷தன் குட்டியை வாரி அணைத்து தன் முதுகில் ஏற்றிக்கொண்ட மந்தி, "உண்மை என்னவென்று தெரியாமல், கோபத்தில் மதியிழந்து என்ன காரியம் செய்யத் துணிந்துவிட்டேன்!' என்று நினைத்த மந்தி, அந்தக் குருவியைப் பார்த்து தலை குனிந்து நின்றது. உடனே தன் கைப்பிடியில் சிக்கியிலிருந்த குருவியை மெதுவாகக் கீழே இறக்கிவிட்டது! அடுத்த நொடி அந்தக் குருவி தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்து சென்று மரத்தின் கிளையில் போய் அமர்ந்து கொண்டது. இதைப் பார்த்த மற்ற பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியில் கூச்சலிட்டன!

÷மறுநாள் பொழுது விடிந்ததும் அந்தப் பறவைகள் எல்லாம் மரத்தின் அடியில் கூடிக் கூச்சலிட்டபடி  இருந்தன. காரணம், அங்கே சில பழங்களும், தானியங்களும் இருந்தன. ஆனால், மந்தியையும் அதன் இரு குட்டிகளையும் வெகு நேரமாகியும் காணவில்லை.
  பறவைகளுக்கு மந்தி தான் செய்த தீமைக்கு பதில் பறவைகள் செய்த நன்மைக்காக, தன் நன்றியை அந்தப் பழங்களின் மூலமும், தானியங்களின் மூலமும் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது என்பதைப் பறவைகள் புரிந்து கொண்டன. அன்றிருந்து பறவைகள் மீண்டும் கூடுகட்டி தன் குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழத்தொடங்கின.'' என்று கதைத் தாத்தா கதையை கூறிமுடித்தார்.

÷""குழந்தைகளே! இன்று நான் சொன்ன கதையிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? இக்கதைக்குப் பொருத்தமாக திருவள்ளுவர் ஒரு குறளை வைத்திருக்கிறாரே... யாருக்காவது நினைவிருக்கிறதா?''
""இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
 நன்னயம் செய்து விடல்''

என்று கடகடவென்று ஒப்பித்தாள் ரோஸி.

÷""இன்னிக்கு நீங்க கேட்ட கதை மூலம், உங்களுக்குத் துன்பம் செய்கிறவர்களுக்கு நீங்க பதிலுக்கு என்ன செய்வீங்க?'' என்று தாத்தா கேட்டதும், அனைவரும் ""நல்லது செய்வோம்'' என்று ஒருசேரக் குரல் கொடுத்தனர்.

÷""சரியாகச் சொன்னீங்க. பழிக்குப் பழி என்றைக்கும் கூடாது. தீமையை நன்மையாலேயே அழிக்க முடியும். சரி பசங்களா... அடுத்த வாரம் பார்க்கலாமா...'' என்று கிளம்பினார் கதைத்தாத்தா.

-இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

  1. சரியான நீதிக்கதை. இக்காலகட்டத்திற்குத் தேவையானது. நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!