கலித்தொகையில் கற்புநெறி!



கலித்தொகையில் கற்புநெறி!

-மணிவாசகப்பிரியா
By- இடைமருதூர் கி.மஞ்சுளா 

(தினமணி - தமிழ்மணி 14.5.2017)



÷"கற்பு' என்பதற்கு அகராதியில் கல்வி, அறிவு, முல்லைக்கொடி, கதி, மகளிர் கற்பு, ஆணை, தியானம் எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இங்கு மகளிர் கற்பு குறித்து காண்போம்.

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்'
(6-4)

என்று வியந்து போற்றினார் வள்ளுவப் பெருந்தகை. "பெண்ணின் பெருமை' பேசியவர் திரு.வி.க. "புதுமைப் பெண்'களைப் படைத்துக் காட்டியவர் மகாகவி பாரதியார். பெண் குழந்தைகள் பற்றி சிறப்பாகப் பாடிவைத்தவர் பாரதிதாசன். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதன்முதலில் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர். இப்படி எத்தனையோ அறிஞர்களும் கவிஞர்கள் பெண் பிறவியைப் பெரும் பிறவியாகப் போற்றியுள்ளனர்.

÷ஔவையார், காரைக்கால் அம்மையார், சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எனப் பலரும் தம்முடைய பாடல்களில் ஒழுக்கம், கற்பு நெறி போன்றவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதியதன் காரணம், "கற்பு ஒன்றுதான் பெண்ணுக்கு அணிகலன்' என்பதால்தான். அதை இருவருக்கும் (ஆண்-பெண்) பொதுவாக்குவோம் என்றார் மகாகவி பாரதி.

÷"கற்பெனப்படுவது சொல் திறம்பாமை' (கொன்றை வேந்தன்) என்றார் ஔவையார். கற்பு எனப்படுவது, தன்னையே முழுதுமாகச் சார்ந்துவிட்ட கணவரது சொல் மீறாத நிலையாகும். தொல்காப்பியரும் திருமணச் சடங்கு (கற்பியல்-நூ.1) கூறுமிடத்துக் கற்பு குறித்து விளக்கியுள்ளார். மேலும், வாயில்கள் கூற்றாகவும் (தொல்.11- 1098) கூறியுள்ளார். கற்பிலா மகளிர் பற்றி நீதிநெறி விளக்கத்தில், குமரகுருபரர் இரு பாடல்களில் (81,82) கூறியுள்ளார். இத்தகைய பாடல்களின் மூலம் இல்லறம் காக்கும் பெண்ணுக்குக் கற்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.



÷பெண் எத்தகைய விலைமதிக்க முடியாத அணிகலன்களைப் புனைந்திருந்தாலும் "கற்பு' எனும் மிகப்பெரிய அணிகலன் ஒன்றே அவளுக்குப் பெருமையும் சிறப்புமாகும் என்பதை "பெண்ணின் பெருமை'யில் திரு.வி.க., விரித்துரைப்பார். ""கற்பாவது தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்'' என்கிறார் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். நூ-57). இவ்வாறு இலக்கியங்கள் பலவற்றுள்ளும் "கற்பு' வலியுறுத்தப்பட்டுள்ளது.

÷ "கற்றறிந்தார் ஏத்தும் கலி'த்தொகையில், மகளிர்தம் கற்புநெறி பலவாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ""கற்பு என்பது மகளிர்க்கு மாந்தர்மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி, அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது என்றும், ""கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும் களவு வெளிப்படாத வழியும் கொள்ளப்பெறும் எனக் கொள்க'' என்பதும் இளம்பூரணர் (தொல்.பொருள், நூ.51,1) உரை.

÷கலித்தொகை, பாலைக்கலியின் முதல் பாடலிலேயே கற்பின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. பொருள்தேடும் பொருட்டு பிரிந்து செல்லப்போகும் தலைவனிடம், ""மறப்பருங் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந்தனர்'' (பாலை1:9-10) என்று தலைவியின் நிலையைத் தோழி எடுத்துக்கூறிச் சாடுகிறாள்.

÷உலகமே வறட்சியில் துன்பப்படும் காலத்தும், மழையைப் பெய்விக்கும் கற்புத்திறம் (சக்தி) உடையவள் இவன் மனைவி என்று கூறுவதை, ""வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்'' (பாலை.16:20) என்பதால் அறியமுடிகிறது.

÷தலைவியின் கற்பின் சிறப்பை, "மலைவாழ் மகளிர் கணவனைத் தொழுதெழும் கற்பு மேம்பாடுடையவர்கள்' என்பதைத் (குறிஞ்சி.3:15-19) தோழி விளக்குவதாக ஒரு பாடல் அமைந்துள்ளது.

÷மேலும், தலைவியின் கற்பு மேப்பாட்டினை பாலைக்கலியில், ""தொல்லியல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்'' (1-17) என்றும், ""வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்'' (1-21) என்றும் தோழி கூறுவதிலிருந்து தலைவி நிலைபெற்ற கற்புடையவள் என்பதும், வடமீனைப் போல பலரும் தொழுது போற்றும் உயர்ந்த கற்புடையவள் என்பதும் பெறப்படுகிறது.

÷கற்பிற் சிறந்தவளான அருந்ததியை (அருந்ததி நட்சத்திரம்)திருமண நாளன்று வேதம்வல்ல அந்தணர், மணமக்களை அழைத்து "அதோ வானில் தெரியும் அருந்ததியைப் பார்த்து வணங்குங்கள்' என்று கூறுவது மரபு. அவ்வந்தணர், தலைவனையும் தலைவியையும் "தீ'யை வலம் வருமாறு கூற, காதலனும், தலை கவிழ்ந்தவளாகக் காதலியும் வலம்வரும் கற்பு நெறியில் தலைப்படும் காட்சியை,

""காதல்கொள் வதுவைநாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர்கொள் மான்நோக்கின் மடந்தைதன் துணையாக
ஓதுடை அந்தணன் எரிவலம் செய் வான்போல்''
(மருதம் 4:3-5)
÷
என்று மருதக்கலி குறிப்பிடுகிறது. கபிலர் குறிஞ்சிக்கலியில் தலைவியை, ""அருமழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே' (3:6)' என்று குறிப்பிடுகிறார். மேலும், "தலைவியின் காதல் நெஞ்சுக்கு மாறாகத் திருமணம் நடக்குமானால், வள்ளிக் கொடியில் கிழங்கு கீழே விழாது; மலைமுகட்டில் தேன்கூடுகள் உண்டாகாது; தினைக் கொல்லையிலும் கதிர்கள் வளமாகத் தோன்றாது' (3:11-14) என்று தலைவியின் கற்பின் சிறப்பை தோழி எடுத்துக் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.


÷இவை தவிர, பாலைக்கலி (8:22; 16:20; 17:5-22), குறிஞ்சிக்கலி (3:11.14; 15-19; 4:1-3; 18:16-20), மருதக்கலி (13:19-20), முல்லைக்கலி (2:221-24; 3:60-64; 4:73-76; 7:20-23; 25: 64-66) முதலியவற்றில் உள்ள பிற பாடல்கள் மூலமும் கற்புநெறி (கலித்தொகையில்) பலவாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
÷பெண்மணிகளே! வள்ளுவர் வியந்து கூறியதுபோல கிடைத்தற்கரிய இந்த மானுடப் பிறப்பில், அதுவும் பெண் பிறப்பில் கற்புநெறி காப்பதே "பெண் குலத்துக்குப் பெருமையாம்' என்னும் தமிழர் பண்பாட்டு மரபை  உணருங்கள்; உங்கள் தலைமுறையினருக்கும் உணர்த்துங்கள்.

-மணிவாசகப்பிரியா


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!