மதுரைக் காஞ்சி - சங்ககாலத் திரைப்படம்

    சங்ககாலத் திரைப்படம்

By -இடைமருதூர் கி.மஞ்சுளா
 ஓவியம் - டி.என். ராஜன்

த்துப்பாட்டு நூல்களுள் ஆறாவது பாட்டாகத் திகழ்வது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி. இதன் பாட்டுடைத் தலைவன்  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.  3ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையை ஆண்ட இப்பாண்டிய மன்னனுக்கு நிலையாமைப் பொருளுணர்த்த எழுந்த இயக்கியம் இது. திணை - காஞ்சி.   காஞ்சித்திணையாவது நிலையாமையைக் கூறுவது. பத்துப் பாட்டினுள் மிகப்பெரிய பாடல் (782) இது ஒன்றுதான்.
    உலகில் நிலையாமை ஒன்றுதான் நிலையானது என்று கூறுவர்.   காஞ்சித்திணை பொதுநிலையில் நிலையாமை பற்றிக் கூறி, அதனால் நிலைபேறுடைய செயல்களைச் செய்க என்று கூறுவது. இது பெருந்திணைக்குப் புறனாக அமைகிறது என்பதைத் தொல்காப்பியம்,  "காஞ்சிதானே பெருந்திணைப் புறனே' (தொல்.1023) என்கிறது.  காஞ்சித் திணையின் விளக்கத்தைத் தொல்காப்பியம் இவ்வாறு கூறுகிறது:

    பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
    நில்லா உலகம் புல்லிய நெறித்தே
(தொல்.1024)

ஒப்பற்ற சிறப்புடன், பல வழியாலும் நிலையற்ற உலகத்தைப் பற்றிய அடிக்கருத்துகளை உடையது இது.  வாழ்க்கையின் போர்க்கள நிலையாமைகளைக் கூறி, நிரந்தரமான புகழைப்பெற போரைவிட்டு அறச்செயல்களை மிகுதியாகச் செய்யுமாறு மாங்குடி மருதனார் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார்.
     அதுமட்டுமல்ல,  கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் இருந்த மதுரை மாநகர், மதுரையின் வாழ்க்கை முறையைக் காலை முதல் மூன்றாம் யாமம்  வரை தொடர்ச்சியாக எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நமக்கு ஒரு திரைப்படம்போல காட்சிப்படுத்தியுள்ளார் சங்ககால இயக்குநர் மாங்குடி மருதனார்தான்.
      மாங்குடி மருதனார் மிகச் சிறப்பாகப் பாடலியற்றும் ஆற்றலால் பாண்டியன் நெடுஞ்செழியன் இவரை தம் அவைக்களப் புலவர்களுள்  தலைமைப் புலவராய்  வைத்திருந்தான்.  மேலும் இப்புலவர்  பாண்டியன் நெடுஞ்செழியனாலேயே பாராட்டும் (புறம்.72)சிறப்பிற்குரியவராய்த் திகழ்ந்திருக்கிறார்.
    இளம் வயதிலேயே அரசுக்கட்டில் ஏறியதால்,  பகைவர் இவன் இளையன் என எள்ளி நகையாடியுள்ளனர். அவ்வாறு கூறிய அவர்களை வெல்வேன், இல்லையெனின் இவ்வாறு ஆகுவேன் என்று வஞ்சினம் கூறுகிறான்.  அந்தப் பாடல் புறநானூற்றில் 72ஆவது பாடலாக உள்ளது. அப்பாடலின் இறுதி நான்கு அடிகளில்தான், மாங்குடி மருதனாரின் சிறப்பைக் கூறியுள்ளான். மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் ஓர் அரசன் மட்டுமல்லன் புலவனும்கூட என்பதற்கு இப்பாடலே சான்றாகத் திகழ்கிறது.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை''
(புறம். 72, வரி; 13}16)


    பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன்; ஈடு இணையற்ற வீரன்; போர் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தவன். நால்வகைப் படைகளையும் நல்ல முறையிலே பெருக்கி வைத்திருந்தான். செல்வச் செருக்கால் உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்து விடக்கூடியவை என்பதை சற்று மறந்திருந்தான். இவனுடைய உற்ற நண்பராவும்,  அவைக்களத் தலைமைப் புலவருமாக  இருந்த மாங்குடி மருதனார்,  உலகத்து நிலையாமையைத் தம் மன்னனுக்கு உணர்த்த எண்ணினார்.
    அவனைப் பார்த்து முதலில்,  பொய்யறியாத அமைச்சர்களைக் கொண்ட பாண்டியர் பரம்பரையில் வந்தனே என்கிறார் புலவர்.   பிறகு  அவன் முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக் காட்டுகிறார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும் பாராட்டுகிறார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றையும் போற்றுகிறார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை அவன் சிந்தை மகிழும்படி எடுத்துக் கூறுகிறார். பின்னர்,  உன்னைப் போலவே இந்த உலகில் எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக,  செல்வர்களாக, கொடை மறவர்களாகச் சிறந்து வாழ்ந்தனர்.  அவர்கள் தம் எண்ணிக்கை கடலின் குறு மணலினும் பலராவர். புகழ்பட வாழ்ந்த அவர்கள் அனைவரும் இறுதியில் மாண்டு போயினர்,  ஆதலால், நீ போர் செய்து புகழ் ஈட்டுவதை விட்டுவிட்டு, மக்களுக்கு நல்லறங்களைச் செய்து, நிலையில்லாத இந்த உலகத்தில் நிலைத்த புகழைப் பெறவேண்டும் என்றார்.

மதுரைக்காஞ்சியின் அமைப்பு
    மதுரைக் காஞ்சி 782 வரிகளைக் கொண்ட நெடிய பாடல்.  இதன் அமைப்பைக் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். 1 முதல் 205- வரிகள் - பாட்டுத்தலைவன் பாண்டியனின் பரம்பரை, குலப்பெருமை, குடிப்பெருமை,  வெற்றிச் சிறப்பு, நால்வகைப்படை,  நிலந்தரு திருவிற் பாண்டியனின் சிறப்பு,
    206 முதல் 237- வரிகள் - பாண்டிய நெடுஞ்செழியனுக்கு நிலையாமை அறிவுறுத்தல்.
238 முதல் 326 - வரிகள் முடிய - ஐவகை நிலவருணனை.  327 முதல் 724 - வரிகள் முடிய - மதுரை நகரின் அமைப்பு; அரண்மனை அமைப்பு; நால்வகைப்படை; பகலிரவுக் கடைகள்; திருவிழாக்கள்; மக்கள் பழக்க வழக்கங்கள்; பரத்தையர் வாழ்க்கை; மதுரையின் சிறப்பு.  332 முதல்  342 வரை வையை ஆறு, அங்கு அமைந்திருக்கும் பாணர் இருக்கை.


 வையை ஆறு

 (வையை ஆற்றின் இரு கரைகளிலும் பூக்கள் நிறைந்த மரங்கள், அந்தப் பூந்தாதுக்கள் வையை ஆற்றில் விழுவதால் அவை வையை ஆற்றுக்கு மாலை போல் இருந்தது என்கிறார். இன்று வையை ஆற்றில் நீரும் இல்லை மணலும் இல்லை).

      343 முதல்  370 வரை - அரண்மனைகள், அகழி, மதில், வாயில், கடைத்தெருக்கள்,  ("ஆறுகிடந் தன்ன அகல் நெடுந் தெருவில்' என்கிறார். (ஆறு போன்று கிடந்த அகன்ற நீண்ட தெருவில் இரு பக்கங்களிலும் பல கூறுகள் பெற்ற வான்வரை உயர்ந்த காற்று இசைபோல் தவழ்கின்ற பல சாரளங்களையுடைய நல்ல வீடுகள் இருந்தன).  375 முதல்,  430 வரை - நால்வகைப்படைகள்,  பல்வேறு பொருள்கள் விற்போர், மனைதோறும் மலர்விற்கும் மகளிர்,  பகல் கடைகளின்(நாலங்காடி) போரொலி.
    431 முதல் 589 வரை, செல்வர் செயல், செல்வப் பெண்டிர் நிலை,  அந்திக்கால பூஜை (சிவன் தலைவனாகிறான்), பெüத்தப் பள்ளி, அமண் பள்ளி, அறங்கூறு அவையம், வணிகர் தெரு, நாற்பெருங் குழுவினர். (நான்மொழிக் கோசர்),  பல்வேறு தொழில் செய்வோர், வணிகர்,  இதனால் ஏற்படும் பேரொலி,  உணவு வகைகள், அந்திக் கடைகளின் ஆரவாரம் மாலைக்காலம், குல மகளிர் செயல், வரைவில் மகளிர் (பரத்தையர்), அவருடைய செயல்கள்.
    590 முதல் 585 வரை-  ஓண நாளில் யானைப்போர் (திருமால் பிறந்த ஓண நன்நாளில் மறவர்கள் யானைப்போர் செய்வர்), மகவு ஈன்ற மகளிர் குளத்தில் நீராடுதல், கடுஞ்சூல் மகளிர் கடவுளை வழிபடுதல்,  வெறியாட்டுக் குரவைக்கூத்து, இடைச்சாமம்,(இரண்டாம் யாமம் -நள்ளிரவு)  பேய், அணங்கு, கள்வர்,  இக்கள்வரை இமைக்கும் நேரத்தில் அவர் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் ஒற்றர், ஊர்க்காவலர்).  வைகறையில் அந்தணர்கள் வேதம் ஓதுவர், வைகறை நிகழ்ச்சிகள் (மருதப்பண் பாடினர்), பெண்டிர் செயல், காலை நிகழ்ச்சிகள், ஊடல் மகளிர் செயல்.  686 முதல் 727 முதல் 752 - மதுரை நகரின் வளமும் பெருமையும், (தேவருலகம் போன்ரறு பொலிவுற்று, மதுரை மிக்க புகழையும் கொண்டது), இல்லற இன்பம், பாண்டியன்  தோற்றம், வீரர்கள், மன்னனை வாழ்த்துதல், கொடைச் சிறப்பு)
    753 முதல் 782 - வரிகள் முடிய - புலவர்  மன்னனை வாழ்த்துதலும்; உலகப் பற்று விடுத்து (மெய்ப்பொருள் உணர்க) வீட்டு நெறியைக் காட்டுதலும் எனப் பகுத்துக் காணலாம்.
    நிலந்தரு திருவிற் பாண்டியன் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவன், மிகுந்த புகழை உடையவன். இவன் அவையில்தான் தொல்காப்பியம் அரங்கேறியது. அவன் பழைமையும், தொன்மையும், தமிழின் பெருமையையும் நன்று உணர்ந்த தொல்லாசிரியர் பலருடன் கூடி மெய்யுணர்வைப் பெற்றவன். அதுபோன்று நீயும் பெறுக என்கிறார். போரினால் கிடைக்கும் புகழை விடுத்து, அறஞ்செய்து புகழ் ஈட்டுவது ஒன்றே இம்மைக்கும் மறுமைக்கும் நிலையானது என்பதை உணர்க என்று உலக நிலையாமையை எடுத்துக்கூறியுள்ளார்.

 இவ்வாறு  3ஆம் நூற்றாண்டின் இறுதியிலே,  இன்றைய இயக்குநர்களுக்கெல்லாம் முன்னோடியாக, இசையமைப்பாளராக,  வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக,
ஒலிப்பதிவாளராக  திரைத்துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி,  அன்றைய மதுரை மாநகரைக் காட்சிப்படுத்தியுள்ளார் மாங்குடி மருதனார். 

 
     நிலையாமை குறித்து இலக்கியங்கள் பலவும் பேசுகின்றன. அவற்றுள் முதன்மையானது,  நாலடியார்(15, 19,, 21, 22) அடுத்து மதுரைக் காஞ்சி.  ஒüவையாரும்(மூதுரை, நல்வழி)  பாடியிருக்கிறார்.

மதுரைக் காஞ்சியின் பெருஞ்சிறப்பு
    ஒரு நாட்டுக்குக் கட்டாயம் (அவசியம்) இருக்க வேண்டிய நாடு, நகரம், மதில் அரண், அரசு, மக்கள், தொழில், கலை, பண்பாடு, நாகரிகம்,  சான்றோர் அவையம் என்று  அனைத்தையும் கூறியிருப்பதுதான் மதுரைக் காஞ்சியின் சிறப்பு.




 
அன்றைய மதுரை மாநகரம் (ஆறுகிடந்தன்ன அகல நெடுந்தெரு இது)


    பழந்தமிழர் வாழ்க்கை முறை, சமுதாய அமைப்பு, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தன என்பதை அறிய முற்படுவார்க்கு உதவும்  ஒரு வரலாற்று ஆவணமாக அமைந்திருப்பது மதுரைக் காஞ்சியின் தனிச்சிறப்பு.
    சங்ககாலத் தமிழரின் வாழ்க்கை ஒரு பொற்காலம் என்பதற்கு மதுரைக்காஞ்சியே மிகப்பெரிய வரலாற்று சான்றாகத் திகழ்கிறது. மாங்குடி மருதனாரின் கவிக்கொடை தமிழுக்குக் கிடைத்த அருட்கொடையாகும்

-இடைமருதூர் கி.மஞ்சுளா


நன்றி
First published தினமணி - தமிழ்மணி 27.8.2017

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!