தினமணி கதிர் - சிறுகதை - அப்பாவின் ஆயுதம்



அப்பாவின் ஆயுதம் (சிறுகதை)


-By - இடைமருதூர் கி.மஞ்சுளா

"அம்மா' என்று கூறும்போதோ கூப்பிடும்போதோ எப்படி மனம் அன்பால் உருகிக் குதூகலிக்குமோ அதைப் போல "அப்பா' என்று கூறும்போதோ கூப்பிடும்போதோ மனம் ஏன் ஒருவித பயத்தால்  நடுநடுங்கி,  கூடவே அவரது பாசவலையில் கட்டுண்டு போகிறது? இதைப் பலமுறை நான் சிந்தித்ததுண்டு. இந்த அனுபவம் பலருக்கும் இருக்குமோ என்னவோ? கவிதை எழுதத் தொடங்கிய நாள் முதலாக, அப்பாவைக் குறித்த  பல எண்ணங்கள் இப்படி வந்துபோகும். என் நண்பர்களில் சிலர் சொன்னார்கள் "என்னோட அப்பா எங்கிட்ட பிரண்டாட்டமா பழகுவார்னு'.  அப்பாவை ஒரு நண்பனாக நினைத்து  ஏன் நம்மால் நெருங்க முடிவதில்லை என்ற கேள்வியும் அடிக்கடி எனக்குப் பிறக்கும்.
அம்மா, அப்பா, என்னோடு சேர்த்து வீட்டில் ஐந்து பேர். தங்கை கல்லூரி போயிருக்கிறாள்,  தம்பி ப்ளஸ்டூ போயிருக்கிறான்.  அப்பாவின் உலகம் கண்டிப்பானது.   தான் வேலை செய்யும் ஓர் அரசு அலுவலகம்தான் அவருக்கு எல்லாம்.   அநாவசியமாக யார் எதைக் கேட்டாலும் உடனே வாங்கித் தந்துவிடமாட்டார். மெüனம் சாதிப்பார்,  இல்லையென்றால் வாங்கித் தருவதைத் தள்ளிப் போடுவார். அப்படியே ஏதாவது கேட்டால்,  ஒரு பார்வை பார்ப்பார். அந்தப் பார்வையிலேயே நாம் கேட்க வந்ததை மறந்து போய் விடுவோம்.
அம்மாவின் உலகமோ சமையல் ûôன். அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தைகூட அவரிடம் இருந்து  எழாது.  அப்பா எதைச் செய்தாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்கும்,  காரணம் இருக்கும் என்று அவரை பரிபூரணமாக நம்புபவர். ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தான்   நான் வேலைக்குப் போகத் தொடங்கி இருக்கிறேன். அயராமல் உழைக்கும் அவருக்கு இனியாவது சிறிது ஓய்வு தரவேண்டும்  என்று தோன்றியது.  
கிட்டத்தட்ட ஒருவார காலமாகிவிட்டது  அப்பா வீட்டில் இருப்பவர்களிடம் முகம் கொடுத்துப் பேசி. அவர் பேசாமல் இருக்கிறார் என்றால், ஏதோ ஒரு பெரிய வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று பொருள்.  ஏதாவது பேசுவதாக இருந்தாலும் எழுத்தென்னித்தான் பேசுவார்.  மிகவும் கண்டிப்பானவர். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கை எதிர்பார்ப்பவர். தன்னுடைய  வேலைகளைத் தானே  செய்து கொள்வார்.  உடை விஷயத்தில் பரதேசி போல் இருப்பார். தனக்கென எதையும் வாங்கி அனுபவிக்க மாட்டார்.   நைந்துபோன சட்டையை நாலைந்து நாள் தொடர்ந்து பயன்படுத்துவார்.  "ஒரே சட்டையை ஏன் இத்தனை நாள்கள் போடுகிறீர்கள்' என்று அம்மா  கேட்டால், "எனக்கு எல்லாம் இது போதும்.  இந்த வயசுல  எனக்கென்ன அழகு வேண்டியிருக்கு? எல்லாம் இனி பசங்களுக்குத்தான்' என்பார்.
வீட்டு வேலைகள் போட்டது போட்டபடி கிடந்தால், ஒரு முறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பார். யாரும்  காதில் வாங்கவில்லை என்றால்,  மூன்றாவது முறை சொல்லமாட்டார்; செய்து முடித்துவிடுவார்.  அதைப் பார்த்து  நாம்  தலைகுனிந்தாக வேண்டும்.  அது பாத்திரம் தேய்ப்பதாக இருந்தாலும் சரி, வீடு பெருக்குவதானாலும், சரி, தோய்த்த துணிமணிகளை மடித்து வைப்பதாக  இருந்தாலும் சரி.  யார் என்ன தப்பு செய்தாலும் .. என்று கத்திக் கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டமெல்லாம்  செய்யமாட்டார். பேசாமல் இருந்துவிடுவார். அவரிடம் இருந்த அந்த ஆயுதமே நம்மைக் கொன்று போட்டுவிடும்.  அதுவே நமக்கு தண்டனை தரும். அங்கே அவருடைய "ஆயுதம்'தான் பேசும்.   மகிழ்ச்சியோ துக்கமோ எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். அவர் கண்கலங்கி நான் பார்த்ததேயில்லை.
அப்பா மிகுந்த கோபக்காரர்,  கண்டிப்பானவர்,  சர்வாதிகாரி,  கஞ்சன்   என்றெல்லாம் வீட்டில்  உள்ள நான் உட்பட எல்லோரும்  நினைத்துக் கொண்டிருந்தோம்.  அப்பா வீட்டில் இருந்தால் எல்லோரும் ஒருவித பயத்துடனேயே வலம் வருவோம்.   எல்லோரும் செயற்கையாக செயல்படுவதைப் போல் உணர்வோம்.  அவர் வெளியில் போய்விட்டார் என்றால்,  வீட்டில் உள்ள எலி, பூனைக்குக்கூட கொண்டாட்டம்தான்.
ஒருவாரமாக ஏதோ சிந்தனையில் இருக்கிறாரே.... யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை. வெளியே போகிறார், வருகிறார், சாப்பிடுகிறார், தூங்குகிறார்.  உடம்பு சரியில்லையா,  என்னவென்று தெரியவில்லையே,   பசங்க  ஏதாவது தப்பு செஞ்சிருப்பாங்களோ... என்னன்னு தெரியலையே... எப்படி அவரிடம் கேட்பது... என்று அம்மா குட்டிப்போட்ட பூனையாய்  தவியாய்த் தவித்தாள். எனக்குள்ளும் இத்தனை கேள்விகளும் இருந்தன. ஆனால் அப்பாவிடம் கேட்டால், "வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் என்னைக் கேள்வி கேட்கத் தொடங்கிட்டாயா? ' என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து  உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தேன்.
அப்பா,  பணி ஓய்வு பெற்று ஒரு மாதமாகிறது. காலையிலேயே வெளியே  கிளம்பி விடுவார். எங்கோ போவார் வருவார்.  எங்கே போகிறேன் என்று யாரிடமும் எதுவும் சொல்லமாட்டார். நேரத்துக்கு ஒழுங்கான சாப்பாடும் சாப்பிடுவதில்லை, தூக்கமும் இல்லை என்று அம்மாதான் வருத்தப்பட்டாள்.  நாள் முழுவதும் அலைந்து திரிந்துவிட்டு வீடுவந்து சே(சோ)ர்ந்தார்.  அவரை,  கடைவீதியிலும்,பேருந்து நிறுத்ததிலும் பார்த்த பக்கத்துக் குடியிருப்புக்காரர் ஒருவர்  என்னிடம் வந்து ஜாடைமாடையாக,  "உங்க அப்பா ரிடயர் ஆனபிறகு அவுத்துவிட்ட கன்னுகுட்டியாட்டமா  கண்டபடி ஊர் சுத்தறார் போலிருக்கே'  என்று சிரித்துவிட்டுப் போனார்.  அப்போது அவருக்குப் பதில் கூறமுடியாமல்,  அப்பாவின் ஆயுதத்தைப் பயன்படுத்தியபடி  நின்றேன்.
ஒரு நாள் அப்பா வீட்டுக்குள் மிகவும் சோர்வாக நுழைந்தபோது நான் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன்.  மிகப்பெரிய பெருமூச்சோடு வந்து ஈசிச்சேரில் சாய்ந்தார். "எதையோ சாதித்துவிட்டு வந்ததுபோல வந்து உட்காருகிறாரே... ஊர்சுத்தி' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.   அன்று  ஈசிச்சேரிலேயே படுத்துத்  தூங்கினார்.  மறுநாள்  கண் விழித்தபோது,  அம்மாவை  ஜாடை காட்டி அழைத்தார்.  அவர்  வந்ததும்,  தன் அருகில் இருந்த பையை எடுத்து,  அந்தப் பையிலிருந்து நான்கு கவர்களை எடுத்துக் கொடுத்தார். அதில் அப்பாவைத் தவிர எங்கள் நான்கு பேரின் பெயர்களிலும் பல லட்சங்களுக்கு ஒரு வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்த விவரம் இருந்தது. கூடவே,  ஒவ்வொருவர் பெயரிலும்  இருந்த தபால் நிலைய சேமிப்புக் கணக்கு புத்தகங்களையும் கொடுத்தார்.  ஒவ்வொருவர் கணக்கிலும் பல லட்சங்கள் இருந்தன. அத்துடன் ஒரு கடிதத்தையும், ஒரு கவரையும் என்னைப் பார்த்து ஜாடை காட்டி,  என்னிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு தலையணையை முட்டுக்கொடுத்து படுக்கையில் சாய்ந்து கொண்டார்.
"நம்ம பசங்க மேல நான் உசிரையே வச்சிருக்கேன்.  அவங்ககிட்ட நான்  மனசுவிட்டுப் பேசினால் எங்கே என் கஷ்டத்தையெல்லாம் வெளியே கொட்டிடுவேனோன்னு பயம். அதனாலதான் கண்டிப்பா நடந்துகிட்டேன்.  நான் இருந்தாலும் இல்லன்னாலும் நம்ம பசங்க யார்கிட்டேயும் போய் எனக்கு ஒரு ரூபாய் வேணுன்னு கைநீட்டிடக் கூடாது.  நம்மகிட்ட இல்லன்னா பட்டினி கிடக்கணுமே ஒழிய, அடுத்தவங்ககிட்ட போய் கைநீட்டி நிற்கக்கூடாதுன்னு  என்னோட அப்பா எனக்குச் சொன்ன மந்திரம் இது.  அப்படியொரு நிலை நம்ம பசங்களுக்கு வந்திடக்கூடாது. அதனாலதான் பிள்ளைகளுக்கு அநாவசியமா எதையும் நான் வாங்கித்தரதில்லை. அவர்களோட எதிர்கால வாழ்க்கை முக்கியமில்லையா? அப்படிக் கண்டிப்பா  இருந்ததுனாலதான்  என்னால  இவ்வளவு சேர்த்துவைக்க  முடிஞ்சுது




கண்டபடி அவங்க கேட்கிறதையெல்லாம் வாங்கிக்கொடுத்து பழக்கிட்டா.... அதுவே அவங்களுக்குப் பழகிப் போயிடும். சேமிக்கிற எண்ணமே வராது.  எனக்குப் பசிச்சாகூட பசங்கள விட்டுட்டு ஒருநாள் கூட நான் ஹோட்டல்ல போய் தனியா சாப்பிட்டது கிடையாது. நாளைக்கு "அப்பா எனக்கு என்னத்த வச்சிட்டு போயிருக்கார்னு' அவங்க கேட்டுடக் கூடாது. என் கடமையை நான் ஒழுங்கா செய்யனுமில்லையா.... அவங்களுக்கு   நான்  கண்டிப்பான அப்பனா இருந்திருக்கலாம். ஆனால் என் பிள்ளைகளோட கஷ்டமும் எதிர்காலத் தேவைகளும் தெரியாத அப்பன் இல்ல நான்... என் காலம் முடிஞ்சுடுச்சுன்னா, அதுக்கு வேண்டிய பணத்தையும் இந்தக் கவருல தேவையான அளவு  சேர்த்து வச்சிருக்கேன். இது என் இறுதிச்சடங்குக்குப் போதுமானதாகவே இருக்கும்.  தயவு செஞ்சு யாரிடமும் போய் எதுவும் கேட்டுவிடாதீர்கள். உங்கத் தாத்தா எனக்கு சொன்ன இந்த மந்திரத்தை மட்டும் மறந்துடாதீங்க பசங்களா.... பெரியவன் ரொம்ப நல்லா கவிதை எழுதறான். ஆனால் நான் அதைப் பாராட்டினால் அவனுக்குக் கர்வம் தலைதூக்கிடும்.... நல்லா எழுதறோங்கற கர்வம் வந்துடுச்சுன்னா அவன் கீழ்நிலைக்குப் போயிடுவான். அவன் மிகப்பெரிய உயரத்துக்குப் போய் நல்லா வாழணும். உங்க எல்லாரோட எதிர்காலமும் ரொம்ப நல்லா இருக்கும் பசங்களா.... கவலைப்படாதீங்க '
கடிதத்தைப்  படித்து முடிப்பதற்குள், அப்பா  பரிபூரண மெü நிலையை அடைந்திருந்ததை அம்மாவின் அழுகை உறுதிப்படுத்தியது. அப்பாவின் ஆயுதத்தின் வீரியம் அவர் அடங்கிபின்புதான் செயல்படத் தொடங்கியது. 
"அப்பாக்கள் நண்பனாக இல்லாமல்,  அப்பாக்களாக மட்டும் இருப்பதனால்தான் நாம் அவர்களுக்குப்  பிள்ளைகளாக இருக்க முடிகிறது' என்பது நினைவுக்கு வர,   தந்தைக்குத் தலைமகன்  செய்ய வேண்டிய கடமையைச் சரிவரச் செய்ய  கண்களைத் துடைத்துக்கொண்டு புறப்பட்டேன்.   
-இடைமருதூர் கி. மஞ்சுளா
தினமணி கதிர் - 19.11.2017

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!