சிறுவர் மணி - அமைச்சரின் செருக்கை அடக்கிய நெல்



அமைச்சரின் செருக்கை அடக்கிய நெல்!

-இடைமருதூர் கி.மஞ்சுளா

                வீரேந்திரன் என்றொரு மன்னன் "எழில்வனம்' என்ற நாட்டை ஆண்டு வந்தான். அவன் சிறந்த அரசாட்சி  செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தான். ஆனால், யார் எதைச் சொன்னாலும் அப்படியே அதை நம்பிவிடும் கள்ளம் கபடமற்ற அப்பாவியாகவும் இருந்தான்.  தன் மனம் மகிழும்படி யாராவது நடந்து கொண்டால்,   உடனே அவர்களுக்கு ஒரு பொன் முடிப்பை (பொற்காசுகள்) பரிசளித்து மகிழ்வான். 
                அவனது அமைச்சரவையில் சித்தன்னன் என்ற  தலைமை அமைச்சன் ஒருவன் இருந்தான்.  கல்வி கேள்விகளில் சிறந்தவன். பல கலைகளும் கற்றுத் தேர்ந்தவன். அவனிடம்,  கல்விச் செருக்கு சற்று அதிகமாகவே இருந்தது. எந்த ஒரு செயலைச் செய்தாலும் "இது என்னால்தான் நடந்தது, அதை நானே செய்து முடித்தேன், இந்தச் செயலுக்கு நான்தான் காரணம்' என்று எப்போதும் நான், நான் என்று தன்னை முன்னிலைப் படுத்திக்கூறி கர்வப்பட்டுக் கொள்வான்.
                அந்த அமைச்சரவையில் சிவகோமான் என்ற முதிய தலைமைப் புலவர் ஒருவர் இருந்தார்.   யார் எதைக் கூறினாலும், அலசி ஆராயும் திறன் படைத்தவர் அவர்.  அரசவையில் அவ்வப்போது சிறந்த அறவுரைகளையும், முதுமொழிகளையும் எடுத்துக் கூறி பலரையும் நேர்வழிப்படுத்தியும், நல்வழிப்படுத்தியும் வருபவர்.  ஆனால், இந்த சித்தன்னனின் செருக்கை மட்டும் அவரால் அடக்க தருந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  அதற்கான நேரமும் ஒருநாள்  வந்தது.
                ஒருநாள் மன்னருக்குப் பிடித்த மாதுளம் பழங்களை சில மூட்டைகளில் சேவர்கள் இருவர் உதவியோடு சித்தன்னன் அவையில் கொண்டுவந்து வைத்தான்.  பிறகு மன்னனைப் பார்த்து,  ""மன்னா! இந்த மாதுளம் பழங்கள்  உங்களுக்காக என்னாலேயே உருவாக்கப்பட்டன. என் வீட்டுத் தோட்டத்தில் நானே வைத்த மரத்தில்  விளைந்தவை இவை. உங்களுக்குப் பிடிக்கும் என்று நானே சிரமப்பட்டு இதை இங்கு கொண்டு வந்தேன்'' என்று கூறி, மன்னரின் பாராட்டுக்காகவும்,  பரிசுக்காகவும் காத்துக் கொண்டிருந்தான்.
                "நன்றி அமைச்சரே,  இவ்வளவு  பழங்களும் எனக்கேவா?'' என்று மன்னர் வியந்து, மகிழ்ந்து உடனே தன் அருகில் இருந்த ஒரு பொன்முடிப்பை எடுத்து அமைச்சர் கையில் கொடுக்கப் போனபோது,  தலைமைப் புலவர்,
                "மன்னா! சற்று பொறுங்கள். இந்தப் பணமுடிப்பு முழுவதும் இவருக்குச் சொந்தமானதல்ல. இதில் பலருக்கும் பங்குண்டு'' என்றார்.
                "என்ன, பலருக்குமா? இது என் தோட்டத்தில் விளைந்தவை. இதை நானே விளைவித்தேன், நானே இங்கு கொண்டு வந்தேன். முழுக்க முழுக்க என் ஒருவன் முயற்சியால் விளைந்தது இந்தப் பழங்கள். இதில் எப்படிப் பலருக்கும் பங்கிருக்கும்?'' என்று அமைச்சர் படபடப்புடன் கேட்டார்.
                "அரசே, இவர் பூமியில்  விதையிட்டதிலிருந்து இங்கு பழங்களைக் கொண்டு வந்ததுவரை  நடந்ததை ஒன்றுவிடாமல் மறைக்காமல்  சொல்லச் சொல்லுங்கள்'' என்றார் புலவர்.  மன்னரும் உடனே அமைச்சரைப் பார்க்க,  அமைச்சர் தயங்கியபடி கூறத் தொடங்கினார்.
                 "மன்னா, என் வீட்டுத் தோட்டத்தில்  மாதுளை விதைக்கலாம் என்ற எண்ணம் தோன்றயபோது அதை என் பணியாளர் ஒருவரிடம் கூறினேன். அவர்தான் மாதுளைச் செடியைக் கொண்டுவந்து நட்டார். பிறகு அவரும் அவர் மனைவியும் அந்தச் செடிக்கு நாள்தோறும் நீர் விட்டு, உரம் இட்டு வளர்த்தனர். அந்தச் செடி மரமாக வளர்ந்து நிறைய பழங்கள் காய்த்தவுடன்,  அவற்றை என் வீட்டுப் பெண் பணியாளர்கள் மூவரைக் கொண்டு பறிக்கச் செய்து மூட்டையாகக் கட்டச் சொன்னேன்.  பிறகு இந்த மூட்டைகளை இங்கு கொண்டு வர என்னிடம் மாட்டு வண்டி ஏதும் இல்லாததால், பக்கத்து  வீட்டில் வசித்த உழவன்  ஒருவனிடம் இருந்த வண்டியையும், மாடுகளையும்  தரச்சொல்லி,  இவற்றை வண்டியில் ஏற்றி வைக்குமாறும் அவனையே வண்டியை ஓட்டுமாறும் கூறினேன். பிறகு , என் பணியாளர் இருவர் அந்த வண்டியில் அமர்ந்து  இந்த மூட்டைகளைப்  பாதுகாப்புடன் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர்'' என்று கூறி முடித்தார் அமைச்சர்.
                 "அப்படியென்றால், நீங்கள் எதுவுமே செய்யவில்லை... மாதுளைச் செடி வைக்க வேண்டும் என்ற  எண்ணம் மட்டும்தான் உங்களுடையது,  உழைப்பு உங்களுடையது அல்ல,  அப்படித்தானே...'' என்றார் புலவர்.
                 "அது எப்படி? என்னால்தானே இத்தனையும் நடந்திருக்கின்றன.  நான் இல்லை என்றால் பழம் எப்படி காய்த்திருக்கும்?''
                 "செடியை நட்டதுடன், அதற்கு தினமும்  நீர்பாய்ச்சியும், உரம் இட்டும் பார்த்துக் கொண்டவர் உங்கள் பணியாளர்களான கணவன் } மனைவி இருவர். மாதுளைச் செடியில் இருக்கும் முட்கள் கைகளில் குத்தினாலும், அந்த வலியோடு கனிகளைப் பறித்து மூட்டைகளாகக் கட்டியவர் பணிப்பெண்கள் மூவர்.   வண்டி கொடுத்து உதவியதுடன் இந்த மூட்டைகளை வண்டியில் ஏற்றியும் இந்த வண்டியை ஓட்டி வந்தவரும்  ஒருவர். இந்த மூட்டைகளின் சுமையைச் சுமந்து கொண்டு வண்டியை இழுத்துவந்த மாடுகள் இரண்டு. இந்த மூட்டைகளைப் பாதுகாப்போடு இங்கு கொண்டுவந்து சேர்த்த பணியாளர்கள் இருவர். ஆக, 10 பேர் உங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஆனால், பலனை நீங்கள் ஒருவர் மட்டுமே அனுபவிக்க நினைக்கிறீர்கள்...  அவர்களுக்கும்தானே இந்தப் பொன் முடிப்பில் பங்கு உண்டு!   நான் சொல்வது சரிதானே மன்னா?'' என்றார் புலவர்.
                 மன்னரும் ""ஆம், ஆம், நியாயமான பேச்சு, தொடருங்கள் புலவரே, எனக்குக் கூட இது தோன்றவில்லையே....''
                 "அது எப்படி மன்னா, இந்த 10 பேருக்கும் பிரித்துத் தரமுடியும்? இதை நானே செய்தேன், என்னாலேயே இது நடந்தது'' என்று மேலும்  செருக்குடன் பேசினார் அமைச்சர்.
                "அமைச்சரே,  நான் கூறுவதை சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள்.  மன்னா, இந்த அவையில்,  நம் தமிழ் மூதாட்டி üவையாரின் மூதுரை பாடல் ஒன்றைப் பாடிக்காட்ட தாங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும்'' என்றார் புலவர்.
                ""தாராளமாகப் பாடுங்கள் புலவரே... அதற்காகத்தானே உம்மை அவையில் தலைமைப் புலவராக அமர்ந்தியிருக்கிறோம். செவிக்கு உணவு தாருங்கள்.... கேட்போம்....'' என்றார் மன்னர்.

"பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
 விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி
ஏற்ற கருமம் செயல்!''




வயலில் முன்னே முளைப்பது அரிசிதான் என்றாலும்,   உமி நீங்கிவிட்டால் அரிசி முளைக்காது. அரிசி விளைய உமி தேவை. அதுபோல,  வல்லமை உடையார்,  தாம் எடுத்த காரியத்தை யாருடைய துணையும்,  உதவியும் இல்லாமல்  செய்ய முடியாது என்று üவையார் கூறியுள்ளார் மன்னா! ஆனால், இந்த அமைச்சரோ... நானே செய்தேன், என்னால்தான் நடந்தது என்கிறார். என்ன வேடிக்கை பாருங்கள்!
                அமைச்சர் செய்த செயலுக்குப் பின்புலமாகவும்,  உறுதுணையாகவும் 10 பேர் இருந்துள்ளதை இவர் ஏனோ மறந்து விட்டார்.  இந்தப் பொன்முடிப்பில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று நான் கூறியது சரிதானே மன்னா...?  இல்லை... இல்லை... üவையார் சொன்னது  நியாயம்தானே மன்னா...?'' என்றார் புலவர்.
                ""சரியாகத்தான் üவைப்பாட்டி கூறியிருக்கிறார். அதை தக்க சமயத்தில் எடுத்துரைத்த உமது புலமை மெச்சுகிறேன் புலவரே... நல்லவேளை பலருக்கும் கிடைக்க இருந்ததை ஒருவருக்கே தர இருந்தேனே...என்ன மடமை இது!'' என்று கூறிய அரசர்,   ""இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் அமைச்சரே... இந்தப் பொன் முடிப்பை நீர் ஒருவர் மட்டுமே அனுபவிக்க ஆசைப்படுகிறீர்களா?'' என்றார்.
                ""இல்லை மன்னா! என்னை மன்னித்து விடுங்கள். என்னிடம் இருந்த செருக்கை  üவைப் பாட்டியும்,  இந்தப் புலவரும் அடக்கிவிட்டனர். எங்கள் 11 பேருக்குமே இதைப் பகிர்ந்து கொடுங்கள் மன்னா...'' என்று கூறி தலைகுனிந்து நின்றார் அமைச்சர்.
               
-          -இடைமருதூர் கி. மஞ்சுளா
தினமணி – சிறுவர் மணி 25.11.2017

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!