கண்ணன், கோபிகைகளின் உடைகளைக் கவர்ந்தது நியாயமா?



கண்ணன், கோபிகைகளின் உடைகளைக் கவர்ந்தது நியாயமா?
(தத்துவ விளக்கம்)

ஸ்ரீகிருஷ்ணன் செய்த லீலைகள் குறித்து பாகவதம் விரித்துரைக்கிறது. அவன் லீலைகள் ஒவ்வொன்றிலுமே ஒரு தத்துவம் உள்ளுறையாக மறைந்திருக்கிறது. இதை உணராத சிலர், பாலகோபாலனாக இருந்தபோது கண்ணன், கன்னிப் பெண்களான கோபிகைகளின்  உடைகளைக் கவர்ந்தது  (திருடியது) நியாயமா? இது ஓர் அவதாரப் புருஷன் செய்யக்கூடிய செயலா?   என்றெல்லாம் (தத்துவப் பொருள் உணராமல் - வஸ்திராபரண லீலை) கேட்கக்கூடும். சிலர் கேட்கவும் செய்கின்றனர். அந்தத் தத்துவம்தான் என்ன?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஓர் அந்தர்யாமி. அவர் ஒரு யோகேஷ்வரர். பக்தர்கள் உள்ளத்தில் இருப்பதை உள்ளவாரே உணரக்கூடியவர். தன்னை நாடி,  வேண்டியவர்களுக்கு வேண்டியவாறு வரமளிக்கும் வள்ளல்.  தன்னையே நெஞ்சத்தில் நிறைத்து வைத்திருக்கும் தீவிர பக்தைகளான கோபிகைகளின் வேண்டுதல்களையும், விருப்பத்தையும் அவர் நிறைவேற்றாமலா இருந்திருப்பார்?




பக்தர்கள் தங்கள் மன விருப்பப்படி கடவுளை எஜமானனாகவோ, நண்பனாகவோ, பிள்ளையாகவோ, காதலனாகவோ பாவித்து பக்தி செய்வது மரபு. இவை முறையே தாஸ்ய பக்தி, சக்ய பக்தி, வாத்சல்ய பக்தி, மதுர பக்தி அல்லது தாம்பத்திய பக்தி என்று கூறப்படும். இந்த பக்தி பாவங்களிலெல்லாம் சிரேஷ்டமானது மதுர பக்தி. இதில் இதர பக்தி உணர்ச்சிகள் எல்லாம் ஐக்கியமாகின்றன.

இறைவனிடத்தில் தீராக் காதலுடன் அவனை நாயகனாக அடைந்து, இன்ப நிலை எய்துவதே மதுர பக்தி. பக்தி அளவுகடந்த பிரேமையாகப் பரிணமித்து  சிருங்கார ரசத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும்போது மதுர பக்தி நிலை ஏற்படுகிறது. சுடர் விட்டெரியும் நெருப்புப் போல் பக்தி ஜொலிக்கும்போது இறைவனைக் காதலனாகக் கருதுவது இயற்கை. இவ்வகையில் கடவுளை நாயகனாக அடைய நாயகி பாவத்தில் பிரேமை செலுத்தி,  இன்புற்றவர்கள்தாம் கோபியர்கள்.  

ஞானத் தொடர்புடன் பிறந்து, கடவுள் ஒருவனே நம் விருப்பத்திற்குரியவன்  என்று பக்தி செய்தவன் பிரகலாதன். தன்னலம் கருதாத பிரகலாதன் பக்தியே மிகவும் சிறந்ததாகக் கூறப்படுகிறது.  இதுவே கோபிகைகளின் காதல் நிலையும். கண்ணன் மீது கோபிகைகள் கொண்டிருந்த நிலைமை எப்படிப்பட்டது தெரியுமா?

"கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது
மயமயில்களோடு மான்பிணை போல்
மங்கைமார்கள் மலர்க்கூந்தல் அவிழ
உடைநெகிழ ஓர்கையால் துகில்பற்றி
ஒல்கி ஓடரிக்கண் ஓட நின்றனரே''

வேணுகான இன்பத்தில் லயித்து, மெய்ம்மறந்து போன ரூப சுந்தரிகளான கோபிகைகள் தம் பூங்குழல்கள் அவிழ்ந்து தொங்க, ஆடை அலமலந்து நெகிழ, கண்ணனின் மேல் வைத்தகண் எடுக்காமல் நின்றனராம். கண்ணனைப் பொறுத்த வரையில் கோபியர்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது ஏது?  காரணம் அவனிடம் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவர்கள் அர்ப்பணம் செய்து, அவன் ஒருவனையே காதலித்தார்கள் அல்லவா? அவனைக் கண்ட கண்கள் வேறு எதையும் காண மறுத்தன. கோபிகைகளின் நினைவெல்லாம் எப்போதும் கண்ணைப் பற்றியதாகவே இருந்தது.  

இராமனைக் கண்டதும் தண்டகாருண்ய வாசிகளான திருதண்ட மேந்திய முனிபுங்கவர்களும் அவன் ரூப சௌந்தர்யத்தில் மோகித்துப் போனார்கள்.  இராமனின் பேரெழிலை அவர்கள் கண்களால் பருகினார்கள். அவர்களே பெண்மையை விரும்பி,  மற்றொரு பிறப்பில் ஆயர் சிறுமியராகக் கண்ணனைக் காதலித்துக் கூடினர் என்பதுதான் ஐதீகம்.
"கண்ணனுக்கே, யாமது காம  மறம் பொருள்
 வீடிதற் கென்றுரைத்தான், வாமனன்
சீலனிராமானுசனிந்த மண்மிசையே''

 என்ற பாசுரத்தின் பொருளும் இங்கு சிந்தனைக்குரியது. ஆய்ச்சிமார்களுடன் அளவளாவி அல்லல்படுத்தவே கிருஷ்ணன் அவதரித்தானாம்

அவன்  "எம் அழகனார் அணியாய்ச்சியர் சிந்தையுள் குழகனார்'' என்கிறாள் ஸ்ரீஆண்டாள்.
 "கஞ்சன் வலை வைத்தவன்று காரிருள் எல்லிற் பிழைத்து
 நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் இக்கன்னியரோமை''

என்பது ஆய்ச்சியர் வாயிலாய் வரும் ஆண்டாள் பாசுரம். கிருஷ்ணனின் பால லீலா வினோதங்களை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் கோபிகைகளே!
                       
பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டி சிவபெருமான் அல்லது துர்கா தேவியை வழிபடுவது  தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம் -  மரபு.  ஆனால், பிருந்தாவனத்தில் கன்னியர் (கோபியர்கள்) ஏற்கெனவே கிருஷ்ணனின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தவர்கள் என்றாலும், ஹேமந்த ருதுவின் தொடக்கத்தில் அவர்கள் துர்கை (காத்யாயனி விரதம்) வழிபாட்டைத் தொடங்கினர்.  மணமாகாத கோபியரெல்லாம் அதிகாலையில் எழுந்து யமுனையில் நீராடி காத்தியாயனி தேவியை வழிபடுவது வழக்கம்.

காத்தியாயனி தேவியிடம் மிகுந்த பக்தியுடன் கோபியர்கள்,  "முழுமுதற் கடவுளின் உன்னத நித்திய சக்தியே, உன்னத யோக சக்தியே, பௌதிக  உலகின் உன்னத நாயகியே, தேவியே, நந்தகுமாரனை நாங்கள் மணக்கும்படி நீ அருள் செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்கள். அதாவது,  கோபியர்கள் தம் ஆத்ம நாயகனாகிய கிருஷ்ணரின் மனைவியாக வேண்டுமென்று துர்கையைப் பிராத்தித்து வரம் வேண்டினர்




இதன் உட்பொருள் என்னவென்றால், ஸ்ரீகிருஷ்ணரை மையமாகக்கொண்ட எந்த விருப்பமும் நிறைவேறுவதற்கு எந்த வழியையும் கையாளலாம் என்பதே. கிருஷ்ணரை திருப்திப்படுத்தவும் அவருக்கு சேவை செய்யவும் கோபியர் எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம். கோபியருக்கே  உரித்தான தனி உரிமை இது. கண்ணனே  கணவனாக வேண்டும் என்று நாள்தோறும் பிராத்தித்துக்கொண்டு,  முழுவதுமாக ஒரு மாதம் அவர்கள் துர்கையை வழிபட்டனர்.
நாள்தோறும் யமுனை நதிக்கரைக்குச் சென்று கைகோத்து கிருஷ்ணனின் அற்புதமான லீலைகளைப் பாடிப் பரவினர். பெண்களும் இளநங்கையரும் நதியில் நீராடும்போது தங்கள் ஆடைகளை (முழுமையாக) களைந்து, கரையில் வைத்துவிட்டு நீராடும் வழக்கம் அந்நாட்களில் இருந்திருக்கிறது. காரணம், பெண்கள் நீராடும்  பகுதிக்கு ஆண்கள் வரமாட்டார்கள் - வரக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது; இப்போதும் இருக்கிறது

கிருஷ்ணனின் இன்னொரு பெயர் யோகேஸ்வரர். இதை முன்பே கண்டோம். தியானத்தின் மூலம் யோகி பிறர் எண்ணங்களை அறிய முடியும். கிருஷ்ணரும் அவ்விதமே கோபியரின் உள்ளங்களை உணர்ந்தவராதலால்,  அவர்களது விருப்பதைப் பூர்த்தி செய்ய எண்ணினான். அம் மாத இறுதியில் யமுனைக் கரைக்கு கண்ணன் தன் நண்பர்களுடன் வந்து சேர்ந்தார்.  கரையிலிருந்த கோபியர்களுடைய ஆடைகளை எல்லாம் சேகரித்துக்கொண்டு அருகிலிருந்த ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து புன்னகைத்தபடி, அவர்களிடம்  இவ்வாறு கூறினார்:
"அன்பான யுவதிகளே, நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் வந்து உங்கள் ஆடைகளைத் தரவேண்டுமென்று என்னைப் பிரார்த்தித்துப் பெற்றுச் செல்லுங்கள். நான் கேலி பேசவில்லை, உண்மையாகவே சொல்கிறேன். ஒருமாத காலம் காத்தியாயனி தேவியை,  என்னை அடைய வேண்டும் என்று வழிபட்டிருக்கிறீர்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் வரவேண்டாம். தனித்தனியாக வாருங்கள். உங்களில் ஒவ்வொருவரின்  முழு அழகையும் நான் காண விரும்புகிறேன்'' என்றார்.  

கிருஷ்ணரின் மேல் ஏற்கெனவே கொண்ட காதலின் காரணமாகக் கிருஷ்ணன் கூறியதைக் கேட்டு  கோபியர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், உடலில் ஆடையில்லாததால் அவர்கள் நீரை விட்டு வெளியே வர முடியவில்லை.  அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கிருஷ்ணரிடம் உடையைத் தருமாறு பலவாறு கூறி முறையிட்டு அவர்கள்  மன்றாடியும், அவன் பிடிவாதமாகக் தர மறுத்தலால், வேறு வழியில்லாமல் அவர்கள் ஒவ்வொருவராக நீரிலிருந்து தம் மேனியை கைகளால் மறைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர்களின் கபடமற்ற இச்செயல் புனிதமாக இருந்ததால் கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தார். கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டுமென்று காத்யாயனி தேவியிடம் பிரார்த்தித்தக் கன்னிப் பெண்களான கோபியர்கள் தம் விருப்பம் நிறைவேறியதால் திருப்தி அடைந்தார்கள். ஒரு பெண் தன் கணவனைத்தவிர வேறு எந்த ஆடவர் முன்பும் ஆடையின்றி இருக்கக்கூடாது என்பது மரபு. மணமாகாத கோபியர்கள் கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டுமென்று விரும்பியதால்,  அவர்களின் விருப்பத்தை பகவான் அவர்கள் விரும்பியவாரே இவ்வாறு நிறைவேற்றி அருளினான்

கோபியர்களே மிகச்சிறந்த பக்தர்களாவர். கோபியரின் கிருஷ்ண உணர்வுக்கு ஈடானது உலகில் வேறு  எதுவுமில்லை.  உண்மையில் அவர்கள் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். கோபியரின் எளிய செயல்களால் திருப்தி அடைந்த கிருஷ்ணரும்,  ஒருவர் பின் ஒருவராக அவர்களது ஆடைகளை அவரவருக்கு அளித்தார்.

கிருஷ்ணர் அவர்களிடம் திருப்தி அடைந்து, அவர்கள் எல்லோரும் தன்னை கணவராக அடைய வேண்டும் என்று விரும்பியதால், அவர் சொன்னார்: "அன்பான நல்ல பெண்களே, நீங்கள் என்னை விரும்பியதை நானறிவேன். காத்தியாயனி தேவியை வழிபட்டதையும் நானறிவேன். உங்கள் செயலை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். தன் முழு உணர்வுகளையும் என்னில் லயிக்கச் செய்திருப்பவர்கள், அது காம உணர்வானாலும், உயர்நிலையை அடைகிறார்கள். வறுக்கப்பட்ட விதையிலிருந்து எதுவும் விளையாதது போல் என்னிடம் பக்தித் தொண்டாற்றும் போதும் ஏற்படும் இச்சையும் சாதாரண கர்மாவில் ஏற்படுவது போலான எந்த விளைவையும் ஏற்படுத்தாது.''
இதுவே பிரம்ம ஸம்ஹிதையில், "கர்மானி நிர்தஹதி பக்தி - பாஜாம்'' என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவனும் கர்ம பலனால் கட்டுண்டிருக்கின்றான். ஆனால், இறைவன் திருப்திக்காக முழுவதுமாகச் செயல்படுபவர்களுக்கு இது பொருந்தாது.
 அதுபோலவே கோபியர்களின் நடத்தை காமத்தினால் ஏற்பட்டது போல் தோன்றினாலும், காம வயப்பட்ட சாதாரணப் பெண்களோடு அவர்களை ஒப்பிடலாகாது. இதற்கான காரணத்தைக் கிருஷ்ணரே விளக்குகிறார். கிருஷ்ணரின் சேவையில் ஆற்றப்படும் செயல்களால் எவ்விதமான பிரதிவிளைவும் ஏற்படாது.
கிருஷ்ணர் தொடர்ந்து கூறினார்:  "அன்பான கோபியரே, என்னைக் கணவனாக அடைய வேண்டுமென்று நீங்கள் காத்தியாயனியிடம் கேட்ட வரம் பூர்த்தியாகும். அடுத்த இலையுதிர் காலத்தில் நீங்கள் என்னைக் கணவராகப் பெற்று மகிழ்வீர்களென்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்'' என்றார்

கோபியர்கள் ஆற்றில் நீராடச் சென்றபொழுது கிருஷ்ண பகவான், அவர்களுடைய சேலைகளை ஒளித்து வைத்த பாகவதக் கதை மேற்சொன்னவாறு எல்லோருக்கும் தெரிந்ததே.  ஆனால், இந்த வஸ்திராபரண லீலையில்  ஓர் உன்னதத்  தத்துவம் பொதிந்துள்ளது.

உடலை ஆடைகள் போர்த்துவது போல  உணவு, பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் ஆகிய இவ்வைந்தும் ஆத்மாவைப் போர்த்தும் (மூடும்) ஆடைகளாக உள்ளன. பக்தர்களுடைய ஐந்து உறைகளான (பஞ்ச கோசங்கள்) ஆடைகளைக் களைத்தெறிந்து, இறைவன் அவர்களுடைய ஆத்மாவைப் பிரம்மத்துடன் ஒருங்கிணைக்கிறான் என்பதே கோபிகைகளுடன் கிருஷ்ணன் புரிந்த  வஸ்திராபரண லீலையின் உள்ளுறை தத்துவப் பொருளாகும்.  இவ்வாறே ஸ்ரீகிருஷ்ணர் தம் பக்தர்களின் விருப்பத்தை அவரவரின் விருப்பப்படி திருப்தி செய்கிறார். பகவத்கீதையில்  பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,

'அனந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே!
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்!!' (9}22)

என்கிறார். அதாவது எனக்கு  அந்நியரல்லராய்,  வேறெதையும் நாடாமல், என்னையே சிந்தித்துக்கொண்டு,  எங்கும் எப்பொழுதும் என்னையே நினைத்து  என்னை உபாசிக்கின்ற  நித்திய யோகிகளின் நன்மையை நானே வழங்குகிறேன் என்கிறார்.  இவ்வாறு,  ஸ்ரீகிருஷ்ணன் வேறு,  தான் வேறு என்று எண்ணாமல் எங்கும் எப்பொழுதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தவர்கள்தாம் கோபியர்கள்.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கோபிகைகளுடன் தோழமை பூண்டு லீலைகள் புரிந்தது பரமாத்மா காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் உணர்த்துகின்றது. இறைவன் ஒருவனே புருஷோத்தமன். இதர ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண் அம்சங்கள். இவர்களே கோபிகைகள். இவர்கள் நிலையிலிருந்து கடவுளை வழிபடுவருக்கு அவன் ஒருவனைத் தவிர மற்றவெல்லாம் பெண்மயமாகவே காட்சி தரும். கோபிகைகளின்,

"வாய்அவனை அல்லாது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லாது தாம்தொழா; பேய்முலை நஞ்சு
ஊணாக உண்டான் உருவோடு பேர் அல்லால்
காணா கண்; கேளா செவி!'

என்றிருந்தவர்கள். கோபிகைகள் கண்ணனைச் சூழ்ந்து புன்முறுவலுடன் ஆடுவதும் பாடுவதும் அன்புக் கடவுளிடம் ஆத்மாக்கள் சேரத்துடிக்கும் (அடையும்) குதூகலமாகும்.  பரமாத்மாவை (ஸ்ரீகிருஷ்ணர்) அடைய ஜீவாத்மாக்கள் (கோபியர்கள்) கொண்ட தணியாத இறைபக்தியே (தாகமே) கோபிகா லீலை -  கோபிகா வஸ்ராபரணமாகும் என்பதை உணர வேண்டும்.


-இடைமருதூர் கி. மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!