வள்ளலாரின் ஏக்கம்!



அருட்பிரகாச வள்ளலாரின் ஏக்கம்!

-இடைமருதூர் கி. மஞ்சுளா
தினமணி –தமிழ்மணி 28.1.2018



                "அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் "திருஅருட்பா' ஆனதால், அதில் திருவும் இருக்கிறது; அருளும் இருக்கிறது. இரண்டும் இணைந்து திருவருள் (அம்மை-அப்பர்)  ஆனது. அவற்றைப் படிப்போர்க்கு அவ்விரண்டும் திருவாகிய இறைவனும், அருளாகிய இறைவியுமாகத் திருவருள் புரிகிறது' என்பர் சான்றோர்.
                "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை'யான சிவபரம்பொருளை தம் அன்பால் அரவணைத்து அவரோடு ஜோதியில் இரண்டறக் கலந்து,  மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர் அருட்பிரகாச வள்ளலார்.  உயிரின்(ஆன்மா) இயல்பு அன்பு; இறைவனின் இயல்பு அருள். இறைவனின் அருளே சக்தியாகத் (அம்மை}கருணை) திகழ்கிறது.
                "திருஞான சம்பந்தரும் வள்ளலாரும் ஓதாது உணர்ந்தவர்கள்; இருவருமே பிள்ளைப் பருவத்தில் ஆட்கொள்ளப் பெற்றவர்கள்; இருவருமே இறைவியால் அமுதூட்டப் பெற்றவர்கள்; இருவருமே தங்கள் வாக்குகளை ஆணையிட்டு உரைத்தவர்கள்; இருவருமே "எனதுரை தனதுரை' என்று பாடியவர்கள்' என்பது ஊரனடிகள் அவர்களின் வாக்கு.
                 சைவ சமயம் தாசமார்க்கம் (தொண்டன்-அடிமை), சற்புத்திரமார்க்கம், (மகன்) சக மார்க்கம் (தோழன்), சன்மார்க்கம் (சீடன்) ஆகிய  நான்கு நெறிகளில் (மார்க்கங்கள்) இறைவனை சென்றடைய வழி கூறியுள்ளது.  
                வள்ளளாரும் பலவகை உறவு முறைகளில் இறைவனிடத்தில் அன்பு, பாசம் வைத்துப் பாடியிருந்தாலும்,  தந்தை-மகன் உறவு முறையிலும் நெருங்கி உறவாடி இருக்கிறார் என்பதைப் பாடல்கள் பலவற்றிலும் காணமுடிகிறது.
                 உடலுக்குத் தாய்- தந்தையர் நம்மைப் பெற்றோர். ஆனால், உயிருக்கு (ஆன்மா) தாயும் தந்தையுமாக இருப்பவன்  இறைவன் ஒருவனே! அவனே சிவபரம்பொருள். அவனே அம்மையப்பனாக - சிவசக்தி சொரூபனாக இருந்து உயிர்களை உய்விக்கிறான்.
                வள்ளலாரும்,  இறை-உயிரின் உறவு நிலைகளைப் பலவாறு விரித்துரைத்துள்ளார்.  குரு, தாய், தந்தை,  நட்பு, துணை, அம்மான், நாயகன், தலைவன், ஆருயிர்த் தலைவன் என்று பல்வேறு உறவு நிலைகளில் பாடியுள்ளார். அவற்றுள் முக்கியமான உறவு இறைவனைத் தந்தையாகக் கருதும் தந்தை-மகன் உறவு முறை.


 
                இறைவனைத் தந்தையாக நோக்கும் போக்கை சமயத்தின் தொடக்கமாகக் கருதுவர்.
""1. பெற்றெடுத்த தந்தையுடன் நாம் வைத்திருக்கும் உறவு எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அந்த அளவு கடவுட் தந்தையிடம் உண்டு.
2. கடவுள் தந்தையின் மறுவடிவம் என்பது "FATHER PROJECTION THEORY' என்னும் கொள்கையாகும்'' என்கிறார் அறிஞர்  மைக்கேல் ஆர்கரி. மேலும் அவர்,
பெற்றோர், கடவுள் (PARENTAL IMAGE AND DEITY (G0D) IMAGE) உருவாக்கத்துக்கு  உளவியல் அடிப்படையில் இரண்டு காரணங்களை முன்வைத்துள்ளார். அவை:
1.  இறைவனோடு உறவு கொள்ளும் மனப்பான்மை பால் மாறுபாடாகவே அமைகிறது.
 2.  தாய்-தந்தை இருவரில் யாரேனும் ஒருவரிடம் மட்டுமே சலுகை கொள்வதைப் போலவே கடவுளையும் கருதும் நிலை.  (THE SOCIAL PSYCHOLOGY OF RELIGION, P.179, 180, 184,) 
÷எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி இரக்கம், தயவு, கருணை காட்டிய வள்ளல் பெருமானுக்கும் ஓர் ஏக்கம் இருந்திருக்கிறது!  அதுதான் தந்தை இல்லா ஏக்கம். தந்தை இல்லாத ஒரு மகனின், மகளின் தவிப்பையும் ஏக்கத்தையும் சொற்கள் கொண்டு அளந்துவிட முடியாது. அது அவரவர் அனுபவத்துக்கு வந்தால் மட்டுமே உணரமுடியும்.
                மைக்கேல் ஆர்கரியின் கருத்துக்கேற்ப அமைந்துள்ளது வள்ளலாரின் "தந்தை'  குறித்த பாடல்கள்.  வள்ளல் பெருமானும் தம் தாய்-தந்தையை இளமையிலேயே  இழந்துவிட்டவர் என்பதால்,  அவரும்  தந்தைப் பாசத்திற்காக ஏங்கித் தவித்திருக்கிறார் என்பதை அப்பாடல்கள்  காட்டுகின்றன. மேலும்,  தம் பெற்றோரிடம் எதிர்பார்த்த சலுகையையே  அவர் கடவுளிடமும் எதிர்பார்த்திருப்பதனால்,   கடவுளை தாய்-தந்தையாகக் கருதத் தூண்டியுள்ளது போலும்! அவ்வாறு பாடியதன் மூலம் அவர்  ஒருவாறு தன் ஏக்கத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம்! 
                வள்ளல் பெருமான் தாய் (576, 735, 978, 1226, 1259, 1333,1661, 1720) - தந்தை இருவரையும் தனித்தனியாவும், இருவரையும் இணைத்தும் (2571, 27                                67, 2797, 3036, 1332, 2203,3036, 3951) குறிப்பிட்டுப் பாடும் பாடல்கள் பல உள்ளன. ஆனாலும், இறைவனை தந்தை நிலையில் வைத்து அவர் தம்மை மகனாகப் பாவித்துக் கொண்டு பாடும் இடங்கள் பற்பல.
"வெள்ளுணர்வேன் எனினும் என்னை விடுதியோ?
விடுதியேல் வேறென் செய்கேன்? தன் உணர்வோன் எனினும்
மகன்தனை சான்றோர் புறம்பாகத் தள்ளர் அன்றோ?' (2734:3:4)
என்ற பாடலடிகளில் இறைவனைப் பெற்றோராகவும், தன்னை மகனாகவும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். மேலும், "இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்' (3386) என்கிறார்.  என் அப்பா (605), தந்தையே (644,2660), எந்தையே (1105), என்றன் அப்பா (599, 602), எனை ஈன்றவனே (1207), என் அப்பனே (2587) என வருபவை தந்தையின் உறவைக் குறிப்பனவாகவே உள்ளன.
 "அப்பனெனத் திகழ்கின்றோனே' (3246}10}4) என்றவரியின் மூலம் தன் தந்தைபோலத் திகழ்கிறார் என்ற  ஒப்புமைத் தன்மையும் அமைந்துள்ளது.
                நீயே என் தந்தை (2203), என்னருமைத் தந்தையே (1962) என் உரிமைத் தந்தையே (1226), மன்றமர்ந்த தந்தையே (1228) என்று கூறுகின்றபோது தனக்குரிய பாதுகாப்புரிமையையும்,  தந்தையின்  உயர்வையும் எடுத்துத்துரைக்கின்றார்.
                ""தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால்'' என்பதன் மூலம்  தந்தையின் கண்டிப்புத் தன்மை வெளிப்படுகின்றது. "தந்தை நீ அலையோ? தனயன் நான் அலனோ?'' (3844) என்றும் ஏக்கமாகக்  கேட்டு உறவை}உரிமையை நிலைநாட்டுகின்றார்.  மேலும்,
"தந்தையர் வெறுப்ப மக்கள் தாம் பயனில்'' (3511}102)
 "தடுத்தெனை ஆட்கொண்ட தந்தையரே'' (3793) 
 "தந்தை தம்மையே தனையன் தன் தன்மையென்று
 சாற்றுதல் சாத்தியம் கண்டீர்'' (5442)
 "எந்தையைக் கண்டேன் இடரெல்லாம் நீக்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன் சித்திகள் பெற்றேன்'' (4902)

"துன்பம் தவிர்த்து இன்பமும் எல்லா நன்மையும் அளித்த
எல்லாம் வல்ல  சித்தான என் தந்தை'' (4615}1116)
"அறிவளித்து பிறிவிலாதமர்ந்த பேரருள் தந்தை'' (4615}1122)
சதுரப் பேரருள் தனிப் பெருந் தலைவன் என்று
எதிரற்ற ஓங்கிய என்னுடைத் தந்தையே

அகத்திலும் புறத்திலும் அருட்பெருஞ்சோதி தந்தை மெய்த்தந்தை (4615-1126)

தங்கோல் அளவது தந்து அருட்சோதி
செங்கோல் செலுத்து எனச் செப்பிய தந்தை (4615-1133)

தன் பொருள் தன் வடிவு தன் சித்து தன் தத்துவம்
தன் அருட்சத்தி தன் இயல் தன் உரு தன் உரை
இவற்றையெல்லாம் என்னதாக்கி தன்னையும்
என்னையும் ஒன்றென இயற்றிய தந்தை (4615-1136}1150)
பெறுதற்கரிய இத்தகைய பெரும் பேறுகளை எல்லாம் வள்ளள் பெருமான் பெற்றபோதிலும்,
 "உணர்ந் துணர்ந்துணரினும் உணராப் பெருநிலை
அடைந்திட எனக்கே அருளிய தந்தை' (4615-1155)

என இறைவன்,  தம்மை "சிவமாக்கிய' இயல்பை } தன்மையை ஏகாரமிட்டுப் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும்,   "இனிப் பிறவா நெறி அளித்தருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே' (4615}1164) என்பதில்,  "மீண்டு வாரா வழி' அருளிய திறத்தையும்,
"என் மகனே இங்கிதனைத் தாங்கு என்று
 ஒன்றனது தடங்கா தனிற்கொடுத்து மரணமற்று வாழ்க
 எனத் திருவார்த்தை அளித்தாய்'' (3074}152)

 என்று தனக்கு  மரணமிலாப் பெருவாழ்வு அளித்த அருட்திறத்தையும் அருளிச் செய்துள்ளார். 

-இடைமருதூர் கி. மஞ்சுளா

தினமணி –தமிழ்மணி 28.1.2018

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!