தினமணி - சிறுவர் மணி பிஞ்சுக் கை ஓவியத்துக்கான கதை... அச்சம் தவிர்

அச்சம் தவிர் (சிறுகதை) (30.5.2020)
-மணிவாசகப்பிரியா
(இடைமருதூர் கி.மஞ்சுளா)



இக்கதைக்கான வழக்குரைஞர் கோ.மன்றவாணன் அவர்களின் திறனாய்வுக் கடிதத்தைப் பாருங்கள். அற்புதமாகத் திறனாய்ந்திருக்கிறார்.
-----------

பெறுநர் :

தமிழ்மிகு இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள்

(மணிவாசகப்பிரியா)

 மேன்மைமிகு அம்மா, வணக்கம்.

இன்றைய சிறுவர் மணியில் தாங்கள் எழுதிய அச்சம் தவிர் என்ற கதையைப் படித்தேன். கரோனா என்னும் அச்சம் சூழ்ந்த காலத்தில் வாழ்கிறோம்.  இக்காலத்தில் அச்சம் தவிர்க்கும் எண்ணத்தை வளர்க்கும் தங்கள் கதை தேவையான ஒன்று.

குழந்தை வரைந்த படத்துக்குப் பொருத்தமாகக் கதை சொல்லி உள்ளீர்கள். ஒரு நிகழ்வில் இருந்து கதையைக் கண்டறிவது எளிது. ஒரு படத்தில் இருந்து கதையை உருவாக்குவது எளிது இல்லை. ஆனால் உங்களுக்கு எளிதாக உள்ளது.

தங்கள் கதை சொல்லும் பாடங்கள் :

1. அச்சம் தவிர்த்தல்

2. இடர்மிகுந்த நேரத்தில் எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்தல்

3. உயிர்களிடத்தில் அன்பு வைத்தல் (பாம்பு ஆனாலும் அதைக் கொல்லாது இருத்தல்)

கதையின் இறுதி வரி என்னைக் கவர்ந்தது.

வேலுவும் பாலுவும் ஓடிப்போய் அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டு தங்கள் பயத்தையும் படபடப்பையும் போக்கிக் கொண்டனர் என்ற வரி, உளவியல் சிகிச்சையை உணர்த்துகிறது.

அம்மாவை அணைத்துக்கொண்டால் எந்தக் குழந்தைக்கும் பாதுகாப்பு உணர்வு உண்டாகும் என்பது உலக உண்மை.

சிறுவர்களுக்குக் கதைசொல்லும் போது, அவர்களின் உளவியலை அறிந்து இருக்க வேண்டும். இயல்பாகவே குழந்தை உளவியலை அறிந்துள்ளீர்கள். உளவியலை அறிந்து இருந்தால் மட்டும் போதாது. கதை சொல்பவருக்கும் குழந்தை உள்ளம் வேண்டும். அந்த உள்ளம் உங்களுக்கு இருக்கிறது.

முறையாகத் தமிழ் படித்தவர்களால் எளிய நடையில் எழுத முடியாது என்று நினைப்பார்கள். ஆனால் எளிய நடையழகிலும் இனிய சொல்லழகிலும் தாங்கள் சுடரொளி வீசுகிறீர்கள்.

சிறுவர்களுக்கான உங்கள் கதைகளைப் படிக்கும்போது, உங்களுக்குள் இருக்கும் சமூக அக்கறையை அறிகிறேன்.

எந்தக் கதை சொன்னாலும், அந்தக் கதை, குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற  உறுதியில் உள்ளீர்கள்.

இன்றைய கல்வி முறை, குழந்தைகளை அறிவாளிகளாக உயர்த்துகிறது. ஆனால், அவர்களை நல்வழிப் படுத்த போதிய வாய்ப்புகளை வழங்கவில்லை.

அந்தக் குறையைப் போக்கவே உங்கள் கதைகள் உதவுகின்றன.

பணிவுடன்

கோ. மன்றவாணன்

 

 


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!