மறக்க முடியுமா....

÷ ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல; அவர் வாழ்ந்த காலத்தில் இந்த உலகுக்கு எதை விட்டுச்சென்றார் என்பதுதான் முக்கியம். ஆடு, மாடுகள் கூடத்தான் ஆண்டாண்டு காலங்கள் வாழ்கின்றன. ஆனால், மனிதனாகப் பிறந்தவன் இந்த பூமியில் தான் வந்ததற்கான அடையாளத்தை எந்த வகையிலாவதுப் பதிவுசெய்ய - விட்டுச்செல்ல வேண்டும். அந்த வகையில், மிகக் குறுகிய காலமே வாழ்ந்த திரையிசைக் கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்காக விட்டுச்சென்ற தத்துவங்கள் ஏராளம்.. ஏராளம்.... ÷ 19 வயதிலேயே கவிபாடத் தொடங்கிய அந்தக் கானக்குயிலின் கருப்பொருள்கள், அரசியல், தத்துவம், பாட்டாளிகளின் குரல், இறைமை, நாடு, கதை, நகைச்சுவை, சமூகம், சோகம், இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, கோபம், பொது எனப் பரந்து விரிந்தது ஒலித்தது. ÷எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதில் விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும், திராவிட இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய இந்தப் பாட்டுக்குயில், விவசாயம், மாடு மேய்த்தல், உப்பளத் தொழில், நாடக நடிகர், பாடலாசிரியர் என 17 வகையானத் தொழில்களை 29 வயதுக்குள்ளாவே செய்து முடித்து பல பரிமாணங்களிலும் பரிமளித்தது. ÷தன்னுடைய பாடல்களில் கிராமியப் பண்ணைத் தழுவி பாடல்களுக்கு உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டி, பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் ஆசைதீரப் பாடிக்களித்தவர். இவர் எழுதிய மனதைத் தொடும் - வருடும் திரைப்படப் பாடல்கள் எத்தனை... எத்தனை... ÷காதல் சுவைக்கு, உனக்காக எல்லாம் உனக்காக(புதையல்), துள்ளாத மனமும் துள்ளும், உன்னைக் கண்டு நானாட (கல்யாணப் பரிசு), சின்னக்குட்டி நாத்தனா(அமுதவல்லி), முகத்தில் முகம் பார்க்கலாம் (தங்கப்பதுமை), படிக்கப் படிக்க நெஞ்சில் இனிக்கும்(இரத்தினபுரி இளவரசி), அன்பு மனம் கனிந்த பின்னே(ஆளுக்கொரு வீடு), வாடிக்கை மறந்தது ஏனோ (கல்யாணப் பரிசு), ஆடைகட்டி வந்த நிலவோ(அமுதவல்லி) முதலிய பாடல்களையும், ÷ தத்துவத்துக்கு, உனக்கெது சொந்தம் (பாசவலை), கருவில் உருவாகி (செüபாக்கியவதி), ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே (தங்கப்பதுமை), உறங்கையிலே பிறக்கும்போது (சக்கரவர்த்தி திருமகள்), இரைபோடும் மனிதருக்கே இரையாகும் (பதிபக்தி) முதலிய பாடல்களையும், ÷அரசியலுக்கு, மனிதனை மனிதன் (இருப்புத்திரை), சொல்லுறதை சொல்லிப்புட்டேன் (பாண்டித்தேவன்), எல்லோரும் இந்நாட்டு மன்னரே (ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு) முதலிய பாடல்களையும், ÷இயற்கைக்கு, என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே (எல்லோரும் இ.நா.மன்னர்), கொக்கரக் கொக்கரக்கோ சேவலே (பதிபக்தி), ஆடும்மயிலே (இரத்தினபுரி இளவரசி) முதலிய பாடல்களையும், ÷குழந்தைகளுக்கு, சின்னப் பயலே சின்னப் பயலே(அரசிளங்குமரி), தூங்காதே தம்பி தூங்காதே (நாடோடி மன்னன்), திருடாதே பாப்பா திருடாதே(திருடாடே), உன்னைக் கண்டு நானாட (கல்யாணப்பரிசு) முதலிய பாடல்களையும், ÷பாட்டாளிக்களுக்கு, நன்றிகெட்ட மனிதருக்கு(இரும்புத்திரை), செய்யும் தொழிலே தெய்வம்(ஆளுக்கொரு வீடு), பொங்காத பெருங்கடல்(புதுமைப்பெண்), எதிரிக்கு எதிரி (பெற்ற மகனை விற்ற அன்னை), தை பொறந்தா வழி பொறக்கும்(கல்யாணிக்கு கல்யாணம்), சும்மா கெடந்த (நாடோடி மன்னன்) முதலிய பாடல்களையும் குறிப்பிடலாம். மேலும், பொதுப் பாடல்கள் இறைமைப் பாடல்கள், சோகப் பாடல்கள் என இக்குயில் பாடிக் குவித்தவை எண்ணிலடங்காதவை. ÷இன்றைக்கு இருக்கும் உலகையும் அதில் நடக்கும் நாட்டு நடப்பையும் அப்படியே "மகாதேவி' படத்தில் படம் பிடித்துள்ளார் பட்டுக்கோட்டையார். அவர் அன்றைக்குக் கண்ட அதே உலகமாகவே இன்றைக்கும் உள்ளதே... எவ்வளவு பொருத்தமான பாடல் பாடி ஞானி அவர்! குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகமடா - இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா! திரைப்படத்தில் வெளிவராத பாடல் வரிகள் இவை: சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டி சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டு சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமா! புதிரான உலகமாடா-உண்மைக்கு எதிரான உலகமடா-இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா! மிகக் குறைந்த ஆண்டுகளே வாழ்ந்து விண்முட்டும் புகழை எட்டி, பட்டுக்கோட்டையை பாட்டுக்கோட்டை ஆக்கிய அன்னாரின் திரைப்பாடல்களை மறக்கத்தான் முடியுமா...?

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!