ராதா நாமம் சொல்லிக் கொடுத்தேன்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்! (தினமணி வெள்ளிமணியில் வெளியான கட்டுரை) ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை "கோகுலாஷ்டமி' என்று கொண்டாடி வருகிறோம். கண்ணனின் அவதார நோக்கமும் தத்துவமும் பற்றி அறிந்து கொண்டால், கண்ணனின் பிறப்பு சில பாடங்களைத் தரும். கண்ணனும் நீலவண்ணமும்: கண்ணன், கார்மேக வண்ணன், நீலநிறவண்ணன் என்று வர்ணிக்கப்படுகிறார். எங்கும் நிறைந்து பரந்து விரிந்திருப்பதற்குத் தோற்றத்தளவில் நீலநிறம் வருவது இயல்பு. அது அறிவியல் தொடர்புடையதும்கூட. மலை, கடல், வெட்டவெளி போன்றவற்றில் தென்படுகின்ற இயற்கை போன்று, தென்படாத பரம புருஷன் நீக்கமற எங்கும் நிறைந்தவன் என்பதுதான் கிருஷ்ணனின் நிறத்துக்கான தத்துவம். விஷ்ணு என்ற சொல்லுக்கு "சர்வ வியாபி... (எங்கும் நீக்கமற நிறைந்தவன்') என்று பொருள். அவதாரம் தேவையா? ""அவதாரம் எடுக்காமலேயே நான் எந்தக் காரியத்தையும் நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு உயிரினத்தின் மேல் உள்ள அன்பின் காரணமாக நான் அவதாரம் எடுக்கிறேன். பூமியில் அவதாரம் எடுக்கும்போது, என்னை தரிசனம் செய்வதால், அவர்கள் மனக்குறை தீர்க்கப்படுகிறது. என்னிடம் வந்து பேசும்போது, அவர்களை நான் ஆனந்தத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறேன். என்னைத் தொட்டுப் பார்த்து ஆடியும் பாடியும் மகிழ்கிறார்கள். இதனால், அவர்கள் எளிதாக சம்சாரக் கடலைக் கடந்து என்னை வந்தடைகிறார்கள். அவதாரம் செய்யாமல் இவை ஈடேறாது. என்னுடைய பிறப்பும் செயலும் தெய்வீகமானவை என்று முழுமையாக உணர்ந்தவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது. உடலை விட்ட பிறகு என்னையே அடைவார்கள் என்ற கிருஷ்ண தத்துவத்தை அறிந்தவர்கள் எனக்கு இனிய பக்தர்கள்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர். இவ்வகையில் அவதாரம் (இறங்கி வருதல்) என்ற சொல்லுக்கு ஏற்ப, நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும் அவதாரம் எடுத்த ரகசியத்தை ஸ்ரீகிருஷ்ணரே சொல்கிறார். ஸ்ரீகிருஷ்ண அவதாரம்: அசுர சக்திகள் என்ற பூபாரம் தாங்காமல், பூமித்தாய் புலம்பித் தவித்து, தேவர் குழாமுடன் விஷ்ணுவை சரண் புகுந்தாள். அவரும் பூமாதேவியின் துயர்துடைக்க திருவுள்ளம் கொண்டார். அவர் பிரம்மதேவன் உள்ளிட்ட தேவர்களை நோக்கி, ""யாதவ குலத்தில் வாசுதேவருக்கு மகனாகப் பிறப்பேன். ஆதிசேஷனும் என்னுடன் அவதரிப்பார். தேவர்களும், தேவ குலப்பெண்களும் அப்போது யாதவ குலத்தில் என் அம்சமாகப் பிறப்பார்கள். பூமியின் பாரத்தைப் போக்குவதும், துஷ்டர்களை அழிப்பதுமே என் அவதார நோக்கம்'' என்றார். அதன்படி, இருள் சூழ்ந்த நடுநிசியில் அஷ்டமி நன்னாளில் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார். தேவகி-வசுதேவர் முன் சங்கு, சக்கரம், கதாயுதம், மார்பில் ஸ்ரீவத்சமென்னும் மச்சமொடு, கவுஸ்தப மணியுடனும், மணிமுடி, தாமரை, கிரீட குண்டலம், நான்கு கரங்கள் போன்றவற்றோடு தெய்வரூபத்தில் தரிசனம் தந்தார். பிறகு "யோகமாயா' சக்தியினால் குழந்தையானார். கண்ணன் அவதரித்தபோது, அவனது தெய்வீக உணர்வு காரணமாக பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் உள்ளங்களிலும் இனம்புரியாத புத்துணர்ச்சி ஏற்பட்டதாம். பசுக்கள் மடியில் இருந்து தானாக பால் சுரந்ததாம். கோபிகைகளின் பக்தி: ""யார் என்னிடம் பக்தி சிரத்தையாக இருக்கிறார்களோ அவர்கள் என் அகத்துள் அமர்ந்திருப்பார்கள். நான் அவர்களை வழிநடத்தி நல்வழிக்குக் கொண்டு செல்வேன்'' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். நாரத மகரிஷி, ""பக்தி என்பது வ்ரஜ கோபிகைகளின் பிரேமை (அன்பு-காதல்) போல் இருக்கவேண்டும்'' என்பதை, ""யதா வ்ரஜ கோபிகானாம்'' என்று "பக்தி சூத்திரங்களில்' கோபிகைகளைப் புகழ்ந்துள்ளார். வைணவ ஆசார்யர்கள், "இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சிகள்' என்பர். பிள்ளைலோகாசாரியார் "ஸ்ரீவசனபூஷண'த்தில், ""பிரம்மாவாய் இருந்து இழந்து விடுவது; இடைச்சியாய் இருந்து (பகவானைப்) பெற்றுவிடுவது'' என்பார். பக்தி என்ற படிகளின் வழியே சிறிது சிறிதாக ஏறித்தான் நாம் கண்ணனை அடைய முடியும். துளசி: ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான செடி துளசி. இவள் ராதையின் தோழி. துளசி பற்றி தேவி பாகவதத்தில் சங்கசூடன் உபாக்யானம் என்ற கதை இதை விரித்துரைக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமகாவிஷ்ணுவே துளசியை சந்தோஷப்படுத்த பூஜை செய்ததாக "ஹரி வம்சம்' கூறுகிறது. துள-ஒப்பு; சி-இல்லாதது. ஒப்புயர்வற்ற துளசியைக் காண்பதாலும், தொடுவதாலும், பிரார்த்தனை செய்வதாலும், நமஸ்கரிப்பதாலும், துளசியைப் பற்றிக் கேட்பதாலும், துளசியை வளர்ப்பதாலும் எங்கும் எப்போதும் மங்களம் உண்டாகும். பகவந்நாமமே பேரானந்தம்: ""ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் இயற்கை என்னவென்றால், எவர் அதை உச்சரித்தாலும் உடனடியாக கிருஷ்ணர் மீது ப்ரேமபக்தி வளரும்'' என்கிறது சைதன்ய சரிதாம்ருதம். சண்டைகளும் குழப்பங்களும் மிக்க இந்த (கலி)யுகத்தில் பகவானின் புனிதத் திருநாமங்களை உச்சரிப்பதே ஒரே வழி. இதுதவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை என்கிறது பிருஹந் நாரதீய புராணம். அறியாமைக் கடலைக் கடக்க பகவானின் திருநாம ஜபத்தைத் தவிர வேறு வழியில்லை என்பது சர்வ வேதங்களும் கூறும் உண்மை. ஒருமுறை ராதை, தன் வீட்டுக் கிளிகளுக்கு கிருஷ்ண நாமம் கற்றுக் கொடுத்தாள். சில தினங்களுக்குப் பின் அதை மாற்றி ராதா நாமம் கற்றுக் கொடுத்தாள். இதைக் கண்ட பலரும், இது ராதாவின் அகங்காரம் என்று எண்ணிப் பரிகசித்தனர். ஆனால் ராதையோ தன் தோழிகளிடம், ""கிருஷ்ண நாமம் கேட்டு எனக்கு ஆனந்தம்; ராதா நாமம் கேட்டு கிருஷ்ணருக்கு ஆனந்தம். கிருஷ்ணரின் ஆனந்தத்தையே நான் பெரிதாக எண்ணியதால், என் கிளிகளுக்கு ராதா நாமம் கற்றுக் கொடுத்தேன்'' என்றாளாம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே - இடைமருதூர் கி. மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!