தன்னம்பிக்கையே முதலீடு...வெற்றியே இலக்கு - நேர்காணல்- இடைமருதூர் கி.மஞ்சுளா



தன்னம்பிக்கையே முதலீடு...வெற்றியே இலக்கு!
சொல்கிறார் : எஸ். ஜெயலட்சுமி



 'அபாகஸ்' கணக்குப் பயிற்சியைக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களுள் ஒன்றுதான் "ஹர்ஷா அகாடமி'. சென்னை கொரட்டூரில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜெயலட்சுமி, கல்லூரியில் படிக்கும்போதே மாநில அளவில் விருது பெற்றவர். தற்போது, இந்நிறுவனத்தை நன்முறையில் நடத்தி வருவதற்காகவும், நல்ல பயிற்சியாளராக இருப்பதற்காகவும் IQMA INSTITUTE, இவருக்கு 2015 இல் விருதையும் பொற்காசையும் வழங்கியுள்ளது. அவரிடம் பேசியபோது:

 இந்நிறுவனம் தொடங்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?
 ÷நான் பி.காம் (அக்கவுண்ட்ஸ், காமர்ஸ்) படித்துவிட்டு, கல்லூரி காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டு டி.சி.எஸ் நிறுவனத்தில் சீனியர் பிராசஸ் அசோசியேட்டாகப் பணிபுரிந்து வந்தேன். எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தபிறகு, என் மகளைப் பார்த்துக்கொள்ள முடியாததால் என் வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டது. அச்சமயம், என் கணவர் தனியாக நடத்தி வந்த தொழிலும் சரிவர நடக்காததால், எங்களுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போதுதான் யோசித்தேன். படித்த படிப்பு வீணாகக்கூடாது. நாமும் பலனடைய வேண்டும். அது பலருக்கும் பயன்பட வேண்டும்; ஏதாவது செய்ய வேண்டும் என்று.
 உடனே தனியார் நிறுவனம் ஒன்றை அணுகி, அவர்களின் ஆலோசனை பெற்றேன். அதன்படி, இரண்டு மாதங்களில் அபாகஸ் பயிற்சியையும் பெற்றேன். பிறகு தனியாக இதைச் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. தன்னம்பிக்கையோடும், என் கணவர் கொடுத்த ஊக்கத்தோடும் துணிந்து அபாகஸ் கணிதமுறை பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன். ÷

 உங்கள் பயிற்சி வகுப்பில் என்னென்ன பயிற்றுவிக்கிறீர்கள்?
 ÷ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அபாகஸ் பயிற்சி தருகிறோம். அபாகஸ் என்பது சுருக்கமான கணிதப் பயிற்சி. மூளையின் துரித செயல்பாட்டுக்கு இது உறுதுணையாகிறது. கணக்கை எளிதாகப் போட்டு முடிக்க உதவுகிறது. மாணவர்களின் நினைவுத் திறனை அதிகரிக்கிறது. அபாகஸ் மட்டுமல்ல, வேதிக் மேக்ஸ் எனப்படும் வேதிக் கணித முறையும் கற்றுத் தருகிறோம். இது கணிதப் பாடத்தை மேலும் எளிதாக்கும் கணிதப் பயிற்சியாகும். அடுத்து, கேலிகிராபி எனப்படும் கையெழுத்துப் பயிற்சி, ஹேண்ட் ரைட்டிங் (திருத்தக் கையெழுத்து) போன்றவையும், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி (டியூஷன்), ஹிந்தி பேச்சுப் பயிற்சி, ஓவியப்பயிற்சி போன்றவற்றையும் பயிற்றுவிக்கிறோம்.
 மாணவர்களைத் தவிர வேறு யார் யாருக்குப் பயிற்றுவிக்கின்றீர்கள்?
 ÷குறிப்பாக வீட்டிலிருக்கும் பெண்கள், வேலைக்குச் சென்றும் வருமானம் போதவில்லை என்று நினைக்கும் பெண்கள், பெற்ற குழந்தைகளையும், மாமனார், மாமியார் போன்றோரையும் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்பதால் வேலையை விட்ட பெண்கள், ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செய்வதுடன் கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள், முக்கியமாக அதிக தொகை செலுத்திப் படிக்க முடியாதவர்கள் போன்றோர்க்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பயிற்றுவிக்கிறோம். இப்பயிற்சிக்குப் பிளஸ் டூ படித்திருந்தால் போதுமானது.
 இப்பயிற்சியை வாரத்தில் எத்தனை நாள்கள் தருகிறீர்கள்?
 வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டும்தான். அதுவும், இரண்டு மணிநேரம்தான். மொத்தம் நான்கு மணி
 நேரம் மட்டும். பெண்கள் இப்பயிற்சியைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குள்ளாகவோ அல்லது பதினைந்து நாள்களுக்குள்ளாகவோ மேற்கொண்டால், இப்பயிற்சி முடிந்ததும், அவர்கள் இதை பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகிவிடுவர். தனியாக நிறுவனம் வைக்கும் நிறுவனர்களாக ஆகிவிடுவார்கள். அவர்களும் தனியாகப் பயிற்சி மையம் தொடங்கி சம்பாதிக்கலாம்.
 மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது....?
 ÷இந்த ஆண்டு விடுமுறைக்காக பெங்களுரிலிருந்து வந்த ஒரு பெண்மணி, தன் மகனை ஒருமாதப் பயிற்சியில் சேர்த்தார். பிறகு தன் மகளையும் சேர்த்தார். கூடவே அவரும் நேரத்தை வீணாக்க வேண்டாமே என்று தானும் சேர்வதாகக் கூறி, இப்பயிற்சியை நன்கு கற்றுக்கொண்டு, "நான் பெங்களூரு சென்று இதே போல ஒரு பயிற்சி மையத்தை நிறுவுவேன்' என்று தன்னம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் கூறிச் சென்றது மறக்க முடியாதது.

 சுயமாக முன்னேறத் துடிக்கும் பெண்களுக்குத் தாங்கள் சொல்ல வருவது என்ன?
 தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை உள்ளவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். பெண்கள் முதலில் "நாம் சாதிப்போம்' என்று தமக்குத்தாமே நம்பிக்கை கொண்டால், நிச்சயம் ஒரு நாள் சாதித்துக் காட்டலாம்.

 -இடைமருதூர் கி.மஞ்சுளா
 
படங்கள்: கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (Dinamani- magalir mani - 29.6.2016)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!