பிரபந்த தீபிகையில் பதினெண்கீழ்க்கணக்கு - தமிழ்மணி



பிரபந்த தீபிகையில் பதினெண்கீழ்க்கணக்கு

சங்கத் தொகை நூல்களுள் பதினெண்கீழ்க்கணக்கும் ஒன்று. பதினெட்டு நூல்களின் தொகுப்பு. கீழ்க்கணக்கு நூலின் இலக்கணம் பற்றி பன்னிருபாட்டியல் இரு (346, 348) நூற்பாக்களில் குறிப்பிடுகிறது.
நாம் செய்யும் வினைகளை எப்படி எப்படிச் செய்து வருகிறோம் என்பதற்கு இறைவன் முறையான கணக்கு (பட்டோலை) எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதை,

""தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது, காமுற்று, அரற்று கின்றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே''

என்று கூறும் அப்பரடிகள், "கீழ்க்கணக்கு' என்ற சொல்லை தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். அப்பரடிகளின் பாடல் சிவபெருமான் பட்டோலை தீட்டுகிறான் என்பதையும், உயிர்கள் அனைத்தின் கணக்கையும் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. "பட்டோலை' என்பது பொதுவாக அரசர் விடும் திருமுகத்தையே குறிக்கும். ஆனால், சிவலோக நாயகனாகிய சிவபெருமான் எழுதும் கணக்குக்கும் "பட்டோலை' என்றே பெயர். சித்திரகுப்தன்தானே நாம் செய்யும் நல்வினை-தீவினைகளுக்குக் கணக்கு எழுதுகிறார்? சிவபெருமானுமா எழுதுகிறார் என்றால், ஆம் அவரும் கணக்கு எழுதுகிறார். அண்டசராசரங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அப்பரம்பொருள் எழுதும் கணக்கு எதுவென்று, மெய்கண்ட சாத்திர நூலான போற்றிப் பஃறொடையின் ஆசிரியர் உமாபதி சிவம் விளக்கியுள்ளார்.

""முட்டாமற் செய்வினைக்கு, முற்செய்வினைக் குஞ்செலவு
பட்டோலை தீட்டும் படிபோற்றி'' (35)

எதற்காக சிவபரம்பொருள் பட்டோலை (கணக்கு) தீட்டுகிறார் என்பதை உமாபதி சிவம் இவ்வாறு விளக்குகிறார்: ""ஜீவகோடிகள் செய்யும் எல்லாச் செயல்களிலும் அவர்களோடு ஒன்றாய், வேறாய், உடனாய்க் கூடியிருந்து, அவர்கள் செய்யும் (நல்வினை-தீவினை) செயல்களைச் செய்யும்படிச் செய்து, அச்செயல்கள் நடைபெறும் காலத்தில் அவர்களுக்கு இடையறாமல் ஏறுகின்ற ஆகாமிய, சஞ்சித, பிராரத்த வினைகளை (முவ்வினை) அவ்வப்போது கணக்கு எழுதிக் கொள்கின்ற சிவபெருமானின் திருவருள்(அம்மை) எங்களை எல்லாம் காத்தருள்வதாக'' என்கிறார். இதன் மூலம் கணக்கு (நூல்களின்) எழுதுவதன் இன்றியமையாமை நன்கு விளங்கும்.



அந்த வகையில் மேல்கணக்கு நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள் என இருவகைப்படும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை மேல்கணக்கு நூல்கள் என்பர். திருக்குறள், நாலடியார், பழமொழி முதலிய பதினெட்டு நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வரிசைப்படுத்துவர். இறைவன் எழுதும் கணக்கு "கீழ்க்கணக்கு' என்பது அப்பரடிகள் பாடலில் அகச்சான்றாக உள்ளது. அத்தகைய சிறப்புமிக்க கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் தொகுக்கப்பட்டதுதான் பதினெண்கீழ்க்கணக்கு நூல். பதினெண்கீழ்க்கணக்கு பற்றிய பழம் பாடல் ஒன்று,

""நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப்
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்
இன்னிலை காஞ்சியுடன், ஏலாதி, என்பவும்
கைந்நிலையும் ஆம் கீழ்க்கணக்கு'' (5440)

என்கிறது. நன்னூல், மயிலைநாதர் உரையிலும் பதினெண்கீழ்க்கணக்கு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தமிழ்மொழியின் பெருமையைக் கூறும் "தமிழ்விடு தூது' என்ற நூல்,

""..... ..... மூத்தோர்கள்
பாடியருள் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'' (56)

என்கிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல் பற்றிய விரிவான விளக்கத்தை, வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர் தாம் எழுதிய பிரபந்த தீபிகை எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த அரிய பாடல் வருமாறு:

""ஈர்-ஒன்பதின் கீழ்க்கணக்கினுட் படும் வகை
இயம்பு நாலடி நானூறும்
இன்னாமை நாற்பது, நான்மணிக்கடிகை சதம்,
இனிய நாற்பான், கார் அதே,
ஆரு களவழி நாற்பது, ஐந்திணையும் ஐம்பதும்
ஐம்பதுன் இருபானும் ஆம்,
அலகுஇல் ஆசாரக்கோவை சதம், திரிகடுகம்
-இருபது ஆகும் என்பர்
சீருறும் பழமொழிகள் நானூறு, நூறதாம்
சிறுபஞ்ச மூலம், நூறு
சேர் முதுமொழிக்காஞ்சி, ஏலாதி எண்பதாம்
சிறு கைந்நிலை அறுபது ஆகும்
வாரி திணைமாலை நூற்றைம்பதாம், திணைமொழி
வழுத்து ஐம்பதாம், வள்ளுவ
மாலை-ஈர் ஒன்பதாய்ச் சாற்று பிரபந்தம்
வழுத்துவர்கள் புலவோர்களே'' (பி.தீ. பா-44)

ரா.இராகவையங்கார் பதிப்பித்த திணைமாலை நூற்றைம்பது எனும் நூலின் முகவுரையில், பதினெண்கீழ்க்கணக்குப் பாடல்களின் எண்ணிக்கையைக் கீழ்க்காணுமாறு அவர் பட்டியலிட்டுள்ளார்.

1. ஜைன முனிவர் எழுதிய நாலடி - 400
2. விளம்பிநாகனார் எழுதிய நான்மணிக்கடிகை-100
3. கபிலர் எழுதிய இன்னா - 40
4. பூதஞ்சேந்தனார் எழுதிய இனியவை - 40
5. மதுரை கண்ணங்கூத்தனார் எழுதிய கார் - 40
6. பொய்கையார் எழுதிய களவழி - 40
7. மாறன் பொறையனார் எழுதிய ஐந்திணை - 50
8. மூவாதியார் எழுதிய ஐந்திணை - 70
9. கண்ணஞ்சேந்தனார் எழுதிய திணைமொழி - 50
10. கணிமேதாவியார் எழுதிய திணைமாலை - 150
11. திருவள்ளுவர் எழுதிய முப்பால் - 1330
12. நல்லாதனார் எழுதிய திரிகடுகம் - 100
13. பெருவாயில் முள்ளியார் எழுதிய ஆசாரக்கோவை -100
14. முன்றுரையனார் எழுதிய பழமொழி - 400
15. மாக்காரியாசான் எழுதிய சிறுபஞ்சமூலம் - 100
16. மதுரைக் கூடலூர்கிழார் எழுதிய முதுமொழிக்காஞ்சி - 100
17. கணிமேதாவியார் எழுதிய ஏலாதி - 80
18. புல்லங்காடனார் எழுதிய கைந்நிலை - 60
ஆக மொத்தம் 3250 பாடல்கள். ஆனால், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகிய நூல்களில் மிகைப்பாடல்கள், தற்சிறப்புப் பாடல்கள், சிறப்புப் பாயிரம் என மொத்தம் 23 (மிகைப்) பாடல்கள் உள்ளன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்கள் 11, அகநூல்கள் 6, புறநூல் 1.
கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பான்மை மதுரையில் வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பெற்றவை என்பதை கீழ்க்கணக்கு ஏட்டில் காணப்படும் தனிப்பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

""மாப்புலவர் எல்லாரும்மாக் கூடற்கண் இருந்து
பாற்படுத்த தென்தமிழின் பாநான்கின் - வாய்ப்புடைத்தாய்ப்
பண்பு ஆய்ந்து உரைத்த பதினெட்டுக் கீழ்க்கணக்கும்
வெண்பாவின்பால் உரைத்தார் மிக்கு.''

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் படிக்குந்தோறும் இறைவன் (நம்மைக் குறித்து) எழுதும் பட்டோலையும் நம் நினைவில் நின்றால், தீவினைகள் குறைந்து நல்வினைகளே மேலோங்கும்.

-இடைமருதூர் கி.மஞ்சுளா

ஓலைச்சுவடி ஓவியம் -  ஓவியர் தமிழ் (செந்தமிழ்)

தினமணி - தமிழ்மணி - 3.7.2016

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!