பிரபஞ்சப்போர்

 பிரபஞ்சப்போர் - தினமணி - வெள்ளிமணி (08.7.2016)

கட்டுரையாளர்:
இடைமருதூர் கி.மஞ்சுளா


இறைவனை முதன் முதலாகக் கண்ணால் கண்டு களித்து மகிழ்ந்தவர். மணிவாசகர் தேவார மூவர்க்கும் முன்னவர் என்பதற்காக சான்றுகள் அனைத்தும் உறுதியாக உள்ளதால், இவரே இறைவனை முதன் முதலில் கண்ணால் கண்டவர் என்பது உண்மை.  மாணிக்கவாசக சுவாமிகள்தான். இறைவனை அம்மையப்பனாக, உமையொருபாகனாக அவர் கண்ட காட்சியைத் திருவாசகத்தில் பல இடங்களில் அகச்சான்றாகவே பதிவு செய்துள்ளார். அந்த அம்மையப்பரைக் காணவும், அவ்விறைவனின் திருவடியை அடைந்து, மீண்டும் பிறவா வரம்பெற்று, பேரின்பப் பெருநிலை பெறுவதற்கும் ஒரேவழி அன்புவழி(நெறி) ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தியவர் அவர்.

மணிவாசகர் கூற, இறையவனால் எழுதப்பட்ட முதன்மை நூலும் முதல் நூலுமாகும் திருவாசகம். இச்சிறப்பு வேறு எந்த பக்தி இலக்கியத்திற்கும் கிடையாது.

  அன்புநெறியில் அமைந்த அன்பு நூலான திருவாசகத்தின் 46ஆவது பதிகமான திருப்படையெழுச்சியில் உள்ள இரு பாடல்கள் மூலம் அவர், பக்தர்களையும், சித்தர்களையும், தொண்டர்களையும், யோகிகளையும் ஒரு போருக்குப் புறப்படச் சொல்கிறார். அது என்ன போர் தெரியுமா?
 மாணிக்கவாசக சுவாமிகள், ஒரு போர்க்குப் படைத் தலைவராய்ப் புறப்படுகிறார். அவர் ஏற்கெனவே பாண்டிய மன்னனிடம் பல்லாண்டுகள் அமைச்சராயிருந்து போர்முறைகள் யாவற்றையும் நன்கு கற்றறிந்தவர் அல்லவா! இப்போர் உலகத்தில் மண் வேண்டி நிகழ்த்தும் போர் போன்றதன்று. இது பிரபஞ்சப்போர்.
 சிவபெருமான் வீற்றிருக்கும் இன்ப நாட்டை ஆள, அதனைக் கைப்பற்றச் செய்யும் பெரும்போராகும். அந்த நாட்டை ஆளவிடாமல் தடுக்கும் மாயை என்னும் பகையை எதிர்த்துச் செய்யும் போராகும். ஆம், நம்மை எதிர்த்து வரும் படை மாயப்படை. அப்படை முக்தியுலகைக் கைப்பற்றாதவாறு தடுத்து நிற்கிறது. ஆதலால் அதனை முறியடிக்கச் சேனைகளை முனைந்து செலுத்துகிறார்.
 போர் என்று கூறினால் படைக்கருவிகள், போர்ப்பறை, குடை, வீரர்களுக்கு உடற் கவசம் ஆகியவை தேவை. நாற்படைகளும் வேண்டும். இங்கு அவை யாவை எனின், ""ஞானமே வாள், அதனை ஏந்துங்கள்; பிரணவ பஞ்சாக்கர நாதமே பறை, அதனை அடியுங்கள்; மெய்யறிவே குடை, அதனைப் பிடியுங்கள்; ஆக்கத்தைத் தருகின்ற திருவெண்ணீறாகிய மெய்ப்பையிலுள்ளே புகுந்து கொள்ளுங்கள்'' என்று தொண்டர்களாகிய (சிவனடியார்கள்) வீரர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
 எதிர்த்து நிற்கும் மாயப்படை வந்து தாக்கும் முன்னே அருள் வானிலுள்ள இன்பப்பதியை நாம் கைப்பற்றுவோம் என்று துணிவுடன் கூறுகிறார். நாற்படை வீரர்களாக உள்ளவர்களே தொண்டர்கள், பக்தர்கள், யோகிகள், சித்தர்களாவர். அவர்களை நோக்கி, ""தொண்டர்களே! முன்னணியாகச் செல்லுங்கள் என்றும், பக்தர்களே முதற்படை அடுத்துச் செல்லுங்கள் என்றும், யோகிகளே, படைக்கு நடுவிற் செல்லுங்கள் என்றும், உடல் வலிமைமிக்க சித்தர்களே பின்னணியிற் செல்லுங்கள் என்றும் கட்டளையிடுகிறார்.
 துன்பப்படை நம்மை வந்து தாக்காமல் காத்து வீட்டுலகத்தைக் (வீடுபேறு-முக்தி) கொள்வோம் என்று நால்வரையும் ஊக்கப்படுத்துகிறார் மணிவாசகர். அத்தேனினும் இனிய திருவாசகப் பாடல் இதுதான்:

 ""ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப்பறை அறைமின்;
 மானமா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவிமின்;
 ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்;
 வானவூர் கொள்வோம் நாம்மாயப் படைவாராமே''
(1)

 ""தொண்டர்காள் தூசி செல்லீர்; பத்தர்காள் சூழப்போகீர்;
 ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்;
 திண்திறல் சித்தர்களே! கடைக்கூழை செல்மின்கள்;
 அண்டர் நாடாள் வோம்நாம் அல்லற்படை வாராமே!'
' (2)

 மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனிடம் பல்லாண்டுகள் அமைச்சராயிருந்து போர்முறைகள் யாவற்றையும் நன்கறிந்தவராதலால், உலகியலை விடுத்து இன்ப உலகை நாடி நிற்கும் நிலையில் அருளுகின்ற ஞானநூலிலும் உலகியலறிவைப் பயன்படுத்திக் காட்டுதல் போற்றத்தக்கது என்பர். சிறந்த படை வீரர்களை முன்னிலையிலும் ஏனையோரை அடுத்தடுத்தும் வைத்துப் படைகளைச் செலுத்துபவர் சேனைத்தலைவர்கள். அம்முறையில் மாயப்படை வந்தால் அதனை எதிர்த்து முறியடிக்கவல்ல ஞான நிலையிலுள்ள அடியார்களை முன்னும், சரியை, கிரியை நெறியிலுள்ள பத்தர்களை அவர் பக்கத்திலும், யோகிகளைப் பெரும்படை நிலவும் நடுவிலும், காயசித்தி பெற்ற சித்தர்களைப் பின்னணியிலும் வைத்துச் சேனையைச் செலுத்துவதாகக் கூறும் முறை ஆளுடைய அடிகளின் பொருள் நூலறிவை நன்கு விளக்குவதாக உள்ளது.
 ÷வாழ்க்கை என்ற இந்தப் பெருங்கடலைக் கடக்க உதவும் மிக உன்னதமான - எளிதான அன்புத் தோணிதான் திருவாசகம். இதைப் படிக்கப் படிக்க நம் அறியாமை இருள் விலகும்; ஞானச்சுடர் ஒளிரும்; யான், எனது என்னும் செருக்கு (அகப்பற்றும் புறப்பற்றும்) அழியும். இறைவனை அறியும் ஞானம் கைவரப்பெறும். திருவாசகம் படிப்போர்க்கு சிவபரம்பொருள் மிகவிரைவில் அருள்புரிந்து, காட்சி இன்பம் நல்குவான் என்ற உண்மையை திருவாசகமே உணர்த்துகிறது.

 மாணிக்கவாசகர் குருபூஜை தினம் 8.7.16 (ஆனி மகம்).

 - இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!