தமிழ் இலக்கியத் தொடரடைவுகள்!

தமிழ் இலக்கியத் தொடரடைவுகள்!
(தினமணி - தமிழ்மணி - 19.3.2017

-By  வாசி 
(இடைமருதூர் கி.மஞ்சுளா)
÷
இன்றைக்கு இணைய தளத்தைப் பயன்படுத்தாதவர்கள் மிகமிகக் குறைவு. குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், நூலகம் செல்ல முடியாதவர் போன்றோர் தங்கள் கல்வி தொடர்பானவற்றை இணையதளங்களைப் பயன்படுத்தி உடனுக்குடன் பயன்பெறுகின்றனர்.
÷தமிழ் இலக்கியம், இலக்கணம், செய்யுள்கள், கட்டுரைகள், கலைக்களஞ்சியங்கள், சொல்லடைவுகள், அகராதிகள், நிகண்டுகள் முதலியவை தொடர்பாகத் தேடுவதற்குத் தனிப்பட்ட பல தமிழ் இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ள. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று tamilconcordance.in  என்கிற இணையதளம். "தமிழ் இலக்கியத் தொடரடைவு' ((Concordance for Tamil Literature)  )  என்கிற பெயரில் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்கள், தகவல்கள் அனைத்தும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
÷இந்த இணைய தளத்தை உருவாக்கியவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 37 ஆண்டுகள் முதல்வர், துணை முதல்வர், இயக்குநர், கணிதத்துறை முன்னாள் தலைவர் என பல பதவிகள் வகித்த முனைவர் ப. பாண்டியராஜா. பல்கலைக்கழகங்கள் பல நடத்திய ஆய்வரங்குகளில் தமிழ் இலக்கியம் - மொழியியல் - கணினி வழி ஆய்வு பற்றிய கட்டுரைகள் பலவற்றை வழங்கியவர்.





÷மேலும், சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம், பிராமி எழுத்துக்களும் தொல்காப்பியமும், ஆசிரியப்பாக்களில் சீர், தளை பரவல் முறை-ஒரு புள்ளியியல் பார்வை, தமிழியல் ஆய்வு, சங்கம், சங்கம் மருவிய நூற்களில் யாப்புமுறை - கணினி வழி ஆய்வு, சங்க இலக்கியம்-கவிதையியல் நோக்கு, தொல்காப்பியமும் பிராமிப் புள்ளியும் செம்மொழி இலக்கியங்களுக்கான யாப்படைவு, திருக்குறள் சீர், தளைக் கணக்கீட்டில் சிக்கல்களும் கணினிவழித் தீர்வும் முதலிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
÷முனைவர் ப.பாண்டியன் உருவாக்கியுள்ள இந்த இணையதளத்தில் தொல்காப்பியம் முதல், சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், கம்பராமாயணம், திருக்குறள், திருவாசகம், பெரியபுராணம், தேம்பாவணி, பெருங்கதை, நளவெண்பா, இறையனார் அகப்பொருள் முதலிய பல நூல்களுக்கான "தொடரடைவுகள்' தரப்பட்டுள்ளன. தொடரடைவு என்பது Concordance  . அதாவது, ஒரு நூலில் உள்ள அனைத்துச் சொற்களையும், அவற்றின் எண்ணிக்கையுடன், அவை நூலில் வரும் அடிகளையும் கொடுப்பது. தமிழ் சொற்களில் ஏதேனும் ஒரு சொல் குறித்துத் தேடவேண்டுமென்றால், இந்த இணையத்திற்குள் சென்றால் அச்சொல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெறமுடியும். தமிழ் மாணவர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ள இணையதளமாகும். எடுத்துக்காட்டாக, இந்த இணைய தளத்தில் "சங்க இலக்கியம்' என்ற பகுதிக்குச் சென்று, அங்கு "அ' என்ற எழுத்தைத் தேர்வு செய்தால், அவ்வெழுத்தில் தொடங்கும் அனைத்துச் சொற்களின் தொடரடைவு அடிகள் கிடைக்கும். அவற்றில் "அகில்' என்ற சொல்லைத் தட்டினால், "அகில்' என்ற சொல் இடம்பெறும் இலக்கியங்கியங்கள் அனைத்தையும்  செய்யுள்களின் பாடல் அடி, பாடல் எண் ஆகியவற்றுடன் காட்டும். அதுமட்டுமல்ல, சங்க இலக்கியங்கள் முழுமையையும் ஒரு பகுதியில் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வாசி

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!