உலக மகளிர் தினமாமே…



இன்று உலக மகளிர் தினமாமே… அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆண்டில் ஒருமுறை - ஒரு நாள் மட்டும்தானா பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள்? 365 நாள்களும் அடுக்களையை விட்டு அகலாமல், குடும்பத்துக்காக  உழைக்கும் அவர்கள் எல்லா நாளுமே போற்றப்பட வேண்டியவர்கள்தாம் என்பதுதான் இறைவனின் இன்றைய அருள் வாக்கு….
1.   மகளிர் தினம், அன்னையர் தினம் என்றவுடன் என் நினைவில் வருபவர் முதலில் என் தாய், என் தாய் மட்டும்தான். அவர் எனக்குக் கடைசியாக (முனைவர் பட்ட ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது) தயாரித்துக் கொடுத்த தேநீர் இது. அந்த அன்புத் தேநீர், அன்று வாய்க்கு ருசி தந்து, வயிற்றுக்கு இதம் தந்தது. இன்று என் மனத்தை பாரமாக்கிக் கண்களில் கண்ணீர் தருகிறது.


 (என் தாயின் அன்பாலும் பாசத்தாலும் நிறைந்த தேநீர் இது)

2.    அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு. தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன், தின இதழ், கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் முதலிய நாளிதழ்களில், வார இதழ்களில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு, பெண் பைலட் ஓட்டிய, பெண்கள் மட்டும் நிறைந்திருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, மகளிர் தினத்தன்று ஒரே நாளில் (காலை 4. மணிக்குச் சென்னையிலிருந்து கிளம்பி ஹைதராபாத் வழியாகத் திருவனந்தபுரம் சென்று, மாலை 6.30 மணிக்குச் சென்னை வந்ததோம்) திருவனந்தபுரம் சென்று திரும்பியது. தினமணி (பெண் பத்திரிகையாளர்) சார்பாக என்னைத் தேர்ந்தெடுத்திருந்ததற்கு எங்கள் ஆசிரியருக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அன்று திருவனந்தபுரத்தில் நடந்த பெண் பத்திரிகையாளர் கூட்டத்தை இன்றைக்கும் மறக்க முடியாது. கேரள உணவு ஒத்துக்கொள்ளாமல்… அவதிப்பட்டது எனக்குத்தானே தெரியும். அன்று மாலைப் பணிக்கு வந்துவிட்டேன் என்பது அதைவிட வியப்பு!
இந்தப் படங்கள் (அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது)  திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியேயும் உள்ளேயும் எடுத்தவை. அன்று எங்கள் அனைவரையும் பாதுகாப்பாகக் கொண்டு சென்ற பெண் பைலட்டுக்கு ஒரு சல்யூட். பைலட்டுக்குப் பக்கத்தில் அடியேன் (குட்டியாகத் தலைமட்டும்) தெரிகிறேனா….

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!