இசைத் தமிழ் உலகின் நக்கீரர்!



இசைத் தமிழ் உலகின் நக்கீரர்!


by. இடைமருதூர் கி.மஞ்சுளா
first bublished - தினமணி கதிர் – 7.8.2018



÷இசைக்கும், இசைத்தமிழுக்கும் ஏற்றம் தந்த இசைப் பேராசிரியர், இசையாசிரியர், இசை நூலாசிரியர்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் டி.. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் ஆவார்.
ஆனால், பலரும் இவரைக் குறிப்பிடாததற்கு, நினைவுகூராததற்குக் காரணம் என்ன? என்கிற வினா எழக்கூடும். அதற்கு விடை: இசை தொடர்பான நூலிலோ, எழுத்திலோ, ராகத்திலோ, தாளத்திலோ, ஜதியிலோ, சுருதி பேதத்திலோ குற்றம் கண்டவிடத்து இவர் தமிழ்ப் புலவர் நக்கீரர் போல நேருக்கு நேராகக் "குற்றம் குற்றமே' என்று சாடியதனால்தான் என்பதை அறிய முடிகிறது. அதாவது, இசைத்தமிழ் உலகில் இவர் நக்கீரராக இருந்ததால்தான் இவரைப் பலரும் புறந்தள்ளிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறார் சம்பந்தமூர்த்தியின் மகன் டி..எஸ்.சகஸ்ரநாமம்.
இவருடைய கூற்றை மெய்ப்பிப்பது போல, "இசைத் தமிழ் உலகின் நக்கீரன்' என இன்னிசைக் கவிமணி இளங்கம்பனால் கவிபுனைந்து போற்றப்பட்டிருக்கிறார் டி.. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்



 
""உற்றவரே ஆனாலும் ஒன்றுக்கும் அஞ்சாமல்
குற்றத்தைச் சொல்லும் குணமுடையான் - அன்றையநாள்
நக்கீரன் போல நவிலும் இசையுலகின்
இக்காலக் கீரன் இவன்''

என்பது கவிஞர் இளங்கம்பனின் புகழ்மாலை. இசை உலகிலும், திரையுலகிலும் இவரால் உயர்ந்தவர்கள் ஏராளம். இவரை மறந்தவர்களும் ஏராளம்... ஏராளம்...!
÷திருமுருக கிருபானந்த வாரியார், ""உயர்திரு டி..சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரவர்கள் ஒப்பற்ற சங்கீத கலாவல்லுனர்'' என்று புகழ்ந்துள்ளார்.
÷மேலும், ""டி..சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரவர்கள் சங்கீதத்தில் எந்தக் காரியத்தை எடுத்தாலும் யாரும் அதில் குற்றங் குறைகள் கூறவும் முடியாது; அவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். தமிழ்நாடு செய்த பாபத்தின் காரணமாக அவரைப் பிரோயசனப்படுத்திக் கொள்ளவில்லை'' என்று நாகசுர மகாமேதை டி.என்.இராஜரத்தினம் பிள்ளையும்;
÷""டி..சம்பந்த மூர்த்தி ஆச்சாரியாரவர்கள் சங்கீத உலகில் ஓர் பெரிய மேதை'' என்று சங்கீத பூபதி மகராஜபுரம் விஸ்வதநாத ஐயரும்,  ""அசைக்கொணா இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தர்'' என்று புரட்சிக்கவி பாரதிதாசனும்,  மேலும் வீணை பாலசந்தர்,  இசைமேதை மதுரை மாரியப்ப சுவாமி போனாறோரும் இவரைப் பலவாறு புகழ்ந்துள்ளனர்.
÷ திருமுருக கிருபானந்த வாரியார், எஸ்.வி. சகஸ்ரநாமம், டி.கே. பட்டம்மாள், என்.எஸ். கிருஷ்ணன், டிகே.எஸ்.கலைவாணன், .எல்.இராகவன், வி.தாயன்பன், காஞ்சிபுரம் விநாயகம் முதலியார் சி..சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரின் சீடர்களுள் (மாணவர்கள்) குறிப்பிடத்தக்கவராவர்.



÷ இவர், தாள ஏரி, கர்த்தா ராகங்கள் எத்தனை?, சுருதிபேத இசை நூல், தமிழ் இசை நூல், திருப்புகழ் நூறு, எளியமுறை இசைப் பயிற்சி நூல், 32 மேள கர்த்தா, இன்னிசைப் பொழில், இராக மரபு, இசை வாரிதி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் 1974இல் ஒரு ரூபாய் விலையில் வெளியான "தாள ஏரி' (1974) என்ற இசை நூலின் முன்னுரையில்,
÷""108 தாளங்களை அக்ஷரக்காலமாகப் பாடுவது மிகத் தவறாகும். அவைகள் அங்க ஜாடைகள் மாத்திரைக்கால அளவுகள் கொண்டதாகும். இந்நூலில் மாதங்கள் பன்னிரண்டையும், வாரத்தின் ஏழு நாட்களையும் தாளங்களாக ஆக்கி, அங்கக்குறிகளும் அமைத்து ஐந்து ஜாதிகளால் விரியும் விளக்கத்தையும் தந்து வெளியிட்டுள்ளேன். இத்தாளங்களை 35-தாளங்களைப் போல அக்ஷரக் காலங்களோடு இசையுலகம் பயன்படுத்திக் கொள்ளலாம். 35, 108, 60 தாளங்களுக்கென சிறிய நூலேதும் இதுவரை வெளிவரவில்லை. "கடல்' போன்ற தாளங்களை "ஏரி' அளவில் சுருக்கமாகச் சொல்லும் இச்சிறிய நூலை இசைத்துறை வாணர்கள் கையாள மிகவும் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை'' என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
÷இந்நூலில், திருப்புகழில் அங்க தாளங்கள், இசைக்கலைத்துறை விஷயங்கள், பட்டமாளும் சென்னை தமிழிசைச் சங்கமும், படிக்க வேண்டிய இசை நூல்கள், இசை அறிவு, கர்ண பரம்பரை, செம்மங்குடியும் ஹார்மோனியமும் முதலிய பல அரிய தகவல்களையும் தந்துள்ளார்.
÷"தாள ஏரி' என்ற நூல் நாற்பது பக்கங்களே கொண்ட ஓர் ஒப்பற்ற இசை நூல். அதுமட்டுமா? இவ்வாசிரியர் தம் கைப்பட முத்து முத்துதாக எழுதிய கையெழுத்துப் பிரதியிலேயே பல பக்கங்கள் அச்சாகியுள்ளன என்பது கூடுதல் சிறப்பாகும்.


÷"எனது காலத்து இசை உலகம்' எனும் இசை நூலையும் வெளியிட விரும்பிய இந்த இசையுலக நக்கீரர் அந்நூலில், ""உண்மையான இசை வித்துவான்கள் யாரென்பதையும் நன்கு உணரலாம். மற்ற இசை இலக்கணங்களையும், சங்கீத உலக ஊழல்களையும் தெளிவாக அறிய மிகவும் பயன்படும்'' என்று தன் ஆதங்கத்தையும் "தாள ஏரி'யின் இறுதியில் பதிவு செய்துள்ளார்.
÷"தமிழில் இசை நுணுக்கம் இல்லை' என்று கூறும் சிலரது கூற்றை மறுத்து, அவ்வாறு கூறுவது மடத்தனம் என்றும் சாடியுள்ளார். "சுருதிபேத இசை நூல்' என்ற நூலில், சுருதி பேதம் பற்றிய உண்மைகள், சுருதிபேதம் பாடும் முறை, சுருதிபேதமும் சுரஞானமும், சுருதி பேதத்தில் வல்லவர், அபஸ்வரம் பாடுவதில் வல்லவர், இசைத்துறை சூழ்ச்சிகள் பற்றிய விளக்கம், சுருதிபேத இலக்கண முறைக்கு முரணாகும் எட்டு இராகங்கள் முதலிய இசை நுணுக்கங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன.
÷"கர்த்தா ராகங்கள் எத்தனை...' என்ற நூலில், சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் கூறிய 32 கர்த்தா ராகங்களின் உண்மை, ஸ்ரீபாலமுரளி எழுதிய அஸந்தர்ப்பம், 11.2.72 தினமணியில் வெளியான 72 மேளகர்த்தா ராகங்கள் பற்றிய விளக்கம், 11.2.72 தினமணியின் "கலை பகுதி'யில்  சம்பந்தமூர்த்தி எழுதிய 32 மேளகர்த்தா சர்ச்சை பற்றி ஸ்ரீஜெயராமய்யர் சிலாகித்து எழுதிய கட்டுரை, நாகஸ்வர மகாமேதை மதுரை பொன்னுசாமிப்பிள்ளையின் "இசையில் பூர்விக சங்கீத உண்மைகள்' முதலிய பல இசைத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. டி.என். ராஜரத்தினம் பிள்ளைக்கு வலக்கை  போன்று இருந்தவர் இவர் என்பதை அன்றைய தினமணி கதிரில் (14.6.74) வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 
÷தமிழில் அழிந்துபோன, மறைந்துபோன இசை மரபு நூல்கள் ஏராளம் உள்ளன. ஆனால், தற்போது இசை தொடர்பாகக் கிடைத்துள்ள சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரின் நூல்கள் தமிழிசை உலகிற்குப் பெரும் பொக்கிஷமாகும். இவற்றைப் பாதுகாத்து, மறுபதிப்பு செய்வது வருங்கால இசைக் கலைஞர்களுக்கும் இசைத்தமிழுக்கும் ஏற்றம் தரும்! இசைக் கடலையே ஏரியாக்கித் தந்த இவரது இசைப்பணிக்குத் தமிழிசை உலகம் என்ன கைம்மாறு செய்யப் போகிறது?

இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி கதிர் – 7.8.2018

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!