நாடோடிக் கதை -3 கிலுகிலுப்பை


நாடோடிக் கதை - உத்தரப்பிரதேசம்

 தினமணி  - கொண்டாட்டம் 27.5.2018 (முதல் பதிப்பு)

கிலுகிலுப்பை
தமிழில்:  இடைமருதூர் கி.மஞ்சுளா

               முன்பு ஒரு காலத்தில் நிகழ்ந்த கதை இது.  ராஜா ஒருவன் ஆடம்பரமாகத் தனது திருமணத்தை நடத்திக் கொண்டான்.  அவனுக்கு அழகு தேவதையாக அந்த ராணி அமைந்தாள். ராஜா அவள் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருந்தார். ஆனால், திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை.  வாரிசு வேண்டுமே என்ற  எண்ணத்தில் அரசவையில் இருந்த ராஜகுருவை அழைத்து  ராஜா ஆலோசனை கேட்டார்.
               அதற்கு ராஜகுரு, "ராணிக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பது சிரமம்தான் ராஜா'' என்று கூறினார். பிறகு, ராஜாவின் ஜாதகத்தைப் பார்த்து, "ராஜா, 7ஆம் எண்தான் உங்களுக்கு ராசியான எண். நீங்கள் 7ஆவது மாதத்தில் 7ஆம் தேதி காலை 7 மணிக்கு நகரத்தின் வெளியே 7 அடி எண்ணிக்கொண்டு செல்ல வேண்டும். அப்போது,  7ஆவது அடி வைக்கும்போது எந்தப் பெண்ணை நீங்கள் சந்தித்தாலும் அவளுடன் மாலை 7 மணிக்கு சேர்ந்தால், அவளுக்கு உங்கள் மூலமாகக்  குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என்றார்.
               ஆனால், ராஜா தன் மனைவியின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால்,   அவளுக்கு எப்படி துரோகம் செய்வது என்று தயக்கமாக இருந்தது. இருந்தாலும்,  மக்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு ராஜகுரு கூறியது போல செய்வதற்கு முடி செய்தார்.
               ராஜகுரு கூறியது போலவே ராஜா, எந்தப் பெண்ணைச் சந்தித்தாரோ அவள் ஒரு விறகுவெட்டி. காட்டிற்குச் சென்று விறகுகளை வெட்டிச் சுமந்து வந்து கொண்டிருந்தாள். அவளைத்தான் ராஜா முதன் முதலில் பார்த்தார்.
                திருமணம் செய்து கொள்வதைப் பற்றி அவளிடம் கூறினார்.  இதைக் கேட்ட அவள் நடுநடுங்கிப் போனாள். ராஜா கூறியதை அவளால் நம்பவே முடியவில்லை. பிறகு ராஜாவே கேட்கிறார் என்பதாலும், அவருக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதாலும் இறுதியாகச் சம்மதித்தாள். இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
               திருமணமாகி 7 மாதத்திலேயே விறகு வெட்டிப் பெண்ணான அந்த இரண்டாவது ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் 7 மாதத்தில் அந்த குழந்தை பிறந்ததால் அது மிகவும் பலவீனமாக இருந்தது.  குழந்தைக்கு 7 மாதம் ஆனவுடன் திடீரென்று நோய்வாய்ப்பட்டது. மருந்து மாத்திரைகள் கொடுத்தும் நோய்  குணமாகவில்லை. ராஜ வைத்தியர்கள் எல்லாம் வந்து அந்தக் குழந்தையைப் பரிசோதித்துவிட்டுப் போனார்கள். பலனில்லை.
               அப்போது ராஜகுரு கூறினார்,  "இந்தக் குழந்தையின் அம்மாதான் இதற்குச் சுமையாக இருக்கிறாள் போலிருக்கிறது. ஒருவேளை இவளை இந்தக் குழந்தையிடமிருந்து பிரித்துத்  தொலைவில் வைத்தோம் என்றால்  குழந்தையின் உடல்நிலை சரியாகிவிடும்'' என்றார்.





               ராஜகுருவின் யோசனையைக் கேட்ட ராஜா, பிள்ளைப் பாசத்தால்  மனம் மயங்கி, இரண்டாவது ராணியைக் காட்டில் கொண்டு விட்டுவிட்டார். பாவம் அந்த விறகுவெட்டி, கண்ணீர் சிந்துவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காட்டிலேயே கிடந்து, தான் பெற்ற குழந்தையை நினைத்து நினைத்து அழுது, வருந்தி ஒருநாள் காட்டிலேயே அவள் இறந்து போனாள்.   ஆனால், அவளது ஆன்மா மட்டும் அங்கிருந்த ஒரு மரத்தில் குடி கொண்டது.
               அரண்மனையில் ராஜாவின் மகன் ராஜகுமாரன் உடல்நிலை சற்றுத் தேறினான். ஆனால், திடீரென்று அழத்தொடங்கியவனின் அழுகை மட்டும்  நிற்கவே இல்லை. அவனது கண்கள் யாரையோ தேடிக்கொண்டே இருந்தன. இந்த நோயை மட்டும் அங்குள்ள யாராலும் குணப்படுத்த முடியவில்லை.
               தோல்வி அடைந்த ராஜா இறுதியாக, "யார் இந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்துகிறார்களோ அவருக்குப் பாதி ராஜ்யத்தை கொடுத்து விடுகிறேன்'' என்று முரசு அறைந்து அறிவிக்கச் செய்தான்.
               குழந்தையின் அழுகையை நிறுத்தினால் ராஜ்ஜியத்தில் பாதி கிடைக்குமே என்ற பேராசையால் மக்கள் பலர் குழந்தையின் அழுகையை நிறுத்த  பல வழிகளில் முயன்று பார்த்தனர். என்றாலும்,   ராஜகுமாரனின் அழுகையை நிறுத்த முடியவில்லை.
               ஒரு நாள் விறகுவெட்டி ஒருவன்  விறகு வெட்டுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். பல வகையான மரங்களை வெட்டி எடுத்து வந்தான்.  அவன் கொண்டுவந்த அந்த விறகில் ஒன்றுதான் இரண்டாவது ராணியின் உயிர் பிரிந்தபோது அந்த ஆத்மா குடிகொண்ட ஒரு மரத்தின் விறகு.
               அந்த விறகுகளையெல்லாம் நகரத்திற்குக் கொண்டு வந்தான்.   ஒரு விறகுகூட அன்று  விற்கவில்லை. அப்போது ராஜகுமாரனின் அழுகையை நிறுத்துவது குறித்த அறிவிப்பு அவனுக்கும் கிடைத்தது.
               வீட்டுக்குச் சென்றவன் அதைப் பற்றி யோசித்தான். ஒருவேளை அந்தக் குழந்தையின் அழுகையை நாம் நிறுத்திவிட்டால், பாதி ராஜ்யம் நமக்குக் கிடைக்கும்.  இந்த ஏழ்மையும் நம்மைவிட்டு நீங்கிவிடும். இப்படி நினைத்தப்படியே அன்றிரவு தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுப் பசியோடு அவன் தூங்கினான்.
               காலையில், வீட்டின் முற்றத்தின் மூலையில் இருந்த விறகு கட்டையில் இருந்து ஓர் உருவம் தோன்றி, அவனருகே வந்தது. "ராணியின் உயிர் இந்த விறகுக்  கட்டைக்குள் இருக்கிறது. அதைப் பிளந்தால் மற்றொரு உருவம் கிடைக்கும். இதனைக் கொண்டு ஒரு கிலுகிலுப்பை செய். அந்தக் கிலுகிலுப்பையை அழுது கொண்டிருக்கின்ற அந்த ராஜகுமானிடம் கொண்டுபோய்  கொடு. அவன் அழுவதை நிறுத்திவிடுவான்'' என்று கூறிவிட்டு மறைந்து போனது.
               விறகு  வெட்டிக்கு வியப்பாக இருந்தது. அவன் அந்த விறகை வெட்டிப் பிளந்தபோது, உண்மையாகவே  அதில்  இதயம் போல  ஒரு விறகுத்துண்டு இருந்தது. விறகுவெட்டி அதில் ஒரு கிலுகிலுப்பை செய்தான்.  உடனே அதை எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றான்.
               அரண்மனைக்குச் சென்ற அவன், காவலர்களிடம்,  நான் ராஜகுமாரின் அழுகையை நிறுத்த வந்துள்ளேன் என்று  ராஜாவிடம் கூறுமாறு சொன்னான். அனைவரும் அவனுடைய கிலுகிலுப்பையைப் பார்த்து சிரித்தார்கள். "இங்கே உள்ள பெரிய பெரிய விலை மதிக்க முடியாத விளையாட்டு பொம்மைகள் எல்லாம் ராஜகுமாரனின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இந்த கிலுகிலுப்பை எங்கே நிறுத்திவிடப் போகிறது?' என்று கேலி செய்தனர்.
               அவர்களை ஒருவாறு சமாளித்துவிட்டு அந்த விறகு வெட்டி, ராஜகுமாரன் இருக்கும் இடத்தை அடைந்தான். அவனுக்கு முன்பாக அந்தக் கிலுகிலுப்பையை அசைச்சான். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ராஜகுமாரன் அழுகையைச் சட்டென்று நிறுத்திவிட்டு சிரித்துக்கொண்டே  கிலுகிலுப்பை ஓசையைக் கேட்கத் தொடங்கினான்.  எல்லோரும் வியந்துபோனார்கள். அரண்மனையில் இருந்தவர்கள், "அட! என்ன அதிசயம், ஆச்சரியம்! ஆமாம் அப்படி என்ன அந்தக் கிலுகிலுப்பையில் அம்மாவின் பாசமா (உயிர்) இருக்கிறது?' என்றார்கள்.
               ராஜா அந்த விறகு வெட்டியைப் பாராட்டினார். பரிசும் கொடுத்து அனுப்பினார்.
               ஆனால், அந்த அதிசயம் அம்மாவின் பாசத்தினால் ஏற்பட்டதுதானே! அந்தக் கிலுகிலுப்பையின் ஒலியில்  அதிர்ஷ்டமில்லாத ஒரு தாயின் இதயத்துடிப்பும், பாசமும், தாலாட்டும்தான் இருந்தன. இதை அங்குள்ள யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால்,  குழந்தைக்கு மட்டும் இது புரிந்தது.  தாயின் அன்பு (கிலுகிலுப்பை வடிவத்தில்) கிடைத்த மகிழ்ச்சியில் குழந்தை சிரித்துக்கொண்டே விளையாடத் தொடங்கியது.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!