வார்த்தை இன்றிப் போகும்போது....


சிவாய நம
திருச்சிற்றம்பலம்

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மைவைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே...
                                                                                   
                                                                                                                     -சைவ எல்லப்ப நாவலர்



என் அன்பான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், வாசகர்களுக்கும்... மற்றும்...என்னுடைய படைப்புகளோடு சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் கொண்டு   அதைப்பற்றி (திட்டிப்)  பதிவு  செய்ய இருக்கும் பண்பாளர்களுக்கும் அடியேனின் அன்பான பணிவான வணக்கம்.

 தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அறிந்தே என் பணியைத் தொடங்குகிறேன். நல்ல செய்திகளை நான்கு பேர் அறிய வேண்டும் என்பார்கள். அதன்படி, இன்றைய தொழில்நுட்பத்தின் (பிரமிக்க வைக்கிறது)  மூலம் நல்ல செய்திகளை (மட்டுமே)ப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

 இந்த பிளாகை உருவாக்கியதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். அவற்றுள்  முதன்மையான  காரணம் - இடைமருதூர் கி.மஞ்சுளாவின் படைப்புகளை (தினமணியில், வெளிவந்துள்ள நூல்களில்  மட்டுமே) படித்து ரசித்து, பாராட்டி ஊக்குவிக்கும் -  என் இனிய வாசகர்களும்,  நண்பர்களும் மேலும் பயனடைய வேண்டும் என்பது. அடுத்து,    பத்திரிகையின் மூலம் சொல்ல முடியாத - வெளிவராத சில பதிவுகளை உங்களோடு  பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது.  இத்தகைய   நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் இந்த பிளாக்ஸ்பாட்.   இதற்கு உதவியவள் என் சகோதரி மகள் லெட்சுமி.

தினமணி என்ற ஒரு நாளிதழோ,  அதன் ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களோ இல்லையென்றால், இன்றைக்கு இந்த (இடைமருதூர்) கி. மஞ்சுளாவை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. முதற்கண் நான் நேசிக்கும், வாசிக்கும் என் தினமணி நாளிதழுக்கு ஆயிரம் ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அடுத்து என் அன்பிற்கும் நட்புக்கும் உரிய  ஆசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்......பல... உரித்தாகட்டும்..

யார் கையில் எது கிடைத்தால் அதன் பயன் பல மடங்காகுமோ...... அதையே காலம் நிகழ்த்திக் காட்டியுள்ளது. காலம் தந்த பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார் எங்கள் ஆசிரியர்.  காலம் பார்த்து காரியம் நிகழ்த்தக் கூடியவர் அவர்.   தினமணி ஆசிரியர் கே.வி.  என்று சொன்னாலே,  தமிழ் வளர்த்த தமிழ்மணி, தமிழ் மாமணி என்றெல்லாம் உலகம் உள்ளவரை போற்றும்.  அதுபோல,  இடைமருதூர் கி.மஞ்சுளா என்ற ஓர் அடையாளத்தை எனக்குத் தந்தது அவ்வாசிரியர் கொண்டுவந்த  தினமணியின் தமிழ்மணி.  இவ்வாறு  என் தமிழன்னை யார் கையில் எதைத் தரவேண்டும் அதைத் தந்துவிட்டாள்.   இன்றைக்குத் தமிழ்மணி மூலம் பலரும் தமிழ் இலக்கியத்தைச் சுவைத்துப் பயனடைகிறார்கள் என்றால், அந்தப் பெருமையும் புகழும்  எங்கள் ஆசிரியரையே சேரும். இது முகஸ்துதி அல்ல,  உண்மை உண்மை உண்மை...

இந்த பிளாகில்  அடியேனின் கட்டுரைகள், கவிதைகள் (கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் அவை இன்று வரை நூல் வடிவம் பெறவில்லை.) அடியேன் படித்து ரசித்தவை, பகிர்ந்து கொள்ள நினைப்பவை அனைத்தும் இடம்பெறும்.


வாழும்போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி
 சொல்வோம்....

வார்த்தை இன்றிப் போகும்போது
 மௌனத்தாலே நன்றி
 சொல்வோம்.......

என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.  அடியேனை, அடியேனின் எழுத்தை நேசிக்கும் அனைவருக்கும்....... மௌனத்தால் நன்றி.....
மீண்டும் ஒரு புதிய பதிவுடன் சந்திப்போம்..

-இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

  1. மிகச் சிறப்பான காரியத்தை மேற்கொள்ளுவதற்கு முன்பாக அருமையான ஒரு முன்னுரையைத் தந்துள்ளீர்கள். தங்களது எழுத்துக்களை ஆவலோடு படித்தவர்களில் நானும் ஒருவன். வலைப்பூவிலும் உங்கள் எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன். தங்களின் முயற்சி பல்லாற்றானும் சிறக்க என் வாழ்த்துக்கள். ஜம்புலிங்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!