பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள் -2



முதுமுனைவர் டி.என்.ஆர். சாருடன்.....

என் முனைவர் பட்ட ஆய்வுக்காக சில நூல்களைத் தேடியபோது திரு ஊரன் அடிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் உடனே, தஞ்சையில் உள்ள முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களைச் சந்திக்கச் சொன்னார். அதன்படி முதுமுனைவர் தி.ந.இரா.வை ஒரு நாள் அவர் இல்லத்தில் சந்தித்து உரையாற்றியபோது அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த நூல்களையும், கொடுத்த தகவல்களையும், அந்த சந்திப்பையும், முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களின் நட்பையும் இன்றைக்கும் மறக்க முடியவில்லை. அவர்களுக்கு  மௌனத்தால் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

மகா சிவராத்திரி (24.2.2017)  நெருங்கி வரும் இந்தத் தருணத்தில், சென்னையில் 2017-இல் நடந்த ஆன்மிகக் கண்காட்சியில் ஈஷா மையம் அமைத்திருந்த லிங்க பைரவி (கோயில்) நினைவுக்கு வந்தது. அப்போது (செல்லிடப்பேசியில்) எடுக்கப்பட்டதுதான் இது. அருகில் தி.ந.ரா.வின் உதவியாளரும் திரு குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும்....




கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன்...

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவ்வளவு எளிதாக யாரும் கண்டு பேசிவிட முடியுமா என்ன? அவ்வாறு கண்டு, பேச முடிந்தது தினமணி நிகழ்த்திய ஒரு நிகழ்ச்சில்தான். கல்லூரிக் காலங்களில் மட்டுமல்ல பத்தாம், பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே நான் படிக்கும் நூல்கள் கவிதை நூல்கள்தான். முக்கியமாகக் கண்ணதாசன் கவிதைகள், கலில் ஜிப்ரான் கவிதைகள், கவிஞர் வைரமுத்து கவிதைகள், மு.மேத்தா, கவிஞர் மீரா, அப்துல் ரகுமான் போன்றோரின் கவிதைகள்தாம், (இந்நூல்கள் எல்லாம் தந்தை தரும் சிறுசேமிப்புக் காசில் வாங்கியவையாக்கும்!!!) இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்துப் பேச முடிந்ததும், கவிஞர் மு.மேத்தாவைக் கண்டு பேசமுடிந்ததும் என் பாக்கியம்தான். இவர்களின் கவிதைகளை ரசித்த நான், இவர்களையெல்லாம் ஒருநாள் சந்திப்போம் என்று (சிறு வயதில்) நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. மு.மேத்தாவிடம் சென்று அவரது கவிதை ஒன்றைக் கூறி, இது என் மனத்தை விட்டு எங்கும் நீங்காத கவிதை என்று கூறியபோது, ஓ…. இது என்னுடைய கவிதைதானா என வியந்தார்…. அந்த நீங்கா நினைவுகள் இன்று ஏனோ எண்ணத்தில் ஊசலாடுகின்றன. அதுதான் இது.


தினமணி நிகழ்த்திய வேறொரு நிகழ்வில்... கவிஞர் மு.மேத்தாவுடன்..

 
 இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அவர்களுடன்...

குடியாத்தம் கம்பன் கழகம் நடத்திய (2014 – 2015) ஒரு கருத்தரங்கில் “கம்பனில் தெய்வீக ஞானம்” எனும் கட்டுரை வாசித்து, கட்டுரையாளராகவும், நிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரை வழங்குபவராகவும் கலந்து கொண்டேன். அப்போது இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அவர்கள் கருத்தரங்க நூலை வெளியிட அடியேன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் ஓய்விற்காக சிலமணிப் பொழுது அவர் அறையில் இருந்தபோது, பலரும் அவரை முக்கியமான  சிலர் சூழ்ந்து கொண்டோம் ஓய்வெடுக்க விடாமல்… சும்மாவா… அப்புதமான படங்களைத் தந்த இயக்குநர்… அல்லவா அவர்!. அவரைச் சந்திப்பதே கடினம்… ஓய்வெடுக்க விடுவதா… மன்னித்துக்கொள்ளுங்கள் என்ற கூறி சூழ்ந்துகொண்டோம். ஒரு பத்திரிகையாளனாக… எப்படி அவரிடமிருந்து விஷயங்களை வாங்காமல் விடமுடியும்? வரமுடியும்?
“சார் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதான எஜமானன், பொன்னுமணி போன்ற நல்ல நல்ல படங்களை இயக்கினீர்கள். அதில் தாங்கள் இயற்றிய பாடல்களும் நெஞ்சைவிட்டு நீங்காதவை… ஆனால், இன்றைக்கு குடும்பத்துடம் அமர்ந்து பார்க்கும்படியாக (ஒன்றிரண்டு படங்களைத் தவிர) தமிழ்த் திரைப்படங்கள் வருவதில்லையே… ஏன்? நீங்கள் மீண்டும் ஏன் இதுபோன்ற படங்களை இயக்கக்கூடாது. உங்கள் படங்களை பலரும் ஆவளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்… எப்போது இயக்கப் போகிறீர்கள்?”   என்று கேட்டதற்கு…
 “முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார். மேலும், இதுபோன்ற நல்ல குடும்பப்பாங்கான படங்கள் வெளிவராததற்கு அவர் கூறிய நெடிய உரை…… வெளியில் சொல்வதற்கில்லை. அவர்  கம்பன் ஆளுமை என்ற நூலை வெளியிட, அதை நான் பெற்று மகிழ்ந்த அந்தத் தருணங்களுக்காக குடியாத்தம் கம்பன் கழகத்தார்க்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  நெஞ்சைவிட்டு நீங்காத அந்நிகழ்ச்சியின் நிழற்படங்கள் இவை. 




  -இடைமருதூர் கி.மஞ்சுளா


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!